Thursday, December 15, 2005

டூரிங் டாக்கீஸ்

இந்த tagging விளையாட்டு எனக்கு அவ்வளவாக ஒத்துவராதது. பதியவேண்டியவை என நான் நினைத்துப் பதியாமல் வைத்திருப்பது நிறைய. ஆனாலும் பிரகாஷின் அன்புத்தொல்லைக்காக...

நான் நாகப்பட்டினத்தில் அவ்வளவாக சினிமா பார்த்தது கிடையாது. மொத்தமாக 10, 12 பார்த்திருந்தால் அதிகம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் சமயத்தில் அந்த ஊரில் மூன்று தியேட்டர்கள். எல்லாமே சென்னை ரேஞ்சுக்குப் பார்த்தால் டப்பா தியேட்டர்கள். முதன்முதலாகப் பார்த்தது தசாவதாரம்; பின் ஏதோ ஒரு ஐயப்பா என்று வருடத்துக்கு ஒன்றாக அப்பா, அம்மா கூட்டிக்கொண்டு போகும் சாமி படங்கள். மூன்றாவது படிக்கும்போது தெருப்பையன்களை (என்னைவிடப் பெரிய பசங்கள்) நம்பி ஏதோ ஒரு சாமி படத்துக்கு அனுமதித்து அனுப்பி விட்டார்கள். அவர்கள் வேண்டுமென்றே செய்த சதியோ என்னவோ, சாமிப்படம் டிக்கெட் கிடைக்காமல் சிவாஜி நடித்த படம் ஒன்று (பெயர் ஞாபகமில்லை) - அதில் 'அண்ணன் ஒரு கோயில் என்றால்' என்ற பாடல் வரும் என்று நினைக்கிறேன் - ஓடும், பக்கத்தில் இருக்கும் இன்னொரு தியேட்டருக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அதுதான் நான் முதலில் பார்த்த செகுலர் படம். போரடித்தது.

அதன்பின் அம்மாவுடன் சென்று பார்த்த லஷ்மி பூஜை என்ற விட்டலாசார்யா படம். அம்மாவுக்கு அது விட்டலாசார்யா படம் என்று தெரியாது. ஏதோ "நல்ல சாமி படம்" என்று நினைத்து என்னையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

அதன்பின் ஆறாவது படிக்கும்வரையில் எந்தப் படமும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதன்பின் கூட்டாளிகள் மாறினாலும் எனக்கு சினிமா பார்க்கும் பழக்கமே வரவில்லை. ஆறாவதில் பள்ளிக்கூட விடுமுறைக்காக சில நண்பர்களோடு 'கிழக்கே போகும் ரயில்' பார்த்தது ஞாபகம் வருகிறது. ஏன் அந்தப் படம் என்று இப்பொழுது ஞாபகமில்லை.

அதுவரையில் நான் எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் படங்கள் எதுவுமே திரையில் பார்த்ததில்லை! ஆனால் ஒரு ராதிகா படம்! அதன்பின் தியேட்டரில் ஏதோ காரணத்துக்காக உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல்தான் இருக்கும். பின் நான் பார்த்த முதல் ஜிலுஜிலு படம் கமல் நடித்த சகலகலாவல்லவன்.

இப்படியே எனது eclectic mix தொடர்ந்தது - மை டியர் குட்டிச்சாத்தான், மிருதங்கச் சக்ரவர்த்தி என்று காலமாறுதல் குழப்பங்களை ஏற்படுத்தும் படவரிசை.

12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார். அப்பொழுதெல்லாம் ஆங்கிலப் படம் என்றாலே ('காந்தி' தவிர பிற படங்களை) பலான படங்கள் என்று எங்கள் ஊர் மக்கள் கருதிய காலம். அந்தப் படங்களுக்கு பெண்களுக்கு டிக்கெட் தர மாட்டார்கள்.

ஆனால் உண்மையிலேயே ஒரு பலான சீன் கொண்ட படத்தை பள்ளிக்கூடத்தின் ஆதரவில் பார்க்க நேர்ந்தது. Ape, Super Ape என்ற படம். பள்ளிச்சிறுவர்களுக்காக என்று பாதிக்காசில் ஓட்டிய படம். 50 பைசாவோ என்னவோ டிக்கெட் என்று நினைக்கிறேன். எட்டாவது படிக்கும்போது. கூட்டமாக எல்லோரும் போனோம். நோவாவின் கப்பலில் உள்ள மிருகங்கள் மாதிரி ஜோடி ஜோடியாக மிருகங்கள் கலவியும் கருத்தரித்தலும் குழந்தை பிறத்தலும் என்று தொடங்கி கடைசியில் ஆணும் பெண்ணும் உடலில் துணியின்றி கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியில் அரங்கு முழுதும் நிறைந்த எட்டாவது படிக்கும் பையன்கள் ஓவென்று கத்த... கட்!

நாகையிலிருந்து சென்னை வந்தால் அங்கு ஐஐடியில் முதல் வருடம் சுத்தமாக ஒரு படம் பார்க்கவில்லை. ஓப்பன் ஏர் தியேட்டர் (ஓஏடி) முழுதும் கூட்டம் நிறைந்திருந்தாலும் சனிக்கிழமை மாலைகளில் லைப்ரரிக்குச் சென்று ஏதோ ஸ்பெஷல் கடமை ஆற்றுவதால் நான் பிற மாணவர்களை விட ஏதோவிதத்தில் உயர்ந்தவன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் வருடத்திலிருந்துதான் முழுவதுமாகக் கெட்டுப்போனேன்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஓஏடியில் படங்கள். அப்பொழுது எல்லாமே ஆங்கிலப்படங்கள்தான். நான் முதன்முதலில் நல்ல சினிமாப் படங்களை (அத்துடன் பல குப்பைகளையும்) பார்க்கத் தொடங்கியது அப்போதுதான். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் எல்லா வெஸ்டர்ன் படங்களும். பல கிளாசிக் படங்கள். ஏன் ஜேம்ஸ் பாண்ட் என்றொரு ஜந்து இருப்பது அப்போதுதான் தெரிய வந்தது. முதன்முதலில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்து அடைந்த கிளர்ச்சிக்கு ஈடே கிடையாது! மழையில் நனைந்துகொண்டு படம் பார்ப்பது (மேலே கூரை கிடையாது), தலையணையைக் கையோடு எடுத்துக்கொண்டு போய் கான்கிரீட் படிகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது, முதல் சீன் திரையில் தெரிந்ததும் "Volume!" என்று கத்தி ரகளை செய்வது, புரொபசர்களின் பெண்களை சைட் அடிப்பது என்று... ஹூம்!

மூன்றாவது நான்காவது வருடங்களில் தொழில்நுட்பம் அதிகம் தெரிந்துகொண்டதால் நண்பன் ஒருவனின் வீட்டில் இருந்த உடைந்து போயிருந்த புரொஜெக்டரை பிற நண்பர்களோடு சேர்ந்து சரிசெய்து, 16மிமீ ஜெர்மன் படங்களை (ஊமைப்படங்கள், ஆனால் அந்தப் படங்களுக்குச் சத்தம் தேவையில்லை!) ஹாஸ்டல் ரூமுக்குள் வைத்து ரகசியமாகப் பார்த்தது; ஹாஸ்டல் soc sec (அதாவது social affairs secretary), விடுமுறை சமயத்தில் ஹாஸ்டலுக்கு வாடகைக்குக் கொண்டுவரும் விடியோ டெக்கைத் தனியாகத் தள்ளிக்கொண்டு வந்து தரமணியிலிருந்து கொண்டுவந்த சில 'உயிரியல் சோதனைப் படங்களை' பார்த்தது ஆகியவை இந்தப் பதிவில் தவிர்க்கப்படலாம். ஏனெனில் இது டூரிங் டாக்கீஸ்...

செமஸ்டர் லீவில் நாகை செல்லும்போது பார்த்த படங்கள் என்று ஞாபகம் இருப்பது ஒன்றிரண்டுதான்... நானும் அறுசுவை பாபுவும் விக்ரம் பார்த்துக்கொண்டிருக்கும்போது டிக்கெட்டைத் தொலைத்துவிட்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்; மணிரத்னம் என்ற ஆள் அக்னி நட்சத்திரம் என்ற சூப்பர் படம் எடுத்திருப்பதாக நண்பர்களுடன் சென்று பார்த்தது; நாகார்ஜுனா, அமலா நடித்த தெலுங்குப் படமான ஏதோ ஒன்று தமிழில் 'சிவா' என்று டப்பானது என்று நினைக்கிறேன். அது... அவ்வளவுதான்.

அக்னி நட்சத்திரத்துக்குப் பிறகு சென்னையில் வேறு ஏதேனும் மணிரத்னம் படம் ஓடினால் மட்டும் போய்ப் பார்த்திருக்கிறேன். பி.டெக் முடித்ததும் நண்பர்கள் அனைவரும் - தமிழ்ப் பசங்கள் மட்டும் - அஷோக் நகர் உதயம் தியேட்டரில் பார்த்த ஏதோ ஒரு கார்த்திக் படம் - கார்த்திக், பானுப்ரியா - "தேவதை போலொரு பெண்ணிங்கு சம்திங்..." படம் பெயர் ஞாபகம் இல்லை. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அமெரிக்கா வாசம்.

மல்ட்டிபிளெக்ஸில் முதலில் படம் பார்த்தது இதாகா கிராமத்தில்தான்! ஐவரி மெர்ச்சண்ட் படம் ஒன்றைப் பார்க்கப்போய் அந்தச் சின்னத் திரையரங்கில் மொத்தமாக எங்களையும் சேர்த்து மூன்றே பேர்கள்தான் - ஆச்சரியமாக இருந்தது. ஹவுஸ் ஃபுல்லானால் மொத்தம் 120 பேர்தான் உட்கார முடியும். ஆனாலும் நான் இதாகாவில் பார்த்த படங்களில் இரண்டு மூன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் பார்க்க 10, 15 பேர் வந்திருந்தாலே அதிகம். ஜுராசிக் பார்க் போன்ற சில படங்கள்தான் அரங்கு நிறைந்து பார்த்திருக்கிறேன்.

கார்னல் யுனிவர்சிட்டியில் வில்லார்ட் ஸ்டிரெயிட் ஹால் என்ற இடத்தில் வாரம் ஒரு படம் போடுவார்கள். அங்கு நிறையப் படங்கள் பார்த்திருக்கிறேன். சத்யஜித் ரேயை முதலில் அங்குதான் பார்த்தேன். என் கூட வசித்த நண்பர்கள் என்னை மாதிரியில்லை - சினிமாவை ஆழ்ந்து ரசிப்பவர்கள். நல்ல இலக்கியம் படிப்பவர்கள். அவர்களோடு சேர்ந்து இருந்ததால் நிறைய சினிமாக்கள் பார்க்கக் கிடைத்தன, புத்தகங்களும் ஓரளவுக்குப் படிக்கக் கிடைத்தன. அதன்பின் நான் கிரிக்கெட்/கிரிக்கின்ஃபோ மீது பழியாக சினிமாவை மறந்து விட்டேன்.

இப்பொழுதெல்லாம் எப்பொழுதாவதுதான் சினிமா பார்க்கிறேன். சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸில் இருந்தால்தான் போகிறேன். (வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால்.) சீரியஸ் சினிமாமீது அவ்வளவாக நம்பிக்கையில்லை. தமிழ் சினிமாமீது சுத்தமாக நம்பிக்கையில்லை. ஆனாலும் சந்திரமுகி, அந்நியன் போன்ற படங்களை விடுவதில்லை! அவ்வப்போது சில ஆங்கிலப் படங்கள் நல்லதாகக் கண்ணில் படுகின்றன.

டெய்ல்பீஸ்: திருப்பூர் தமிழ்ச்சங்க விழாவுக்கு நான், முருகன், ராகவன், ரூமி எல்லோரும் போயிருந்தோம். நானும் முருகனும் திருப்பூரைச் சுற்றிவரும்போது 'கிச்சா வயசு 16' படம் கண்ணில் பட்டது. மாலை விழாவுக்கு முன் ஏன் இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது என்று நான் முருகனைக் கேட்க, அவர் மதியம் படம் பார்த்தால் தலை வலிக்கும் என்றும், தன்னால் வரமுடியாது என்றும் சொன்னார். ஆனால் நான் விடவில்லை. தனியாகச் சென்றேன். படம் பார்க்க என்னுடன் இருந்தவர்கள் மொத்தமாகவே 10 பேர்தான் என்று நினைக்கிறேன். படம் பற்றிப் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நாகை தியேட்டர்களில் படம் பார்த்ததுபோன்ற ஓர் நாஸ்டால்ஜிக் உணர்வு. அழுக்கு தியேட்டர். ஏசி கிடையாது. ஃபேன் தடதடவென ஓடும் சத்தம். சுவரெங்கும் காவிக்கறை. சீட் பிய்ந்து தேங்காய் நார் வெளியே தெரியும்.

ஆனால் டிக்கெட் 10 ரூபாயோ என்னவோதான்!

இன்றுகூட நாகப்பட்டினத்திலும் பிற தமிழக டவுன்களிலும் தியேட்டர்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த தியேட்டர்களில்தான் கோடம்பாக்கத்தின் கனவுகள் நனவுகளாகின்றன!

பிரகாஷின் கட்டளைப்படி அடுத்து நான் tag செய்யவேண்டிய ஆள் நாராயணாம்.

11 comments:

  1. பத்ரி,

    நல்லா ஜாலியா இருந்தது படிக்க!

    //தலையணையைக் கையோடு எடுத்துக்கொண்டு போய் கான்கிரீட் படிகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது, முதல் சீன் திரையில் தெரிந்ததும் "Volume!" என்று கத்தி ரகளை செய்வது, புரொபசர்களின் பெண்களை சைட் அடிப்பது என்று//

    IISc (நான் இங்கு படிக்கவில்லை) ஜிம்கானா ஞாபகத்தில் நானும் கொஞ்சம் நாஸ்டால்ஜிக் ஆயிட்டேன்.

    ReplyDelete
  2. /12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார்./ ஆகா :-)))

    ReplyDelete
  3. //அதுதான் நான் முதலில் பார்த்த செகுலர் படம்//

    :-):-):-)

    // (ஊமைப்படங்கள், ஆனால் அந்தப் படங்களுக்குச் சத்தம் தேவையில்லை!) //

    வெறும் சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு கலைச் சேவை புரிவார்களே.. அந்த மாதிரியா? :-)

    //இந்த தியேட்டர்களில்தான் கோடம்பாக்கத்தின் கனவுகள் நனவுகளாகின்றன!//

    true..

    ரொம்ப தேங்ஸ் தலைவரே... இன்னும் அடுத்த ஆறு மாசத்துக்கு தொந்தரவு குடுக்க மாட்டேன்..

    ReplyDelete
  4. "தேவதை போலொரு பெண்ணிங்கு சம்திங்..." :))))

    மொத்தத்தில் டெயில்பீஸ் சூப்பர்....அதுவும் அந்த நாஸ்டால்ஜிக் உணர்வு.

    ReplyDelete
  5. //12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார்.//
    இதுமாதிரி விபத்துக்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏது?

    முன்பே சொன்னேனா என்று தெரியவில்லை: True Lies பார்க்கப்போன நண்பர்கள், படம் முழுவதையும் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட கிளைமாக்ஸில் ஏக் தோ தீன் சார் என்று வில்லன் கோஷ்டி நம்பர் சொல்ல, என்னடா ஹிந்தி மாதிரி இருக்கே என்று படம் முடிந்தபின் வெளியே வந்து பார்த்திருக்கிறார்கள் - போஸ்டரில் True Lies என்று பெரிதாகவும் கீழே (ஹிந்தி) என்று சின்னதாகவும் எழுத்துக்கள் ;-)

    ReplyDelete
  6. இரண்டாம் வருடத்திலிருந்துதான் முழுவதுமாகக் கெட்டுப்போனேன்.
    >>>
    Transition of a fruit to freak :))

    ReplyDelete
  7. பத்ரி,

    //சிவாஜி நடித்த படம் ஒன்று (பெயர் ஞாபகமில்லை) - அதில் 'அண்ணன் ஒரு கோயில் என்றால்' என்ற பாடல் வரும் //

    அதான் படம் பேரும். 'அண்ணன் ஒரு கோயில்'. இதை மாட்டினி ஷோ பார்த்து மண்டை காய்ந்து விட்டது!

    //அப்பொழுதெல்லாம் ஆங்கிலப் படம் என்றாலே ('காந்தி' தவிர பிற படங்களை) பலான படங்கள் என்று எங்கள் ஊர் மக்கள் கருதிய காலம். அந்தப் படங்களுக்கு பெண்களுக்கு டிக்கெட் தர மாட்டார்கள்.
    //

    கரெக்டா சொன்னீங்க. வத்திராயிருப்பு ராமக்ரிஷ்ணா தியேட்டரிலும் ஆங்கிலப் படங்களுக்குப் பெண்களுக்கு டிக்கெட் கிடையாது! அதுவரை பெண்கள் கவுண்ட்டர் பக்கம் போகாத ஆண்களெல்லாம் அதில் நுழைந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போவார்கள்!!

    கதவு எதுவும் கிடையாதாகையால், தார்ப்பாயை இழுத்து மூடி வெளிச்சத்தைத் தடுத்திருப்பார்கள். தாமதமாக வரும் ஆசாமிகள் தார்ப்பாயை விலக்கியதும் திரை வெளிறிப் போக 'டேய்.. ஏய்...' என்று கூக்குரல்கள் கிளம்பும்! வெளியிலிருந்து தியேட்டரைப் பார்த்தால் ஒரே மர்மமாக இருக்கும்! :)

    //கார்த்திக், பானுப்ரியா - "தேவதை போலொரு பெண்ணிங்கு //

    கோபுர வாசலிலே. இன்று வரை காதில் இனிமையாக ஒலிக்கும் பாடல்கள். 'தாலாட்டும் பூங்காற்று' கேட்டுப் பாருங்கள். சொக்க வைக்கும் பாடல்!

    கேளடி பாவையே என்ற துள்ளலான பாடலுக்கு (தலைவர் பாலு பாடியது) மோகன்லால் ஒரே ஒரு காட்சியில் அக்கார்டியனோடு அதைப் போலவே இருக்கும் அவரது புன்னகையோடும் வருவார்)

    //ஃபேன் தடதடவென ஓடும் சத்தம். சுவரெங்கும் காவிக்கறை. சீட் பிய்ந்து தேங்காய் நார் வெளியே தெரியும்.
    //

    ஆமாம். சில தியேட்டர்களில் உட்காரும் பலகையே இருக்காது. அரங்கு நிறைந்திருக்க, தாமதமாக வரும் பாவாத்மாக்கள் இருளில் தடுமாறிக்கொண்டே பார்த்து 'ஐ. ஒரு சீட் காலியா இருக்கு' என்று வேகமாக வந்து உட்கார்ந்து தொம்மென்று விழுவார்கள். பக்கத்து சீட்டுகளில் இரண்டு இடிச்ச புளி செல்வராசுகள் உட்கார்ந்து கொண்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வார்கள்!

    நாராயணன். வாங்க. இந்த ரிலே ரேஸ் நல்லாத்தான் இருக்கு. :)

    ReplyDelete
  8. //இந்த tagging விளையாட்டு எனக்கு அவ்வளவாக ...//

    இப்படிச் சொல்லிட்டுக் கலக்கலா எழுதிட்டீங்க பத்ரி.

    சுந்தர்,

    //'ஐ. ஒரு சீட் காலியா இருக்கு' என்று வேகமாக வந்து ....//

    படிச்சப்ப சிரிப்பு வந்தாலும் நிஜமாவே பாவாத்மாக்கள்தான்.

    ReplyDelete
  9. நண்பரின் அன்புத்தொல்லைக்காக, நேரம் ஒதுக்கு உங்க 'டவுசர்'கால கதையைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    சுந்தர் குறிப்பிட்டுள்ள இந்த கூத்துக்கள்தான் நான் பார்த்த பெரும்பாலான திரையரங்குகளுக்கு...

    கதவு எதுவும் கிடையாதாகையால், தார்ப்பாயை இழுத்து மூடி வெளிச்சத்தைத் தடுத்திருப்பார்கள். தாமதமாக வரும் ஆசாமிகள் தார்ப்பாயை விலக்கியதும் திரை வெளிறிப் போக 'டேய்.. ஏய்...' என்று கூக்குரல்கள் கிளம்பும்! வெளியிலிருந்து தியேட்டரைப் பார்த்தால் ஒரே மர்மமாக இருக்கும்! :)

    ஆமாம். சில தியேட்டர்களில் உட்காரும் பலகையே இருக்காது. அரங்கு நிறைந்திருக்க, தாமதமாக வரும் பாவாத்மாக்கள் இருளில் தடுமாறிக்கொண்டே பார்த்து 'ஐ. ஒரு சீட் காலியா இருக்கு' என்று வேகமாக வந்து உட்கார்ந்து தொம்மென்று விழுவார்கள். பக்கத்து சீட்டுகளில் இரண்டு இடிச்ச புளி செல்வராசுகள் உட்கார்ந்து கொண்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வார்கள்!

    ReplyDelete
  10. கிளம்பிட்டிங்களா இப்படி. அடுத்த நானா? விடிஞ்சது போ, இப்பதான் பார்த்தேன். ரெண்டு நாளு கொடுங்க எழுதிடறேன் :)

    ReplyDelete
  11. neega Tirupur-la MPS theyattarla padam paarthu eruppenga athu oru dappa theyattar mathapadi ellaa theyattarum naalla erukkum (e.g) sangeetha,saranya,tamilnadu,univarsal,sri sakthi,srinivasa,cnipark,dimand,nadaraja, eppedi neraiya erukku

    ReplyDelete