Tuesday, September 06, 2011

வெட் கிரைண்டர்

இன்று மிண்ட் செய்தித்தாளில் வெட் கிரைண்டர் (Wet Grinder) பற்றி ஒரு செய்தி வந்துள்ளது. தமிழக அரசின் இலவசங்களால் யாருக்கு நன்மை, யாருக்குத் தீமை என்பதை ஓரளவுக்கு விரிவாகவே அலசுகிறது. இணையத்தில் சுட்டியைக் கண்டுபிடிக்க முடியாததால் இங்கே கொடுக்கவில்லை. அந்தச் செய்தியிலிருந்து சில குறிப்புகள்:
  • ஜெயலலிதாவின் அரசு, ஆண்டு வருமானம் ரூ. 15,000-க்குக்கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றைக் கொடுப்பதாகத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது. அதன்படி, இந்த ஆண்டு 25 லட்சம் குடும்பங்களுக்கு இவற்றை வழங்க, ரூ. 1,250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • கிரைண்டர்களை வழங்க 8 நிறுவனங்கள் டெண்டரில் வெற்றி பெற்றுள்ளன. அவற்றில் 5 கோயம்புத்தூரைச் சேர்ந்தவை, இரண்டு சென்னை, ஒன்று ஈரோட்டைச் சேர்ந்தவை.
  • வீடுகளுக்கு இலவசமாகவே கிரைண்டர்கள் கிடைத்துவிடும் என்பதால் கடைகளில் காசு கொடுத்து கிரைண்டர்கள் வாங்குவது பயங்கரமாகக் குறைந்துவிட்டது. சென்ற ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதுவரையில் 70% குறைவாகத்தான் விற்பனை நடந்துள்ளதாம்.
  • இதற்குமுன் இலவச டிவி திட்டம் வந்தபோதும் 2006-07-ல் தொலைக்காட்சி விற்பனை கடுமையாகச் சரிந்தது - 50% சரிந்தது.
  • டெண்டரில் ஜெயித்தவர்கள், பெரிய முதலீடு செய்து உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் உள்ளனர். ஆனால் டெண்டரில் வெற்றிபெறாத கிரைண்டர் தயாரிப்பாளர்கள் எல்லோரும் கடுமையான நஷ்டத்தில் உள்ளனர். இப்போதைக்கு வெளி மாநில ஆர்டர்கள் மட்டுமே அவர்களுக்கு வருகின்றனவாம்.
  • இந்தப் பிரச்னையைத் தாண்டி அவர்களது உண்மையான பயமே சீனர்கள்மீதுதான். சீனா மட்டும் வெட் கிரைண்டர் விஷயத்தில் இறங்கிவிட்டால் தாங்கள் எல்லாம் கடையைச் சுருட்டிக்கொண்டு போய்விடவேண்டியதுதான் என்கிறார்கள் இந்தத் தயாரிப்பாளர்கள்.

8 comments:

  1. எங்கள் ஊரில் பேருந்து வந்த போது(ஊர் வழியாக செல்லும் ) ஊரில் இருந்த சைக்கில் ரிகஷாவ் ஓட்டுனர்களும் ஆட்டோ ஓட்டுனர்களும் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது என்று உண்ணாவிரதம் இருந்தார்கள்.அதை விட இது மோசமாக உள்ளதே
    ஷேர் ஆட்டோ வந்ததால் பல ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுவதை விட்டு விட்டார்கள்.அதனால் ஷேர் ஆட்டோவை தடை செய்ய வேண்டுமா
    மக்கள் குறைந்த விலையில் கைபேசியில் பேசுவதால் தெருவுக்கு மூன்று இருந்த STD கடைகள் மறைந்து விட்டன.அது எல்லாம் சரி ஆனால் வெட் கிரைண்டர் முதலாளிகள் பாதிக்க படுவது பெரிய குற்றமா

    ReplyDelete
  2. பூவண்ணன், எந்தத் தொழில்துறையும் பாதிக்கப்படுவது யாருக்குமே நல்லதல்ல. முதலாளிகளாக மட்டுமே அவர்களைப் பார்க்கிறீர்கள். அவர்களது தொழில் பாதிக்கப்பட்டால் அதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கப்போகிறார்கள்.

    இந்த டெண்டரினால் சிலருடைய வருமானம் அதிகமாகவும் பலருடைய வருமானம் குறைந்தும் போகப்போகிறது. கம்யூனிச அடிப்படையில் பார்த்தாலுமே இது நியாயமானதல்ல. அரசு திடிரென intervene செய்யும்போது அதனால் என்னென்ன குழப்பங்கள் நிகழும் என்பதை இந்தச் செய்தி காண்பிக்கிறது. அவற்றைப் புரிந்துகொள்ளவேண்டியது நம் கடமை.

    ReplyDelete
  3. The new look is good but jumping between the old posts is a problem. I am unbale to find the list in the page.
    rgds/Surya

    ReplyDelete
  4. Surya: I have now reverted to the older model of list of old posts. It was taking up too much space... Anyway, now back to the old model, on the right hand side.

    ReplyDelete
  5. நாளை ஆயிரம் ரூபாய்க்கு கிரைண்டர் mixie எல்லாம் சேர்ந்த மாதிரி ஒரு கம்பனி தயாரித்தால் கூட தான் இப்போது உள்ள நிறுவனங்கள் எல்லாம் படுத்து விடும்.அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க கூடாது என்று சொல்வது சனநாயகத்தில் மட்டுமல்ல எந்த முறை அரசாங்கத்திலும் ஒத்து கொள்ள பட மாட்டாது.ராணுவ வீரர்களுக்கு பல கோடி மான்யத்தில் ரம் முதல் ஹயுண்டாய் கார் வரை வரி இல்லாமல் தர படுவதில்லையா.வேலையில் சேர ஊக்குவிக்கும் பொருட்டு தரப்படும் சலுகைகள் போல தான் இந்த பேன்,தாலி,சைக்கிள் போன்ற சலுகைகளும்.
    சூரிய ஒளியில் ஓடும் குறைந்த விலை வண்டிகள் கண்டு பிடிக்க பட்டால் பெட்ரோல்,டீஸல் போன்றவற்றை உற்பத்தி செய்யும்,விநியோகம் செய்யும் பல நிறுவனங்களை மூட வேண்டியது தான்.அப்படி மூட கூடாது என்பதற்காக சூரிய ஒளி எரி சக்தி ஆராய்ச்சிகளை நடத்த விடாமல் தடுப்போமா.அரசாங்கம் தெருவுக்கு தெரு தண்ணீர் குழாய்,வீட்டுக்கு தனி connection வழங்கியதால் வீட்டுக்கு வீடு குடிதண்ணீர் வழங்கி வந்த (ஒரு குடம் ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை)பலர் வேலை வாய்ப்பை இழந்தனர்.இன்னும் சில ஆண்டுகளில் அரசாங்கம் சுகாதாரமான குடிநீரை வழங்கும் நிலை ஏற்படுமானால் அக்காபீன முதல் பிஸ்லேரி வரை கடையை சாத்த வேண்டியது தான்.அதற்காக வருத்த பட முடியுமா

    ReplyDelete
  6. Thanks for the action.
    rgds/Surya

    ReplyDelete
  7. சிறு தொழில்களை முடக்கினால் இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமாகிவிடும். அமெரிக்கா போல டக்கென்று சரியும். ஏறும். அதுதான் இந்தியா முழுவதும் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். சரியா?

    ReplyDelete
  8. மாரியப்பன், உண்மையே. சிறுதொழில் நிறுவனங்களால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. எல்லாமே பெருநிறுவனங்கள் மட்டுமே என்றால் அதனால் (1) புதுமையான ஐடியாக்கள் வெளியே வராது. (2) செல்வம் பரவலாகாது. (3) புதிய முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள ஆட்கள் இருக்கமாட்டார்கள். (4) ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் ஸ்டபிலிடி இருக்காது.

    ReplyDelete