Sunday, December 18, 2005

தமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை

[டிசம்பர் மாத அமுதசுரபி இதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரையின் மூலவடிவம். இதழில் வெளியான கட்டுரையில் சில மாறுதல்கள் இருக்கலாம்.]

ஒரு சமுதாயத்தில் அறிவை வளர்த்தெடுத்து, காத்து, அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான காரியத்தைச் செய்வது புத்தகங்கள்தாம். அறிவு என்பது உலகில் உள்ள அனைவருக்கும் பொதுச்சொத்து என்றாலும் கூட, அறிவை எடுத்துச் செல்ல உதவுவது மொழி என்ற காரணத்தால், ஒவ்வொரு மொழியும் உலக அறிவை எவ்வாறு தன் சந்ததிகளுக்குப் பாதுகாத்து வைக்கிறது என்பதைத் தனியாக கவனிக்க வேண்டும்.

பிரிட்டன் நாட்டில் 2004-ம் வருடத்தில் 1,60,000 புத்தகங்கள் - புதியவை, மீள்பதிப்பு செய்யப்பட்டவை அனைத்தும் சேர்த்து - பதிப்பாகியுள்ளன. இந்தப் புத்தகங்கள் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவை. குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டும் 10,000க்கு மேல். கணினி தொடர்பாக கிட்டத்தட்ட 5,000. பொருளாதாரத்தில் 5,000க்கும் மேல். கல்வி தொடர்பாக 2,500 வரை. பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம், கலை, இலக்கியம், சமயம் என்று ஒவ்வொன்றிலும் சில ஆயிரங்கள். கதைகள் மட்டும் 12,000க்கும் மேல். பாடப்புத்தகங்கள் தனியாக.

இப்படி எந்தப் பிரிவை எடுத்தாலும், ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளியாகின்றன. இதைத்தவிர அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் - ஏன் இந்தியாவிலும் கூடத்தான் - என்று ஆங்கிலத்தில் 3,00,000 புத்தகங்கள் வரை வெளியிடப்படுகின்றன.

முதலில், தமிழில் வெளியாகும் புத்தகங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் பெறுவதே கடினம். தமிழக அரசும் சரி, பதிப்பாளர் சங்கங்களும் சரி, இதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. அறிவு சார்ந்த விஷயங்களில் தமிழில் எத்தனை புத்தகங்கள் வருகின்றன என்ற தகவல் நமக்குக் கிடைப்பதில்லை. எனவே புள்ளிவிவரம் சாராது, கண்ணில் பட்டதை வைத்துத்தான் பேசவேண்டிய நிலைமை.

கடந்த ஒன்றரை வருடங்களாக பதிப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். எனவே பிற பதிப்பகங்கள் என்ன மாதிரியான புத்தகங்களை உருவாக்குகிறார்கள் என்பதைக் கவனமாகப் பார்த்து வருகிறேன். அந்த வகையில் தமிழில் அறிவுசார் புத்தகங்கள் மிகக்குறைவு என்பதே என் கணிப்பு.

ஒரு வருடத்தில் தமிழில் வெளியாகும் புத்தகங்கள் - புதியவை, மீள்பதிப்பு செய்யப்பட்டவை - 10,000க்கும் குறைவுதான். சிலர் 5,000-7,000 இருக்கும் என்று கணிக்கிறார்கள். அதில் மிகக் குறைந்த அளவே அறிவு சார்ந்த விஷயங்கள். உதாரணத்துக்கு அறிவியலை எடுத்துக்கொண்டால் 20 புத்தகங்கள் வெளியாகி இருக்கலாம். கணினி சம்பந்தமாக 100 புத்தகங்கள் இருக்கலாம். பொருளாதாரம், சட்டம் போன்ற துறைகளில் ஒன்று கூட மிஞ்சாது.

ஏன் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படவேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பலாம். புத்தகம் என்று வரும்போது அதன் தரம் பற்றிப் பேசவேண்டும். மொத்தம் பதிப்பாகும் புத்தகங்களில் 1%க்கும் குறைவானவையே நல்ல தரத்தில் இருக்கும் என்று எடுத்துக்கொண்டால், மொத்த எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, தானாகவே தரமான புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

எதைப்பற்றி வேண்டுமானாலும் புத்தகங்களை எழுதினால் அவை விற்குமா என்று சிலர் கேட்கலாம். இது அவசியமான கேள்விதான். ஆனால் முயற்சி செய்யாமல் வெறும் கேள்வியோடு நிறுத்திவிட்டால் புத்தகங்கள் உருவாக்கப்படவே மாட்டா. புத்தகங்களை உருவாக்கி சந்தைக்குக் கொண்டுவந்தபின்னர்தான் விற்குமா, விற்காதா என்று தெரிய வரும்.

அதுதான் ஆங்கிலத்திலேயே புத்தகங்கள் கிடைக்கின்றனவே என்று பலரும் கேட்கலாம். உண்மைதான். ஆனால் நல்ல ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக்கொண்டால் அவை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தயாராவதால் மிக அதிக விலை உள்ளவையாக உள்ளன. சராசரி விலையே $25 - ரூ. 1,000 க்கு மேல். அதே நேரம் பல மூன்றாம் தர ஆங்கிலப் புத்தகங்கள் சந்தையை ஆக்கிரமிக்கின்றன. ஆங்கிலத்தில் உள்ளன, வழவழ தாளில், நான்கு வண்ணப் படத்துடன் உள்ளன என்ற காரணங்களுக்காகவே பலரும் மோசமான புத்தகங்களை வாங்க நேரிடுகிறது.

ஆங்கில மீடியத்தில் படிப்பதால் மட்டும் ஆங்கில அறிவு தேவையான அளவுக்கு வந்துவிடுவதில்லை. அதனால் ஆங்கிலத்தில் பொது விஷயங்களைப் படித்துப் புரிந்துகொள்ள மக்கள் சிரமப்படுகின்றனர். ஒரு சில தமிழக நகரங்களைத் தாண்டி, ஆங்கிலத்தின் ஆதிக்கம் குறைவாகவே உள்ளது. வீடுகளில் மக்கள் இன்னமும் தமிழில்தான் பேசுகின்றனர். தமிழில் விளக்கினால்தான் பல விஷயங்களை நம் மக்களால் புரிந்து கொள்ள முடியும். ஆறு கோடி மக்கள் தொகையுள்ள தமிழ் சமுதாயம் திடீரென்று தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் கற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே தமிழ் சமுதாயத்தின் எதிர்காலம், தமிழில் அறிவுசார் விஷயங்களைக் காப்பாற்றி வைப்பதில்தான் உள்ளது.

நான் குறிப்பிடும் பிரச்னை தமிழில் மட்டுமல்ல, பிற இந்திய மொழிகளுக்கும் உண்டு என்றே நினைக்கிறேன்.

ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த இடைவெளிதான் பலரையும் ஆங்கிலத்தை நோக்கி இழுக்கிறது. இதை "என்ன இல்லை தமிழில்?" என்று மார்தட்டும் தமிழ் அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அரசியல் தளத்தில் இந்தப் புரிதல் இருந்தால் தமிழில் பல்வேறு விஷயங்களைப் பற்றிய நூல்கள் எழுதப்படுவதற்குத் தேவையான ஆதரவு அரசிடமிருந்து வரும். தமிழக நூலகத்துறைக்கு இதுபற்றிய புரிதல் இருந்தால் 'எடைக்குப் புத்தகம் வாங்கும்' வழக்கத்தை விடுத்து நல்ல நூல்களை அதிகமான பிரதிகள் வாங்கி ஊக்கப்படுத்துவார்கள்.

தமிழ் பதிப்புத் துறையில் இதுநாள் வரை இருந்துவரும் பதிப்பாளர்கள் இதுவரையில் ஆற்றியிருக்கும் தொண்டு மகத்தானதுதான். ஆனால் போதாது. பதிப்பாளர்கள் தத்தம் தொழிலுக்குக் கொண்டுவரும் மூலதனத்தை இன்னமும் அதிகரிக்கவேண்டும். தரமான புத்தகங்களை பல்வேறு அறிவுத்தளத்திலும் கொண்டுவர வேண்டும். இது ஓரிருவர் தனியாகச் செய்யக்கூடிய காரியமில்லை. பதிப்புத் தொழிலில் ஒரு பெரிய குறையாக நான் காண்பது பதிப்பாசிரியர் எனப்படும் ஒருவர் - பல துறைகளிலும் பரந்த அனுபவமுடையவர் - பதிப்பகங்களில் இல்லாதிருப்பதுவே. அதனால்தான் பல்வேறு அறிவுசார் துறைகளிலும் புத்தகங்கள் வருவது குறைவாக உள்ளது.

எழுத்தாளர்களிடத்தும் பல குறைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுடைய பலரும் அதை எழுதி வைப்பது என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றனர். ஆசிரியர்கள் கல்வியைப் பற்றி எழுதுவதில்லை. ரேஷன் கடையில் வேலை செய்பவர் தனது வேலையைப் பற்றியும் அரசின் நியாய விலைக்கடைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது பற்றியும் எழுதுவதில்லை. பெட்ரோல் விற்பனைத் துறையில் இருப்பவர் பெட்ரோல் விலை ஏன் ஏறுகிறது, இறங்குகிறது என்பது பற்றி எழுதுவதில்லை. எழுத விரும்புவதில்லை, அல்லது தனக்கு எழுதத்தெரியாது என்று நினைத்துக்கொண்டு முயற்சி செய்வதும் இல்லை. இதையெல்லாம் எழுதினால் யார் புத்தகமாகப் போடுவார்கள் என்று சிலர் யோசித்து, முயற்சியில் இறங்குவதில்லை. இன்னும் சிலரோ, எழுதினாலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதுவது என்ற நினைப்பில் இருக்கலாம்.

பதிப்பாளர், எழுத்தாளர் ஆகியோரிடம் மாறுபட்ட சிந்தனை வரவேண்டும். இதுநாள் வரையில் தயாரித்துக்கொண்டிருக்கும், எழுதிக்கொண்டிருக்கும் புத்தகங்களுக்கு அப்பால் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன என்று இருவருமே சிந்திக்க வேண்டும்.

வாசகர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தரமான புதிய முயற்சிகளை வாசகர்கள் வரவேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது என் சொந்த முயற்சியிலேயே தெரிகிறது. அதனால் புத்தகம் விற்குமா என்று தயங்காது, தைரியமாக இந்த முயற்சியில் இறங்க வேண்டும். தமிழ் சமுதாயம் தொடர்ந்து வளர்ச்சியடைய, ஆங்கிலத்தை எட்டிப்பிடிக்க, தமிழில் அறிவு நூல்கள் பல்லாயிரம் கொண்டுவரப்பட வேண்டும்.

அது நடக்கும் வரையில் "தமிழில் எல்லாமே உள்ளது" என்று கூறுவதை நிறுத்த வேண்டும்.

8 comments:

  1. Very nice`article, Thought Provoking. The way you wrote about Ration Shops, Petrol bank employees writing a book on their business or profession is down to earth and exlplains the problem.

    Regards,Arun Vaidyanathan

    ReplyDelete
  2. //அது நடக்கும் வரையில் "தமிழில் எல்லாமே உள்ளது" என்று கூறுவதை நிறுத்த வேண்டும்//

    சரியான வார்த்தை!

    ReplyDelete
  3. பத்ரி,
    இந்தப் பதிவுக்கான என் மறு மொழி நீண்டு போனதால் இங்கே பதிந்திருக்கிறேன்:

    http://nilaraj.blogspot.com/2005/12/blog-post_18.html

    ReplyDelete
  4. Venkat: "Sadly it will never be written."

    May not be the case... Do put this gentleman in touch with me. Send a personal mail to me and I will give you my phone numbers.

    Just for your information, some of the scripts I am currently dealing with are:

    1. A marketing professional has written on marketing
    2. A power plant expert has written about various power plants and how power is produced in these places
    3. A retired insurance professional has written about important issues in that industry

    All these books will be coming out next year. All of them written originally in Tamil.

    ReplyDelete
  5. நல்லதொரு பதிவு பத்ரி. இருக்கவேண்டிய இடத்தில் இருக்கவேண்டிய ஆள் இருந்து செய்யவேண்டியதை செய்து, பிறருக்கு சொல்லவும் செய்கின்றீர்கள். நன்றி.

    கிழக்கு இது போன்று தொடர்ந்து கொண்டுவரும் புத்த்கங்களின் வெற்றி மற்ற பதிப்பகங்களையும் உங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்து மென்மேலும் பரவலாக நல்ல பல பயனுள்ள புத்தகங்கள் வரட்டும். அதற்கு என்றென்றும் என் ஆதரவு உண்டு. நனறி.

    ReplyDelete
  6. yet to read the article..but iam happy that you have the changed the font

    ReplyDelete
  7. YAV சொல்வது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். துறை சார்ந்த அறிவு பெற்றவர்கள் இன்றைக்கு ஏராளமாக இருக்கிறார்கள். தங்கள் துறையைப் பற்றி பரவலாக வெளியே தெரியாத நிறைய விஷயங்களை, கடைசி நட்டு போல்ட்டு வரை அலசத் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதை எழுத்திலே பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றாமல் இருப்பதற்கான காரணங்களாகவும், அதற்கான தீர்வுகளாகவும் எனக்குத் தோன்றியவை

    விஷயம் தெரியும். ஆனால் எழுதத் தெரியாது
    இதற்கு, உண்மையிலேயே ஆர்வமுள்ள பதிப்பாளர்கள், அவர்களை வரவழைத்து, எழுதுவதைப் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லித் தந்து, எழுத வைக்க வேண்டும். சிரமமாக இருந்தால், எழுதத் தெரிந்த துணை ஆசிரியருடன் அவரை இணைத்து , ஒரு collaborative effort க்கு முயற்சி செய்ய வேண்டும்.

    ஆங்கிலத்தில் வேண்டுமானால் எழுதலாம். தமிழா? நோ நோ!
    பிரச்சனையே இல்லை. ஆங்கிலத்தில் எழுதட்டும். ஆனால், அதை தமிழில் உடனடியாக மொழிபெயர்த்து விடவேண்டும்

    என்னத்தை, எழுதி? யார் சார் இதை எல்லாம் படிக்கப் போகிறார்கள்?
    அந்தப் பிரச்சனை உங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று தெளிவாகச் சொல்லி விடவேண்டும். பதிப்புத் துறை சார்கோரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார். இன்றைக்கு கூகிளைத் தட்டினால், தகவலாகக் கொட்டுகிறது. இதையெல்லாம் இங்கே தேடுவார்கள் என்று நினைத்தா அப்போது எழுதினார்கள்? அப்படி நினைத்திருந்தால், இன்றைக்கு நமக்கு தகவல் கிடைக்குமா? அது போல, தகவல் சார்ந்த விஷயங்களைப் பற்றிய புத்தகங்கள், அந்த மொழியின் முதன்மையான சொத்து என்பதை தெளிவாகப் புரியவைத்து விட்டால் எழுதுவார்.

    try செஞ்சு பார்த்தேன் சார்.. ஆனால், consistent ஆக செய்ய முடியலை. துண்டு துண்டு கட்டுரையா தான் வருது..
    பரவாயில்லை. அதையெல்லாம் கோர்வையாக சேர்த்து, சில வற்றை நீக்கி, பதிப்பாசிரியர் அழகாக புத்தகம் கொண்டு வந்துவிடுவார். புத்தகத்தில் உள்ள தகவல் எல்லாம் authentic ஆக இருந்தால் போதும். அப்படி மூளையில் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிற விஷயங்களை வெளியே பகிர்ந்து கொண்டால், அதுக்கு ராயல்ட்டி என்கிற பேரில் காசும், எழுத்தாளர் என்கிற அங்கீகாரமும் கிடைக்கும் என்றால், அந்த incentive அவர்களை எழுதவைக்கும்.

    பதிப்பாளர் என்கிறமுறையில், இந்த கோணத்தில் நீங்க யோசிச்சிருப்பீங்கன்னாலும், நான் ஒரு loud thinking செஞ்சு பார்த்தேன் :-)

    ReplyDelete
  8. எனது கருத்து நீண்டு விட்டதால் தனிப்பதிவு

    http://thamizmaalai.blogspot.com/2005/12/blog-post_19.html

    ReplyDelete