Saturday, May 14, 2005

திருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் - இருநூற்றாண்டு வரலாறு, அருணன், வைகை வெளியீட்டகம், 1999 புத்தகத்திலிருந்து:

1930களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வாங்கித்தரப் போராடிய பி.ராமமூர்த்தி என்னும் கம்யூனிஸ்ட் தலைவர் சொன்னதாக:

பி.ராமமூர்த்தி"அப்ப நான் ஹரிஜன் சேவா சங்கத்தில் ஒர்க் பண்ணிகிட்டிருந்தேன். ஹரிஜனங்களுக்கெல்லாம் திருவாய்மொழி - ஆழ்வார் பாசுரம் சொல்லிக் கொடுத்தேன். மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று சந்தத்தோடு பாடி பஜனை செய்ய கத்துக் கொடுத்தேன். அவர்கள் எல்லோரும் வைஷ்ணவர்கள். நாமம் போடுகிறவர்கள். அவர்களுக்கு இப்படி பாசுரம் சொல்லிக்கொடுத்து மார்கழி முழுவதும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை சுற்றிவரச் செய்தேன். இதனாலே அங்கே இருக்கக்கூடிய அய்யங்கார்களுக்கெல்லாம் என்மேலே ரொம்பக் கோபம்.

சம்பகேச அய்யங்கார்ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் என்னுடைய இன்னொரு காலை உடைச்சிடுவேன்னு பயமுறுத்தினார். (பி.ஆருக்கு ஏற்கெனவே ஒரு கால் ஊனம்.) அப்ப பார்த்தசாரதி கோவிலுக்கு தர்மகர்த்தா தேர்தல் நடக்கவிருந்தது. வோட்டர்கள் யாருன்னா 18 வயதுக்கு மேற்பட்டவங்க, ஆண் பிள்ளைங்க, அந்தக் கோவிலைச் சுற்றி பத்து மைல் வட்டாரத்துல வசிக்கிறவங்க, நாலணா சந்தா கட்டியிருக்கறவங்க. இப்படித்தான் இருந்தது. தேர்தலில் போட்டியிடனுமுன்னா இத்தோட கவர்ன்மெண்டுக்கு இன்கம்டாக்ஸ் கட்டுறவங்களாவும் இருக்கணும். ஹரிஜனங்கள்ல இன்கம்டாக்ஸ் கட்டுறவங்க கிடைக்கலை.
திருவல்லிக்கேணியில் சார்ஜண்ட் குவார்ட்டர்ஸ் இருக்கில்ல. அதுக்குப் பக்கத்தில செருப்புத் தைக்கும் தொழிலாளர்களான சக்கிலியர்கள் அதிகமா இருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நாமம் போட்டேன். தென்கலை நாமம் போட்டேன். அவங்களுக்கெல்லாம் நாலணா கொடுத்து மெம்பர் ஆக்கி ஓட்டுப்போட அழைச்சிட்டு வந்தேன். கோவிலுக்குள்ள ஓட்டுப்போட விட மாட்டோம்னுட்டாங்க. மெட்ராஸ் தலைமை சிவில் கோர்ட்டுக்குப் போய் தேர்தலுக்கு தடை உத்தரவு வாங்கிட்டேன்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கோபுரம்அப்புறம் வழக்கு நடந்தது. இவங்களுக்கு ஓட்டுரிமை இருக்கா இல்லையா என்பது வழக்கு. வெங்கட்ராம சாஸ்திரியை எங்கள் தரப்பு வழக்கறிஞராக அமர்த்திக் கொண்டேன். அவருக்கு உதவுவதற்காக வைணவ கிரந்தங்களை எல்லாம் படிச்சேன். அப்புறம் அந்த ஹரிஜனங்களுக்கு தோள் பட்டையில் சங்கு சக்கர சூடு போட்டுவிட்டேன். அது வைணவர்களுக்கான அடையாளம். பிராமணரல்லாத வைணவர்களுக்கு புரோகிதம் பண்ணுகிறவர்களுக்கு பெயர் சாத்தாணி. இவர்களுக்கும் சாத்தாணி உண்டு என்று ஒருத்தரை ஏற்பாடு செய்தேன். அப்படியே சாட்சி சொல்லவும் செய்தேன்.

வைணவர்களில் சாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது என்பதை நிலைநாட்டுவதற்காக பல ஸ்லோகங்களை எங்கள் வக்கீலுக்கு எடுத்துக் கொடுத்தேன். அதிலேயொரு ஸ்லோகம் இன்னும் ஞாபகம் இருக்கு. ஒரு வைஷ்ணவனைப் பார்த்து உன்னுடைய ஜாதி எது என்று கேட்பது தாயோடு உடலுறவு கொள்வதற்குச் சமம் என்பது அந்த ஸ்லோகம். கீழ்க்கோர்ட்டிலே எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு சொல்லிட்டாங்க. ஆனால் வழக்கு அப்பீலுக்குப் போச்சு. முதல் அப்பீலில் எங்களுக்கு தோத்துப்போச்சு. அடுத்த அப்பீலில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அந்தத் தீர்ப்பைப் பாராட்டி காந்திஜி 'ஹரிஜன்' பத்திரிகையில் எழுதினார்."

4 comments:

  1. பி. ராமமூர்த்தி அவர்களைப் பற்றி இன்னொரு செய்தி குமுதத்தில் எழுபதுகளில் படித்திருக்கிறேன்.
    வருடம் 1972. சிம்லா ஒப்பந்தத்துக்காக புட்டோ அவர்கள் தில்லியில் இருந்தார். அவருடன் கூட அவர் மந்திரிசபை சகாக்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென்று பி. ராமமூர்த்தி அவர்களுக்கு பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. அதாவது ஒரு பாகிஸ்தான் மந்திரி, அவரைப் பார்க்க விரும்புவதாக. திகைப்படைந்தாலும் இவரும் போயிருக்கிறார். மந்திரியிடம் இவர் மரியாதையாக அழைத்து செல்லப்பட்டார். ராமமூர்த்தி அவர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசத் துவங்க, அவரோ தூய தமிழில் "என்ன ராமமூர்த்தி சார், தமிழில் பேச ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்களே" என்று கேட்டாரே பார்க்கலாம்!

    பிறகுதான் தெரிந்தது, அவர் 1947 - க்கு முன் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் இருந்திருக்கிறார்.

    இப்போது நீங்கள் எழுதிய செய்தியைப் பார்க்கும்போது புரிகிறது, அவர் ஏன் ராமமூர்த்தி அவர்களைக் கூப்பிட்டார் என்று. திருவல்லிக்கேணி பாசம் விட்டுப் போகுமா? சம்பந்தப்பட்ட மந்திரியின் பெயர் ஆகா சஹி அல்லது ஆகா இலாஹி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. அதுசரி, தாழ்த்தப்பட்ட மக்களாக கருதப்பட்டவர்களை ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்று காந்தி பெயரிட்டு அழைத்தது எப்படி இருக்கின்றது தெரியுமா? கண் தெரியாத ஒருவரை ஊரே குருடன் என்று அழைக்கும்போது அவருக்கு பரிந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு, இனி அவரை யாரும் குருடன் என்று அழைக்காதீர்கள். அவர் ஞானக் கண்கள் உடையவர். அவரை ஞானக்கண்ணா என்றே அழைக்கவேண்டும் என்று கூறுவது போல் இருக்கின்றது. இதில் பெயர் இடுபவர்க்கு பெரிதாக விளம்பரம் கிடைக்கலாமே தவிர பெயரிடப்பட்டவர்க்கு இரண்டும் ஒன்றுதான். உங்கள் பார்வையில் காந்தி செய்தது சரியா?

    ReplyDelete
  3. ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்தவகையில் நல்லது செய்ய முயற்சி செய்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன். காந்தியின் மனத்தை நான் அறிந்தவனல்லன். ஆனால் காந்தி 'ஹரிஜன்' என்று பெயரிட்டு அழைத்ததனால் தலித்களுக்கு மிகக் குறைந்த நன்மையே ஏற்பட்டுள்ளது.

    தலித்கள் அதனை ஏற்காததால்தான் ஹரிஜன் என்ற பெயர் இன்று நடைமுறையிலிருந்து வழக்கொழிந்து தலித், ஆதி திராவிடர் போன்ற பெயர்கள் வழக்கில் வருகின்றன.

    அவர் பங்குக்கு பி.ராமமூர்த்தியும் நல்லது செய்கிறேன் என்றுதான் சிலவற்றைச் செய்திருக்கிறார். ஆனால் அதிலும் பிரயோசம் ஏதுமில்லை. சக்கிலியர்களைப் பிடித்து அவர்கள் வணங்கும் தெய்வங்களை மறந்துபோகச் சொல்லி, அவர்களுக்கு (தென்கலை) நாமத்தைப் போட்டு, மார்கழித் திங்களும், உளனெனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகளும் சொல்லிக்கொடுத்து, அவர்களுக்கு சமாஸ்ரயணம் செய்வித்து, அவர்களை ஸ்ரீவைஷ்ணவர்களாக்கியும் என்ன பயன்?

    நீதிமன்றம் வரை சென்று போராட வேண்டியதாயிற்று. இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு இன்று அந்த சக்கிலியக் குழும்பங்களின் வழியில் வந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்?

    இதனால் பி.ராமமூர்த்தி செய்தது தவறு என்று சொல்லவில்லை. அவர் தன்னளவில் சில முயற்சிகள் செய்தார். காந்தி தன்னளவில் சில முயற்சிகள் செய்தார். பெரியார் தன்னளவில் வேறு சில முயற்சிகள் செய்தார். அம்பேத்கார் தன்னளவில் சிலவற்றைச் செய்தார்.

    Social Experiments தொடர்ச்சியாக நடக்க வேண்டும்.

    ReplyDelete
  4. பத்ரி - பி. ராமமூர்த்தி நேர்மையான கம்யூனிஸ்ட்கள் இருந்த தலைமுறையைச் சேர்ந்தவர். என்னுடைய பதிவில் முன்பு ஒரு முறை அந்நியன் என்ற தலைப்பிட்டு ஒரு பதிவு எழுதியிருந்தேன். வைதீக பார்ப்பனர்கள் வசிக்கும் தெருவில் வெளியூர்க்காரன் வரும்பொழுது எதிர்கொள்ளும் உரையாடல்களைப் பற்றிய கோர்வை அது.
    http://www.domesticatedonion.net/blog/?item=275

    இந்தச் சம்பவக் கோர்வையின் (சற்று புனைவு சேர்த்து) நிகழ்விடம், கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் விட்டலூர் என்ற கிராமம் - பி.ராமமூர்த்தியின் ஊர். அதே தெருவைச் சேர்ந்தவர்தான் அவர். தான் நம்பிய கொள்கைகளுக்காக தன் சமூகத்திலிருந்து முற்றாக அந்நியப்படுத்திக் கொண்டவர். தன்னுடைய சொத்துக்களையெல்லாம் கட்சிப்பணிக்குச் செலவிட்டு மிகச் சாதாரண மனிதராகச் செத்துப் போனவர்.

    இன்றைக்கு கடந்தகாலத்தை 20/20 பார்வை கொண்டு துல்லியமாகப் பார்த்து பி.ரா. ஏன் தலித்துகளுக்கு நாமம் போடவேண்டும் என்ற ரீதியில் கேட்கலாம். ஆனால் அன்றைய நிலையில் தன் மனதிற்கு நல்லது என்று தோன்றியதை திடமாகச் செய்தவர். நான் வெகுவாக மதிக்கும் அரசியல்வாதிகளில் ஒருவர்.

    ReplyDelete