Monday, January 23, 2012

ஊருணி நீர் நிறைந்தற்றே - 2

ஞாயிறு காலை டிர்க் வால்த்தர், சாந்தா ஷீலா நாயர் ஆகியோருடன் மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள பட்டிகாடு (இப்படித்தான் அங்கு எழுதியிருந்தது) என்ற கிராமம் சென்று அங்கு கட்டப்பட்டிருக்கும் ஊருணியைப் பார்க்கச் சென்றேன். இதன் விரிவான ஒளிப்பதிவை (சுமார் 30 நிமிடங்கள்) கீழே கொடுத்துள்ளேன். விரும்பியவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

சாதாரண ஊர்க்குளம். இதைப்போல ஒரு லட்சம் குளங்கள் தமிழகம் எங்கும் இருக்கும். பல பயனின்றி அழிந்துபோயிருக்கும். ஆனால், இந்த ஊருணிகள் கட்டப்பட்டபோது, மிகத் தெளிவான ஒரு முறை இருந்திருக்கிறது.
 1. ஊருணியின் வடிவமைப்பு. அதாவது அதன் ஆழம், அதன் நீள, அகலங்கள். இது சில கணிப்புகளை உள்ளடக்கியது. அந்தப் பகுதியின் மழை எவ்வளவு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்த் தேவை எவ்வளவு? இதைக் கொண்டுதான் இந்த வடிவமைப்பு இருக்கும்.
 2. ஊருணியில் ஓரிடத்தில் ஒரு கிணறு இருக்கும். மழை குறைவாக இருக்கும்போது ஊருணி முழுவதும் வற்றிவிட்டாலும் அந்தக் கிணறிலிருந்து நீர் கிடைக்கும். அவ்வப்போது ஊருணி வற்றவேண்டும். அப்போதுதான் அதில் படர்ந்திருக்கும் பாசிகளை நீக்கிச் சுத்தம் செய்ய முடியும்.
 3. நீர்ப் பிடிப்புப் பகுதி. ஊருணி என்பது ஊறும் நிலத்தடி நீரைக் கொண்டதல்ல. அது வான் மழை நீரைக் கொண்டது. அதாவது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்:-) ஒரு பெரும் நிலப்பரப்பில் பொழியும் மழை நீரைச் சேமித்து ஊருணிக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதற்கு ஏற்றார்போல ஊருணி இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மழை நீர் ஓடிவந்து சேரும் பாதைகளை உருவாக்கவேண்டும்.
 4. இந்த மழை நீர்ச் சேகரிப்புப் பகுதியில் அசுத்தங்கள், முக்கியமாக மனிதர்களும் கால்நடைகளும் மலம், சிறுநீர் கழிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
 5. இந்த மழைநீர் அப்படியே ஊருணிக்குள் செல்லாமல் ஒரு வடிகட்டி வழியாகச் செல்லவேண்டும். இந்த வடிகட்டியில் பல நிலைகள் இருக்கும். நாம் சிறு வகுப்பில் படிக்கும் முறைதான். பெரிய கற்கள், சிறிய கற்கள், பெரிய மணற்துகள், நன்கு சலிக்கப்பட்ட சிறிய மணற்துகள். இதையெல்லாம் தாண்டி நீர் உள்ளே வந்தால் பெரும்பாலான அழுக்குகள் நீக்கப்பட்டுவிடும்.
 6. மனித உடலுக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் பரவாமல் இருக்க ஊருணியின் அமைப்பே உதவும். ஊருணியின் ஒரு முனையிலிருந்து நீர் உள்ளே வருகிறது. மறுமுனையிலிருந்து நீர் வெளியே எடுக்கப்படுகிறது. இடப்பட்ட தூரத்தைக் கடப்பதற்குள் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் இறந்துவிடுகின்றன.
 7. ஊருணியில் யாரும் கால் வைக்கமாட்டார்கள். குளிக்க, துவைக்கமாட்டார்கள். ஆடு மாடுகள் செல்லாதவாறு பார்த்துக்கொள்வார்கள். முன்காலங்களில் எப்படி இதனைச் செய்தார்களோ, ஆனால் இப்போது நான் பார்த்த இடத்தில் நல்ல சுற்றுச் சுவர் எழுப்பி, பூட்டு கொண்டு பூட்டிவைத்துள்ளனர்.
 8. அருகில் இருக்கும் மரங்களில் வசிக்கும் பறவைகள், விலங்குகள் ஊருணி நீரில் அசுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வடிகட்டிகள் வழியாக நீர் வெளியே வரும்போது இவற்றின் தாக்கம் ஏதும் இருக்காது.
 9. மழைக் காலங்களில் பிடிக்கப்படும் நீர் ஆண்டுமுழுவதற்கும் குடிக்கவும் உணவு சமைக்கவும் பயனாகிறது. இந்த நீரை பிற காரியங்களுக்கு - குளிக்க, துவைக்க, வீடு கழுவ, மாடு கழுவ - பயன்படுத்துவதில்லை. அதற்கு பிற குளங்களைப் பயன்படுத்துவார்கள்.
 10. வெளியே எடுக்கப்படும் நீர் இரண்டு வடிகட்டிகள் தாண்டி வருகிறது. இக்காலத்தில் பம்ப் போட்டு நீரை அடிக்கிறார்கள்.
பட்டிகாடு ஊருணி நீரை தொடர்ந்து சோதனை செய்துபார்த்ததில் அதனை அப்படியே காய்ச்சாமல், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் என்றெல்லாம் எதுவும் செய்யாமல் குடிக்கும் தரத்தில்தான் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சில படங்கள்:

பூட்டிய கதவுக்குப் பின் ஊருணி
கொஞ்சம் பாசி படர்ந்துள்ளது
டிர்க் வால்த்தர், தன் ஒரு மகளுடன்
அருகில் உள்ள வானிலை அளக்கும் கருவிகள்,
துரதிர்ஷ்டவசமாக,
இப்போது பயன்பாட்டில் இல்லை
வண்டியில் வந்து குடிநீர் எடுத்துச் செல்கிறார்கள்
அருகில் ஒரு அம்மன் கோவில், ஆலமரம்
ஊருணி எப்படி இயங்குகிறது என்ற விளக்கப்படம்
அருகில் வாலிபால் விளையாடும் இளைஞர்கள்

ஒளிப்பதிவு (சுமார் 30 நிமிடங்கள்)


5 comments:

 1. நல்லதொரு முயற்சி..முற்காலத்தில் ஊர்களின் பெயர்கள் நீர்நிலைகள், ஊருணி, ஏரியை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். ஆறுகளில் நிரம்பும் நீரை ஏந்தி நிற்கும் நிலத்தின் பெயர் "ஏந்தல்" அதை ஒட்டிய மக்கள் வாழும் ஊரின் பெயர் "ஏந்தல்" என்ற சொல் சேர்ந்திருக்கும்.எ-கா அரியநேந்தல், புத்தேந்தல் (இரண்டும் இராமநாதபுர மாவட்டம்).
  ஏந்தல் பகுதியையும் மீறி வரும் நீரை சேமிக்க உருவாக்கப்பட்ட நிலப்பகுதி "தாங்கல்".தாங்கல் பெயரைக் கொண்ட ஊர்கள், ஐயப்பந்தாங்கல், பழவந்தாங்கல் போன்றவை.நம் முன்னோர்களின் தொழில்நுட்பம் மிகவும் ஆச்சரியமானது ....

  ReplyDelete
 2. நல்ல செய்தி , ஆக்கம் பத்ரி .... நல்ல தகவல் கார்த்தி. ... ஆனால் மாடர்ன் உலகின் அவலம் என்னவென்றால் ஏந்தல், தாங்கல் எல்லாம் இன்று ஹோல்சேலாக "ஜங்கிள்" ஆகிவிட்டது ... ஆம் ... கான்கிரீட் ஜங்கிள் :( !!!!!

  ReplyDelete
 3. நான் 1950க்கும் 60க்கும் இடைப்பட்ட காலத்தில் ,மாட்டு வண்டி ,பயணிகளுக்கு பயன்படும் ஊருணியை பார்த்திருக்கிறேன்.

  இப்போது காணாமல் போய் விட்டது.தண்ணீர் பஞ்சம் பற்றி செய்தி வரும் போதெல்லாம் நினைவில் இது வருவதுண்டு.நான் நெல்லையின் தென் எல்லையில் பிறந்தவன்.

  வட எல்லையில் இருப்பதை உங்ஙள் வலைத்தளத்தில் பார்த்தது, மகிழ்ச்சி.நன்றி. வாழ்த்துக்கள.

  ReplyDelete
 4. மிக அருமையான பதிவு, இதே போல் தமிழ்நாட்டில் எத்தனையோ பொருட்கள் மற்றும் இடங்கள் சரிவர உபயோகபடுத்தாமல் இருக்கிறது, அனைத்துக்கும் இதே போல் வின்ஞான விளக்கம் கொடுங்கள்..

  ReplyDelete
 5. ராஜஸ்தான்-ல் Rain Water Harvesting எப்படி செய்தார்கள் என்று TED Conference, 2009, Mysore-ல் "அனுபம் மிஸ்ரா" என்பவர் ஒரு talk கொடுத்தார்.
  அருமையான talk.
  http://www.ted.com/talks/lang/en/anupam_mishra_the_ancient_ingenuity_of_water_harvesting.html

  - Nakul

  ReplyDelete