Monday, May 16, 2005

சென்னையில் எழுத்துப்பயிற்சிக் கூடம்

இந்த வார இறுதியில் - வெள்ளி, சனி, ஞாயிறு, 20, 21, 22 மே 2005 - சென்னையில் கிழக்கு பதிப்பகமும், மைலாப்பூர் டைம்ஸ் இதழும் இணைந்து ஒரு (தமிழ்) எழுத்துப்பயிற்சிக் கூடத்தை நடத்தவுள்ளது.

கிட்டத்தட்ட முப்பது கல்லூரி மாணவர்கள் பங்கேற்கிறார்கள். (ஏற்கெனவே மாணவர்களைத் தேர்ந்தெடுத்தாகிவிட்டது. எனவே இனி யாரும் சேர்ந்துகொள்ளமுடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.) பாடங்கள், போகவரச் செலவு, தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்தும் இலவசம். சென்னைக்கு வெளியேயிருந்து வருபவர்களுக்கு சென்னையில் தங்க இடவசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.

இந்த மூன்று நாள் முகாம் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தக்ஷிணசித்ராவில், இயற்கைச்சூழலில், நடைபெறும்.

முதலிரண்டு நாள்கள், ஒரு நாளைக்கு நான்கு அமர்வுகள் வீதம் மொத்தம் எட்டு அமர்வுகள். ஒவ்வொரு அமர்விலும் சிறப்புப் பேச்சாளர் சுமார் அரை மணிநேரம் பேசுவார். பின் முக்கால் மணி நேரம் மாணவர்களுடன் கலந்துரையாடல். ஒவ்வொரு அமர்வுக்கும் இடையில் அரை மணிநேரமாவது இடைவெளி இருக்கும்.

வெள்ளி, 20 மே 2005

1. இந்திரா பார்த்தசாரதி (நாடகம்)
2. பாஸ்கர் சக்தி (கதை வசனம்)
3. அசோகமித்திரன் (சிறுகதை)
4. சுதாங்கன் (பத்திரிகை எழுத்து)

சனி, 21 மே 2005

1. ஜ.ரா.சுந்தரேசன் (நகைச்சுவை)
2. இரா.முருகன் (நாவல்)
3. சோம.வள்ளியப்பன் (நேர நிர்வாகம், திட்டமிடுதல்)
4. இயக்குநர் வஸந்த். [வெள்ளியன்றே தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமியின் சிறுகதையும், வஸந்த்தின் திரைக்கதை, வசனமும் புத்தக வடிவில் அனைவருக்கும் கொடுக்கப்படும். சனியன்று கடைசி அமர்வில் இந்தப் படம் காண்பிக்கப்படும். அதன்பிறகு வஸந்த்துடன் கலந்துரையாடல்.]

ஞாயிறு, 22 மே 2005

எழுத்துப்பயிற்சி. பங்கேற்கும் அனைவரும் மாலன், ஆர்.வெங்கடேஷ் கண்காணிப்பில் குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குப் பிடித்தவற்றை எழுதுவார்கள். அவற்றைச் சேர்த்து ஓர் இதழ் தயாரிக்கப்படும்.


ஒருங்கிணைப்பாளர்கள்: பா.ராகவன், பத்ரி சேஷாத்ரி

-*-*-

மூன்று நாள்களும் நடப்பவற்றை விடியோப் படங்களாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். நேரில் கலந்துகொள்ள முடியாதவர்கள் சிடியைப் பெற்றுக்கொள்ளலாம்.

16 comments:

  1. நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தமிழில் வலைப்பதிவு செய்வது பற்றி ஒரு ஒருமணிநேர கிளாஸ் எடுக்கலாம்.

    //குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குப் பிடித்தவற்றை எழுதுவார்கள். அவற்றைச் சேர்த்து ஓர் இதழ் தயாரிக்கப்படும்.//

    அந்தப் பத்திரிக்கைகளை, இணையத்தில் வரச் செய்யலாம். அதற்குக் கிடைக்கும் இன்ஸ்டண்ட் விமர்சனங்கள், அவர்களுக்கு உற்சாகம் தரும்.,

    ReplyDelete
  3. நல்ல நோக்கம். வெற்றியடையட்டும்.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. பத்ரி,

    உருப்படியான திட்டம், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.


    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  6. //சென்னைக்கு வெளியேயிருந்து வருபவர்களுக்கு சென்னையில் தங்க இடவசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.//
    அடுத்த வகுப்புக்கு இப்பவே என் பேரை கொடுக்கிறேன். அமெரிக்கா சென்னைக்கு வெளியேதானே உள்ளது? :-)

    நல்ல முயற்சி பத்ரி. ஏன் இது போல் யாரும் இது வரை செய்ய இயலவில்லை/முடியவில்லை என்று யோசித்தால் ஆச்சரியமாக உள்ளது. வாழத்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல முயற்சி.

    //எழுத்துப்பயிற்சி. பங்கேற்கும் அனைவரும் மாலன், ஆர்.வெங்கடேஷ் கண்காணிப்பில் குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குப் பிடித்தவற்றை எழுதுவார்கள்.//
    இது என்ன பரீட்சை மாதிரி இருக்கிறதே!

    இதில் கலந்துகொள்ளும் அளவுக்கு விருப்பமுள்ளவர்கள் ஏற்கனவே ஏதேனும் எழுதிப் பார்த்திருப்பார்கள். அவற்றை கொண்டுவரச் சொல்லி பயிற்சிக்குப் பிறகு மறுபடைப்பு செய்து ஒப்பிட்டுப் பார்க்கலாம். பயிற்சி பெறுபவர்கள், பயிற்சியாளர்கள் இருவருக்கும் இதிலிருந்து சரியான பின்னூட்டம் கிடைக்கும்.

    ReplyDelete
  8. //ஏன் இது போல் யாரும் இது வரை செய்ய இயலவில்லை/முடியவில்லை என்று யோசித்தால் ஆச்சரியமாக உள்ளது.//

    கார்த்திக்,
    எண்பதுகளில் கலாப்ரியாவும், பிரம்மராஜனும் குற்றாலத்தில் கவிதைப் பட்டறை நடத்தியிருக்கிறார்கள். நான் கூட ஒருமுறை போனேன் (பிறகு ஏன் கவிதை எழுதுவதில்லை என்று கேட்கவேண்டாம். போனதால் தான் எழுதுவதில்லை). "விளக்கு" அமைப்பின் மூலமும் "படைப்பிலக்கியப் பட்டறை" ஒன்றை நடத்தும் திட்டம் கொள்கையளவில் இருந்தது. உறுப்பினர்கள் (அதாவது பணம் கொடுப்பவர்கள்) அதிகம் சேராததால் இருக்கிற பணத்தை வைத்து ஆண்டுக்கொருமுறை பரிசு வழங்குவதோடு சரி.

    ReplyDelete
  9. சுந்தரமூர்த்தி,
    நான் அந்த மாதிரிச் சொல்லவில்லை. இது போன்ற எழுத்துப் பள்ளி உருவாகவில்லை /முடியவில்லை என்ற மாதிரி கேட்டேன். அதாவது, அரசு/ தனியார்/வணிக ரீதியாக. சுரா, பேச்சில் இதை சுட்டியிருக்கின்றார். (கடந்த , பிரகாஷ் நட்சத்திரமாக இருந்தபோது இட்ட பேட்டி)
    நிறைய இலக்கிய கூட்டங்கள் பற்றியும், இலக்கியவாதிகளுக்கிடையேயான எழுத்து பட்டறைகளையும் வாசித்ததுண்டு. பெரும்பான்மையானவை இணையத்திலே.

    எம் ஏ, லிட்டரேச்சர் பட்டப்படிக்கும் நம் இலக்கியத்துக்கும் என்ன இடைவெளி என்றும் யோசனை வருகிறது.

    அதுதானே ஏன் கவிதை எழுதுவதில்லை? :-)

    ReplyDelete
  10. Badri,
    You have mentioned before that you would rise the issue of Asokamithran's racial comments (in an english magazine) with him when you meet him next time.

    From your blog, I understand you are going to meet him for the second time after that. Did you or will you express your opinion on behalf of all the bloggers?
    Thanks.

    ReplyDelete
  11. //(பிறகு ஏன் கவிதை எழுதுவதில்லை என்று கேட்கவேண்டாம். போனதால் தான் எழுதுவதில்லை)//

    ஹிஹி! அது! அது!!

    ReplyDelete
  12. http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=44&fldrID=1

    ReplyDelete
  13. பத்ரி,

    அருமை! - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. பத்ரி,

    நானறிந்த வரை, வேறெந்த பதிப்பகமும் இதுவரை செய்யாத முயற்சியை சாத்தியமாக்க முன்வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். புத்தக வாசிப்பு என்பது அரிதாகிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் (புத்தக விற்பனையை வைத்து புத்தக வாசிப்பு அதிகமாகி விட்டது என்பது அபத்தமான வாதம்) இம்மாதிரியான முயற்சிகள் நிச்சயம் தேவை. ஒரு வேண்டுகோள். இனி வரும் காலங்களில், இந்தப் பயிற்சிக்கூடத்தை மாணவர்கள் என்கிற தகுதி தவிர எழுத்தில் ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகளும் கலந்து கொள்ளும் வகையில் விரிவாக்கலாம். எனவே இதனால் பயன்பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பொருளாதார ரீதியில் சிரமமென்றால் கூட கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்கலாம். தவறில்லை. உங்கள் இம் முயற்சி பெருமளவில் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

    சம்பந்தப்பட்ட குறுந்தகட்டைப் பெற இந்த பின்னூட்டத்தின் மூலம் அட்வான்ஸ் புக்கிங் செய்து வைக்கிறேன். :-)

    ReplyDelete
  15. நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.
    உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. மிக்க நன்று. முப்பது மாணவர்களை தேர்ந்தெடுத்த விதம் கூற முடியுமா ?. and looking forward for the outcome and response of our fellow netizens...

    ReplyDelete