Friday, December 16, 2005

மைக்ரோசாப்ட்டின் இந்தியா முதலீடு

[குமுதம் இதழுக்காக நான் எழுதி அனுப்பியது. இதில் சில வரிகள் எடிடிங் செய்யப்பட்டதால் பதிப்பானதில் சில புள்ளிவிவரத் தவறுகள் வந்துள்ளன. இங்கு கொடுத்திருப்பது ஒரிஜினல், அன்-எடிடட் வெர்ஷன்.]

சென்ற வாரம் இந்தியா வந்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் அவரது நிறுவனம் இந்தியாவில் 1.7 பில்லியன் டாலர்கள் (7,820 கோடி ரூபாய்கள்) அளவுக்கு முதலீடு செய்யும் என்றார்.

பில் கேட்ஸின் முதலீட்டினால் இந்தியாவுக்கு நேரடியாக என்ன நன்மை? அடுத்த நான்கு வருடங்களில் இன்னமும் 3,000 பேர்களை மைக்ரோசாப்ட் வேலைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொல்லியுள்ளது. இந்தியாவின் மூன்று பெரிய ஐடி நிறுவனங்கள் - டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ - சேர்ந்து அடுத்த ஒரு வருடத்தில் 50,000 பேர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளப்போவதாகச் சொல்கிறார்கள். இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டும் அடுத்த ஒரு வருடத்தில் 1.5 லட்சம் பேருக்கு மேல் வேலை கொடுக்கப்போகிறார்கள். ஆக மைக்ரோசாப்ட் எண்ணிக்கை இதற்கு முன் சாதாரணம். அவர்களது முதலீடு வேறு எந்த வகையில் இந்தியாவுக்கு உதவப்போகிறது?

இந்த முதலீட்டின் பெரும் பகுதி மைக்ரோசாப்டின் ஆராய்ச்சிகளுக்கு, புதிய மென்பொருள்களை உருவாக்குவதற்குப் போய்ச்சேரும் என்று தோன்றுகிறது. இதனால் கூட நேரடியாக இந்தியாவுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. மைக்ரோசாப்டின் முக்கியமான சந்தையான அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுக்குத் தேவையான மென்பொருள்கள்தான் இந்த ஆராய்ச்சிச் சாலைகளில் உருவாக்கப்படும். இந்தியா இன்னமும் மைக்ரோசாப்டின் முக்கியமான சந்தை அல்ல. இந்தியாவுக்குத் தேவையான இந்திய மொழிகளிலான மென்பொருள்கள், இந்தியப் பொருளாதாரத்துக்கு அத்தியாவசியமான சிறு தொழில்களின் செய்திறனை அதிகரிக்கச் செய்யக்கூடிய மாதிரியான மென்பொருள்கள் ஆகியவற்றை மைக்ரோசாப்ட் உற்பத்தி செய்வதுபோலத் தெரியவில்லை. இன்னமும் அதிகத் திறமையுடைய, பேசக்கூடிய, பேச்சைப் புரிந்துகொள்ளக்கூடிய, கையெழுத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய கணினியை, அதற்கான மென்பொருளைத் தயாரிப்பதுதான் தன் கனவு என்கிறார் பில் கேட்ஸ். ஆனால் அது இந்தியாவுக்கு இப்பொழுது தேவையா, என்ன விலை ஆகும் என்பதைப் பற்றி பில் கேட்ஸ் பேசுவதில்லை. முதலீட்டின் இன்னொரு பங்கு மைக்ரோசாப்டின் விளம்பரங்களுக்குப் போய்ச்சேரும் என்று தோன்றுகிறது.

ஆக பில் கேட்ஸின் முதலீட்டினால் இந்தியாவுக்கு மிக அதிக நன்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் புதுத் தொழில்களை வரவேற்கக்கூடியமாதிரியான வென்ச்சர் கேபிடலில் இண்டெல் நிறுவனம் முதலீடு செய்வது போல மைக்ரோசாப்ட் செய்வதில்லை. பில் கேட்ஸ் வருவதற்கு சில நாள்கள் முன்னர் இந்தியா வந்திருந்த கிரெய்க் பேரெட் தன் பங்குக்கு 1.1 பில்லியன் டாலர்கள் (5,060 கோடி ரூபாய்கள்) முதலீடு செய்வதாகச் சொன்னார். அதில் கிட்டத்தட்ட 1,150 கோடி ரூபாய்கள் இந்த வென்ச்சர் கேபிடல் முறையில் பிற இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுபவை. அது மிக அதிக அளவில் இந்தியப் பொருளாதாரம் முன்னேற உதவியாக இருக்கும். நாளடைவில் அதிக வேலை வாய்ப்புகளையும் வழங்கும். பல தொழில் முனைவர்களையும் உருவாக்கும்.

9 comments:

  1. மைக்ரோ ‘சாப்ட்’ ஆக இருப்பதால், பிரம்மாண்டத்தை, மோகத்தை உருவாக்குவார்களே தவிர வேலைவாய்ப்பையல்ல; நீங்கள் கூறுவதுபோல் இந்திய மூளைகளை பயன்படுத்தி அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராவதே பில்கேட்சின் திட்டம். நன்றி!
    இதையும் வாசிக்கலாம் :

    ReplyDelete
  2. மைக்ரோ ‘சாப்ட்’ ஆக இருப்பதால், பிரம்மாண்டத்தை, மோகத்தை உருவாக்குவார்களே தவிர வேலைவாய்ப்பையல்ல; நீங்கள் கூறுவதுபோல் இந்திய மூளைகளை பயன்படுத்தி அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராவதே பில்கேட்சின் திட்டம். நன்றி!
    இதையும் வாசிக்கலாம் :


    மைக்ரோ சாப்ட்டின் “மைக்ரோ சுரண்டல்”

    ReplyDelete
  3. சரியாக உண்மையை காட்டியுள்ளீர்கள்..

    மைக்ரோசாப்டின் பிரமாண்டத்தை வைத்து, விஷயம் தெரியாத சாதாரண மக்களிடம்.. மிகப்பெரிய தொழில் முதலீட்டை கொண்டுவரும் சாதனையைச்செய்வதைப்போல் மத்தியில் உள்ள தயாநிதி ஒரு போலி பிம்பம் உருவாக்குகின்றார்.. எல்லாம் தேர்தலை முன்னிட்டு...

    -
    செந்தில்/Senthil

    ReplyDelete
  4. ஒவ்வொரு முறை பில் இந்தியா வரும்பொழுதும் , இது மாதிரி "பெரியவர்" ஒருவர் குமுதத்தில் எழுதி வந்தார். இது உங்கள் முறை போலும் :)
    இண்டெல் பற்றி எழுதியது கிச்சுகிச்சு மூட்டியது. மற்ற இந்திய நிறுவனங்களின் இந்திய சேவையை சிலாகித்தது இன்னும் நன்றாக இருந்தது.
    சீனாவிற்கு ஓடும் இந்திய நிறுவனங்கள் தெரியும் தானே!. அனைத்து நிறுவனங்களின் குறிக்கோள் ஒன்று தான்.
    பில்லின் மற்ற சென்னை விஷயங்களை பற்றியும் , அதற்கும் ஒரு காரணம் கற்பித்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.

    ReplyDelete
  5. பத்ரி இந்த ஒப்பீடு (டிசிஎஸ்+விப்ரோ+இன்போஸிஸ் = 1.5 லட்சம் ஆனால் மைக்ரோசாப்ட் = 3000)
    என்பது அவ்வளவு சரியான் ஒப்பீடாக தெரியவில்லை. காரணம், முதல் மூன்று இந்திய நிறுவனங்களும் "சேவை " முறை தொழில் நிறுவனங்கள். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவுவதோ "ஆராய்ச்சிப் பணிச்சாலை" வகை. இரண்டையும் ஒப்பிட்டு இதனால் லாபமில்லை என்று சொல்வது மிகக்குறுகிய பார்வையாய் படுகிறது. மேலும் மைக்ரோசாப்டை பொறுத்தளவில் இந்த வெலையை அவர்கள் சிங்கப்பூரிலீ அல்லது தைவானிலோ கூட நினைத்தால் செய்யமுடியும்.

    என்னைபொறுத்தளவில், மைக்ரோசாப்டின் உலகளாவிய தொடர் முதலீடுகளில் இதுவும் ஒரு பகுதி . அவ்வளவுதான். இதில் தானமாய் கொடுத்தமாட்டை பல்லைப்பிடித்து பார்ப்பது எவ்வள்வு சரி என்பது புரியவில்லை. கூடவே "எயிட்ஸ்" நோய்தடுப்புக்குக் கொடுத்த தொகையையும் கணக்கில் கொள்ளவேண்டும். அதற்கு என்ன அவசியம்? இதே ரீதியில் அதை நீங்கள் "லஞ்சம்" என்று சொன்னாலும் சொல்வீர்கள். :-)


    மைக்ரோசாப்ட் "சுரண்டல்" என்பதெல்லாம் மிக மிக அதிகப்படியான வார்த்தைகள்.
    அதே லாஜிக்கில் பார்த்தால் நாம் அமெரிக்கா வந்து சம்பாதிப்பதையும் "கொள்ளையடித்தல்" என்று சொல்ல வேண்டியிருக்கும்"

    ReplyDelete
  6. மெய்யப்பன்: உங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பு வரவைத்ததில் சந்தோஷம் அடைகிறேன்:-) மற்றபடி இண்டெல், மைக்ரோசாப்ட் இரண்டுமே பணம் சம்பாதிப்பதைத்தான் குறிக்கோளாக வைத்துள்ளன. நீங்களும் நானும் கூடத்தான். ஆனால் ஒரு முதலீட்டினால் எந்த அளவுக்கு நன்மை என்று கருத்து சொல்லும்போது இண்டெல் அதிக நன்மை தரக்குடியது என்பது என் வாதம்.

    இன்று இண்டெல் தன் 250 மில்லியன் டாலர் வென்ச்சர் கேபிடல் நிதியிலிருந்து மூன்று நிறுவனங்களின் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது:
    MobiApps, Persistent Systems and Maya Entertainment to receive funding

    ---

    கார்த்திக்: தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பது பற்றி... பில் கேட்ஸின் வருகை உருவாக்கியுள்ள euphoria பற்றி உங்களுக்குத் தெரியாது. என் பதிலை அடக்கிய அதே குமுதம் கட்டுரை எப்படி ஆரம்பித்திருந்தது தெரியுமா? "அவர் வருவாரா, வரவே மாட்டாரா என்று ஏங்கிக் கிடந்த தமிழகத்துக்கு இம்முறை அவர் வந்தேவிட்டார்..." (அல்லது இதுபோல)

    பில் கேட்ஸ் தன் தொழிலை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். தவறில்லை. ஆனால் பொதுமக்களுக்கு அதுபற்றிய சரியான புரிதல் வேண்டும். ஓர் ஆசாமி வந்து 7500 கோடி ரூபாய் முதல் போடுகிறேன் என்கிறான் என்றால் அது எப்படிச் செலவாகிறது என்று மக்களுக்குப் புரியவேண்டும்.

    3,000 புதிய வேலைகள் என்றால் அது பெரிய விஷயமல்ல (நல்லதுதான் என்றாலும்)... ஏனெனில் அதனைவிடப் பலமடங்கு - கிட்டத்தட்ட அதே சம்பளம் கிடைக்கக்கூடிய - வேலைகள் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் துறையில் உருவாகிக்கொண்டே இருக்கின்றன என்பதைக் குறிக்கத்தான் அந்தப் புள்ளிவிவரத்தைக் கொடுத்தேன்.

    மைக்ரோசாப்ட் போல இன்னமும் பல நிறுவனங்கள் இந்தியாவில் இன்னமும் நிறைய முதலீடுகளைச் செய்யும். அதில் நாம் ஒரேயடியாக நிலை தடுமாறி "பில் கேட்ஸ் எங்களைக் காக்க வந்த கடவுள்" என்று கருத வேண்டியதில்லை.

    அவ்வளவுதான்.

    ---

    மெய்யப்பன்: முடிந்தால் குமுதல் கட்டுரை முழுவதையும் படியுங்கள். என்னைத்தவிர மூன்று பேர் கருத்து சொல்லியுள்ளனர். பில் கேட்ஸ் இந்தியாவையே மாற்றிவிடப் போகிறார். அவர் தெய்வம், அதற்கும் மேல் என்ற வகையில்தான் கருத்துகள் உள்ளன. Contrarian viewpointஐ முன்வைப்பது தவறில்லை என்று நினைக்கிறேன்.

    ஓரளவு ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறேன் என்றும் நம்புகிறேன்.

    ReplyDelete
  7. பில் கேட்ஸ் மட்டுமல்ல அமெரிக்கர்களும் அமெரிக்க நிறுவனங்களும் எதை செய்தாலும் அதில் தங்களுக்கு லாபம் இருக்குமா என்பதில்தான் குறியாயிருப்பார்கள். ஆனால் ஒன்று. பில் கேட்சின் தனிப்பட்ட நிதியிலிருந்து இந்தியாவில் எய்ட்ஸ் ஒழிப்புக்காக கணிசமான தொகையை தானமாக அளித்திருப்பது வேறெந்த நாட்டின், ஏன் நீங்கள் குறிப்பிட்ட இந்திய நிறுவனங்களும் செய்யாத ஒன்று. நான் என் நிறுவன நிதியிலிருந்து கொடுப்பது ஒன்று. என்னுடைய தனிப்பட்ட நிதியிலிருந்து கொடுப்பதென்பது வேறொன்று. நம்முடைய இந்திய நிறுவனங்களின் தலைவர்களுக்கு தனிப்பட்டவகையில் எத்தனைக் கோடி சொத்து இருந்தாலும் இந்த அளவு வேண்டாம் அதிலி நூற்றில் ஒரு பங்கு செய்திருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..

    மைக்ரோ சாஃப்ட்டின் இந்திய முதலீட்டால் இந்தியாவுக்கு என்ன நேரடி நன்மை என்று பார்ப்பதை விட அதனால் இந்தியருக்கு குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பாவது கிடைக்குமா என்று பார்ப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.

    மூதலீடு செய்ய முனையும் ஒரு நிறுவனம் அதிலிருந்து லாபத்தைப் பார்ப்பது ஒன்றும் குற்றமல்லவே. இன்டெல் நிறுவனத்தின் வெஞ்சர் கேப்பிடல் அணுகுமுறையும் அதைச் சார்ந்ததுதான்.ஏதோ இந்தியாவுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதுமட்டும் அவர்களுடைய நோக்கமல்ல என்பதுதான் என் வாதம்.

    ஆக, இதில் மைக்ரோ சாஃப்டும், இண்டெலும் ஒன்றுதான்.

    ReplyDelete
  8. // பில் கேட்ஸ் இந்தியாவையே மாற்றிவிடப் போகிறார். அவர் தெய்வம், அதற்கும் மேல் என்ற வகையில்தான் கருத்துகள் உள்ளன.//
    இந்த வகை போலிபுரிதல்களையும், பத்திரிகைகளின் குருட்டு விளம்பரங்களையும்
    மிகவும் எதிர்க்கிறேன். அந்த வகையில் உங்களுடைய விமர்சன அவசியம் என்று படுகிறது. மேலும் அதௌ குமுதத்தில் எழுதுவதும் அவசியம்.

    ReplyDelete