பங்குச்சந்தையை கவனமாகப் பார்த்து வருபவர்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம் தன்னிலிருந்து புதிதாக நான்கு நிறுவனங்களை வெளிக்கொணர்ந்து அவற்றையும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்போகும் விஷயம் தெரிந்திருக்கும்.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிரச்னையின் முடிவாக ஒவ்வொருவருக்கும் இன்ன தொழில்கள் என்று பிரிவாகியுள்ளது. அதில் அனில் அம்பானிக்குக் கிடைத்தது தொலைதொடர்பு (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்ஃபோகாம்), மின்சாரம் (ரிலையன்ஸ் எனர்ஜி) மற்றும் நிதி (ரிலையன்ஸ் கேபிடல்). முகேஷ் அம்பானி தக்கவைத்துக்கொள்வது பெட்ரோலியம் சுத்திகரிப்பு, நைலான், பிளாஸ்டிக், துணிமணி வகையறாக்கள் (ரிலையன்ஸ் இண்டஸ்டிரி), பெட்ரோலியம், இயற்கை எரிவாயு தோண்டி எடுத்தல் ஆகியவை.
இதில் பல ரிலையன்ஸ் இண்டஸ்டிரியின் தனித்துறைகளாக இருப்பதால் அந்த நிறுவனத்தைப் பல துண்டுகளாகப் பிரிக்கவேண்டிய நிலைமை. கடைசியாக மும்பை உயர்நீதிமன்ற ஒப்புதல் கிடைத்த பிரிவுத்திட்டத்தின்படி, நான்கு புது நிறுவனங்கள் உருவாக்கப்படும்:
* ரிலையன்ஸ் கேபிடல் வென்ச்சர்ஸ்
* ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
* ரிலையன்ஸ் எனெர்ஜி வென்ச்சர்ஸ்
* குளோபல் ஃப்யூயல் மேனேஜ்மெண்ட்
இதில் முதல் மூன்றும் அனில் அம்பானி ஆதிக்கத்தில் இருக்கும். கடைசி (குளோபல் ஃப்யூயல் மேனேஜ்மெண்ட்) எண்ணெய் தோண்டுதலுக்கான முகேஷ் அம்பானி ஆதிக்கத்தில் இருக்கும் நிறுவனம்.
ஏற்கெனவே அனில் அம்பானி ஆதிக்கத்தில் ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃபோகாம், ரிலையன்ஸ் எனெர்ஜி என்ற மூன்று நிறுவனங்கள் உள்ளன. அதில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தவிர்த்த இரண்டும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள். இந்த ரிலையன்ஸ் டிமெர்ஜருக்கு (பிளவு) பிறகு மூன்று மெர்ஜர்கள் (சேர்த்தி) நடக்க உள்ளன. அதில் இரண்டு சேர்த்தி ஏற்கெனவே சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்ட பங்குகளுக்கானது.
1. ரிலையன்ஸ் கேபிடல் + ரிலையன்ஸ் கேபிடல் வென்ச்சர்ஸ்
2. ரிலையன்ஸ் எனெர்ஜி + ரிலையன்ஸ் எனெர்ஜி வென்ச்சர்ஸ்
அனில் அம்பானி மேற்படி இரண்டு மெர்ஜர்களும் வெகு சீக்கிரமாக நடந்தேறும் என்று சொல்லியிருக்கிறார்.
மற்றொரு சேர்த்தி: ரிலையன்ஸ் இன்ஃபோகாம் + ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். இது ரிவர்ஸ் லிஸ்டிங் வகையைச் சாரும். எனெனில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிஸ்ட் செய்யப்படாத நிறுவனம், ஆனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை விட அளவிலும், வருமானத்திலும் மிகப்பெரியது. இவ்வளவு பெரிய ரிவர்ஸ் லிஸ்டிங் இந்தியாவில் நடந்தது கிடையாது. இதனால் இது நடக்கும் குறுகிய கால அளவில் இந்தப் பங்குகளின் விலைகளில் பெரிய விளையாட்டு நடக்கும்.
முக்கியமாக கீழ்க்கண்ட குழப்பங்கள் நிலவப்போகின்றன:
1. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பிளக்கப்போவதால் அந்தப் பங்கின் விலை குறையும். இதனால் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்குப் பெரியதாகப் பிரச்னை ஏதும் இருக்காது. குறைந்த விலையை ஈடுகட்டும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் அவர்களுக்கு இலவசமாக ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கிடைக்கும்.
ஆனால் பங்குச்சந்தைகளின் குறியீட்டு எண்கள் (சென்செக்ஸ், நிஃப்டி) ஆகியவை சட்டென்று குறைய வேண்டியிருக்கும். ஏனெனில் இந்தக் குறியீட்டு எண்களில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் கனம் அதிகம். இதனால் இந்தக் குறியீட்டு எண்கள் மேல் உள்ள Nifty futures ஆகியவற்றில் நடக்கும் வர்த்தகங்கள் பிரச்னையில் முடியும்.
2. அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சில index fund என்ற ஒரு நிதியை நடத்துவார்கள். அதில் இண்டெக்ஸில் இருக்கும் பங்குகளை மட்டும்தான் வாங்குவார்கள், விற்பார்கள். ஆனால் புதிதாக டிமெர்ஜ் ஆகும் குட்டி நிறுவனங்கள் எதுவும் இண்டெக்ஸில் வராது. அந்த நிறுவனங்களின் பங்குகளை இண்டெக்ஸ் பண்ட்கள் சீக்கிரமாக விற்றுவிடவேண்டியிருக்கும். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பங்குகளின் விலை சட்டெனக் குறையப் போவதால் இந்த இண்டெக்ஸ் நிதிகளின் NAVயில் மாற்றம் ஏற்படும். இது சிறு முதலீட்டாளர்களைக் குறுகிய காலத்தில் பாதிக்கலாம்.
பங்குச்சந்தையைப் பற்றி மேலும் நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த டீமெர்ஜரை கவனமாகப் பார்த்தல் நலம். நேரடியாக நீங்களே முதலீடு செய்யாத நிலையில் தினம் தினம் இந்த ஷேர்கள் என்ன விலைக்குச் செல்கின்றன, சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை எந்த எண்ணிக்கையில் உள்ளன என்று குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளவும். ஜனவரி 18, ஜனவரி 25, ஜனவரி 27 ஆகிய தேதிகளைக் கவனமாகப் பார்க்கவும்.
ஐந்து புத்தகங்கள் – 9
2 hours ago
//கடைசி (குளோபல் ஃப்யூயல் மேனேஜ்மெண்ட்) எண்ணெய் தோண்டுதலுக்கான முகேஷ் அம்பானி ஆதிக்கத்தில் இருக்கும் நிறுவனம்.//
ReplyDeleteஅனைத்துமே அனில் அம்பானிக்குத் தான்.ரிலையன்ஸ் எனர்ஜிக்கு கட்டுப்படுத்தபட்ட (NTPCஉடன் உடன்படிக்கை செய்துகொண்ட) விலையில் எரிவாயு கொடுக்க சம்மதித்தினால் ரெலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிற்கு ஏற்படும் முதலீட்டில் நஷ்டத்தை குறிப்பதற்கான ஒரு SPV. அனில் அதனை எவ்வாறு லிஸ்ட் செய்யப் போகிறார் என்பதும் நீங்கள் கூறிய குழப்பங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
I forgot to provide the link:
ReplyDeletehttp://in.news.yahoo.com/051221/48/61njn.html