Monday, May 10, 2004

நதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்

ரீடிஃப்.காம் தளத்தில் சங்கீதா ஸ்ரீராம் என்பவர் நதிநீர் இணைப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது பற்றிய எனது பதிவு இங்கே.

சங்கீதா ஸ்ரீராமின் கட்டுரைக்கு எதிர்வினையாக திட்டக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதிலளித்துள்ளார். அது நான் பதிந்துள்ள அவர்களது மின்னஞ்சல் பட்டியலின் வழியாக எனக்கு வந்துசேர்ந்தது. அதன் சுட்டி இங்கே.

பதில் எதுவும் ஆணித்தரமாக இல்லை. முக்கிய சாரம் இங்கே:

* டாஸ்க் ஃபோர்ஸின் முந்தைய தலைவர் (சுரேஷ் பிரபு) கேரளா தவிர்த்து அனைத்து முதல்வர்களுடன் பேசியுள்ளாராம். அந்த முதல்வர்களும் தங்கள் மாநிலங்களுக்கு நன்மை ஏற்படும் என்றால் தாங்கள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொல்லியுள்ளனராம். அதாவது திட்டவட்டமாக யாரும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, ஒவ்வொருவரும் தனக்கென்ன ஆதாயம் என்று தீர்மானித்துத்தான் ஆதரவளிக்கப்போகிறார்கள். திட்டமே முடிவு பெறாத நிலையில் (அதாவது யாருக்கு எத்தனை எதிகத் தண்ணீர் கிடைக்கும் என்று முடிவு செய்யாத நிலையில்) தமிழகம், ஹரியானா தவிர யாருமே ஆதரவளிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதில் கேரளா ஏன் ஈடுபடவே இல்லை என்பது புரியவில்லை. கேரளா/தமிழகம் தண்ணீர் பிரச்சினை பற்றி காலச்சுவடு இதழில் வந்த ஒரு கட்டுரையைப் பற்றிய பதிவை பின்னர் இடுகிறேன்.

* இதுவரை டாஸ்க் ஃபோர்ஸ் சுற்றுச்சுழல் பாதிப்பு பற்றியும், இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியமா (feasibility study) என்பது பற்றியும் எந்தவித சுற்றறிக்கையையும் வெளியிடவில்லை. அதாவது சாத்தியக்கூறுகள் உண்டா என்றே யாருக்கும் தெரியாது. அரசுக்குத் தெரியாது. உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியாது.

* திட்டத்திற்கான செலவு ரூ. 560,000 கோடி என்பது தோராயமான ஒரு கணக்காம். அதாவது திட்டத்திற்கான செலவு மேற்சொன்ன எண்ணிக்கையிலிருந்து வெகு விலகியும் இருக்கலாம். நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும் (ஊழல் தொகை சேர்த்து). இதில் மிகவும் ஆச்சரியகரமான விளக்கம் "Nevertheless the Task Force has looked at funding options for the programme and is of the view that the resources available within the domestic financial sector should be able to provide the funding needs of the programme." என்பதுதான்! அமைச்சர் அருண் ஷோரி மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதின் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ. 100,000 கோடி ஈட்டலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தவருடம் இதுவரை சாதித்தது வெறும் ரூ. 15,000 கோடிகளே, அதுவும் ONGC மூலமாக வந்தது. தன்னிடம் உள்ள அனைத்து நிறுவனங்களை (முக்கியமாக ONGC, BSNL) விற்றாலும் இத்தனை பணத்தை ஈட்ட முடியுமா என்று தெரியவில்லை. கடன் பத்திரங்கள் வழங்குவதன் மூலம் எத்தனை ஆயிரம் கோடிகள் ஈட்ட முடியும்? அனைத்தும் இந்தியாவிற்குள்ளேயே ஈட்டிவிடலாம் என்று மார்தட்டுவது தேவையற்றது என்று தோன்றுகிறது. இதுவரை அரசு எடுத்து நடத்தியுள்ள மிகப்பெரிய திட்டமான தங்க நாற்கோணச்சாலைத் திட்டத்தின் மொத்த திட்டச்செலவு ரூ. 54,000 கோடி. அதுவே போக வேண்டிய தூரம் வெகு அதிகம்! நதிநீர் இணைப்புத் திட்டத்தின் திட்டச் செலவு அதைப் போலப் பத்து மடங்கு! (உண்மையில் இருபது மடங்காகலாம்.)

இத்தனையிலும், மக்களை இடம்பெயர்க்கும்போது அவர்களிக்களிக்கும் நஷ்ட ஈடு பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லையாம். ஒருவேளை அது அவசியமே இல்லை என்று நினைக்கிறார்களோ என்னவொ!

* 2016க்குள் முடித்து விடலாம் என்று நினைக்கிறார்களாம். ஆனால் அது நடைபெற வேண்டுமென்றால் அனைத்து மாநில அரசுகள், பக்கத்து நாடுகள் ஆகியவற்றின் அனுமதி தேவையாம். அது எப்படி கிடைக்கப்போகிறதென்று தெரியவில்லையே?

* அண்டை நாடுகளுடன் உள்ள ஒப்பந்தங்கள் மீறப்படாது என்று உறுதி அளிக்கிறார்கள். நேபாள், பூடான், பங்களாதேசம் ஆகியவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றவே ஒழிய பாகிஸ்தானின் பெயரைக் காணோம். சிந்து நதிகள் எதுவும் திட்டத்தில் சேர்க்கப்படப்போவதில்லையா என்ன?

இந்த டாஸ்க் ஃபோர்ஸ் திக்குத்தெரியாமல் அல்லாடுவதைப் போலத்தான் தோன்றுகிறது.

2 comments:

  1. Blogger.com இல் மறுமொழி வசதி செய்து கொடுத்துள்ளனர். அது எப்படி இருக்கிறது என்பதைப் பரிசீலிக்கவே இது. இங்கு எழுத்துக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  2. குமுதம் ரிப்போர்ட்டரில் ஒருவர் நதிநீர் இணைப்பில் இருக்கும் சிரமங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார், படித்தீர்களா?

    பத்ரி, மறுமொழிக்கான சுட்டியை நேரடியாக கொடுக்கலாமே, மறுமொழிக்கான சுட்டி தனி கோப்பிற்குச் சென்று அங்கிருந்து மறுமொழிக்கு சொடுக்க வேண்டி இருக்கிறதே. முடிந்தால் நேரடியாக மறுமொழி பக்கத்திற்கு வருமாறு மாற்றி அமையுங்களேன்

    ReplyDelete