Friday, January 20, 2012

ஊருணி நீர் நிறைந்தற்றே...

இன்று மதியம், தமிழகத்தின் நீர்ப் பிரச்னையையும் கிராம ஊருணிகளையும் பற்றி இருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் டிர்க் வால்த்தர் என்னும் ஜெர்மன் நீர்ப் பொறியாளர். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்த் துறையில் வேலை செய்தவர். இப்போது தில்லி சென்றுவிட்டார். இன்னொருவர் தமிழக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் (ஓய்வுபெற்ற இ.ஆ.ப).

குடிக்க நீர் இல்லை என்று தமிழகத்தின் பல கிராமங்களில் மக்கள் திண்டாடுகின்றனர். அரசுதான் தங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று எப்போதும்போல கையை அகல விரித்துக் கேட்கின்றனர். ஆனால் உண்மையில் சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நீர் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் பின்னர் அது முற்றிலுமாக அழிந்துபோயுள்ளது என்றும் சொன்னார் வால்த்தர்.

சென்ற வாரம் தி ஹிந்து செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி, தமிழகத்தில் சுமார் 70,000 நீர் நிலைகள் உள்ளன என்றும் அதில் கிட்டத்தட்ட 48,000, கிராம ஊருணிகள் (அதாவது சிறியவை, கிராமப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை) என்றும் தெரிவிக்கிறது. (சுட்டி கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் சேர்க்கிறேன்.) அவை பெரும்பாலும் சரியான பராமரிப்பு இன்றி வீணான நிலையில் இருக்கின்றன.

அவற்றை எப்படி பாரம்பரிய அறிவும் நவீன அறிவியலும் கொண்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது என்பதில்தான் வால்த்தர் வேலை செய்தார். தமிழக அரசு அதற்கான நிதியுதவியை அளித்தது. அந்தந்தப் பகுதி மக்களைக் கொண்டு, அந்தந்த ஊர்ப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஊருணிகளை மீண்டும் செம்மைப்படுத்தி, அதில் கிடைக்கும் நீரை எப்படி ஆண்டு முழுதும் பகிர்ந்து பயன்படுத்துவது என்று சில இடங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளார். அவற்றில் ஓரிடத்துக்கு இந்த வாரத்துக்குள் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

அறிவியலால் அழிவு மட்டும்தான் சாத்தியம் என்பதாகப் பல அறிவுஜீவிகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மனித சமுதாயம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் அறிவியலின் உதவிகொண்டு தீர்க்கமுடியும் என்று தீர்க்கமாக நான் நம்புகிறேன். நம் முன்னோர்களும் இதே அறிவியலின் துணை கொண்டு மிகச் சிறப்பான பொறியியல் அமைப்புகளைக் கட்டியிருக்கிறார்கள். அதனைக்கூட புரிந்துகொள்ள சக்தியற்றவர்களாக நம் கிராமத்து மக்கள் மூளை மழுங்கிப் போயுள்ளனர். அந்த மூளையைக் கூர் தீட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.

(சில மாதங்களுக்குமுன் வேம்பார் சென்றிருந்தபோது அருகில் இருக்கும் தங்கம்மாள்புரம் என்ற கிராம மக்கள், PAD என்ற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து எப்படி தங்கள் ஊரின் நீர் நிலையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்பதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.)

சில மாதங்களுக்குமுன் நான் இலங்கையில் அனுராதபுரம் சென்றிருந்தபோது அங்கே கண்ட ஒரு குளத்தின் அமைப்பு கீழே படங்களாக. (சுமார் 11-12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று ஞாபகம்.)இந்த மாதிரியே தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆனதாக வேறு ஒரு ஜெர்மன் ஆராய்ச்சியாளர் தன்னிடம் சொன்னதாக வால்த்தர் என்னிடம் சொன்னார். சில நூறு ஆண்டுகளுக்குமுன், தமிழகத்திலிருந்து (நீர் நிர்வாகம் போன்றவற்றுக்கான) பொறியியல் மாதிரிகள் ஆப்பிரிக்க, கீழை ஆசிய நாடுகளுக்கெல்லாம் சென்றதாக அந்த ஜெர்மன் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளாராம். (அதற்கான தரவுகளை எனக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்.) இதே மாதிரியைத்தான் இப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் வால்த்தர் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் நீர் நேராக குளத்தில் சேமிக்கப்படாது. மாறாக சில மணற்சல்லடைகள் வழியாக வடிகட்டப்பட்டு பின், அந்த நீர்தான் குளத்தில் சேமிக்கப்படும். அதிலிருந்து நேராக நீர் வெளியே எடுக்கப்படாது. மாறாக இரட்டை வடிகட்டிகள் தாண்டி கை அடி பம்ப் மூலமாகப் பிடிக்கப்படும். வடிகட்டிகள் எல்லாமே இயற்கை வடிகட்டிகள். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எல்லாம் கிடையாது. மின்சாரம் தேவையில்லை. நீர் நிலையில் அசுத்தம் கலக்காமல் பாதுகாக்கவேண்டும். நீர் நிலையின் ஆழம் எவ்வளவு இருக்கவேண்டும், சுற்று மதில் எதனால் அமைக்கப்படவேண்டும் ஆகியவற்றுக்கு சில கால்குலேஷன்களைச் செய்யவேண்டும். பொதுவாக நம் முன்னோர்கள் கட்டியுள்ள ஊருணிகளுக்கு உள்ளாக கிணறு ஒன்றை அமைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் அதையும் அமைக்கவேண்டும்.

மேலோட்டமாகப் பார்த்தால் மிக எளிதாகத் தோன்றும் இதில் மேற்கொண்டு நிறைய அறிவியல் பின்னணி உள்ளது. ஆனால் இப்போதைக்கு இது போதும்.

இந்த முறைப்படி, மக்களின் நேரடி ஈடுபாட்டுடன் உள்ளூர்க் குடிநீர் நிர்வாகத்தை அந்தந்தப் பகுதி மக்களே எடுத்துக்கொள்ளுமாறு செய்ய மாநில திட்டக் குழு உந்துதல் தரும் என்று சாந்தா ஷீலா நாயர் தெரிவித்தார்.

14 comments:

 1. Related news-
  http://www.theweekendleader.com/Success/927/Ponds-dreams.html?
  -Mani

  ReplyDelete
 2. நீண்ட காலத்துக்கு முன்னர் எங்கோ படித்த ஒரு தகவல். கிராமங்களில் உள்ள ஊருணிகள், குளங்கள் வற்றாமல் இருந்ததற்கு முக்கிய காரணம். அவற்றைச் சுற்றி உள்ள மரங்கள். சுற்றிலும் உள்ள மரங்களை வெட்டினால் குளத்தில் அல்லது ஊருணியில் நீர் வற்றும். அத்துடன் சுற்றுவட்டாரத்தில் கிணறுகளின் நீர் மட்டம் குறையும். அதாவது குள்ம் (ஊருணி)சுற்றிலுமுள்ள மரங்கள்,சுற்று வட்டாரக் கிணறுகள் ஆகியவற்றின் இடையே நுட்பமான பிணைப்பு உள்ளது என்று படித்ததாக ஞாப்கம்.
  வற்றிப் போன குளங்களைச் சுற்றி மரங்களை வளர்த்துப் பார்த்தால் இக் கொள்கை சரிதானா என்பது தெரிய வரலாம்.
  கிணறுகளைச் சுற்றி மரம் இருந்தால் நீர் வற்றாது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீர் நிலை நிபுணர்கள் இதை மனதில் கொண்டு செயலபட்டால் நஷ்டம் ஏதுமில்லை

  ReplyDelete
 3. Wow Good info. Like our Srirangam Chandrapushkarani (people used to say 48 wells depth inside this.

  This kind of news should made as a program in news channel like PT. (why don't u suggest them)

  ReplyDelete
 4. நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தான் இரண்டாவது அதிகமாக நெல் உற்பத்தி செய்கிறது.மாவட்டத்தில் நிறைய ஊருணிகள் உண்டு.இராஜ சிங்க மங்கலம் கண்மாய் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கண்மாய் எனப்படுகிறது.கடல் போல் விரிந்த சக்கரக் கோட்டை கண்மாய், பெரிய கண்மாய் இன்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஊற்றுகளாக உள்ளன.இராமநாதபுரம் நகரிலும் பல ஊருணிகள் உண்டு.சேதுபதி அரசர்கள் வெட்டியதாக செய்தி.அவற்றுள் பல சாக்கடைகளாக,நகராட்சியே குப்பை கொட்டும் தளங்களாக மாறிவிட்டன(மாற்றப்பட்டுவிட்டன).வருந்தக்கூடிய செய்தி என்னவெனில் கண்மாய் ஒட்டிய பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாற்றப்பட்டுவிட்டன......
  எப்போது திருந்துவார்கள் இவர்கள்?

  ReplyDelete
 5. Anuradhapura Pond

  http://en.wikipedia.org/wiki/Kuttam_Pokuna

  ReplyDelete
 6. அருமையான பயனுள்ள பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 7. //அதனைக்கூட புரிந்துகொள்ள சக்தியற்றவர்களாக நம் கிராமத்து மக்கள் மூளை மழுங்கிப் போயுள்ளனர். அந்த மூளையைக் கூர் தீட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.//

  இது போன்ற சொல்லாடலைத் தவிர்க்கலாமே?

  இருக்கிற ஏரிகளை எல்லாம் அழித்து வீடு கட்டும் நகரத்தவர்களை விட நாட்டுப்புறத்தவர்களின் மூளை எந்த வகையிலும் மழுங்கி விடவில்லை.

  இன்று வரையிலும், எங்கள் ஊரில் உள்ள பாசன, குடிநீர் குளங்கள் நல்ல முறையிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை அறிய ஆவலாக உள்ளேன். பல்வேறு விசயங்களிலும் முன்னோர்கள் அறிவுக் கூர்மை உள்ளவர்களாகவே இருந்துள்ளனர். நாம் அதன் அருமை உணராமல் உள்ளோம்.

  ReplyDelete
 8. As long as power and wealth are centralized and distributed top down, people will not take responsibility. People were responsible earlier as the local funds were used in maintenance of lakes/ponds. Since these days funds are allotted from centre/state, people don't bother about accountability.

  ReplyDelete
 9. சென்னைப் போரூர் ஏரிக்கும் அதைச் சுற்றியுள்ள/இருந்த குளங்களுக்கும் தொடுப்பு இருந்திருக்கிறது. கட்டுமானங்கள் இடைவந்து அது அற்றுவிட்டது. இப்போது தரையடிச் சாக்கடை வசதி செய்துதர வேண்டி மாநகராட்சி கால்வாய் தோண்டுகையில், என் வீட்டருகில், சாலையின் நடுவில் அப்படி ஒரு பழங்குழாய் உடைபட்டது. "இது என்ன?" என்று மண்வெட்டி-வண்டி ஓட்டியவரைக் கேட்டேன். "அந்தக் காலத்துல வயற்காட்டுக்குத் தண்ணி கொண்டுபோன குழாய்," என்றார்.

  போரூர் இரட்டை ஏரியில் ஓர் ஏரி இப்போது இல்லை. அதில் கால்பரப்பி இருக்கிற கட்டமைப்பை வள்ளல் எம்.ஜி.ஆர். திரும்ப வந்து கேட்டாலும் நகர்த்த முடியாது. இரண்டாவது ஏரி குறுக்கப்பட்டதும் பழங்கதை.

  அரசியல்வாதிகளை மட்டுமே நமக்குக் குறை கூறத் தெம்புண்டு. அரசு அலுவலர்கள்/ கட்டுமான முதலைகள் கூட்டணியை என்ன செய்ய? "கலங்கிய நதி" (The Muddy River) போல ஒரு நாவல் எழுதலாம். மணிரத்னம் அனையோர் அதன் பாதிப்பில் ஒன்றிரண்டு திரைப்படங்கள் எடுக்கலாம். யாராவது வில்லங்கம் பேசினால் அவரைச் சுற்றியும் ஊழற் பேர்வழிகளை உட்கார வைப்பார்கள். அப்புறம் வில்லங்கம் பேசியவரை இல்லாமற் பண்ணுவார்கள்.

  பிறகும் நல்லவர்கள் பிறந்து முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.

  நீங்கள் பயணித்துப் பார்த்து வந்ததையாவது எழுதுங்கள். முப்பாட்டன் பாட்டியைப் படத்தில் பார்த்தது போலாவது பெருமூச்சு விடுகிறோம்.

  அப்படியே, ஆவியாதல் இழப்புக்கு (evaporation loss) என்ன தீர்வு வைத்திருந்தார்கள் என்றும் அறிந்து சொல்லுங்கள்.

  ReplyDelete
 10. Government should mandate such efforts through the local administration.
  We were all taught about Ashoka that he planted trees and cut canals. Everyone went through that stage, may be that is why, once they became administrators they forgot the basic lessons. In my home town too, there is a beautiful tank, but slums have propped on the banks, and their waste water directly flows into the tank. I plan to send this to my town panchayat president, and see if he can do something about it.
  Thank you for sharing the same.

  ReplyDelete
 11. Dear Sudhar,
  //Like our Srirangam Chandrapushkarani//

  Why are you commenting like these? Is this a place for expressing caste? Sri Rangam Ranganathar doesnot belongs to only you/your community.Please avoid this kindof comments.By saying this you may doubt am a Sutra.Definitely not..
  Am a just a Human.

  ReplyDelete
 12. Just thought will bring to the attention of you and your readers the work that Dhan foundation has been doing in reviving ooranis, i think they have revived quite a few ooranis in TN http://dhan.org/ooranis/rehabilitation.php

  ReplyDelete
 13. http://siragu.com/?p=1498

  கூடங்குளத்தில் கூடுவோம்:

  இதே போன்ற ஒரு நெடிய போராட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தி வெற்றிகரமாக ஒரு அணு உலை திட்டத்தை நிறுத்தி இருக்கிறார்கள் ஜெர்மனியில் ஒரு கிராமத்தினர். அவர்களின் போராட்ட வரலாறு நமக்கு ஒரு நல்ல வழிகாட்டி.

  நாட்டிற்காக உழைப்பதற்கு முன் வரவேண்டும். நாட்டிற்கு உழைப்பது என்றால் இராணுவத்தில் சேர்ந்து போர்க்களத்தில் நின்று சண்டையிடுவது மட்டுமில்லை. மக்களுக்கு ஆதரவாக எந்த களத்தில் நின்றாலும் அது நாட்டிற்கான உழைப்பே, போராட்டமே. ஊழலுக்கு எதிராக நிற்பவர்களும், சாதியக்கொடுமைகளுக்கு எதிராய் நிற்பவர்களும், முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக நிற்பவர்களும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களும் அனைவருமே நாட்டிற்காக உழைப்பவர்களே. இவர்களைப் போன்ற சமூக போராளிகள் இராணுவத்தில் சம்பளத்திற்காக போராடும் பெரும்பாலான வீரர்களை விட மிகச் சிறந்த வீரர்கள்.

  ReplyDelete