Monday, September 05, 2011

சமச்சீர் மற்றும் இன்னபிற

[கல்வித்துறையில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவர் இன்று எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். பல ஊர்களுக்கும் சென்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துபவர் இவர். இவருடன் நடந்த உரையாடலில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் பதிவு.]

சமச்சீர் புத்தகங்கள் கையில் கிடைத்து, பாடங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. முந்தைய மாநில வாரியக் கல்விப் புத்தகங்களுடன் ஒப்பிடும்போது சமச்சீர்ப் புத்தகங்கள் கடினமாக இருப்பதாகப் பல ஆசிரியர்கள் நினைக்கிறார்களாம். இப்படித் திடீரென மாற்றம் கொண்டுவந்துள்ளது அவர்களுக்குப் பெருத்த சிரமத்தைத் தந்துள்ளது. பாடங்கள் புதுவகையாக இருப்பதால் ஆசிரியர்கள் ஒருவிதப் பதற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பதற்றம் மாணவர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது. அதன் விளைவாகப் பெற்றோர்களும் பதற்றத்தில் இருக்கின்றனர்.

முக்கியமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும் பதற்றம் தனிப்பட்டது. ஆண்டிறுதிப் பரீட்சை எப்படி இருக்கும், அதில் எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்பதுதான் இவர்களது பதற்றத்துக்குக் காரணம். முந்தைய ஆண்டுக் கேள்வித்தாள்களை அடிப்படையாகக் கொண்டே பல மாணவர்கள் பரீட்சைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அப்படி இந்தமுறை செய்ய இயலாது. எவ்வளவு விரைவில் அரசு மாதிரி வினாத்தாள்களை வெளியிடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த மாணவர்களின் பதற்றம் குறையும்.

***

ஹையர் செகண்டரி மாணவர்களுக்குக் கணினிகள் வழங்கப்படும் அதே நேரம் ஆசிரியர்களுக்குக் கணினிகள் வழங்குவதைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை. சிறு நகரங்களில் இருக்கும் பல தனியார் பள்ளிகள், ஸ்மார்ட்போர்ட், எக்கச்சக்கமான கணினி மென்பொருள்கள் என்றெல்லாம் வாங்கி வைத்திருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அவற்றைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலையே இப்படி என்றால் அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் கணினியை முறையாகப் பயன்படுத்தி அதன்மூலம் கல்வியை எப்படி மேம்படுத்துவது என்று அரசு யோசித்தமாதிரியே தெரியவில்லை. கணினியைக் கொடுத்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்களா?

***

தம் பிள்ளைகளின் படிப்புமீது பெற்றோர் அதீத முதலீடு செய்கின்றனர். தம் சக்திக்குமீறிய கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். பிள்ளைகள் கோட், டை, ஷூ அணிந்து செல்வதை சிறு நகரங்களில் உள்ள பெற்றோர்கள் மிகவும் விரும்புகின்றனர். தம் பிள்ளைகள் ‘ஷட் அப்’ என்று தம்மை ஆங்கிலத்தில் திட்டினாலும், ஆங்கிலம் பேசுகிறானே என்று அகமகிழ்ந்துபோகின்றனர்.

மொத்தத்தில் ஆங்கிலம் ஒன்றுதான் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்யும் என்று தமிழ்ப் பெற்றோர்கள், அதுவும் குறிப்பாக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள பெற்றோர்கள், உறுதியாக நம்புகின்றனர். ராஜபாளையம் போன்ற சிறு ஊர்களிலும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப் பல நிறுவனங்கள் உள்ளன. தஞ்சாவூரில் (என்று நினைக்கிறேன்) ஒரு லோக்கல் கேபிள் சானலே ஆங்கிலம் கற்றுக்கொடுக்க என்று உள்ளதாம். எந்தத் தரத்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

ஏதேனும் ஒரு பள்ளி சிறப்பாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறது என்ற பெருமையைப் பெற்றுவிட்டால் போதும்; உடனடியாக மக்கள் கூட்டம் அந்தப் பள்ளியை நோக்கிப் படையெடுக்கிறது. அந்தப் பள்ளியில் நுழைவதே மிகக் கடினமாக ஆகிவிடுகிறது.

***

தாய் தமிழ்ப் பள்ளிகள் என்ற பெயரில் பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் மிக நல்ல கருத்துடன் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று மிகுந்த பொருள் சிரமத்துக்கிடையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி முழுமையாகத் தமிழில் போதிக்கப்படுகிறது. பொதுவாக இரண்டாம் நிலை நகரங்களில் ஆசிரியருக்கும் ஆங்கிலம் தெரியாது; மாணவர்களுக்கும் ஆங்கிலம் தெரியாது. இதனால் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உருப்படியாக ஒன்றும் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. மாறாக தாய் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் கருத்துகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு சேரும்போது அந்த ஆண்டு கொஞ்சம் சிரமப்பட்டாலும், ஏழாம் வகுப்பு வரும்போது வகுப்பில் முதலாவதாக வந்துவிடுகிறார்கள். சில ஊர்களில் தாய் தமிழ்ப் பள்ளிகளில் படித்துவிட்டு வருவோரை எந்தக் கேள்வியும் கேட்காமல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் ஆறாவதில் சேர்த்துக்கொள்கிறார்கள். (உதாரணம்: பட்டுக்கோட்டை என்று சொன்னார் என்று நினைக்கிறேன்.)

ஆனாலும் பெற்றோர்களின் ஆங்கில மோகம் காரணமாகவும் தாய் தமிழ்ப் பள்ளிகளை நடத்துவோரின் முரட்டுத்தனமான கொள்கைப்பிடிப்பு காரணமாகவும் இந்தப் பள்ளிகள் தள்ளாடுகின்றன. (உதாரணம்: மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். இதனாலும் தமிழில் மட்டுமே பாடம் சொல்லித்தருவதாலும் பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மோசமான இரண்டாந்தர ஆங்கிலப் பள்ளிகளில் கொண்டு சேர்க்கிறார்கள்!)

6 comments:

  1. பாடமுறை மாறியது ஆசிரியர்களுக்குப் பதற்றமாக உள்ளது என்பது வேடிக்கையாக உள்ளது. ஆசிரியப் பயிற்சி படித்த பிறகு வாழ்க்கையில் மேற்கொண்டு ஏதும் படிக்க மாட்டார்களா :)

    **
    //மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். இதனாலும் தமிழில் மட்டுமே பாடம் சொல்லித்தருவதாலும்//

    குறைந்த கட்டணம் வாங்கும் கொள்கை பெற்றோருக்கு நல்லது தானே? தாய்த்தமிழ் பள்ளி என்று பெயர்வைத்து விட்டு அங்கும் ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சரியா? :) ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக சொல்லித் தருவார்கள் என்றே நினைக்கிறேன்.

    ஏன் இந்தப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்புகளுக்கு மேல் நடத்துவதில்லை? கொள்கையுடன் கொஞ்சம் நிதி மேலாண்மை முனைப்பும் இருப்பது நலம்..

    ReplyDelete
  2. குறைந்த கட்டணம் பெற்றோருக்கு நல்லதுதான். ஆனால் நம் மக்கள் இதனை வேறு மாதிரியாகப் பார்க்கிறார்கள். குறைந்த கட்டணம் என்றால் அது மட்டமான பள்ளி என்ற எண்ணம் ஒரு பக்கம். மற்றொரு பக்கம், அவர்கள் அனைவருமே ஆங்கிலக் கல்வியையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த இரண்டின் காரணமாகவே மக்கள் தம் பிள்ளைகளை இந்தப் பள்ளிகளுக்கு அவ்வளவாக அனுப்புவதில்லை.

    நான் என் தனிப்பட்ட கருத்து எதையுமே இங்கு சொல்லவில்லை. தாய் தமிழ்ப் பள்ளிகள் இன்று திண்டாட்டத்தில் உள்ளன என்பதை ஒருவர் சொன்னதை இங்கே பதிவு செய்கிறேன். தமிழ் தமிழ் என்று பேசும் ஆர்வலர்கள்தான் இதற்கு எதையாவது செய்யவேண்டும். இந்தப் பள்ளிகள் அவசியமானவை, முக்கியமானவை. ஆனால் வெற்று முழக்கங்கள் போதா. ஒழுங்கான தொழில் திட்டம் இருந்து, மார்க்கெட்டிங் செய்யத் தெரிந்தால்தான் இவை வலுவடையும்.

    ReplyDelete
  3. சீனாவில் விளையாட்டு மைதானத்தை நிரப்பி 50,60 ஆயிரம் நபர்கள் ஒரே கோஷமா ஆங்கிலம் கற்கிறார்கள்!! இதை சீன அரசு கொள்கை ரீதியாவும் நிதி ரீதியாவும் ஆதரிக்கிறது.
    The world's English speaking mania (with scenes mainly from China)
    http://www.ted.com/talks/lang/eng/jay_walker_on_the_world_s_english_mania.html

    மாற்றாக ஒர் வெள்ளைக்காரி இங்கிலாந்து நாட்டு ஆங்கில ஆசிரியை, ஆங்கில மொழியின் உலக மயமாக்கலை எதிர்த்து, மற்ற மொழிகளின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் உறை கீழே.

    Dont surrender to English - an English teacher's plea!
    http://www.ted.com/talks/lang/eng/patricia_ryan_ideas_in_all_languages_not_just_english.html

    - R Gopu (writergopu@yahoo.com)

    ReplyDelete
  4. /-- ஹையர் செகண்டரி மாணவர்களுக்குக் கணினிகள் வழங்கப்படும் அதே நேரம் ஆசிரியர்களுக்குக் கணினிகள் வழங்குவதைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை. --/

    பதிவர்கள் இணையத்தில் எழுதுவதைப் போல தர்மத்திற்கா உழைக்கிறார்கள். வாங்கும் சம்பளத்தை என்ன செய்கிறார்கள்?

    ReplyDelete
  5. http://www.ted.com/talks/lang/eng/patricia_ryan_ideas_in_all_languages_not_just_english.html

    ReplyDelete
  6. //இந்தப் பள்ளிகள் அவசியமானவை, முக்கியமானவை. ஆனால் வெற்று முழக்கங்கள் போதா. ஒழுங்கான தொழில் திட்டம் இருந்து, மார்க்கெட்டிங் செய்யத் தெரிந்தால்தான் இவை வலுவடையும். //

    +1

    ReplyDelete