Monday, May 10, 2004

ஜனநாயகக் கடமை

சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களித்து முடித்தேன்.

வாக்களித்தாயிற்று!காலை 8.10 மணிக்கு, நானும் என் மனைவியும் சென்றபோது கோபாலபுரம் கணபதி அய்யர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி வெறிச்சோடி இருந்தது. கூடவே எங்கள் ஐந்து வயது மகளையும் அழைத்துச் சென்றிருந்தோம். காவலர் ஒருவர் சிறு குழந்தைகளை அனுமதிக்க முடியாது என்றார். ராப்ரி தேவி தன் வாக்களிக்கும் வயசுடைய மகளுடன் உள்ளே செல்லலாமாம், ஐந்து வயதுக் குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்ல தாய்க்கு அனுமதி இல்லையாம். நான் முதலில் உள்ளே நுழைந்தேன். எனக்கு சற்று முன்னதாக ஒரு தம்பதியினர் கையில் எந்தவித அடையாளச் சீட்டும் இல்லாது வந்திருந்தனர். நன்கு படித்தவர்கள் போலத்தான் தெரிந்தனர். தேர்தல் அலுவலர் அவர்களை வாக்களிக்க அனுமதிக்க மறுத்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் தேர்தல் ஏஜெண்டுகள் அனைவரும் ஒரே குரலில் "பரவாயில்லை, அவர்களை வாக்களிக்க அனுமதியுங்கள், நாங்கள் அனைவரும் ஒருமனதாக அவர்களை அனுமதிக்கிறோம்" என்றனர். ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதற்குச் சம்மதிக்கவில்லை. ரேஷன் அட்டையை எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டனர்.

ஒரு தேர்தல் ஏஜெண்டு "சார், இப்ப வுட்டிட்டீங்கன்னா, நிச்சயமா திரும்பி வரமாட்டாங்க, வாக்குப்பதிவு குறைஞ்சிடுமே" என்று வருத்தப்பட்டார். ஆனால் தேர்தல் அதிகாரிகள் விடாப்பிடியாக இருந்தனர். அவ்விருவரும் திரும்பச் செல்லும்போது குடும்பத்தலைவர் "இனி நான் வரப்போவதில்லை" என்பது போல முனகிக்கொண்டே சென்றார்.

அடுத்து நான் என் பெயரைக் கண்டறிந்து, என் ஓட்டுநர் உரிமத்தை சரிபார்த்தவுடன், என் வாக்காளர் எண்ணை வாக்குச்சாவடி அதிகாரி சத்தமாகச் சொல்ல, தேர்தல் ஏஜெண்டுகள் என்னத்தையோ சரிபார்த்தனர். அந்தத் தேர்தல் ஏஜெண்டுகளை நான் இதுவரை பார்த்ததில்லை, அவர்களும் நிச்சயமாக என்னைப் பார்த்திருக்க மாட்டார்கள். அடுத்து வாக்குச்சாவடி அதிகாரி என்னிடம் ஒரு துண்டுச்சீட்டைக் கொடுக்க, அதை நான் அடுத்துள்ள ஒரு அதிகாரியிடம் வழங்க, அவர் எனக்கு கையில் அழியா மையிட்டார். அதன்பிறகு அடுத்துள்ள அதிகாரியிடம் என் துண்டுச்சீட்டை வழங்க அவர் தன்னிடமுள்ள EVM controllerஇன் பொத்தானை அழுத்தினார். பின்னர் நான் மறைவான இடத்தில் சென்று நான் வாக்களிக்க வேண்டிய வாக்காளரைத் தேடிப்பிடித்து பொத்தானை அழுத்தி, சத்தம் வந்ததும் என் வாக்கு பதிவானது என்று உறுதி செய்து கொண்டு கிளம்பினேன்.

இதற்கிடையில் வாசலில் என் மனைவியுடன் இருந்த மகள் செய்த ரகளையில் காவலர் இருவரையும் உள்ளே சென்று வாக்களிக்க அனுமதித்தார். என் மனைவி வாக்களிக்கும்போது என் மகள் தான் உடனிருந்து என்ன நடக்கிறது என்று பார்க்க அனுமதிக்கப்பட்டாள். இருவரும் வாக்களித்து வெளியில் வரும்போது புதிதாக உள்ளே யாரும் வரவில்லை. சுற்றிலும் கூட்டம் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை.

வாக்களிப்போரின் ஈடுபாடின்மை மேலோங்கித் தெரிகிறது.

[மேலே காண்பது என் விரல்தான்.]

3 comments:

 1. 8 மணிக்கு கூட இப்படி ஒருவரும் வராமல் வெறிச்சோடிக் கிடக்கிறது என்றால் வருந்தவேண்டிய விஷயம். நம் மக்களுக்கு அரசாங்கத்தைக் குறை சொல்லும் அருகதை இல்லை என்பதை இது காட்டுகிறது.

  பத்ரி, உங்களுக்கு ஓவியம் வரையத் தெரியுமா? உங்க விரல் பார்த்து வந்த சந்தேகம் இது :-)

  ReplyDelete
 2. என் விரலைப் பார்த்து எப்படி ஓவியம் போடுவேனா, மாட்டேனா என்று கண்டுபிடிக்க முடியும். அந்த மாதிரி கண்றாவியெல்லாம் நான் செய்வதில்லை:-)

  ReplyDelete
 3. இந்த மாதிரியான விரல்வடிவம் இருக்கிறவங்களுக்கு ஓவியத்திறன் இருக்கும்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன், அதான் கேட்டேன்.

  அது சரி, ஓவியம் வரையறது கண்றாவியா? நேரம் தான் :-)

  ReplyDelete