Tuesday, January 24, 2012

மொழிபெயர்ப்புகள்

இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் சில குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புப் புத்தகங்களைக் கொண்டுவந்திருந்தது என்பது என் கருத்து. ஆனால் பொதுவாக நம் வாசகர்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அவ்வளவு காதலுடன் பார்ப்பதில்லை. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

பொதுவாக இந்தப் புத்தகங்கள் ஆங்கிலத்திலேயே 250 பக்கங்களுக்குமேல்தான் இருக்கும். தமிழில் நியாயமாக மொழிபெயர்த்தால் 350 தாண்டிவிடும். அதற்கேற்ப விலை இருக்கும்.

மொழிபெயர்ப்புகள் மிக அரிதாகத்தான் சரளமான நடையில்தான் உள்ளன. எக்கச்சக்கப் பணம் கொடுத்து திராபை மொழிபெயர்ப்புகளை ஏன் வாங்கி உடம்பைக் கெடுத்துக்கொள்வானேன் என்று பலர் இவற்றை வாங்குவதே இல்லை.

சில புத்தகங்கள் தவிர்த்து, ஒரிஜினல் எழுத்தாளர்கள் பற்றி தமிழ் வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பதில்லை. எனவே ‘பிராண்ட் புல்’ (சுஜாதா, சாண்டில்யன், கல்கி...) கிடையாது.

ஆனால், சில பதிப்பகங்கள் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புத் தளத்தில் இயங்கிவருகின்றன. அவற்றை அறிமுகம் செய்யவே இந்தப் பதிவு.

1. காலச்சுவடு: சமீப காலங்களில் காலச்சுவடு மிகத் தீவிரமாக மொழிபெயர்ப்பு உரிமங்களை வாங்குவதில் இறங்கியுள்ளது. திருவனந்தபுரம், தில்லி, பிராங்ஃபர்ட் என்று எங்கெல்லாம் மொழிபெயர்ப்பு உரிமங்கள் விற்பனை நடைபெறுகிறதோ அங்கு காலச்சுவடு கண்ணனைக் காணலாம். கார்டன் வெய்ஸின் ‘தி கேஜ்’, அருந்ததி ராய், பஷாரத் பீர் எழுதியவை என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

2. சந்தியா பதிப்பகம்: சமீப காலப் புத்தகங்கள் இல்லாமல், காப்புரிமம் காலாவதியான பல பழைய புத்தகங்களை மொழிபெயர்த்துக் கொண்டுவருகின்றனர். யுவான் சுவாங் பயணம், முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் போன்ற சிலவற்றைச் சொல்லலாம்.

இடதுசாரிச் சிந்தனை கொண்ட பதிப்பகங்கள் பல காலமாகவே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றி வருகின்றன.

3. பாரதி புத்தகாலயம்: நேருவின் கண்டுணர்ந்த இந்தியா, உலக வரலாறு, லாப்பியர்/கால்லின்ஸின் நள்ளிரவில் சுதந்தரம் போன்ற சில முக்கியமான நூல்கள், பல கம்யூனிஸ்ட் நூல்கள், பல குழந்தைப் புத்தகங்கள் என்று மிக முக்கியமான பணி.

4. அலைகள்: நான்கு வேதங்கள், பல்வேறு கம்யூனிசப் புத்தகங்கள்.

5. விடியல்: கம்யூனிசப் புத்தகங்கள்

6. என்.சி.பி.எச்: நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் வரலாறு, டி.டி.கோசாம்பியின் இந்திய வரலாறு என்று பல புத்தகங்கள் என்.சி.பி.எச் வாயிலாக வெளியாகியுள்ளன. இந்த ஆண்டும் நிறையப் புத்தகங்களைப் பார்த்தேன்.

7. விகடன் பிரசுரம்: கடந்த மூன்று வருடங்களாக விகடன் பல முக்கியமான புத்தகங்களை தமிழாக்கம் செய்துவருகிறது. மால்கம் கிளாட்வெல்லின் மூன்று புத்தகங்கள், குருசரண் தாஸின் புத்தகங்கள், ரேஷ்மி பன்சாலின் புத்தகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பியர்சன், சேஜ் ஆகிய ஆங்கிலப் பதிப்பகங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு பல முக்கியமான புத்தகங்களை தமிழுக்கு இவர்கள் கொண்டுவருகிறார்கள்.

8. கண்ணதாசன் பதிப்பகம்: அனைவருக்கும் நன்கு தெரிந்த அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் மட்டுமல்ல, பதினைந்து ஆண்டுகளாக சுய முன்னேற்ற நூல்கள் பலவற்றைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இவர்கள். கோப்மேயர், நெப்போலியன் ஹில் என்று தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை இவர்கள் செய்துள்ளனர். அகதா கிறிஸ்டி, ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் போன்ற கொலைக்கதை புத்தகங்களும் இவர்கள் வாயிலாக வெளியாகியுள்ளன. பல ஓஷோ புத்தகங்களும் இவர்களுடைய மொழிபெயர்ப்பின் வழியாக வெளியானவைதாம்.

9. மஞ்சுள்: தமிழுக்குக் கண்ணதாசன் பதிப்பகம்போல ஹிந்திக்கு இவர்கள். சுயமுன்னேற்றப் புத்தகங்களை ஹிந்திக்குக் கொண்டுவந்துள்ள இவர்கள், சமீபகாலமாக பல புத்தகங்களை தமிழாக்கம் செய்தும் வருகின்றனர். இவற்றை கிழக்கு பதிப்பகம் விநியோகிக்கிறது.

10. கிழக்கு பதிப்பகம்: கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 புத்தகங்கள்வரை நாங்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்துள்ளோம். இவை வாழ்க்கை வரலாறு, சுய முன்னேற்றம், வரலாறு, சமகால அரசியல் ஆகிய தளங்களில் உள்ளன. ஜெஃப்ரி ஆர்ச்சர் புத்தகங்கள் இரண்டையும் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் கொண்டுவந்துள்ளோம். பியர்சன், சேஜ், பெங்குவின், ஹார்ப்பர் கால்லின்ஸ், ரேண்டம் ஹவுஸ் ஆகியோரின் பல புத்தகங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளோம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு புத்தகம் என்றால் ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’ என்பதைச் சொல்வேன். விரிவாகச் சொல்லவேண்டும் என்றால் பல புத்தகங்கள் உள்ளன. வேறு ஓரிடத்தில் அவற்றைப் பார்ப்போம்.

***

யாருடைய பெயராவது விட்டுப் போயுள்ளது என்றால் அதற்கு உள்காரணம் எதுவும் கிடையாது. என் கண்ணில் பட்ட, என் மனத்தைக் கவர்ந்த பதிப்பகங்களை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள முக்கியமான பதிப்பகம் ஏதாவது விட்டுப்போயிருந்தால் அதனைக் குறிப்பிடுங்கள். சேர்த்துக்கொள்கிறேன்.

23 comments:

 1. Please give the insights of the books. That will help us know better about the quality of NHM work.

  Any Soma.Valliappan Sir books in near feature??

  Bala

  ReplyDelete
 2. மொழி பெயர்ப்புகளில் நான் ஃபிக்‌ஷனை விட ஃபிக்‌ஷன்களில்தான் மொழிபெயர்ப்பாளர்கள் நிறைய வேல்யூ ஆட் செய்ய முடியும். ஜெஃப்ரி ஆர்ச்சரை மொழி பெயர்க்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆதர்சம். மொழி பெயர்ப்பு என்பதை விடத் தழுவலாக அதை எழுத வேண்டும் என்பது ஆவல்!

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. செய்யுங்க, வாங்க நாங்கள் இருக்கின்றோம்

   Delete
 3. குருசரன் தாஸ் புத்தகங்களுக்கு நீங்கள் உரிமம் பெற்றிருக்கிறீர்கள், மொழிபெயர்க்க ஆள் கிடைக்கவில்லை என்று முன்பு எழுதியிருந்தீர்கள். விகடனுக்கு உரிமத்தை விற்று விட்டீர்களா என்ன?

  சரவணன்

  ReplyDelete
 4. குருசரண் தாஸ் புத்தகங்களை மொழிபெயர்க்க யாரும் சரியாக அப்போது கிடைக்கவில்லை. அதன்பின் காலதாமதம் காரணமாக அந்த உரிமங்கள் காலாவதி ஆகிவிட்டன. பின் விகடன் நேரடியாக பெங்குவினிலிருந்து உரிமங்களை வாங்கியுள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு எந்த அளவு கோலை வைத்து ஒரு புத்தகத்தை கொடுப்பீர்கள்? அவர்கள் எழுத்தாளர்களாக இருக்க வேண்டுமா?

   Delete
  2. எழுத்தாளர்களாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. நாங்கள் யாரையும் எடுத்துக்கொள்வதற்குமுன் சாம்பிள் பகுதி ஒன்றைக் கொடுத்து அதனை மொழிமாற்றச் சொல்லிப் பார்த்துவிட்டு பிறகுதான் எடுத்துக்கொள்கிறோம்.

   Delete
 5. தமிழ் மொழிபெயர்ப்பில் சில நூல்களைப் படித்தபின் மனம் ஆங்கில மூலத்தையே படிக்கத் தூண்டுகிறது. மொழிபெயர்த்த லட்சணம் அப்படி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். அதனால்தான் மொழிபெயர்ப்புகளின்மீது மக்களுக்குப் பிடிப்பு இன்னமும் ஏற்படவில்லை. ஆனால் ஆங்கிலம் படிக்கத் தெரிந்த உங்களைப் போன்றவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு ஆங்கிலத்தில் நேரடியாகப் படிக்க முடியாது. அவர்கள்தான் மொழியாக்கங்களைப் பெரும்பாலும் நம்பியுள்ளனர்.

   இரு மொழிகளும் நன்கு தெரிந்த பலர் மொழிமாற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.

   Delete
 6. வணக்கம்! சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “The Pickwick Papers” மற்றும் மிக்கயீல் டீ செர்வாண்டீஸ் எழுதிய “ Don Quixote “ நூல்களை யாரும் இதுவரை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. தாங்கள் அதனை செய்யலாம். தழுவல் நாவல்களை வெளியிட வேண்டாம். மூல நூல்களை அப்படியே மொழி பெயர்க்கவும். நன்றி!

  ReplyDelete
 7. I have read "China: Vilakum thirai" translated by Raman Raja.
  It was excellent.
  Didnt feel it was a translated book.

  ReplyDelete
 8. இம்தியாஸ் குல் எழுதிய அல் காயிதா பற்றிய புத்தகம் கண்காட்சியின்போது வர இருப்பதாகக் கேள்விப்பட்டேன். வந்த மாதிரித் தெரியவில்லை. ஒத்தி வைக்கப்பட்டு விட்டதா அல்லது தயாரிப்பில் உள்ளதா என்று தெரிந்துகொள்ள ஆவல்.

  சரவணன்

  ReplyDelete
 9. புதிதாக வெளியாகும் புனைவாக்கங்கள் கூட ஐரோப்பியச் சந்தைகளில் உடனுக்கு உடன் கிடைப்பதைப் பார்க்க ஏக்கமாக இருக்கும். தமிழ் பதிப்புலகில் மொழிபெயர்ப்புகள் கூடி வருவது இத்துறை முதிர்ச்சி அடைவதைக் காட்டுகிது. நல்ல செய்தி.

  (பி.கு: உங்கள் பெயரில் வலைத்தள முகவரி உருவாக்கி இருப்பதற்கு வாழ்த்துகள் !)

  ReplyDelete
 10. Replies
  1. நன்றாகச் செய்துள்ளீர்கள்! Stuck On You - தமிழ் தலைப்பு கேட்டிருக்கிறீர்கள். நான் கொடுத்திருக்கும் தலைப்பு 'ஒட்டி உறவாடி...'

   ('Not bad' = Very good என்று WordWeb டிக்ஷனரி சொல்கிறது. தமிழில் பிரமாதம் என்றே மொழிபெயர்க்கனும் என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் உறுதிப் படுத்தலாம்.)

   சரவணன்

   Delete
 11. The Diff Of being good என்ற குருசரண் தாஸ் எழுதிய புத்தகத்தைத் தவிர வேறெந்த புத்தகமும் மொழி பெயர்ப்பில் வந்ததுபோல தெரியவில்லையே பத்ரி.

  ReplyDelete
 12. அதிக மொழிபெயர்ப்புகள் வெளிவர காரணம்? மக்களின் ரசிப்புத்தண்மை மாறியதா?

  ReplyDelete
 13. hi Badri
  last week found Kizhakku tamil books in the bangalore Royal Meenakshi mall reliance shop. the collections were so disappointing. found books from PA Raghavan , the rate starts from 400 + , dollar desam and few books on LTTE.

  requesting to provide more options in bangalore, from unknown sources the year 2011 census has more number of tamil speaking people than kannada
  i believe you are missing the good market .

  ReplyDelete
 14. சாஹித்ய அகடமியையும் அதன் இந்திய மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் குறிப்பிடாமல் விடப்பட்டுள்ளது

  சஹ்ரிதயன்

  ReplyDelete
 15. Finnish Lessons: What Can the World Learn from Educational Change in Finland? (Series on School Reform) (The Series on School Reform) [Paperback]
  Pasi Sahlberg
  Paperback: 208 pages
  Publisher: Teachers College Press (November 1, 2011)
  Language: English
  ISBN-10: 0807752576
  ISBN-13: 978-0807752579
  நல்ல புத்தகம்.. ஒரு புதிய தலைமுறையை உருவாக்க ஒரு வழிகாட்டி... தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய புத்தகம்

  ReplyDelete
 16. ஆனந்தமூர்த்திFri Jan 27, 12:05:00 AM GMT+5:30

  எஸ். எல்.பைரப்பாவினுடைய "ஆவரணா" கன்னட நாவல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பல பதிப்புகள் பார்த்துள்ளது. தமிழில் கொண்டு வர இயலுமா ?

  ReplyDelete
 17. க்ரியா பதிப்பகம் நிறைய மொழிபெயர்ப்புகளை முன்பு செய்துள்ளது. சார்த்தர், காப்கா எல்லாம் அவர்கள் மூலமாகவே படித்திருக்கிறேன். அவற்றை ஏனோ மறுபதிப்பு செய்யாமல் இருக்கிறார்கள். உண்மையில் அவர்களது மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கும். மொழிபெயர்ப்பு புத்தகங்கள் தமிழில் அதிகம் போகவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு ரோண்டா பிரைனின் ரகசியம் சக்கை போடு போடவில்லையா? :)

  ReplyDelete
 18. Sophie's world translated and published by ’காலச்சுவடு’. But rate is expensive

  ReplyDelete