Friday, May 14, 2004

சுவர்க் கிறுக்கல்கள்

இந்த வாரத் திண்ணையில் மலேசிய எழுத்தாளர் ரெ.கா ஆக்கலும் அழித்தலும் என்றொரு சிறுகதை எழுதியுள்ளார்.

சுவற்றில் கிறுக்கும் சின்னக் குழந்தை, கோபத்தில் குழந்தையை அடிக்கும் அம்மா, கடிந்து கொள்ளும் அப்பா, ஆனால் குழந்தையை அரவணைக்கும் தாத்தா. பெற்றோருக்கு தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்து ஆக்கிய வீட்டின் அழகை, குறும்புக் குழந்தை அழிக்கிறாளே என்ற ஆதங்கம்.

தள்ளி நின்று பார்க்கும் தாத்தாவுக்கு ஒரு சிறு குழந்தை கிரேயானால் தன் ஆக்கும் திறனை வெளிக்கொணர்வதைப் பார்க்கையில் சந்தோஷம். சிறு குழந்தையைக் கடிந்து கொள்ளும் பெற்றோரைப் பார்த்துக் கேட்கிறார்: "ஏம்மா சத்தம் போட்றிங்க? இப்ப என்ன ஆச்சி? குழந்தைக்குக் கற்பனை பெருக்கெடுத்து வரும்போது தடுக்கக் கூடாது. முளையிலேயே கிள்ளின மாதிரி ஆயிடும்." அதற்காக புது வீட்டின் சுவற்றை அசிங்கமாக்குவதா என்கிறார்கள் பெற்றோர்கள். தாத்தா சொல்கிறார்: "குழந்தை எழுத்து அசிங்கம் இல்ல. பாசத்தோட பார்த்தா அதுவும் அழகுதான்."

பின்னர் ஈரத்துணியால் கிரேயான் 'கிறுக்கலை' அழித்துக் காட்டி, "பாருங்கள், சுவர் எவ்வளவு பளிச்சென்று இருக்கிறது" என்று அறிவினை புகட்டுகிறார்.

கதையில் வரும் மல்லியைப் போல எனக்கு ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை பிரியா. அவள் தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்தது முதல், வீட்டின் அத்தனை சுவர்களிலும் கிறுக்கும் அதிகாரம் கொடுத்திருந்தோம். இன்று ஐந்து வயதாகும்போதும் அவ்வப்போது கிறுக்குகிறாள். அத்தனை கிறுக்கல்களும் அப்படியே இருக்கின்றன. இன்னும் ஒரு வருடத்தில் சுவரில் கிறுக்கும் ஆசை விட்டுப்போகலாம். அதுவரை சுவர் பெயிண்டை மாற்றப்போவதில்லை. பிரியாவின் கையில் மாட்டுவது ரெ.கா கதையில் வரும் அழிந்துபோகும் கிரேயான்கள் மட்டும் இல்லை. பென்சில்கள், பலவகை பேனாக்கள், வாட்டர் கலர், போஸ்டர் கலர், கறுப்பு மை, நகச்சாயம் என்று பல. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவற்றில் கிறுக்கி விட்டு யானை வரைந்துள்ளேன், பாம்பு வரைந்துள்ளேன் என்பாள். கேட்கச் சிரிப்பாக இருக்கும். 'அருமை, 'சூப்பர்' என்று பாராட்டி விடுவோம். எத்தனை வரைபுத்தகங்கள் வாங்கிக் கொடுத்தாலும் அவளுக்கு சுவற்றில் கிறுக்குவதே பிடித்துள்ளது போல. ஒரு பெரிய கான்வாஸ் தேவைப்படுகிறது போல. அத்தனைச் சுவற்றிலும் கிறுக்கி வைத்துள்ளாள். எட்ட முடியாத இடங்களிலெல்லாம் நாற்காலியைப் போட்டு ஏறி நின்று கையெட்டும் இடம் வரை கிறுக்கல்தான்.

அது அவளைப் பொறுத்தவரையில் கிறுக்கல்கள் இல்லை. தனியுலகம். அவளால் குறிப்பிட்டு ஒவ்வொன்றையும் என்ன உருவம் என்று சொல்ல முடியும். எதை வரைய எத்தனித்தாள் என்பது அவளிடம் பேசினால் நமக்குத் தெரிந்துவிடும்.

இதுபோன்ற உரிமைகள் சிறுவயதில் எனக்குக் கிடைத்தது கிடையாது. எந்தவித கலைகளிலும் எனக்கு ஆர்வமும் இருந்தது கிடையாது.

பார்க்கலாம், என் மகளின் கலைத்திறன் பிற்காலத்தில் எப்படிப் பரிணமிக்கிறது என்பதை.

2 comments:

 1. நமக்குக் கிடைக்காத சுதந்திரத்தை குழந்தைகளுக்குத் தருவது சந்தோஷம். ஆனால், டிராயிங் போர்ட் (அழிக்கக் கூடியது - கொஞ்சம் பெரிய சைஸ்), வண்ணம் தீட்டக் கூடிய புத்தகங்கள், பார்த்து வரையக் கூடிய புத்தகங்கள் என்று நிறைய விஷயங்கள் கிடைக்கும்போது, சுவர்களில் வரைவதை அனுமதிக்கத்தான் வேண்டுமா? அப்படியும் தேவைதான் என்றால், அங்கு வரைதாள் ஒட்டிய பிறகே, அதன் மேல் ஓவியம் தீட்ட வேண்டும் என்று சொல்லி வைக்கலாம்.

  வேண்டுமானால், டிராயிங் ரூமில் மட்டுமே வரைய அனுமதி தரலாம் ;) வீட்டின் அனைத்து இடங்களிலும் சுதந்திரமாக இருப்பது வேறு; அங்கெல்லாம் வரைய அனுமதிப்பது கட்டுப்பாடற்ற சுதந்திரம் போல் தோன்றுகிறது
  (கதையை இன்னும் படிக்கவில்லை)

  ReplyDelete
 2. இதச்செய்யாதே அதச்செய்யாதேன்னு எல்லாத்துக்கும் தடா போடுறதவிட சுதந்திரமா விடுறது நல்ல விஷயம்.(அளவுக்கு அதிகமா குடுத்து தலைக்கு மேல ஏறாம இருக்கவும் பாத்துக்கணும்.)
  வருஷத்துக்கு ஒரு தரம் (பொங்கலுக்கு)பெயிண்ட் அடிச்சா போச்சு.

  அப்புறம், 'கிறுக்கல்கள்'ங்ற பேருக்கு நான் காப்புரிமை வாங்கி வச்சிருக்கேன்னு பிரியா கிட்ட இப்பவே சொல்லி வச்சிடுங்க :-)

  ReplyDelete