Tuesday, January 31, 2012

புதுக்கோட்டை பயணம் - 4

இசையை அழித்து நீதி

லிங்கோத்பவருக்கு அருகில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதற்கு வருவதற்குமுன், சிவனின் சந்நிதியின் கிழக்குச் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது. பார்க்கவேண்டிய, தெரிந்துகொள்ளவேண்டிய கதை.

சிவன் குடைவரை கட்டப்பட்டது 7-ம் நூற்றாண்டு; விஷ்ணு குடைவரை கட்டப்பட்டது 8-ம் நூற்றாண்டு என்கிறார்கள். இரண்டையுமே பாண்டியர்கள் அல்லது அவர்கள்கீழ் இருந்த சிற்றரசர்கள் தோற்றுவித்தனர். அதன்பின், மேற்கொண்டு கட்டுமானங்கள் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. விரிவாக்கப்பட்ட இரு கோவில்களையும் நிர்வகித்து வந்தவர்கள் இடையே 12-ம் நூற்றாண்டில் சண்டை ஏற்பட்டது. சொத்துத் தகராறு.

இந்தச் சண்டை விரிவாகி ஒரு கட்டத்தில் இரு கோவில்களுமே இழுத்து மூடப்பட்டன. இப்படியே நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குமேல் கடந்திருக்கும்.

13-ம் நூற்றாண்டு. சோழ சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து, பாண்டியர்களும் ஹோய்சாளர்களும் இணைந்து தமிழகத்தை அப்போது ஆண்டுவந்தனர். மாறவர்மன் சுந்தரபாண்டியன் மன்னராக இருந்த காலகட்டம். அப்போது ஹோய்சாளத் தளபதிகளான ரவிதேவன், அப்பண்ணன் ஆகியோர் முன்னிலையில் பஞ்சாயத்து செய்யப்பட்டது. அதன் விளைவாக எழுந்த ஒப்பந்தத்தைத்தான் இந்த கிழக்குச் சுவரில் விரிவாகக் காணலாம்.

தீர்ப்பு என்னவென்றால், மொத்த வருமானத்தில் இரண்டு பங்கு சிவனுக்கு. மூன்று பங்கு விஷ்ணுவுக்கு! (திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும்! மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே? சிவனுக்கு வெறும் உண்டக்கட்டி மட்டும்தானே, எனவே இரண்டு மடங்கு போதும்:-) அத்துடன் இரு கோவில்களுக்கும் இடையில் ஒரு சுவர் எழுப்பப்படும்.

இந்தக் கல்வெட்டு இதனையெல்லாம் விரிவாகப் பேசுகிறது. கல்வெட்டின் இறுதியில், ‘மேற்படி இடத்தில் ஏதோ புரியாத மொழியில் என்னவோ எழுதியிருந்தது. அதனை அழித்துவிட்டு இந்தக் கல்வெட்டைப் பொறித்துவிட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். தீர்ப்பு எழுதப்பட்டிருப்பது தமிழில். அழிக்கப்பட்டிருப்பது, பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்றை. அதன் எச்ச சொச்சங்களை இப்போதும் பார்க்கலாம். (அப்போதே சமஸ்கிருதத்தை அழித்துவிட்டு தமிழில் எழுதுவது நடந்திருக்கிறது!)

அப்படி எதைத்தான் அழித்துள்ளார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அழிக்கப்பட்டதைப் போல அச்சு அசலான ஒரு கல்வெட்டு குடுமியான்மலையில் உள்ளது. அழிபடாமல் இருக்கும் முதல் எழுத்துகளைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். அது இசை பற்றிய கல்வெட்டு. இதனை குடுமியான்மலை செல்லும்போதுதான் நாங்கள் பார்க்கப்போகிறோம். அப்போது இதைப் பற்றி விரிவாகவே பார்ப்போம்.

மறுபக்கம், லிங்கோத்பவருக்கு அருகில் பல்லவ கிரந்தத்தில் ‘பரிவாதினிதா’ என்று எழுதப்பட்டு அதைச் சுற்றி இரண்டு கட்டங்கள் போடப்பட்டுள்ளன. இது என்ன என்பதையும் பிறகு பார்ப்போம்.

நாயக்கர் காலத்தில் இந்தக் கோவில்கள் இரண்டும் மேலும் அதிகமாக விரிவாக்கப்பட்டு பல்வேறு முன் மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மலையின் மேல் கோட்டை

திருமெய்யம் குன்றின் அடிவாரத்தில் இந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இதே மலையின் தொடர்ச்சியில் சற்றே மேற்பகுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இதனைக் கட்ட பல மாதங்கள்/வருடங்கள் ஆகியிருக்கும். பெரிய மதில் சுவர்கள், அகழிகள் ஆகியவற்றைக் காணமுடிகிறது. ஏழு சுவர்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால் மூன்று சுவர்களை ஆங்காங்கே காண முடிகிறது. இந்தக் கோட்டையைக் காணச் செல்ல தொல்லியல் துறை 5 ரூபாய் வசூலிக்கிறது. நீங்கள் அரை டிராயர் போட்டுக்கொண்டு தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசினால், தொல்லியல் துறைக்கு நீங்கள் இந்தியர்தானா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. வெளிநாட்டவர் என்றால் மேலே செல்லக் கட்டணம் ரூ. 100. அதே நேரம் சுத்தமான தமிழில் பேசினால் நீங்கள் இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாமோ என்ற சந்தேகம். எனவே தமிழர்களுக்கே உரித்தான அரைகுறைத் தமிழில் பேசுவது நலம்.

இந்தக் கோட்டையில் பார்க்க என்று பெரிதாக ஏதும் இல்லை. இரண்டு விஷயங்களைத் தவிர.

ஒரு குறிப்பிட்ட உயரத்தில் சிவனுக்கு ஒரு குடைவரை கட்டப்பட்டுள்ளது. இதுவுமேகூட ஏழாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டிருக்கவேண்டும். துவாரபாலகர்கள் யாரும் இல்லை. மிகச் சிறிய கருவறையில் ஒரு லிங்கம் தென்படுகிறது. அருகில் சுவரில் நாம் கீழே பார்த்ததுபோல ‘பரிவாதினிதா’ என்று பல்லவ கிரந்தத்தில் வெட்டப்பட்டு, சுற்றி இரட்டை ஃபிரேம் போடப்பட்ட எழுத்துகள் தெரிகின்றன.

இந்தச் சந்நிதிக்குப் போவதற்கு தொல்லியல் துறை, தரையிலிருந்து இரும்பு ஏணி ஒன்றை இப்போது வைத்துள்ளார்கள். அந்தக் காலத்தில் என்ன செய்திருந்தார்கள் என்பது தெரியவில்லை. வழிபாடே இல்லாத கோவிலோ இது என்றும் எண்ணலாம். அவ்வளவு உயரத்தில் யாருமே நெருங்காதபடிக்கு இப்படி ஒரு கோவிலை வெட்டுவித்தது ஏன்? அதனருகில் இருக்கும், தொடரும் ‘பரிவாதினிதா’ என்ற புதிருக்கு என்ன விடை?

(தொடரும்)

13 comments:

 1. Great recap of the trip. Looking forward to the rest. (Getting to know all that I missed while there :) )

  ReplyDelete
 2. //மறுபக்கம், லிங்கோத்பவருக்கு அருகில் பல்லவ கிரந்தத்தில் ‘பரிவாதினிதா’ என்று எழுதப்பட்டு அதைச் சுற்றி இரண்டு கட்டங்கள் போடப்பட்டுள்ளன. இது என்ன என்பதையும் பிறகு பார்ப்போம்.//

  அதைப் பற்றி விரிவாக குடுமியான் மலையில் அறிய இயலும். மகேந்திரவர்மன் உருவாக்கிய ஒரு யாழின் பெயர் அது. அதைப் பற்றிய ஒரு சுவையான கற்பனைச் சிறுகதையை இங்கே வாசிக்கலாம்...

  http://aravindsham.blogspot.in/2009/08/blog-post_26.html

  ReplyDelete
  Replies
  1. குடுமியான்மலையில் உள்ள இசைக் கல்வெட்டை மகேந்திரன் உருவாக்கவில்லை. அப்படித்தான் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிஞர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அந்த இடம் பாண்டியர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்ட கோவில்.

   ஆழமான ஆதாரம் இல்லாமல் எதைவேண்டுமானாலும் கதையாகப் புனையலாம்.

   Delete
 3. //இசையை அழித்து நீதி//

  //அப்போதே சமஸ்கிருதத்தை அழித்துவிட்டு தமிழில் எழுதுவது நடந்திருக்கிறது!//

  என்பதுடன்

  //மேற்படி இடத்தில் ஏதோ புரியாத மொழியில் என்னவோ எழுதியிருந்தது. அதனை அழித்துவிட்டு இந்தக் கல்வெட்டைப் பொறித்துவிட்டோம்//

  என்பது முரண்படுகிறதே?

  என்ன இருக்கிறது என்று புரியாமல் அதனை அழித்து எழுதுவதற்கும் தெரிந்தே அழிப்பதற்கும் வேறுபாடு உண்டு அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. முதலில் சொன்னது tongue-in-cheek. அதனால்தான் பிராக்கெட் + ஆச்சரியக் குறி போட்டிருக்கிறேன். இரண்டாவதாகச் சொன்னது, fact.

   அப்போது செய்யும்போது தெரியாமல்தான் செய்தார்கள். இப்போதுதான்...

   Delete
  2. இந்தி எதிர்ப்பு காரணமாக இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (தற்காலத்தில்) சமஸ்கிருத எழுத்துகள் அழிக்கப்பட்டதாக, அதிலும் பின்பு தமிழில் எழுதப்பட்டதாக எதுவும் கேள்விப்பட்டதில்லை.

   சரவணன்

   Delete
 4. ஊமைத்துரை கோட்டைப் பற்றியும் பல சுவையான கதைகள் திருமெய்யத்தில் சொல்லப்படுவது உண்டு. தொண்டைமானின் படைகள் (கெட்டபொம்முவை கிழக்கிந்தியரிடம் பிடித்துக் கொடுத்தவர்) திருமெய்யக் கோட்டையை பிடிக்க ஒரு நூதனமான தந்திரம் செய்தார்களாம். இரவு நேரத்தில், மாட்டு கொம்புகளில் தீப்பந்தங்கள் கட்டி வைத்து மந்தை மந்தையாக வரச் செய்தார்களாம். கோட்டை மேலிருந்து பார்த்த ஊமைத்துரைக்கு பெரிய படையே வருகிறது என்று அச்சம் ஏற்பட்டு தப்பித்து சிவகங்கைக்கு சென்றுவிட்டாராம்.

  அங்கே ஒரு சுனை கூட பார்த்திருக்கிறேன். இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

  'பம்பாய்' படத்தில் வரும் 'உயிரே...' பாடலை இந்தக் கோட்டையில்தான் படம்பிடித்தார்கள் என்று கூட சொல்வார்கள்.

  அந்தக் கோட்டையில் மதில்சுவர்களும், அதில் இருக்கும் பொறிகளையும், பீரங்கிகளையும் தவிர வேறு ஏதும் கட்டுமானங்கள் பார்த்ததாக நினைவில்லை. வெறுமனே பதுங்கி வாழ மட்டும் ஒரு கோட்டைக் கட்டிக் கொண்டார்களோ என்றுத் தோன்றும்.

  ReplyDelete
  Replies
  1. Uyire song was filmed at Bekal fort near Kasargod in Kerala.

   Delete
 5. //(திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும்! மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே? சிவனுக்கு வெறும் உண்டக்கட்டி மட்டும்தானே, எனவே இரண்டு மடங்கு போதும்:-) //

  பத்ரி அண்ணே, நீங்களே இப்படி சொல்வது வருத்தமளிக்கிறது ..

  திருமாலுக்கு சக்கரம் ஈந்தவன் சிவபெருமான், சிவபெருமானுக்கு உகந்ததான வில்வம் திருமகளின் அம்சம் என்பதை தாங்கள் அறியாமலில்லை..

  ReplyDelete
 6. // மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே? சிவனுக்கு வெறும் உண்டக்கட்டி மட்டும்தானே, எனவே இரண்டு மடங்கு போதும் //

  இதுவும் tongue in cheek கமெண்ட்டாக நீங்கள் நினைத்து இட்டிருக்கிறீர்கள் போல. நீங்கள் வைணவ மரபை சார்ந்தவர் என்பதும், தற்போது வைணவம் பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்பதும் எல்லாருக்கும் தெரிந்ததுதானே. அந்தப் பின்னணியில் இந்த குறிப்பு கேலியாகத்தானே எடுத்துக் கொள்ளப்படும்? காத்திரமான கட்டுரைகளில் இம்மாதிரியான 'நோண்டல்களை' (digs) தவிர்க்கலாமே. அப்புறம் Clicheவான கேள்வியாக 'வேறு எந்த மதத்தைப் பற்றியாவது பத்ரி கன்னத்தில் நாக்கை சுழட்டி பேச முடியுமா?' என்று கமெண்ட் எழுத வேண்டியதுதான் :))

  ReplyDelete
 7. ‘பரிவாதினிதா’ என்ற புதிருக்கு என்ன விடை?

  பரிவாதினி - யாழின் பெயராக இருக்கலாம்


  தேவ்

  ReplyDelete
 8. 'பரிவாதினி’ என்பது தந்திகளைக் கொண்டு இசையொலி எழுப்பும் கருவியாகத்தான் இருக்கும் என்பதில் பல அறிஞர்கள் ஒன்றுபடுகிறார்கள். ஆனால் அந்த ‘தா’ சேர்த்ததால் தான் தாவு தீர்ந்துவிடுகிறது. ஆங்கிருந்த இசை ஆசிரியரின் பட்டப்பெயராகவோ இசைப் பள்ளியின் பெயராகவோ ‘கலாம்.

  இருக்கட்டும்... இதுபற்றி பத்ரி குடுமியான்மலையில் குடுமியை, ஸாரி, முடிச்சை அவிழ்க்கிறாரா பார்ப்போம்.

  -ஜி.ஸன்தானம்

  ReplyDelete
 9. அன்பினிய பத்ரி, அடுத்த முறை புதுக்கோட்டை வருவதாக இருந்தாலோ, புதுக்கோட்டை வழியாகப் போவதாக இருந்தாலோ அன்புகூர்ந்து எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன். உங்களைச் சந்திக்கவும், அண்மையில் வெளிவந்திருக்கும் “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே“ உட்பட்ட 3நூல்களை உங்களுக்குத் தரவேண்டும் புதுக்கோட்டை நண்பர்களை நீங்கள் சந்தித்துப்பேசவேண்டும்

  ReplyDelete