Monday, May 16, 2005

வேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா?

இப்பொழுதிருக்கும் கூட்டணி அரசு, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா (National Rural Employment Guarantee Bill) ஒன்றைப் பாராளுமன்றத்தில் கொண்டுவர ஆசைப்படுகிறது.

வேலைவாய்ப்பு என்பதைக் குடிமகனின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக வைக்கமுடியுமா? ஓர் அரசு ஒருவனுக்கு வேலை தருகிறேன் என்று உத்தரவாதம் தரமுடியுமா? என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் கிராமப்புற மக்களுக்கு, விவசாயம் ஒன்றை மட்டுமே நம்பி வாழ்பவர்களுக்கு, ஏதேனும் பாதுகாப்பு தேவை.

மதுரையில் சில மாதங்களுக்கு முன் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் பற்றி நடந்த ஒருநாள் கருத்தரங்கத்துக்குச் சென்றுவிட்டு வந்து அதுபற்றி சிறிது எழுதியிருந்தேன். [ஒன்று | இரண்டு]

இரண்டு நாள்களுக்கு முன்னர் தி ஹிந்துவில் வந்த செய்தி இது. இப்பொழுது இந்த உத்தரவாத மசோதா பாராளுமன்ற நிலைக்குழு முன்னால் உள்ளது. இந்தக் குழுவின் தலைவர் பாஜகவின் கல்யாண் சிங் என்றும் அவர்தான் ஏதோ நேரம் கடத்துகிறார் என்றும் குற்றச்சாட்டு. இது முக்கியமான மசோதா என்றால் ஏன் கல்யாண் சிங்கைத் தலைவராக்கி அந்தக் குழுவுக்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்? இந்த மசோதாவைப் பரிசீலிக்கும் குழுவுக்கு சோனியா காந்தியையே தலைவராக ஆக்கியிருக்கலாமே?

இந்த மசோதா சரியாக இயற்றப்படவில்லை, இதன் உட்கருத்தே குழுப்பம் வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். இந்த மசோதாவைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு கிராமப்புற சமூகப் பாதுகாப்பு மசோதா என்று ஒரு வரைவினை உருவாக்கலாம். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள கிராமப்புறக் குடும்பங்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட அளவு உதவித்தொகையை மாதாமாதம் வழங்கவேண்டும். இந்தத் தொகையைப் பணமாக இல்லாமல் ரேஷன் கடைப் பொருளாக வழங்கலாம். இப்படிச் செய்வது வேலை, உத்தரவாதம், உரிமை போன்றவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

வி.பி.சிங் போன்றவர்கள் இந்த மசோதாவை கிராமங்களுக்கு என்று மட்டும் வைக்காமல் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உத்தரவாதமாக வேலை தருவதாக வைக்க வேண்டும் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். மிகவும் அபத்தமான கருத்து.

ஒவ்வொரு இந்தியனுக்கும் வேலை பிறப்புரிமை என்று ஆக்க வேண்டும் என்றால் எந்த மாதிரியான வேலை? அந்த வேலைக்கான தகுதிகள் என்ன? ஒரு குடிமகன் அந்தத் தகுதிகளைப் பெறவில்லையென்றால் என்ன ஆகும்? தகுதியுடைய பலர் இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட வேலையை யாருக்குத் தருவது என்பதை எப்படித் தீர்மானிப்பது? வேண்டிய அளவுக்கு வேலைகளை உருவாக்குவது ஓர் அரசின் வேலையா? ஓர் அரசால் இதை எப்படிச் செய்யமுடியும்?

இதற்குப்பதில், வேலையில்லாதவர்களுக்கு அரசு உதவித்தொகை தருமாறு செய்யலாம். குழப்பமே இல்லாத இதுபோன்ற சட்டங்கள்தான் நாட்டுக்குத் தேவை. இதுபோன்ற சட்டங்கள், நடைமுறைகள் பல நாடுகளில் உள்ளன. Social security system என்பது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உண்டு. அதே பாணியில்தான் இந்தியாவும் சட்டங்களை இயற்ற வேண்டும்.

3 comments:

  1. கருத்தளவில் யோசித்தால் வேலைவாய்ப்பு பிறப்புரிமை என்றுதான் படுகிறது. வேலைக்கும் போவதும் போகாதததும் அவரவர் தேர்வாக இருக்கவேண்டும். ஆனால் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அரசு/மக்களின் பணி. இங்கு நடைமுறை ஜனநாயகம் என்ற பேரில் முதலாளித்துவம்தான் இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு.
    எல்லோருக்கும் வேலைவாய்ப்பு என்பது எட்டாக் கனியாக இருப்பது இந்த போலி ஜனநாயகத்தால்தான் என்று நினைக்கிறேன். கருத்தளவில் நான் கம்யூனிசத்தை இதில் வெகுவாக ஏற்பதுண்டு.(கம்யூனிச கண்மூடித்தனத்தை இங்கு பேசவில்லை) பென்ஸ் கார் இருக்கும் வரை மாட்டுவண்டி இருக்கும். ஐந்து நட்சத்திர உணவகம் இருக்கும் வரை பட்டியும் கூடவே இருக்கும். இது என்னை மிகவும் திகிலடைய வைப்பதுண்டு. :-( புலம்பலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. /பட்டியும் கூடவே இருக்கும்./
    பட்டினியும் கூடவே இருக்கும்.

    ReplyDelete
  3. //Social security system என்பது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உண்டு. அதே பாணியில்தான் இந்தியாவும் சட்டங்களை இயற்ற வேண்டும்.// இதோடு ஒத்துப்போகிறேன்.

    ReplyDelete