Thursday, December 29, 2005

தவமாய் தவமிருந்து

சற்றே நம்பிக்கைக் குறைவுடன்தான் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன்.

ஆனால் படம் நன்றாக இருந்தது. 'ஆட்டோகிராப்'-ஐ விட நன்றாக இருந்தது. ஆட்டோகிராபில் கதையம்சம் குறைவு. நிறைய இடங்கள் வலுவற்றதாக இருந்தன. செயற்கை அங்கங்கே தூக்கல். ஆனால் 'த.த'வில் நல்ல, வலுவான கதை இருந்தது.

தமிழ்ப் படங்களுக்கான பெரிய குறை, படத்தை ஜவ்வாக இழுத்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்கள் கொண்டுவர வேண்டியிருப்பதுதான். பல சிறுகதை எழுத்தாளர்கள் கதையை நன்றாக முடித்தபின்னும் கடைசியாக இன்னமும் ஒரு பாரா சேர்த்துவிடலாம் என்று நினைத்து சொதப்புவது போல, சேரன் இங்கும் செய்துள்ளார். "ஏம்ப்பா, நான் உனக்கும் ஏதாவது குறை வச்சிருக்கேனா?" என்று தந்தை (ராஜ்கிரண்) கேட்டு, மகன் ராமலிங்கம் (சேரன்) நெகிழ்ச்சியுடன் மறுப்பதும், அத்துடன் தந்தை உயிர் பிரிவதுமான காட்சியுடன் படத்தை நிறுத்தியிருக்கலாம். அதற்குப் பிறகான பல நிமிடங்கள் கதையில் எதையும் புதிதாகச் சொல்வதுமில்லை, காட்டுவதுமில்லை.

படத்தில் சில கவனக்குறைவான விஷயங்கள் இருப்பதை அருணின் விமரிசனமும் எடுத்துக்காட்டியது. உதாரணத்துக்கு ஒவ்வொரு காலத்திலும் காட்சிகளை சரியாக அமைத்த டைரக்டர், அந்தந்த காலத்தின் பணத்துக்கான மதிப்பு பற்றி கவனம் கொள்ளவில்லை. 1977-ல் 2,000 போஸ்டர் ஒட்ட ரூ. 1,000 கூலி ஒத்துவரவில்லை. (ரூ. 100 போதும்!).

1991, ராஜீவ் காந்தி கொலை நேரத்தில், தமிழகத்தில் ஊருக்கு ஊர் கலவரங்கள் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. அப்படி ஏதும் நடந்ததாக எனக்கு நினைவில்லை.

சாதாரண எஞ்சினியரிங் படித்த ராமலிங்கம் சடசடவென மதுரையில் வேலை பார்த்து ஹோண்டா காரும் லக்சுரி அபார்ட்மெண்டும் - எப்படி முடியும் என்று புரியவில்லை. சொந்தத் தொழில் செய்வதாகக் காட்டவில்லை. சம்பளத்துக்குத்தான் வேலையில் இருக்கிறார். வெகு நாள்கள் ஸ்கூட்டரில்தான் பயணம் செய்கிறார். அடுத்த கட்டத்தில் எங்கிருந்தோ ஹோண்டா கார் வருகிறது. இதுபோன்ற குறைகள் பலவற்றையும் ஒரு நல்ல துணை இயக்குனரை அருகில் வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதும்போதே தவிர்த்திருக்கலாம்.

நாராயணன் சரண்யா நடிப்பு பற்றி சிலாகித்துள்ளார். சில இடங்களில் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் பல இடங்களில் (முக்கியமாக ஆரம்பத்தில்) அவரது நடிப்பு எரிச்சலைத் தந்தது. வயதான காலத்துக்கான ஒப்பனை சரண்யாவுக்குப் பொருந்தவில்லை. (இந்தியன் படத்திலும் சுகன்யாவுக்கான வயதான கால ஒப்பனை முகத்தில் ரப்பர் முகமூடியை ஒட்டிவைத்தது போன்று அசிங்கமாகத் தெரிந்தது நினைவிருக்கலாம்....) முகத்தின் சுருக்கங்கள் மிகவும் செயற்கையாக இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

ராஜ்கிரண் நடிப்பு பற்றி அனைவருமே நல்லதாகப் பேசிவிட்டார்கள். மிக நல்ல, யதார்த்தமான நடிப்பு. அந்தப் பாத்திரத்தை வேறு யாருமே இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்கமுடியாது என்று சொல்லலாம். சேரனின் நடிப்பில்தான் குறை. பிற அனைவரும் மிக அற்புதமாக விளையாடியிருக்கிறார்கள். இரண்டு பெண் புதுமுகங்களும் மிக நன்றாக நடித்துள்ளனர்.

சேரனின் இந்தப் படம் தமிழ் சினிமாவில் மேலும் சில நல்ல படங்கள் உருவாவதற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்!

9 comments:

 1. பதிரி,

  ராஜீவ் காந்தி இறந்த போது பல ஊர்களில் தி.மு.க காரர்கள் குறிவைத்து தாக்கப்பட்டது நிஜம். (உதா) ஆத்தூர் சேலம் .(எங்க ஊர்தான்)

  ReplyDelete
 2. //'த.த'வில் நல்ல, வலுவான கதை இருந்தது//

  ,

  உங்களுக்கு நகைச்சுவை வருமென்று இப்போது ஒப்புக் கொள்கிறேன். :-)

  //ஒவ்வொரு காலத்திலும் காட்சிகளை சரியாக அமைத்த டைரக்டர், அந்தந்த காலத்தின் பணத்துக்கான மதிப்பு பற்றி கவனம் கொள்ளவில்லை//

  இது போன்று பல சிறு குறைகள். 1977-ல் சிறுவனுக்கான சட்டை 350 ரூபாய் என்பதும் ஒரு சிறிய குடும்பத்தின் மளிகை சாமான் செலவு ரூ.540 என்பதும் அப்போதைய மதிப்பின்படி மிக அதிகமான தொகை.

  //1991, ராஜீவ் காந்தி கொலை நேரத்தில், தமிழகத்தில் ஊருக்கு ஊர் கலவரங்கள் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை//

  தவறில்லை. ஒரு தேசியத்தலைவர் கொல்லப்பட்டதற்கு நம் மக்களின் வழக்கமான இயல்புப்படி பதட்டமேற்பட்டிருக்கலாம்.

  //சேரனின் இந்தப் படம் தமிழ் சினிமாவில் மேலும் சில நல்ல படங்கள் உருவாவதற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்! //

  முதல் வரியைப் படிக்கவும். :-)

  - Suresh Kannan

  ReplyDelete
 3. சுரேஷ்: இந்தப் படம் பற்றிய உங்கள் பதிவைப் படிக்க விட்டுவிட்டேன்.

  வெறும் ஃப்ளாஷ்பேக் சம்பவக் கோர்வை; கதையே இல்லை என்கிறீர்களா?

  ReplyDelete
 4. //"ஏம்ப்பா, நான் உனக்கும் ஏதாவது குறை வச்சிருக்கேனா?" என்று தந்தை (ராஜ்கிரண்) கேட்டு, மகன் ராமலிங்கம் (சேரன்) நெகிழ்ச்சியுடன் மறுப்பதும், அத்துடன் தந்தை உயிர் பிரிவதுமான காட்சியுடன் படத்தை நிறுத்தியிருக்கலாம்.//

  எனக்கென்னவோ அதன் பின்னர் வரும் சம்பவங்கள் தேவை தான் என்று தோன்றுகிறது.

  "அழகி"க்கு பிறகு நான் தனியாக அமர்ந்து அழுது ஆற்றிய திரைப்படம். அதிலும் சேரன் வீட்டை விட்டு வெளியேறும் பொழுது ராஜ்கிரண் 500 ரூபாய் கொடுத்து 1 வாரத்திற்கு போதுமாப்பா என்பதை பார்த்த பொழுது "என்னை அறியாமல் என் தந்தை என் கண் முன்னே வந்தார்". அந்தக் காட்சியை நினைத்தாலே கண்கள் கலங்குகிறது.

  சுரேஷ் கண்ணனின் விமர்சனம் எனக்கு அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. அவருடைய "அன்னியன்" திரைப்பட விமர்சனம் பார்த்த பொழுது "சுரேஷ் கண்ணன்" ஒரு பரிதாபத்திற்குறிய ஆள் என்பது தெளிவாகி விட்டது.

  ReplyDelete
 5. பத்ரி,

  கதை என்கிற ஆதார மையத்திலிருந்து புறப்படுபவைகளே அதைச் சுற்றி நிகழும் சம்பவங்கள். ஆனால் இந்தப் படத்தில் வெறும் உணர்ச்சிகரமான சம்பவங்களை வைத்தே படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் சேரன். அவர் இந்தப் படத்தில் சொல்ல முயன்றது இன்றைய இயந்திர வாழ்க்கையில் நாம் தொலைத்து நிற்கிற உறவுகளின் மேன்மையைப் பற்றியும் தந்தை என்கிறவரின் அன்பைப் பற்றியும்தான். (இதுவரை பொதுவாக தாயன்பே பிரதானமாக சொல்லப்பட்டிருக்கிறது) ஆனால் இதை அவர் வலுவான ஒரு கதையின் துணை கொண்டு சிறுசிறு சம்பவங்களினாலும் சுவையான திருப்பங்களினாலும் சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் சொல்லியிருக்க முடியும். மாறாக நீள நீளமான காட்சிகளுடன் தேவையற்ற இழுவையுடனும் சொல்ல வந்தது 75-களில் வந்த படங்களையே நினைவுப் படுத்துகிறது.

  வன்முறைக்காட்சிகள், ஆபாச நடனங்கள், குத்துப்பாட்டுகள் ஏதுமின்றி எடுக்கப்பட்டது கூட இந்தப்படத்தின் சிறப்பம்சமாகப் பேசப்படுகிறது. ஆனால் இது இன்றைய தமிழ்ச் சினிமாவின் சீரழிவை குறிக்கிறதேயன்றி மேற்சொன்ன அம்சங்கள் இல்லாமல் எடுப்பதே சிறந்த படமாகிவிடாது.

  சென்னை பிலிம் சேம்பரில் சர்வதேச விருதுப்படங்களின் திரையிடல்களின் போது பல முறை சேரனை பார்த்துள்ளேன். ஒரு சம்பவத்தை சுருக்கமாகவும் அழுத்தமாகவும் அதே சமயத்தில் அந்த உணர்ச்சி குறையாமலும் சொல்வது எப்படி என்பதை அவர் நிச்சயம் தெரிந்து வைத்திருப்பார். அவர் இவ்வளவு நாடகத்தனமான காட்சிகளை அமைத்திருப்பது எனக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.

  வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு பார்க்கிற சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தக்கூடிய பல கூறுகள் இந்தப்படத்தில் என்பதை மறுக்கவில்லை. இந்தப் படத்தின் சில காட்சிகளால் நானும் உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் சர்வதேச தரத்தினோடு ஒப்பிடும் போது இம்மாதிரிப் படங்கள் தமிழ்ச்சினிமாவிற்கு பின்னடைவேயே ஏற்படுத்துகின்றன.

  Pot"tea" kadai:

  நான் பரிதாபத்திற்குரியவனாக இருப்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்ச்சினிமாவின் தரமும் போக்கும் கூட பரிதாபத்திற்குரியதாக இருப்பதுதான் என் வேதனை.

  ReplyDelete
 6. Good one, Badri.
  Sureshkannan's analysis is very straight forward, nice :) Badri, dont you think this movie also had the shades of Autograph in all departments, especially the narrative style. But considering the current trend, (although we need to agree as SK says it shows the nature of Tamil Cinema nowdays more than anything), we need to appreciate Cheran's decent effort.

  Read bb's review also
  http://dhool.com/blog/?item=films-roundup-thavamaai-thavamirundhu-tamil

  ReplyDelete
 7. Badri

  The Honda car he was riding was a rental car. Had you noticed the cab name as 'ARAS Auto', the uniform of the driver you'd have noticed that. In Madurai such rental cars with uniformed cars are common now. He never said it was his car. He availed loan for his apartment advance. In Madurai it may be possible to get a job for Rs.15000 but he should have told in which company they are working.

  Your observation about the cost of pasting a poster on the walls has to be checked. In the film the customer gives Rs.1000 as a cost for pasting 2000 posters at a price of 50 paise per poster. That may be the cost of poster pasting during 1980. I am not sure.

  Yes, there were riots in many places throughout TamilNadu for Rajiv's gory murder. DMK parties flag posts and manrams were burnt in so many cities and towns.

  Suresh Kannan is correct in his observation. This is a good film but certainly not a great film.

  Nobody mentioned about the indecent attitude of Cheran in using Kushbu's name in the film and as well as Ilavarasu's quote about Rajiv's death. They were in bad taste. It seems Cheran did them to please his friends like Cheemaan and Thangar. It did not go well with the dignity of the film.

  ReplyDelete
 8. Hi Guys,

  I Understand and appreciate all your opinions..

  Lets be try to be normal ..

  When I saw this movie..I just felt my days how I lived with my father ..while doing college ,showing many reasons to get money to have fun time with friends..but even that time everyone heart would say what you were doing is wrong and feel akward..and very good memories of childhood life ..specially from village school life ..these memories,Cheran..The Best Director of Tamil..just brought into the heart thro eyes..Hats off Cheran..

  Guys we should not forget to appreciate all the good things..leave the funny Kusboo..

  cheers,
  V

  ReplyDelete
 9. //கதை என்கிற ஆதார மையத்திலிருந்து புறப்படுபவைகளே அதைச் சுற்றி நிகழும் சம்பவங்கள். ஆனால் இந்தப் படத்தில் வெறும் உணர்ச்சிகரமான சம்பவங்களை வைத்தே படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் சேரன். //

  இவருதான் தமிழ்நாட்டு "அறிவிஜீவி"-க்கு உதாரணம்..வேற உணர்ச்சிகள்லாம் இல்லாம் வெறும் "அறிவ" வச்சிக்கிட்டு ஜீவித்திருப்பவரு:):)

  //அவர் இந்தப் படத்தில் சொல்ல முயன்றது இன்றைய இயந்திர வாழ்க்கையில் நாம் தொலைத்து நிற்கிற உறவுகளின் மேன்மையைப் பற்றியும் தந்தை என்கிறவரின் அன்பைப் பற்றியும்தான்.//

  எத்தன தடவண்ணே பாத்திங்க இதக் கண்டுபுடிக்க...??:)

  //ஆனால் இதை அவர் வலுவான ஒரு கதையின் துணை கொண்டு சிறுசிறு சம்பவங்களினாலும் சுவையான திருப்பங்களினாலும் சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் சொல்லியிருக்க முடியும்.//

  ஏன் நீங்க அப்டி ஒரு படம் எடுக்கறது??

  //ஆனால் சர்வதேச தரத்தினோடு ஒப்பிடும் போது இம்மாதிரிப் படங்கள் தமிழ்ச்சினிமாவிற்கு பின்னடைவேயே ஏற்படுத்துகின்றன. //

  பொட்"டீ"கட அண்ணே சரியாத்தான் சொல்லியிருக்காரு...:)

  ReplyDelete