Sunday, May 23, 2004

புது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு

K. நட்வர் சிங்தான் அடுத்த அயலுறவுத் துறை அமைச்சராக இருப்பார் என்று தெரிகிறது. இலங்கையைப் பற்றிய இவரது கொள்கைகள் எப்படி இருக்கும்?

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மேற்கோள்கள் (தமிழ்ப்படுத்தியது) காட்டுகிறேன்:

திரு கருணாநிதி தனது தவறுகளில் உழன்று கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழர்களையும், தமிழர் வரலாற்றையும் பற்றி அதிகம் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரது ஐரோப்பிய வரலாறு பற்றிய அறிவு மிகவும் வழுவானது. அறிவுடைய எவரும் இலங்கையையும் செக்கோஸ்லோவாக்கியாவையும் ஒன்றென ஒப்பிட்டுப் பேச மாட்டார்கள். தமிழக முதல்வர் அயலுறவுக் கொள்கை விவகாரங்களைப் பற்றி கண்டதையும் பேசக்கூடாது என்று பிரதமர் வாஜ்பாயி அவரிடம் சொல்ல வேண்டும். மாநில முதல்வர்கள் அயலுறவுக் கொள்கை பற்றி அறிக்கைகள் விடுத்தலைப் போன்ற பிரம்மாண்டமான கேடு வேறெதுவும் இருக்க முடியாது. - ஏசியன் ஏஜ், 9 ஜூன் 2000இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க, இலங்கை அரசு ஏதேனும் உதவி - இராணுவ உதவியும் சேர்த்து - கோரினால், இந்தியா அதனை உடனடியாக நிராகரித்து விடாமல், கவனமாக ஆலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் செயற்குழு உறுப்பினருமான நட்வர் சிங் கேட்டுக்கொண்டார்.

இராணுவத் தலையீடோ, கப்பற்படைத் தலையீடோ அல்லது இராஜதந்திர உதவியோ - இலங்கை எதைக் கேட்டாலும் அதைத் தர இந்தியா தயாராயிருக்க வேண்டும் என்று நட்வர் சிங் நிருபர்களிடையே பேசுகையில் தெரிவித்தார். நட்வர் சிங் காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுக் கொள்கைக்கான குழுவை நடத்துபவர் ஆவார்.

[பாஜக தலைமையிலான தே.ஜ.கூ] அரசின் இலங்கை பற்றிய கொள்கைகள் புரிந்துகொள்ள முடியாததாகவும், நீர்த்துப்போனதாகவும் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். இதற்குக் காரணம் அரசின் செயல்பாடு திமுக, மதிமுக ஆகிய கட்சிகளின் விருப்பங்களுக்கேற்ப ஆடிக்கொண்டிருப்பதே என்றார்.

1987 ஆம் வருடத்தைய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால்தான் [ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் கையொப்பமிடப்பட்டது], இலங்கை பிரியாமல் காக்கப்பட்டது என்றும், இரு நாடுகளுமே இதுவரை இந்த ஒப்பந்தத்தை தூக்கி எறியவில்லை என்றும் அவர் கூறினார்.

செக்கோஸ்லோவாக்கியா போல இலங்கையையும் இரண்டாக, அமைதியாகப் பிரிக்கலாம் என்ற [தமிழக] முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையை அவர் கடுமையாக எதிர்த்தார். மேலும் கருணாநிதியின் பேச்சுக்கள், மாநில முதல்வர்கள் அயலுறவுக் கொள்கையில் கை வைக்கக்கூடாது என்ற பல காலமாக இருந்து வரும் எழுதப்படா விதிக்கு எதிராக உள்ளது என்றும் குறை கூறினார். இலங்கையின் நிலைமை செக்கோஸ்லோவாக்கியாவைப் போலில்லை என்றும் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு குடியாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை எதிர்க்கிறது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். - Indian Express, 16 July 2000இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான பேச்சுக்களை கவனமாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன். இதன் மூலம் ஒரு நிலையான முடிவு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கும் பேரா. பெய்ரிஸ், பாலசிங்கம் இருவரையும் நான் நன்கு அறிவேன். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமான பிரச்சினையாக இருப்பது திரு. வே.பிரபாகரன் தான். 11 செப்டம்பர் 2001 க்குப் பின்னர் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்து வந்த பணமும் ஆயுதத் தளவாடங்களும் வற்றிப்போய் விட்டன. இதனால்தான் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கே உடன்பட்டுள்ளனர். எது நடந்தாலும் பிரபாகரனை இந்தியாவிற்குக் கொண்டுவருவதே இந்தியாவின் தலையாயக் கடமையாகும். இப்பொழுது நடக்கும் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் என்று நம்புவோம். வெகு நாட்களாக இலங்கை கஷ்டத்தில் துவண்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் நியாயமான உரிமைகளை கண்டுகொள்ளாமலும் இருக்க முடியாது. இந்தியா இலங்கையில் நடப்பதை கண்டும், காணாமலும் இருக்க முடியாது. ராஜீவ் காந்திதான் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்குக் கெடுதல் வராமல், ஈழம் என்னும் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக வலுவாக இருந்தார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். - Frontline, Nov 23-Dec 2, 2002

கருணாநிதி இப்பொழுது முதல்வராக இல்லாவிட்டாலும், சென்ற அரசை விட இந்த மத்திய அரசில் திமுகவின் நிலை இன்னமும் வலுவாகவே உள்ளது. அதன்மூலம் காங்கிரஸ் அரசின், நட்வர் சிங்கின் நிலையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? எனக்கென்னவோ இருக்காது என்றுதான் தோன்றுகிறது.


பிற்சேர்க்கை (24 மே 2004): விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை மே 14 அன்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

2 comments:

 1. இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தம் பிரதிநிதிகளை அனுப்பியதன் மூலமும், தொடரும் அமைதி உடன்படிக்கையின் மூலமும், புலிகளுக்கு இருக்கும் ஜனநாயக ஈடுபாட்டை உணர்ந்து, புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் தமது கருத்துக்களைச் சமீபத்தில் மாற்றிக் கொண்டிருக்கலாமில்லையா? ஒரு நம்பிக்கைதான்!

  ReplyDelete
 2. சுந்தர்: கூட்டணிக் கட்சிகளிடமிருந்து அழுத்தம் வந்தாலொழிய நட்வர் சிங் நிலை மாறாது என்றே நினைக்கிறேன். நட்வர் சிங்கின் முக்கிய வேலை பாகிஸ்தானுடனான பேச்சுகளாகவும், பின்னர் அமெரிக்கா, ரஷ்யா உறவுகள், பின்னர் சீனா, அதற்கடுத்து ஆசியான் நாடுகள், கடைசியாக வங்கதேசம், நேபாள் என்றும், ஆகக் கடைசியாக இலங்கையாகவும் இருக வாய்ப்புள்ளது.

  மதிமுக கேபினெட்டில் இடம்பெற முயலவில்லை. அதனால் அமைச்சரவைக் கூட்டங்களில் ஈடுபடாது. அவ்வப்போது மதிமுக உறுப்பினர்கள் நால்வரும் ஏதேனும் கேள்வி கேட்டால் அதற்கு எதையாவது மழுப்பி பதிலாகச் சொல்லிவிடலாம்.

  திமுகவின் நிலைப்பாடுதான் இங்கு முக்கியமாகிறது.

  பார்க்கலாம்.

  ReplyDelete