Monday, September 12, 2011

தென் தமிழ்நாட்டில் தலித்துகள்மீது துப்பாக்கிச்சூடு

தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் சாதிக்கலவரம் பற்றிய அறிக்கைகளில் சாதிப் பெயர்கள் ஏதும் வரக்கூடாது என்பது கவனமான ஒரு முடிவு.

சனிக்கிழமை அன்று பழனிகுமார் என்ற பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பச்சேரி என்ற தனது கிராமத்துக்கு வரும் வழியில் வழிமறித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த மாணவர் தலித் சாதியினர் என்றும் இவரை தேவர் சாதியினர் வழிமறித்துக் கொன்றிருக்கிறார்கள் என்பதையும் ஒருவர் யூகிக்கலாம்.

இம்மானுவேல் சேகரன் - முத்துராமலிங்கத் தேவர் பற்றி ஓரளவுக்கு நாம் கேள்விப்பட்டிருப்போம். தேவர் சாதியினர் குருபூசை என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. (அவரது பிறந்த தினமும் இறந்த தினமும் ஒன்றே: அக்டோபர் 30.) இந்த தினத்தன்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளின் அரசியல்வாதிகளுமே பசும்பொன் என்ற அவர் பிறந்த ஊருக்குச் சென்று மலர் தூவி தேவர் சாதி வாக்குவங்கிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துவிட்டு வருவது வழக்கம்.

அந்த வாரம் முழுவதுமே இந்தப் பகுதி பதட்டமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இந்தப் பகுதியில் வாழ்ந்ததில்லை; குறிப்பிட்ட இந்த மாதம், நாள் இந்தப் பகுதிக்குச் சென்றதுமில்லை.

சாதிப் பெருமை பேசுவது ஒரு பக்கம் இருந்துவிட்டுப் போகட்டும். தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய சாதிகளுமே சங்கங்களையும் கட்சிகளையும் உருவாக்கி நடத்திவருகின்றன. ஆனால் தென் தமிழ்நாட்டில், முக்கியமாக தேவர்கள் சாதியைப் பொருத்தமட்டில், சாதிப் பெருமை சாதி வெறியாகி, தலித் சாதியினரைத் தாக்கிக் கொல்வதில் போய்த்தான் முடிகிறது.

எப்படி முத்துராமலிங்கத் தேவர், தேவர் சாதியினரின் அடையாளமாகத் திகழ்கிறாரோ அதேபோல தென் தமிழ்நாட்டில் இம்மானுவேல் சேகரன் தலித்துகளின் நாயகர் என்ற இடத்தில் உள்ளார். இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளை (11 செப்டெம்பர்) கொண்டாடிவரும் தலித்துகள், இந்த ஆண்டு இந்த தினத்தை இம்மானுவேல் சேகரன் குருபூசை என்ற பெயரிலேயே கொண்டாட முற்பட்டுள்ளனர். (இதற்கு முந்தைய வருடங்களில் இந்தப் பெயர் இருந்ததாக நினைவில்லை.)

ஒரு தலித் பள்ளி மாணவன் கொல்லப்பட்டது, இம்மானுவேல் சேகரன் குருபூசை என்ற இரண்டு கொந்தளிப்பான நிகழ்வுகளோடு மற்றொன்று சேர்ந்துகொண்டுள்ளது. கொலைக்குற்றத்துக்காகச் சிறைக்குப்போய் இந்த ஆண்டு சிறையிலிருந்து வெளியேவந்த ஜான் பாண்டியன் என்ற தலித் தலைவர் இந்த நிகழ்ச்சிக்கு வர முற்பட்டுள்ளார். அவர் வந்தால் கலவரம் அதிகமாகும் என்று நினைத்த காவல்துறை அவரை வழியிலேயே மடக்கி preventive detention-ல் வைத்துள்ளது. ஆனாலும் மக்கள் கொந்தளிப்பு காரணமாக காவல்துறை வண்டிகள் தாக்கப்பட, இதுபோன்ற நேரங்களில் காவல்துறை நடந்துகொள்வதுபோல அவர்களும் நடந்துகொள்ள பரமக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். [ஹிந்து | தினமணி]

கொல்லப்பட்ட அனைவரும் தலித்துகள்தான் (தேவேந்திர குல வெள்ளாளர்கள்?) என்று நாம் யூகிக்கலாம். செய்தித்தாள்கள் இந்தத் தகவலை நமக்குச் சொல்வதில்லை.

ஆக 6 தலித்துகள் கொலை அல்லது சாவு. தலித்துகள் அரசமைப்பைத் தமக்கு எதிரானதாகக் கருத மற்றுமொரு காரணம். தேவர் சாதியினருக்குத் தம் குலப்பெருமையை மீண்டும் நிலைநாட்டிய கௌரவம். ஜான் பாண்டியன் போன்ற ரவுடித் தலைவர்களுக்கு தலித் தலைமையைக் கைப்பற்றிக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பு.

சிவில் சமூகத்துக்கு இதனை எதிர்கொள்வது எப்படி என்றே தெரிவதில்லை. தேவர் சாதியினர் (முக்குலத்தோர்) என்றாலே சரக்கென்று கத்தியை உருவி எதிராளியை (பெரும்பாலும் தலித்துகளை) போட்டுத்தள்ளும் வீர வம்சம் என்று சினிமாக்களும் தொடர்ந்து உருவேற்றி உருவேற்றி சில தலைமுறைகளே அழிந்துபோயுள்ளன.

இதே பகுதிகளில், தென் தமிழ்நாட்டில், ஐந்து பஞ்சாயத்துகளில் தலித்துகள் பஞ்சாயத்துத் தலைவர்களாக ஆக அனுமதிக்கப்படாமை, அப்படி மீறி ஆவோர் கொல்லப்படுதல், தொடரும் பதட்டம் என்பது வாடிக்கையாக இருக்கிறது. கல்வி, பிற மனித வளர்ச்சிக் காரணிகள் ஆகியவற்றில் இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கும் தமிழகத்தில் 2011-லும் மாற்றமே இல்லாமல் நடக்கும் தலித் விரோதத் தாக்குதல்கள் வருத்தத்தைத் தருகின்றன. இதே பிரச்னை, சென்னை சட்டக் கல்லூரி வரை வந்து தொலைக்காட்சியில் நேர்முக ஒளிபரப்பாக ஆகியதை நாம் பார்த்திருக்கிறோம். சில கேள்விகள் எழுகின்றன.
  1. தேவர் சாதியினர் மட்டும் அதீதமான தலித் விரோத மனப்பான்மை கொண்டிருப்பது ஏன்? (பொதுவாகவே அனைத்து சாதியினரும் இதே எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், மிக அதிகமாக இது வன்முறையாக வெளிப்படுவது தென் தமிழகத்தில், தேவர் சாதியினர் அதிகமாக இருக்கும் இடங்களில்தான்.)
  2. தலித்துகள் எந்தவிதத்தில் தேவர் சாதியினரின் பொருளாதார பலத்துக்குச் சவாலாக இருக்கிறார்கள்?
  3. இதே பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் மற்றொரு சாதியினரான நாடார்கள் ஒருவித buffer-ஆக இருந்து இந்தக் கலவரங்களைத் தடுக்க வாய்ப்புகள் ஏதேனும் உண்டா?
  4. தென் தமிழகத்தில் பெருமளவு பரவியிருக்கும் கிறிஸ்தவ மிஷன்களால் இந்தப் பிரச்னை குறைய வாய்ப்பே இல்லையா?
  5. தேவர் சமூகத்தினர் கல்வி அறிவைப் பெருக்கிக்கொள்ளும்போதும்கூட இப்படி நூற்றாண்டுக்கு முந்தைய இனக்குழு வெறி ஏன் குறைவதில்லை? தேவர் சமூகத்துக்குள்ளாக இந்த வெறிக்கு எதிரான குரல்கள் ஏன் எழுவதே இல்லை?
  6. வட தமிழகத்தில் வன்னியர்-தலித் உறவு ஏற்பட்டு நிலைமை ஓரளவுக்குச் சீராக ஆவதுபோல ஏன் தென் தமிழகத்தில் ஏற்படுவதில்லை?

36 comments:

  1. தேவர் சிலைக்குச் செருப்பு மாலை போடுதல், புளியம்பட்டியிற் போன்ற சாதிக் கலவரம் இதெல்லாம், பெரும்பாலும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்தான் நடக்கிறது என்பதைக் கவனிக்கிறது இல்லையா?

    இந்தமுறை, மு.க. அழகிரி பக்கம் சாய்ந்துநிற்கிற மறக்குலத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கிறதே! கூட்டணி தர்மத்துக்குக் கட்டுப்பட்டு ஜான் பாண்டியன் உதவி செய்கிறார் - அவ்வளவே!

    கம்யூனிஸ்ட்டுகள் இதில் தலையிடவோ கருத்துக் கூறவோ மாட்டார்கள், கவனித்து இருக்கிறீர்களா? மேலும் பார்ப்பனர்கள் ஊதுவதுபோல், இதொன்றும் தீண்டாமை சம்பந்தப்பட்டதும் அல்ல; அதிகாரம் சம்பந்தப்பட்டது. (தீண்டாமை என்றால், இதே வன்முறை பறையர், சக்கிலியர் மீதும் பாயவேண்டும் அல்லவா?)

    கவலையை விடுங்கள், பள்ளர்கள் கொலைப் படுகிறார்களே என்பதல்ல புலம்ப வேண்டுவது. அவர்கள் அப்படித்தான் ஜான் பாண்டியனை எம்.எல்.ஏ. ஆக்குகிற அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. ராஜசுந்தரராஜன்: இதில் நான் தெரிந்துகொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது. ஜான் பாண்டியன் ஒருவிதத்தில் அதிமுக ஆதரவு சக்தி என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.

    அதிகாரம் சம்பந்தப்பட்டது என்றால் என்ன? எந்தவிதத்தில் பள்ளர்கள் தேவர்களின் அதிகாரத்தில் கைவைக்கிறார்கள்? அப்பகுதியில் பிற தலித்துகள் என்பவர்கள் சக்கிலியர், அருந்ததியர்தானே? பறையர்களும் நிறைய உண்டா? தலித்துகளிலேயே பள்ளர்கள் அதிகமாக அமைப்புரீதியாகத் தங்களைப் பலப்படுத்திக்கொண்டிருப்பதால்தான் அவர்கள் தாக்கப்படுகிறார்களா?

    சிலைகளுக்குச் செருப்புமாலை போடுதல் நடப்பதாகவே இருக்கட்டும். அது கொலையைத் தூண்டும் அளவுக்கான வன்முறையில்தான் முடியவேண்டுமா? அதனை எதிர்கொள்ள கத்தி, கம்பு, வேல்தான் வழிமுறையா?

    பள்ளர்கள் வேண்டுமென்றே சீண்டிவிட்டுத்தான் தேவர்கள் வன்முறையில் இறங்குவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

    ReplyDelete
  3. நடந்திருக்கும் சம்பவங்களை அரச வன்முறையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இது தேவர்-தலித் மோதல் என்பதைப்போல பதிவிட்டிருக்கிறீர்கள். ஒருவேளை தேவர் இனத்தவரின் மறைமுக இன்ஃப்ளூயன்ஸ் காவல்துறைக்கு இருந்திருந்தாலும் கூட, இப்போது நடந்திருப்பது தலித்துகளின் மீதான காவல்துறையின் ஒடுக்குமுறைதான்.

    எனவே இந்த பதிவு இன்னேரத்தில் appropriate ஆக தோணவில்லை.

    ReplyDelete
  4. // தென் தமிழகத்தில் பெருமளவு பரவியிருக்கும் கிறிஸ்தவ மிஷன்களால் இந்தப் பிரச்னை குறைய வாய்ப்பே இல்லையா? //

    பத்ரி, ஏற்கனவே தலித்-தேவர் faultline இருக்கிறது. அதை நீர்த்துப் போகச் செய்து, நல்லுறவை உறவாக்கமல், அந்த faultine ஐ இன்னும் பெரிதாக்கி பிளவு படுத்துபவதில் அவர்களுக்கும் பங்கு உண்டு. இந்த மாதிரியான பெரிய வன்முறை வெடிப்பை அவர்கள் தங்கள் மதப்பிரசார, மதமாற்ற வெறியில் எப்படி உபயோகப் படுத்தலாம் என்று *மட்டுமே* யோசிப்பார்கள் என்பதைக் கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?

    என்ன சொல்ல வருகிறீர்கள்? மீனாட்சிபுரத்தில் 70களில் ஊரோடு கூட்டாக மதமாற்றம் நடந்தது போல நடந்து மிகப் பெரிய கலவரமாக வெடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

    இந்த பிரசினையில் கீறிஸ்தவ மத சக்திகள் தலையிடுவதை அரசும் காவல்துறையும் குறுக்கிட்டு தடை செய்யவேண்டும். காந்திய அமைப்புகள், மாதா அம்ருதானந்தமயி மடம், விவேகானந்த கேந்திரம் போன்ற சேவை அமைப்புகள், உள்நோக்கம் உல்லாத சமூகப் பணியார்கள் இவர்கள் இரு தரப்பையும் அழைத்துப் பேசி அமைதியை உருவாக்க வேண்டும். அதுதான் நல்ல தீர்வாக இருக்கும். வேண்டுமானால் அண்ணா ஹசாரேயைக் கூட அங்கே வரச்சொல்லி கூப்பிடலாம்.

    ReplyDelete
  5. யுவகிருஷ்ணா: சனிக்கிழமை ஒரு தலித் இளைஞன் கொல்லப்பட்டான் அல்லவா? யாரால்? காவல்துறையாலா?

    ஏன் மக்கள் கொதித்தெழுந்து வன்முறையில் இறங்கினார்கள்? அதனால்தானே துப்பாக்கிச் சூடு நடந்தது?

    ReplyDelete
  6. எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளக் கூடாது. அது, காந்தீயக் கட்சி என்றால் காங்கிரஸ்; கம்யூனிஸ்ட் கட்சி என்றால் CPM என்பதுபோல் ஆகிவிடும்.

    குற்றவாளி என்று பிடித்து வரப்பட்ட ஆள், காவல் நிலையத்தில், மானபங்கப் படுவதோ அடிபடுவதோ ஏன் கொலைபடுவதோ கூட 'அதிகாரம்' சம்பந்தப்பட்டது. சட்டமோ பண்பாட்டின் வரிவடிவம் (மீறப்பட்டாலும் கூட).

    "என் அதிகாரம் நிலவ வாய்ப்புள்ளதொரு பஞ்சாயத்தில் நீ என்ன தலைவராவது; தின்னு பீயை" என்கையில், அதில் 'உத்திரம்' அளவுக்கு இருக்கிற 'அதிகாரம்' பிரச்சனையாகப் பேசப்படாமல், 'துரும்பு' அளவுக்கு உள்ள 'தீண்டாமை' பேசப்படுவதில் கவனத்தை ஈர்த்தேன்.

    ஈழத்தின் 'உரிமை' என்பதை விட்டுவிட்டு, 'தமிழ் இனம்' என்பதை நாம் முன்னிறுத்துவது இல்லையா? எனது வாதம், இனமே அழிந்தாலும் உரிமையை முன்னெடுக்கட்டும் என்பதுதான். "இனம் அழிந்த பிறகு உரிமை யாருக்கு?" என்பீர்களேயாயின், "ஈழத்தாரைப் போலவே உரிமைக்குப் போராடும் இன்னொரு கூட்டத்துக்கு," என்பேன். ஒவ்வாப் பார்வையோ? ஆனால் போராட்டம் என்றால் இதுதான் பார்வை.

    இராமநாதபுரம் மாவட்டத்தில், தேவர்கள், கோனார்கள், பள்ளர்கள் (இதே வரிசையில் என்று எண்ணுகிறேன்) பெரும்பான்மை பெற்றிருக்கிறார்கள்.

    //பள்ளர்கள் வேண்டுமென்றே சீண்டிவிட்டுத்தான் தேவர்கள் வன்முறையில் இறங்குவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?//

    பள்ளர்களோ மறவர்களோ அல்ல, அரசியல்வாதிக்கு அடிவருடிகள் அதைச் செய்வார்கள் (அதில் பள்ளனோ மறவனோ கூட இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு 'இமானுவேல்', 'பசும்பொன் தேவர்' அல்ல, லோக்கல் தாதாக்களே குரு).

    ReplyDelete
  7. ஜடாயு: இந்து சமூகசேவை அமைப்புகள் எந்த அளவுக்கு இந்த faultline குறைவதில் வேலை செய்கின்றன? கிறிஸ்தவ மிஷனரிகள் இதில் இறங்கவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் பெருவாரியாக இருக்கும் இடங்களில் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கிறிஸ்தவ மிஷனரிகள் பிரச்னையைத் தூண்டவே விரும்புவார்கள் என்று நீங்கள் சொல்வதை, சாட்சியம் இல்லாமல் நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்.

    ReplyDelete
  8. // கிறிஸ்தவ மிஷனரிகள் பிரச்னையைத் தூண்டவே விரும்புவார்கள் என்று நீங்கள் சொல்வதை, சாட்சியம் இல்லாமல் நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன். //

    பல சாட்சியங்கள் உள்ளன. சமீபத்திய ஒன்று -

    மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்
    http://www.tamilhindu.com/2010/04/meykovilpatti-anti-dalit-incident-video-report/

    இதை ஆவணப் படுத்தியிருப்பது இந்து அமைப்பு அல்ல, பகுஜன் சமாஜ் கட்சி.

    ReplyDelete
  9. // கிறிஸ்தவ மிஷனரிகள் இதில் இறங்கவேண்டும் என்று சொல்லவில்லை. //

    நல்லது. நன்றி. நீங்கள் எழுதியது அழைப்பு விடுப்பது போல இருந்தது.

    // ஆனால் அவர்கள் பெருவாரியாக இருக்கும் இடங்களில் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். //

    நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  10. இப்போது நடப்பதை சாதிக்கலவரம் என்று கூறமுடியாது குறைந்தபட்சம் தலைப்பை மாற்றிவிடுங்கள்

    ReplyDelete
  11. சரி. தலைப்பை மாற்றிவிடுகிறேன். என் மனத்துக்கு இந்தத் தலைப்புதான் பட்டது. நானே சாதிக்கலவரத்தை வலிந்து உருவாக்கியதாக இருக்கவேண்டாம்.

    ReplyDelete
  12. What a macabre coincidence: 1997 லிலும் தென் மாவட்ட சாதிக் கலவரத்தில் (மதுரையில்) பழனிக்குமார் என்ற ஒருவர் கொல்லப்பட்டார்!!

    சரவணன்

    ReplyDelete
  13. தென் தமிழகத்தில் சாதி வெறி குறிப்பாக முக்குலத்தோருக்கு அதிகமாக இருப்பதன் முக்கிய காரணம் சசிகலா,காவல்துறையில் ஆதிக்கம்,மற்றும் தேவர்,மறவர்,கள்ளர் ஆகிய மூன்று பேருக்குள்ளும்(ஒருவொருக்கொருவர் பெண் எடுப்பதோ பெண் கொடுப்பதோ கிடையாது.அவர்களுக்குள் சண்டைகளும் உண்டு)ஒற்றுமையை உண்டு பண்ண,அதன் மூலம் அரசியல் சக்தி அதிகம் பெற நடக்கும் முயற்சிகள்.முக்குலத்தோரில் குறைவாக பார்க்கப்படும் கள்ளர் பிரிவை சேர்ந்த சசிகலா (மற்றும் குடும்பம்)அதன் தன்னிகரில்லா தலைவராக மாற உருவாக்கப்பட்ட பல வழிகளில் ஒன்று தான் பெரிய அளவில் குரு பூஜை,அதிகார வர்க்கம் காவல் துறைக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற செயல்கள்.
    திரை துறையினரின் பங்கும் இதில் பெருமளவு உண்டு.திரைத்துறையில் பிரபலமான பலர் இந்த சாதியை சேர்ந்தவர்கள்.அதன் பலனாக சாதி வெறியூட்டும் பல படங்கள்,பாட்டுக்கள் உருவாகி வெறியை தூண்டுகின்றன.தேவர் மகன் திரை படம் ஒரு முக்கிய உதாரணம்.அதில் சிவாஜி நேதாஜியின் படையில் அதிகம் இருந்தது நம்ம பயல்கள் தான் என்று சொன்ன வசனத்தை ஒரு தெய்வ வாக்காக பிடித்து கொண்டு பலர் பேசுவதை,வாதாடுவதை பார்த்திருக்கிறேன்.
    இந்திய தேசிய ராணுவம்சப்பானால் பிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களை கொண்டு அமைக்கப்பட்டது.அதில் பல முகம்மதியர்கள்,கோர்க்ஹாக்கள்,வட இந்தியர்கள் என்று அனைவரும் உண்டு.புதிதாக சேர்ந்தவர்கள் பர்மாவில் வாழ்ந்த தமிழர்கள்.அந்த காலகட்டமான 1940 -45 ஆண்டுகளில் முக்கால்வாசி தினங்கள் முத்துராமலிங்கம் சிறையில் இருந்தார்.இது போன்று பல கதைகளை உண்மை என்று நம்பி வெறியோடு அலைவது தான் வருத்தம் தரும் செய்தி.
    இன்னொரு செய்தி.இம்மானுவேல் சேகரன் ராணுவத்தில் பணியாற்றி ஹவில்தாராக ஓய்வு பெற்றவர்.அதுவும் அவர் சாதியை எதிர்த்து போராடுவதற்கு,தன சாதியை ஒன்றிணைத்து போராடுவதற்கு காராணமாக இருந்திருக்கலாம்.அம்பேத்கரின் தந்தையும் ராணுவத்தில் பணியாற்றியவர்.தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வர காரணம் அது தான்.
    http://en.wikipedia.org/wiki/Indian_National_Army

    ReplyDelete
  14. இது முழுக்க அரசியல் வாதிகளால் பெரிது படுத்தப் படும் விஷயம். தலித்துக்களுக்காக உழைக்க அவர்களிடையே சரியான தலைவர் இல்லை. மேலும் அவர்கள் ஒன்று பட்டுவிட்டால் தங்கள் பிழைப்பு நடத்த முடியாது என்ற எண்ணமும் காரணம். தேவர்களிலுமே அவ்வாறு தான். மக்கள் சரியாக புரிந்து கொண்டு நடக்க தொண்டு நிறுவனங்கள் ஹிந்து மத அமைப்புகள் முன் வர வேண்டும். நன்றி.

    ReplyDelete
  15. ஜாதிகளுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வினால் ஜாதிக் கலவரங்கள் ஏற்பட்டால் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முயற்சிகள் எடுக்கலாம்.ஜாதி என்பதை உட்சாதி சுரண்டாலுக்கான வழிமுறையாகப் பலர் கொண்டிருக்கின்றார்கள்.உட்சாதி சுரண்டலில் ஆரம்பித்து கட்டப்பஞ்சாயத்து முறைகளைக் கையாண்டு அவர்கள் பெரும் பொருளாதார ஆதாயத்தை ஆராய்ந்து பார்த்தால் நம்மை மலைக்க வைக்கும்.இது கூட எளிமையான புரிதல்தான்.
    பொருளாதார முன்னேற்றமும்,பிற ஜாதியினர் buffer ஆகச் செயல்படுவதும்,இந்தப் பிரச்னைகளைக் குறைக்க பெருமளவு உதவியிருப்பது உண்மை.
    ஜாதி உணர்வு என்பது பல்வேறு வடிவங்களில் மிகச் சிக்கலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் போது அதைப் பற்றி நாம் அக்கறைப் படுவதில்லை.மாறாக அது கலவரமாக வெளிப்படும்போதுதான் கவலை கொள்கின்றோம்.

    ReplyDelete
  16. இது ஒரு முன்னேயே தீர்மானிக்கப்பட்ட தலித் மீது வன்முறை . 1 . மாணவன் படுகொலை (கொல்லப்பட்டது ஏன் ?? சாதிவெறி. மனிதர்கள் வெட்கப்படனும் ). 2 .தலித் என்ன பாகிஸ்தான் தீவிரவாதி மாதிரி துப்பாக்கி ,பாம் வைதிருக்கிறர்களா??? இரங்கல் கூட்டத்துக்கு போரவிங்கே கையிலே என்ன இருக்கும் (கொடி,சதி தலைவர் படம் போட்ட பனியன் ,கொஞ்சம் வாய் சவுண்ட் ). அப்புறம் ஏன் துப்பாக்கிசூடு . இவர்களும் மனிதர்களே . என்ன ஒன்னு தலித்துகள் . வாகனங்கள் அவர்களால் எரிக்கபட்டது உண்மையா ???? .வாகனத்தைவிட உயிர் மேலானது . 3 இரக்கப்பட/போராட ஆள் (நல்ல அரசியல் தலைவர்) இல்லாத ஒரு கூட்டம் (ஸ்ரீலங்க தமிழர்கள் போல ). 4 . இது தலித் மீது நடத்தப்பட்ட முதல் துப்பாக்கி சூடு இல்லே ? இதற்க்கு முன்னே போன கலவரத்தில் நடத்த பட்டது . ஏன் தலித் மீது மட்டும் துப்பாக்கி சுடு நடத்தனும் ???

    ReplyDelete
  17. //Badri said...
    யுவகிருஷ்ணா: சனிக்கிழமை ஒரு தலித் இளைஞன் கொல்லப்பட்டான் அல்லவா? யாரால்? காவல்துறையாலா?

    ஏன் மக்கள் கொதித்தெழுந்து வன்முறையில் இறங்கினார்கள்? அதனால்தானே துப்பாக்கிச் சூடு நடந்தது?
    //

    இப்படியெல்லாம் இடுக்குபிடி கேள்வி கேட்டா எப்படி?
    நமக்கு தெரிந்ததெல்லாம் தி.மு.க இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது என்ற பதில் தானே!

    :)

    ReplyDelete
  18. தேவேந்திரர்களின தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரையும் அம்மக்களையும் தலித் என்று கூறியிருப்பதை கண்டிக்கிறேன். Badri போன்ற ஒரு நபரிடமிருந்து நான் இந்த வார்த்தையை எதிர் பார்க்கவில்லை. அந்த வார்த்தையை பயன்படுத்த கூடாதென்று உச்சனேதி மன்றமே சொல்லிருக்கும் போது Badri அதை பயன்படுத்தி இருப்பது மிகவும் கேவலமான விசயம்.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. அனானி: சரி, தேவேந்திரர்கள் என்று வைத்துக்கொள்வோம். தலித்துகள் அல்ல. பள்ளர் என்ற சாதிப்பெயரையும் நான் பயன்படுத்தப்போவதில்லை. தேவேந்திரர் சாதியினர் அட்டவணை சாதியினரா இல்லையா? அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்ற வரம்புக்குள் வருகிறார்களா, இல்லையா? தீண்டாமை என்ற கொடிய பழக்கத்தால் பாதிக்கப்படுகிறார்களா, இல்லையா?

    இல்லை என்றால், இது இருவேறு ஆதிக்கச் சக்திகளுக்கு இடையேயான போராட்டம் என்று வேறு பார்வையில் இதனைக் கவனிக்கலாம். ஆம் என்றால் இதனை வேறுமாதிரியாக அணுகலாம்.

    இங்கே வார்த்தைகளைத் தள்ளிவைத்துவிட்டு, அறிவுபூர்வமான விவாதத்துக்குள் நுழைய உங்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  21. தனது சீரிய நடவடிக்கைகளால் தமிழக, உலகத் தமிழர்களின் ஆதரவைப் பெற்று வரும் இந்த புதிய அரசின் புகழைக் குறைப்பதற்காக நடைபெறும் சூழ்ச்சிகளின் முதல் படி இது.

    மற்ற படி மக்களிடையே ஒரு அதிருப்தியை தோற்றுவிக்க எப்போதும் அ தி மு க விற்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்களின் வெற்றிகரமான முதல் செயல்.

    இப்படி ஒரு கலவரம் உருவாக வேண்டும். இந்த அம்மாவின் மேல் எப்படியாவது கெட்ட பெயர் வர வேண்டும் என்று மனப்பால் குடிக்கும் சிலர் தான்

    இது போன்ற அபத்தமான பேச்சுக்களை பேசுகிறார்கள் .

    அம்மா அவர்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவர் குறிப்பிட்ட இனத்திற்கு எதிரானவர் என்று கதை கட்டுவதை நிறுத்தி விடுங்கள். த

    மிழகம் சமூக நீதிக்கான ஒரு அடையாளமாக திகழ புதிய அரசுக்கும் உருப்படியான யோசனைகளை சொல்லுங்கள் .

    udhaya

    ReplyDelete
  22. பத்ரி,

    என்ன பிரச்சனை? தேவேந்திரகுல வெள்ளாளர்கள் தலித் அல்லாமல் வேறு யார்? யாரோ ஒரு அனானி எந்த லாஜிக்கும் இல்லாமல் தலித் என்ற வார்த்தையையே பயன்படுத்த கூடாது என்றதை, சீரியசாக எடுத்து 'தலித்துகள் அல்ல, பள்ளர் என்ற சாதிப்பெயரையும் நான் பயன்படுத்தப்போவதில்லை." என்பதன் தாத்பர்யம் புரியவில்லை.

    ReplyDelete
  23. ரோசா: அந்த அனானியிடம் நான் கேட்க விரும்பியதும் அதுதான். தலித் என்ற வார்த்தை இல்லை என்றே வைத்துக்கொள்வோம், தேவேந்திரர் என்ற பெயரிலேயே அவர்களை அழைப்போம். ஆனால் அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்ட சாதியா இல்லையா என்று சொல்லுங்கள் என்பதுதான். பெயரை வைத்துக்கொண்டு தொங்காமல், ஒரு நிகழ்வை அலசுவோம் என்பதுதான்.

    ReplyDelete
  24. ஈழத்தில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்று வாதிட்டவர்கள் ஒரு கேள்வியை திரும்ப திரும்ப கேட்டார்கள். நடப்பது தமிழர்கள் மீதான் இனப்படுகொலை என்றால் தெற்கில் சிங்களப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் எதுவும் நடக்கவில்லயே என்று ஒரு தர்க்கத்தை சமைத்தார்கள். ராஜசுந்தர்ராஜன் 'தீண்டாமை என்றால், இதே வன்முறை பறையர், சக்கிலியர் மீதும் பாயவேண்டும் அல்லவா?' என்று கேட்பதும் அப்படித்தான் இருக்கிறது.

    ReplyDelete
  25. @rajasundarajan: "மேலும் பார்ப்பனர்கள் ஊதுவதுபோல், இதொன்றும் தீண்டாமை சம்பந்தப்பட்டதும் அல்ல";
    இந்தக் கலவரத்தில் பார்ப்பனர்கள் எங்கே வந்தார்கள்? இப்போதும் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் தீண்டாமை தலைவிரித்தாட பார்ப்பனர்கள் எந்த விதத்திலும் காரணம் இல்லை. டீக்கடைகளில் தனி குவளைகள் வைத்து தீண்டாமையை இன்னும் வளர்த்துவரும் மற்ற சாதியினர் நிறையவே இருக்கிறார்கள். இதில் பாப்பனர்களை தேவையே இல்லாமல் இழுக்க எந்தவிதமான காரணமும் இல்லை.

    ReplyDelete
  26. திரு. ரோஸாவசந்த், திரு. ராம்ஸ்ரீதர் இவர்களை முன்னிட்டு:

    நான் சொல்றதுதான் சரின்னு இல்லை. தோன்றிய கருத்தைச் சொன்னேன். பிறகும், எளிமைப்படுத்தித் தட்டையாகப் பொருள்புரிந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

    இதற்காக, இது தொடர்பாக, 'தேவியர் இல்லம் திருப்பூர்' என்னும் தளத்தில் இட்ட எனது பின்னூட்டம் ஒன்றை இங்கே மேல்விளக்கமாகத் தர விரும்புகிறேன், ஆனால் விவாதத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதல்ல என் நோக்கம்:

    ||இந்தப் பிரச்சனை குறித்த இன்னொரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ஒருவர், /இது பஞ்சாயத்துத் தேர்தலில் வாக்கு வாங்குவதற்காகத் தி.மு.க. அரங்கேற்றிய நாடகம்/ என்று எழுதியிருந்தார். இந்தப் பார்வை கூட எனக்கு உடன்பாடே. ஆனால் தீண்டாமையைக் காரணம் காட்டுவது உடன்பாடில்லை.

    கவிதை, கதைகளுக்குத் தவிர, பொதுவாக, நான் பின்னூட்டம் இடுவதில்லை. இந்தப் பரமக்குடித் துப்பாக்கிச் சூடு பற்றிப் பதிவு இட்ட பத்ரி சேஷாத்ரி, இதை தலித் Vs மறவர் இடையிலான தீண்டாமைப் பிரச்சனையாக்கி எழுதி இருந்தார். 'பார்ப்பனர்கள் அல்லவே பிற்படுத்தப்பட்டவர்கள்தாமே தாழ்த்தப்பட்டவர்களிடம் தீண்டாமை பாராட்டுகிறார்கள்' என்னும் இக் கருத்து, இதுபோலப் பிரச்சனைகள் எழும் போதெல்லாம், உயர்த்திக்கொண்ட சாதியரிடம் இருந்து தவறாமல் வெளிப்படும். அதனால் பத்ரிக்கு மறுப்புச் சொல்லிப் பின்னூட்டம் இடவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியே உங்களுக்கு இட்ட பின்னூட்டமும்.

    கவனியுங்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் மறவர் x பள்ளர், தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார் x பள்ளர் அல்லது நாடார் x பரவர் (மீனவர்) இப்படித்தான் கலவரம் வருகிறது. இச் சாதிகளின் குலத் தொழிலைப் பாருங்கள்: தீண்டாமை பாராட்டுவதற்கு அப்படி என்ன அசிங்கம் இருக்கிறது?

    எனவே, இது அவ்வப் பகுதிகளில் நிகரப் பெரும்பான்மை உள்ளவர்களின் பொறாமையால் (intolerance) மூளுகிற சண்டை.

    'தேவர் ஜெயந்தி' (பிறகு 'குருபூஜை' என்று பெயர்மாற்றப்பட்டு) பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. 'இமானுவேல் சேகரன் நினைவு தினம்' கடந்த நான்கு ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னெடுத்தவர்கள் அ.தி.மு.க.வைச் சார்ந்த/ விடுதலைக்குப் பிறகு ஜான் பாண்டியனால் ஊக்குவிக்கப்பட்ட பள்ளர்கள் என்று தெரிகிறது (என்னிடம் தரவுகள் இல்லை). இந்த முறை கூட்டம் கூடுவதற்கு முன்பே கலெக்டரும் காவல் துறையினரும் ஜான் பாண்டியனைத் தடுத்திருக்கலாம். இப்படி நிறைய ...லாம் போட விருப்பமில்லை. சட்டம் ஒழுங்கு என்று தற்புகழுகிற ஜெயலலிதாவுக்கே வெளிச்சம்.

    அ.தி.மு.க.வைச் சார்ந்த பள்ளர் தலைவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு திருமண விழாக்களுக்குப் போகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டதும் உண்மை.

    அரசியலை அரசியலாகவும் சமூக அவலத்தை அப்படியாகவும் பார்ப்போம்.||

    ReplyDelete
  27. /// இதே பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் மற்றொரு சாதியினரான நாடார்கள் ஒருவித buffer-ஆக இருந்து இந்தக் கலவரங்களைத் தடுக்க வாய்ப்புகள் ஏதேனும் உண்டா?///

    கண்டிப்பாக இல்லை;

    தென்தமிழகத்தில் இந்த மூன்று (நாடார்,தேவர்,தாழ்த்தப்பட்டோர்) சாதியினரிடையே ஒருவர் மீதான மற்றொருவரின் வெறுப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதில் எங்கே மத்தியஸ்தம் செய்வது?

    இமானுவேல் சேகரன் கொலை வழக்கில் "தெய்வத்திருமகன்(ள்)" ஆயுள் தண்டனை பெறுவதற்கு காரணம் காமராஜர்தான் என்று அன்று தேவர் சமுதாய மக்கள் மத்தியில் ஆழமான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது; அது வெவ்வேறு சமயங்களில் அதன் பின்னர் மோதலாக வெடித்து வந்துள்ளது. 80 களின் மத்தியில் பல ரணகளங்களை கண்ணால் கண்டுள்ளேன்; பழைய தினத்தந்தி மதுரை பதிப்பை பார்த்தால் தெரியும். 80 களின் பிற்பகுதிக்கு பின்னர் இவ்விரு சமூகத்தினர்கள் பெரிய அளவில் மோதலில் ஈடுபட்டதில்லை.

    நாடார் - தாழ்த்தப்பட்டோர் இடையே உயர்வு,தாழ்வு வேறுபாடு காரணமாக; 90 தி.மு.க ஆட்சியின் போது இவ்விரு சமூகங்களுக்கிடையே கடைசியாக மோதல் நடந்ததாக ஞாபகம்.

    அதன் பின்னர் நாடார் சமுதாயத்தினரின் பொருளாதார முன்னேற்றம்; அவர்களை இத்தகைய மோதல்களில் இருந்து தள்ளி நிற்கத்தோன்றியிருக்கும் என எண்ணுகிறேன்.

    *********************

    சசிகலாவின் வருகையால் தேவர் சமுதாயத்தை அ.தி.மு.க குத்தகைக்கு எடுத்துக்கொண்டது; அந்த வாக்கு வங்கியை சீர்குலைக்க அவ்வப்போது தி.மு.க தாழ்த்தப்பட்டோர்களை தூண்டிவிடுவதாக தென்மாவட்டத்தில் பரவலாக பேச்சு உண்டு.( - பேருந்துகளின் பெயர் மாற்றம் தொடர்பான 1997/98 கலவரம்)

    தந்தையால் சாதிக்க முடியாததை தமையன் சாதித்துவிட்டான் பணத்தால்; அதிகார பலத்தால். தேவர் சமுதாய வாக்கு வங்கியை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அழகிரியிடம் இருந்து முற்றிலும் மீட்க வேண்டிய கடமை சசிகலாவிற்கு அவசியம்.

    ஜான் பாண்டியன் அ.தி.மு.க அல்லக்கைதான்; 97 கலவரத்தில் தாழ்த்தப்பட்டோர்கள் மத்தியில் பெரும் பலனை அறுவடை செய்த கிருஷ்ணசாமி இன்று இரட்டை இலையில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ; கிருஷ்ணசாமி இதுவரை வாயைக்கூட திறக்கவில்லை.

    இந்த ரவுண்டில் அம்மாவுக்கு வெற்றி.
    ***************************

    அடுத்த ரவுண்டில் அழகிரியின் மூவ் எப்படியிருக்கும்?

    அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் "தெய்வத்திருமகன்(ள்)" குரு பூஜைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்;

    அம்மாவின் வருகைக்காகவும் தான்!

    ReplyDelete
    Replies
    1. சங்கரன்(சங்கரி):- தேவருக்கு ஆயுள் தண்டனையா? நகைப்புக்கு உரிய பட்கிவுகளை இடாதீர்கள்..நீரையப்பேர் உங்கள் பதிவுகளைப் பார்ப்பார்கள் விவரம் தெரிந்தவர்களுக்கு உங்கள் மீது ஒரு பொய் பதிவாளன் என்ற பார்வை வந்துவிடும்.

      சசிகலா-ஜெ-அழகரி பற்றிய உங்கள் அரசியல் பார்வை முகநூலில் பதிவிட்டால் சிறந்த நகைச்சுவைக்காக நிறைய "லைக்"கள் வாங்கும்.

      கொஞ்சம் வீட்டை விட்டு வந்து நிறைய படிங்க சார்.. உங்கள் அபிப்பிராயங்களை கற்பனை செய்து உங்கள் வீட்டில் வளரும் பிள்ளைகளையும் முட்டாளாக்காதீர்கள்.. கடந்த கால நிகழ்வுகளையும் நடக்கும் நிகழ்வுகளையும் நிறைய படியுங்கள்..

      Delete
  28. (நான் எழுதிய பின்னூட்டம் (நீளமாக இருந்ததால்) போய் சேரவில்லை என்று தோன்றுகிறது. மீண்டும் இரு பாகமாக இடுகிறேன்; ஏற்கனவே வந்து சேர்ந்திருந்தால் இதை பறக்கணிக்கவும்.)

    அன்புள்ள ராஜசுந்தரராஜன்,

    நானும் ஒரு கருத்தை எதிர்த்து பின்னூட்டம் இடுவது ஜெயப்பதற்காக அல்ல. பத்ரிக்கு நீங்கள் எதிர்வினை வைத்தது போல நானும் வைத்தேன். அதில் என் எதிர்வினையும், ராம் ஶ்ரீதர் வைத்த எதிர்வினையும் வேறு வேறு விஷயங்களுக்கனவை.

    இதுவரை நடந்த, இப்போது நடக்கும் சம்பவங்களுக்கு ஜாதிவெறி காரணம் அல்ல, சிலர் செய்யும் அரசியல்தான் காரணம் என்று பொதுப்புத்தியாக பரப்பப்பட்டு வரும் எளிய கருத்தை தவிர, சிக்கலான வகையில் என்ன கூறியிருக்கிறிர்கள் என்று புரியவில்லை. இதைத் தவிர சிக்கலாக வேறு ஒன்றை கூறி, நான் எளிமைப் படுத்தியிருந்ததை விளக்கினால் திருந்துவேன். நான் இதில் அரசியல்வாதிகளின் குழப்படி இல்லை என்று சொல்ல வரவில்லை. அரசியல்வாதிகள் சதி செய்வதற்கு காரணமாயிருக்கும் நடைமுறையும், அதற்கான நியாயங்களும், இந்த எல்லா பிரச்சனைகளின் பின்னிருக்கும் மூல காரணங்களையுமே சிக்கலான விஷயங்களாக நான் பார்க்கிறேன்.

    பிற்படுத்தபட்டவர்கள் vs தலித் மோதல் வரும் போதெல்லாம் சில (அல்லது பல) பார்பனர்கள் இன்றய சூழலில் சாதிய அரசியலையும், தீண்டாமையும் மேற்கொள்வது பிற்படுத்தப்பட்டவர்களே என்று ஒரு வாதத்தை முன்வைப்பது பல்லாண்டுகால வழமை; அந்த பாரபனிய அரசியலைத்தான் பத்ரியும் செய்கிறார் என்று உறுதியாக சொல்வதற்கு, உங்கள் யூகம் தவிர, ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், அதை மறுத்து பேசுவது என் நோக்கம் அல்ல.

    இப்படி ஒரு பார்பனர்களின் அரசியலை காரணம் காட்டியே, பிற்படுத்தப்பட்டவர்களின் ஜாதிவெறியை கண்டிக்க மாட்டோம் என்று சொல்ல வந்த திராவிட இயக்கத்தவர்கள் கூட, 90களின் இறுதியில் இருந்து நிலைபாடு மாறி, குறைந்த பட்சம் தேவர்களையாவது விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள். 90களின் இறுதியில் இருந்து 2000தில் பிற்படுத்தப்பட்ட அரசியல், குறிப்பாக தேவர்களின் ஜாதி வெறி அரசியல் பற்றி ஏராளமாக எழுதப்பட்டு விட்டது. நீங்களும், நானும் நீதி புகட்ட தேவையில்லாமல் தலித்களே அதில் பெருமளவு வேலையை செய்துவிட்டனர். (தொடரும்)

    ReplyDelete
  29. (தொடர்ச்சி) திராவிட இயக்கத்திற்காவது பார்பனிய அரசியலுக்கு எதிராக ஒன்றுசேரவேண்டும் என்ற சொல்ல வேண்டிய சால்ஜாப்பாவது இருந்தது. அப்படி எந்த தீவிர பார்பன எதிர்ப்பையும் கொள்ளாத நீங்கள் இப்போது சொல்வதில், திராவிட இயக்கத்தினரின் ஓர்மை கூட இல்லாமல் அப்பட்டமான பாரபட்சமாகவே இருக்கிறது.

    ஒரு குறிப்பிட்ட வெடிப்பிற்கு பல பரிமாணங்கள் இருக்கலாம்தான். ஆனால் வசதிக்கு ஏற்ப ஊகங்களை தருவது அறிவு நேர்மை அல்ல. நேரடியாக 20 ஆண்டுகளாக தொடரும் தேவர் vs பள்ளர் பிரச்சனை இல்லை, ஆனால் ஆதாரம் தெளிவாக இல்லாத நிலையில், தரவுகள் இல்லையென்று உங்களுக்கே தெரியும் போது, திமுக தூண்டி விட்டது, அதிமுக தூண்டு விடுகிறது என்று சொல்வதெல்லாம் நேர்மை அல்ல. அதிலும் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் 'தேவர் பூஜை' பிரச்சனை இல்லை, நான்கு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் 'இம்மானுவல் சேகரன்' நினைவு நாள்தான் பிரச்சனை, அதை தடுத்திருக்க வேண்டும் என்பதில் உங்கள் பக்கசார்பை தெளிவாக முன்வைக்கிறீர்கள்.

    'தேவர் பூஜை' ஓவ்வொரு ஆண்டும், வேறு எந்த ஜாதியும் வெளிப்படையாக செய்யாத வகையில், வெளிப்படையான ஜாதி திமிரும், அது சார்ந்த போஸ்டர்கள் கோஷங்களுடன் நடைபெறும் ஒன்று. அதை ஒரு வெகுஜன கொண்டாட்டமாக ஜெயமோகன் வர்ணித்து புகழ்ந்தபோது நீங்கள் சிலாகித்து கருத்து சொன்னீர்கள். ஆனால் இம்மானுவல் சேகரனின் நினைவு தினம் பிரச்சனைக்கு உரியதாகவும், கலவரத்தை உண்டு செய்ய வந்ததாகவும், அதை தடுத்திருக்க வேண்டும் என்கிறீர்கள். இந்த அப்பட்டமான பாரபட்சம் உங்களுக்கு தெரியாமல் மறைத்தது எதுவோ!(தொடரும்)

    ReplyDelete
  30. (தொடர்ச்சி) மறவர்கள் எல்லோரும் சமூகத்தின் உச்சியில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் பள்ளர் மீது காட்டும் சாதி வெறுப்பையும், தென்மாவட்டங்களில் நிலவும் நடைமுறையையும் தீண்டாமை என்றுதான் அழைக்க வேண்டும். 90களில்தான் பள்ளர் ஜாதியினர் திருப்பி தாக்க தொடங்கிய பிறகு மோதல் என்கிற நிலை உருவானது. அதற்கு முன்பு 80களில், உதாரணமாக ஒவ்வொரு கல்லூரிகளிலும் நடந்த தாக்குதல்களுக்கு என்ன பெயர்? பள்ளர்கள் சாதாரணமாக ஒரு கல்வி பயில்வதை கூட பொறுக்காததற்கு, அதை வன்முறை தாக்குதலுடன் பல இடங்களில் தென்மாவட்டங்களில் எதிர்கொண்டதற்கு தீண்டாமை என்றுதான் பெயர்.

    நாடார்கள்/பரவர்கள் பிரச்சனைகளையாவது வேறு வகையில் அணுகமுடியும். (நிலப்பரபுத்துவ நடைமுறை தாண்டி) சென்ற நூற்றாண்டில் தேவர் ஜாதியினர் நடத்திய அத்தனையையும் முன்வைத்து, ஒரு தென் மாவட்டத்தில் வாழ்ந்துவிட்ட உங்களால் எப்படி "இச் சாதிகளின் குலத் தொழிலைப் பாருங்கள்: தீண்டாமை பாராட்டுவதற்கு அப்படி என்ன அசிங்கம் இருக்கிறது?" என்று மனசாட்சி இல்லாமல் கேள்வி கேட்கமுடிகிறது என்று புரியவில்லை. அப்படியே அதிகாரம் சார்ந்த பிரச்சனைதான் என்று முன்வைக்க விரும்பினாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகாரத்தை பகிர்வதை பிரச்சனையாக பார்ப்பதை தீண்டாமை என்றுதான் அழைக்க முடியும். காலப்போக்கில் பள்ளர்கள், பறையர்களுக்கு செய்தாலும் அது தீண்டாமைதான்.

    தேவர் ஜெயந்தி என்கிற ஜாதி பெருமையை மட்டும் கொண்ட விழா, அரசாங்கம், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று, ஊடகங்களிலும் பரப்பப்படும்; ஆதிக்க ஜாதி வெறிக்கு எதிரான தங்களின் போராட்டத்தின் ஒரு முக்கியமான நினைவை, பள்ளர்கள் முன்னெடுப்பது மகா பாதகம் போல காட்டப்படும் என்றால், நாம் இன்னும் ஜாதிய காட்டுமிராண்டித்தனத்தில் இருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

    கருத்து வேறுபாடு என்பது புரிந்து கொள்ளக்கூடியது; அங்கீகரிக்க வேண்டியது. ஜாதிகளின் உரிமை என்று மிகவும் பாரபட்சமாக நீங்கள் எழுதியது வேறு காரணத்திற்காக எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. வினவு போன்றவர்கள் இலக்கியவாதிகள் அறிவுஜீவிகளை தாக்குவது போல்பாட்டிசத்திற்கு இட்டு செல்லும் என்று சொல்லி வந்தேன். ஆனால் அவர்களை போல்பாட்டிசத்திற்கு இட்டு செல்வதற்கு நியாயம் தருவது, இது போன்ற கருத்துக்கள்தான் என்று மிக வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  31. பத்ரி அவர்களுக்கு,

    ஜான் அவர்கள் கைது செய்யப்பட்டு அதற்கான போராட்டம் வன்முறையாக மாறி பலர் இறந்து போன செயலுக்கு எப்பொழுதும் போல் ஜாதி வெறி, ஜாதி பற்று என புலம்புவது சரியா?
    பசும்பொன் ஐயாவின் குறு பூஜைன் போதும், இதற்கு முன்னும் இது போன்ற துப்பாக்கி சூடுகள் நடைபெறவில்லை. சில பல வேக்காட்டுத் தனங்கள் நடந்ததையும் இல்லை என்று சொல்வதற்கில்லை. நீங்கள் நேரில் செல்லாமலும் உண்மை உணராமலும், எடுப்பார் கைபிள்ளையாக இருந்து கொண்டு பசும்பொன் அய்யா பற்றிய அரைகுறை அறிவை வெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்களை குறை சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். பலவற்றில் தெளிவு கொண்டு நீங்கள் எழுதுவீர்கள் என்றால் நன்மை பயக்கும் என்ற நல்ல எண்ணத்தில் நேரிடையாக தங்களிடம் இதை கூறுகிறேன். பிறிதொரு எந்த காரணமும் இதற்கு இல்லை.

    சில பல தெளிவுகளை சீர்தூக்கிப் பார்த்து எழுதினால் எல்லோருக்கும் நன்மை பயக்கும்...

    இமானுவேல் சேகரனை கொன்றது யார்?
    http://pasumponayya.blogspot.com/2011/09/blog-post.html

    https://plus.google.com/105938681569147693502/posts/3BkcaTgVFWV
    https://plus.google.com/106792473859447310226/posts/bD5HvDumnbp

    ReplyDelete
  32. ரோஸாவசந்த் மற்றும் நண்பர்களுக்கு,

    என் அறிவளவை முதலில் நான் தெளிவுபடுத்தியாக வேண்டும்:

    எங்கள் நிறுவனத்தில், ஓர் அய்யர் மேலாலராக இருந்தார் (பெயர் தேவை இல்லை என்று எண்ணுகிறேன்). அவருக்கு ஒற்றைக்கு ஒரே பையன். மருத்துவம் படித்தான். கூடப் படித்த கவுண்டச்சி ஒருத்தியைக் காதலித்துவிட்டான். மகனின் மனதை மாற்றமுடியாமல் அப்பா பெண்கேட்டுப் போனார். பெண்ணைப் பெற்ற கவுண்டர் சொன்னார், "பறையனுக்குக் கொடுத்தாலும் கொடுப்பேனே ஒழியப் பார்ப்பானுக்குக் கொடுக்க மாட்டேன்."

    அந்தப் பையன் தற்கொலை செய்துகொண்டான்.

    'தீண்டாமை' என்று நான் புரிந்துகொண்டது இதைத்தான். இங்கு நடப்பதை அடக்குமுறை என்று புரிந்துகொண்டிருக்கிறேன்.

    பள்ளர்கள், செத்தாலும், தொடர்ந்து போராடட்டும் என்றுதானே சொல்லி இருக்கிறேன்:

    /எனது வாதம், இனமே அழிந்தாலும் உரிமையை முன்னெடுக்கட்டும் என்பதுதான். "இனம் அழிந்த பிறகு உரிமை யாருக்கு?" என்பீர்களேயாயின், "ஈழத்தாரைப் போலவே உரிமைக்குப் போராடும் இன்னொரு கூட்டத்துக்கு," என்பேன்./

    இதுவும் எனது பின்னூட்டத்தில் உள்ளதுதான்.

    /அந்தப் பார்ப்பனிய அரசியலைத்தான் பத்ரியும் செய்கிறார்/ பத்ரி அறியாமல் இதைச் செய்கிறார் என்று கருதியே முதற் பின்னூட்டம் இட்டேன். இப்போதும் அப்படியே நம்புகிறேன்.

    ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதத்தில் இந்த சாதி அரசியல் polarize ஆவதற்குக் காமராஜர் ஒரு காரணம் என்றிருந்தேன் (November 10, 2009). யாரையும் தூக்கிப் பிடித்ததாக நான் நினைக்கவில்லை.

    ReplyDelete
  33. ராஜசுந்தர்ராஜன், நான் ஒப்புகொள்ளவில்லையாயினும் உங்கள் பார்வையை புரிந்து கொள்ள முயல்கிறேன்.

    ஆனாலும் அந்த கவுண்டர் செய்ததை தீண்டாமை என்று என்னால் அழைக்க முடியாது; பார்பன வெறுப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    அதிகாரம், உரிமை, மற்றும் இருப்பு ஜாதி சார்ந்து மறுக்கபடுவது/அடக்கப்படுவது தீண்டாமை என்கிறேன். அதை அடக்குமுறை என்று அழைத்தாலும் பிரச்சனையில்லை. அதை எதிர்ப்பது என்பது மட்டுமே.

    ReplyDelete
  34. nan paramakudi orula irundhu 10 KM thoorathula iruke. jathi veri anka schoola irundhe arambikuthu. 10vathu patikira en thambi thevar guru poojaiku cut out vakiran. Thanaku pitikatha jathi payan,ethavathu thalaivar padam potta tshirt potta, ivan pottiku potra.. en kannu munnadiye egapata theendamai kodumaya parthiruke... Maduraila thevar pooja annaki natakira attakasam ellarukum theriyum.. bus kannadiya otakirathunu egapata thappa vishayankal. cinemavum oru mukkiya karanam.

    ReplyDelete
  35. கிழுக்கு பதிப்பகம் வெளியிட்ட "தேவர் ஒரு வரலாறு" என்ற புத்தகம். அதில் கூட திரு.பத்ரிக்கு அது தெரியுமோ என்னவோ கடவுளுக்கே வெளிச்சம்..

    தேவரைப்பற்றி புத்தகம் வெளியீட தெரிந்த அளவிற்கு தேவரிப் பற்றி பத்ரி ஏதுமறிவில்லை..! அந்த புத்தகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள சிட்டவண்ணாண் குளம் (பள்ளர் கிராமம்) தேவர் சிலை வைக்கப்பட்டு பூஜிக்கப்படுவது பத்ரிக்கு தெரியாது..(வியாபாரிக்கு ந்து முக்கியமுமல்ல) அதனால்தான் உங்கள் பதிவில் தேவருக்கு சாதியப்பூச்சும் திருமகன்(ள்) என்ற பிண்ணுட்டத்தை ஏற்கவும் முடிகிறது.

    பத்ரி பணத்திற்காக தேவர் புத்தகத்தை வெளியீட்டதால் ஏற்ப்பட்ட விளைவு இது. குமரன் பதிப்பகமும் வெளியிட்டிருக்கிறது. முடிந்தால் வாங்கி படியுங்கள் அல்லது நான் வாங்கித்தருகிறேன்.. உண்மையை பதியுங்கள் இல்லை என்றால் நடிகையை பற்றி 4 புத்தகத்தை வழக்கம்போல் வெளியிட்டு பணம் சம்பாரியுங்கள்.. உங்களைப்போன்றவர்களிடமிருந்து தேவர் பற்றி புத்தகம் வருவதே அது இழுக்கு.

    ReplyDelete