Monday, December 19, 2005

தமிழ் பதிப்புலகம் பற்றி...

நான் பதிப்புலகம் பற்றி எழுதியதிலிருந்து நிலா சில கேள்விகளைத் தன் பதிவில் வைத்துள்ளார்.

அதில் எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகளுக்கு பதிகள் இங்கே.

1. "இன்றைய நிலையில் அநேகமாக தமிழ் எழுத்தாளர்கள் தமது புத்தகப் பதிப்புக்கு ஆகும் செலவைத் தாமே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள்" என்கிறார் நிலா.

இன்றைய தமிழ்ப்புத்தகப் பதிப்புத் தொழிலில் படைப்பாளர்கள் நிலையிலிருந்து பார்க்கும்போது மூன்றுவிதமாகப் பிரிக்கலாம்.

(a) பதிப்பாளர் புத்தகத்தைத் தம் செலவில் பதிப்பித்து, விற்கும் ஒவ்வொரு பிரதிக்கும் எழுத்தாளர்களுக்கு சரியான ராயல்டி வழங்குவது. எழுத்தாளர் கணக்கு கேட்டால் சரியான விளக்கம் கொடுப்பது. எழுத்தாளர் கேட்காமலேயே என்ன விற்பனை ஆகியுள்ளது போன்ற விவரங்களைத் தருவது, புத்தக விற்பனைக்கான statementகள் தருவது ஆகியவை.

(b) மேலே உள்ளதுபோல நடக்காவிட்டாலும் ஏதோ கொஞ்சமாவது ராயல்டி என்ற பெயரில் கொடுப்பது; புத்தகம் எத்தனை ஃபார்ம் என்று கணக்கிட்டு ஃபார்முக்கு இத்தனை ரூபாய் என்று ஒட்டுமொத்தமாக ஒரு சிறிய தொகையை வழங்குவது; ராயல்டிக்கு பதிலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிகளை எழுத்தாளருக்கு வழங்குவது; அல்லது ராயல்டி என்ற பெயரில் எதுவும் கொடுக்காவிட்டாலும் புத்தகத்தைப் பதிப்பிக்க எழுத்தாளர்களிடமிருந்து காசு கேட்காமல் இருப்பது!

(c) எழுத்தாளரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அல்லது அவருக்கே வட்டிக்குக் கடன்கொடுத்து, அந்தப் பணத்தை வைத்துக்கொண்டே புத்தகம் போடுவது; பதிப்பித்த புத்தகங்களை எழுத்தாளரிடம் கொடுத்து அவரையே விற்பனை செய்துகொள்ளச் சொல்வது; சிலசமயம் புத்தகங்கள் நன்றாக விற்கும்போதும், மேற்கொண்டு மறு அச்சுகள் வெளியாகும்போதும் எழுத்தாளருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருத்தல், ராயல்டி என்ற பேச்சையே எடுக்காமல் இருத்தல்; ராயல்டி பற்றி எழுத்தாளர் பேசினால் உடனே தொழிலே மோசமான நிலையில் உள்ளது என்று அழுதல் போன்ற பலவகை.

எழுத்தாளர்கள் பலருக்கும் இங்கு நேரடி அனுபவம் இருக்கும். அனுபவம் ஏதும் இல்லாமல் புரளிகளை மட்டும் வைத்துக்கொண்டு நான் இதில் மேற்கொண்டு எதுவும் பேசக்கூடாது. நியாயமில்லை.

கிழக்கு பதிப்பகம் (a) முறைப்படிதான் நடந்து வருகிறது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

2. "தவிர, பணம் இருந்தால் எந்தக் குப்பையையும் புத்தகமாகப் போடலாம் என்ற நிலையைப் பார்க்கிற போது புத்தகம் எழுதும் ஆசையே விட்டுப் போகிறது என்பதுவும் நிதர்சனம்" என்கிறார் நிலா.

உலகின் எல்லா நாடுகளிலுமே Vanity Publishing என்பது உண்டு. எழுத உந்துதல் இருப்பவர்கள் தாம் எழுதியதை அச்சில் பார்க்க ஆசைப்படுவதில் தவறில்லை. இன்னும் சில வருடங்களில் 'தற்பெருமைக்காகப் பதிப்பித்தல்' அதிகரிக்கும்; அதற்கான செலவும் குறையும். On-demand Publishing இயந்திரங்கள் இந்தியாவுக்கு வர ஆரம்பித்ததும் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு அழகாகக் கணினியில் வடிவமைக்கப்பட்டு, பத்து, இருபது பிரதிகள் மட்டும் அச்சடிக்கப்பட்டுக் கையில் கிடைக்கும். இது ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களுக்கு ISBN எண் முதற்கொண்டு வழங்கப்பட்டு அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இருபது பிரதிகளும் விற்றபின், மேலாக இன்னோர் இருபது பிரதிகளை அச்சடிக்கலாம்!

அப்படியான புத்தகங்களில் பல வைரங்களும் கூடக் கிடைக்கும்.

இப்படி தற்பெருமைப் புத்தகங்கள் வருகின்றனவே என்று விசனப்பட்டு திறமையுள்ள எழுத்தாளர்கள் எழுதாமல் போனால் அது தவறு. குடியாட்சியில் பொதுஜனங்களுக்குள்ள சில அடிப்படை உரிமைகளுள் ஒன்று தன் எழுத்தைத் தானே பதிப்பிப்பதும்தான்!

3. இப்பொழுது எழுத்து என்பதைச் சற்று கவனமாகப் பார்ப்போம்.

படைப்பாளிகள் தங்களது கிரியேடிவ் திறமையைக் காண்பிக்கும் கவிதைகள், புனைகதைகள் (சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்), துண்டு துண்டான கட்டுரைகள் என்று பலவற்றையும் எழுதுகிறார்கள். அவையனைத்தும் அனைத்து மொழிகளிலும் கிடைக்கின்றன. இந்த எழுத்துகள் அனைத்தையும் objective ஆக - இது சிறந்தது, இது மோசமானது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரே எழுத்தாளரின் பல படைப்புகளில் பல நல்லவையாகவும் பல தரம் குறைந்தவையாகவும் இருக்கும். ஓர் எழுத்தாளர் தனக்கென ஒரு ப்ராண்ட் பெயரைப் பெறுவதற்கு முன்னால் அவரது புனைவுகள் பதிப்பிக்கப்படுவதில் பல சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். தன் எழுத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் விடாமுயற்சி தேவை. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் அந்த எழுத்தாளர் எதை எழுதினாலும் அதை வெளியிட, ராயல்டி கொடுக்க பல பதிப்பாளர்கள் தயாராக இருப்பார்கள்.

நான் குறிப்பிடும் எழுத்து வேறுவிதமானது. இது புனைவு அல்ல. நிஜங்களைப் பற்றியது. பல அறிவுசார் துறைகளைப் பற்றியது. இந்தப் புத்தகங்களை எழுத எழுத்துத்திறமைமட்டும் போதாது. விஷயஞானமும் தேவை. எதைப்பற்றி எழுதவேண்டுமோ அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் மேற்கொண்டு அந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் வேண்டும். அந்தத் துறையிலேயே பழம் தின்று கொட்டை போட்டிருத்தல் நலம். நான் சொல்வது துண்டு துண்டான கட்டுரைகளை அல்ல, முழுமையான புத்தகம்.

அத்தகைய அறிவுசார் விஷயங்களில் தமிழில் புத்தகங்கள் குறைவாக உள்ளன என்பதே என் ஆதங்கம். புனைவுகள் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லவும் மாட்டேன். ஆனால் புனைவில்லாத, மக்களுக்குத் தேவையான பல விஷயங்கள் பற்றியும் எழுதுவதற்கு ஆள்கள் இல்லை; குறைவாக இருக்கிறார்கள்; எழுதக்கூடியவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை; எழுதக்கூடியவர்கள் இருந்தாலும் பதிப்பிப்பதில் ஆர்வம் காட்டுவர்கள் குறைவு - இதைப்பற்றித்தான் நான் என் அமுதசுரபி கட்டுரையில் எழுதினேன்.

-*-

உலக அரசியல், பொருளாதாரம், வரலாறு, அறிவியல், கணிதம், கணினியியல், நுண்கலைகள், பொறியியல், நாம் அன்றாடம் வாழ்க்கையில் பயன்படுத்தும் இயந்திரங்கள்/கருவிகள், மருத்துவம், உடல்நலம், கல்வி, நிர்வாகவியல், மனிதவள மேம்பாடு, தனிமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள், நாடுகளின் வரலாறுகள், வளரும் இளைஞர்களின் வாழ்க்கை உயர்வுக்கான பாடங்கள் போன்ற பல விஷயங்களைத் தமிழில் எழுதுவதற்கு எழுத்தாளர்கள் எனக்குத் தேவையாக இருக்கிறார்கள். அப்படி உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். என் மின்னஞ்சல் முகவரி என் பதிவில் உள்ளது.

3 comments:

  1. //அத்தகைய அறிவுசார் விஷயங்களில் தமிழில் புத்தகங்கள் குறைவாக உள்ளன என்பதே என் ஆதங்கம். புனைவுகள் கூடாது என்று நான் சொல்லவில்லை//

    நானும் வெறும் புனைவுகளை மட்டும் குறிப்பிடவில்லை. எடுத்துக் காட்டாக, புதுமை கண்ட பேரறிஞர்கள் என்ற இந்தத் தொடரைக் கொள்ளலாம்:


    http://www.nilacharal.com/tamil/ariviyal/index.html

    வானிடி பப்ளிஷிங் என்று மேலை நாடுகளில் இருந்தாலும் அவை தெளிவாக மெயின் ஸ்ட்ரீம் பப்ளிஷிங்-லிருந்து வேறுபடுத்தப்படுகின்றன என்பது என் எண்ணம். அவற்றுக்கு மரியாதை இருப்பதில்லை. அவற்றை ஊடகங்கள் விமரிசனம் செய்வதில்லை; கடைகளில் விற்பதில்லை. இந்த வேறுபாடு தமிழில் இல்லையே. முறையாக புத்தகம் எழுதி பதிப்பாசிரியரின் பார்வையில் தேர்வு பெற்று திருத்தப்பட்டு பதிப்பிக்கப்படும் நூல்களுக்கும் எந்தவித எடிட்டிங்கும் இல்லாது எழுத்தாளர்கள் தாமே பதிப்பிக்கும் நூல்களுக்கும் வேறுபாடு காட்டப்படாத பட்சத்தில் அடுத்த தலைமுறையை நாம் குழப்புவதற்கான வாய்ப்பு உண்டல்லவா?

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ளதொரு தொடர்பதிவு... நிறைய விபரங்கள் அறிய முடிந்தது. உங்களுக்கும், நிலாவுக்கும் நன்றி.

    இங்கு சிங்கையிலும் ஏகப்பட்டவர்கள் புத்தகம் போட ஆரம்பித்துவிட்டார்கள்... என்பதன் தொடர்பில் ஒரு சிறப்பு இதழ் சென்ற சனியன்று Starits Times நாளிதழ் வந்திருந்தது.

    ReplyDelete
  3. Hi Badri,

    As a preliminary step before finding expert authors to write in tamil, why not look into translating the best technical books to tamil? Isn't the skillset required to translate easier to find than finding experts well-versed in tamil? For starters, good engineering textbooks could be looked into as there are many engineering students who are good at tamil. Just wanted to know what you think of this. Thanks
    -sk

    ReplyDelete