Thursday, May 05, 2005

மாரியம்மன் செடில்

மாரியம்மன் செடில் என்பது சில நூறு ஆண்டுகளாவாவது நாகையில் நடந்து வருவது என்று தெரிகிறது. இம்முறை சென்றபோது கோயில் எத்தனை பழமை வாய்ந்தது, யாரால் கட்டப்பட்டிருக்கும், செடில் எப்பொழுதிலிருந்து தொடங்கியிருக்கும் என்று கேட்டறிய முடியவில்லை.

கார்த்தவீரியனை கழுமரத்தில் ஏற்றியது பற்றிய கதை ஒன்று உண்டு. இது பார்ப்பன புராணங்களில் இல்லாத, தமிழ் சமூகத்தின் பழங்கதையாடல்களுள் ஒன்று. தவறாகக் கழுவில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்ட கார்த்தவீரியனை மாரியம்மன் காப்பாற்றுவதாகக் கதை செல்லும் என நினைக்கிறேன். (சின்ன வயதில் கேட்டதனால் மறந்து விட்டது.) அது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சடங்கு இந்த செடில் ஏற்றுவது என்று நினைக்கிறேன். (மாரியம்மன் தல வரலாறு பற்றிய புத்தகம் அறுசுவை பாபுவிடம் வாங்கி அனுப்புமாறு கேட்டிருக்கிறேன். கிடைத்தவுடன் அதை மேலும் அறிந்துகொண்டு எழுதுகிறேன்.)

கார்த்தவீரியன் தன் மனைவியருடன் செடில் நடப்பதைப் பார்வையிடுகிறார்.

செடில் மரம்

செடில் மரம் என்பது ஆங்கில எழுத்தான "T" போன்று உள்ளது. நீல வண்ண பெயிண்டால் பூசப்பட்ட மரம். இதன் செங்குத்து மரம் தரையில் ஆழமான குழியில் நடப்பட்டுள்ளது. குறுக்குவெட்டில் உள்ள மரம், செங்குத்து மரத்தைச் சுற்றிச் சுழலும் வண்ணம் இரும்பால் ஆன சக்கரம் போன்ற அமைப்பின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. குறுக்குவெட்டு மரத்தின் ஒருபக்கத்தில் மரச்சட்டகம் ஒன்று உள்ளது. இதை முன்பக்கம் என்று வைத்துக்கொள்வோம். இதில் காப்பு கட்டிய ஒருவர் ஏறி நிற்கிறார். இவர் பட்டுப் பாவாடை, பிரத்யேகமான அணிகலன்கள், தலைப்பாகை ஆகியவை அணிந்திருப்பார். செடிலுக்கென வேண்டுதல் செய்து செடிலில் ஏறுபவர்களை இவர்தான் பிடித்துக்கொள்வார். இந்தக் குறுக்குமரத்தின் பின்பக்கத்தில்தான் செடிலைச் சுற்றும் ஆள்கள் நிற்பார்கள்.

முந்தைய நாள்களில் - எனது சிறுவயதில், நான் செடிலில் ஏறிய சமயத்தில் கூட - ஒவ்வொருவருக்கும் மூன்று சுற்றுக்கள் கிடைத்தன. அப்பொழுதெல்லாம் ஆயிரத்துக்கும் குறைவானவர்களே வேண்டிக்கொண்டனர். இரவு தொடங்கும் செடில் அடுத்த நாள் விடிகாலைக்குள் முடிந்திருக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டுதல் செய்வோர் எண்ணிக்கை கூடக் கூட, ஒருவருக்கு ஒரு சுற்று என்று குறைத்து விட்டனர். பொதுவாக ஞாயிறு காலையில் தேர் நிலையிலிருந்து தொடங்கி, நான்கு வீதிகளிலும் சுற்றி விட்டு மாலையில் நிலையை வந்தடையும். அதற்குப் பின்னரே செடில் தொடங்கும்.

நாளடைவில் செடில் ஏறுவோர் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகவே, காலையிலேயே செடிலை ஆரம்பித்து விடுகின்றனர். அதற்குப் பின்னர்தான் இப்பொழுதெல்லாம் தேர் சுற்றத் தொடங்குகிறது. மாலையில் தேர் நிலைக்கு வந்தபிறகும் கூட செடில் தொடர்ந்து நடக்கிறது. திங்கள் விடிகாலை வரை செல்கிறது. சென்ற வருடம் 5,000க்கும் அதிகமானோர் செடில் வேண்டுதல் செய்திருந்தனர். இம்முறை 3,000 பேருக்கு மட்டும்தான் முன்கூட்டியே பதிவு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குமேல், நேரம் இருப்பதைப் பொறுத்து அங்கேயே சீட்டுகள் வாங்கி மேலே ஏற்றுவர்.

-*-

கார்த்தவீரியன், மாரியம்மன் இருவரிடமும் அனுமதி பெற்று இருவர் செடில் மரத்தில் ஏறும் தகுதி உடையவராகின்றனர். சுமார் ஆயிரம் சுற்றுகளுக்குப் பிறகு மேலே தொடர்ச்சியாக நின்று கொண்டிருப்பவருக்கு தலை சுற்றும், வாந்தி எடுக்கும். அவர் நாள் முழுதும் விரதமிருப்பார். அதுவும் சேர்ந்து தொல்லை கொடுக்கும். அதனால் ஆயிரம் சுற்றுகளுக்கு ஒருமுறை இருவரும் மாறி மாறி நிற்கின்றனர்.

செடில் மரத்தின் பின்பக்கத்தை மேலே தூக்கிவிடும்போது முன்பக்கம் கீழே இறங்குகிறது - ஒரு Seesawவைப் போல. அந்த நேரத்தில் வரிசை பிரகாரம் செடிலுக்கு நேர்ந்துவிட்ட குழந்தைகள் ஒப்படைக்கப்படுகிறார்கள். ஒருவர் கொடியசைக்க பின்பக்கத்தில் இருக்கும் ஆள்கள் கயிற்றின் மூலம் அதைக் கீழே இறக்க, செடிலின் முன்பக்கம் மேலே ஏறுகிறது.

செடில் மரம்

முன்பக்கம் மேலே சென்றதும், பின்பக்கத்தை நான்கைந்து பேர் சுழற்றிச் சுற்றி வருகிறார்கள்.

செடில் மரம்

அவர்கள் ஒரு முழு சுற்று சுற்றி வரும்போது எதிர்த்திசையில் இன்னமும் சிலர் நின்று ஓடிவருபவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.

செடில் மரம்

அதைத் தொடர்ந்து மீண்டும் இந்த நான்கும் வரிசையாக நடைபெறுகிறது.

நூறு சுற்றுகளுக்கு ஒருமுறை செடில்மரத்தை இழுத்துச் சுற்றுபவர்கள் மாறுகிறார்கள்.

-*-

செடிலில் ஏறுபவர்கள் பெரும்பாலானோரும் சிறு குழந்தைகள்தான். ஆனால் சில வயதானவர்களும் ஏறுவது உண்டு. நாகபட்டினம் பகுதிகளில் சிறுகுழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை, உயிருக்கு ஆபத்து என்றால் அம்மன் உயிரைக் காப்பாற்றட்டும் என்று செடிலுக்கு வேண்டிக்கொள்வது வழக்கம். பொதுவாக மொட்டை அடிக்கிறேன், காவடி தூக்குகிறேன் என்று வெறும் பக்தியால் மட்டும் வேண்டிக்கொள்வதில்லை. மரண பயம் இருக்கும்போதுதான் இந்த வேண்டுதல் வருகிறது. இதைப்போலவே மற்றுமொரு வேண்டுதல் - பாடைக் காவடி.

மாரியம்மனுக்கு பால் காவடி எடுப்பதைப்போல சிலர் பாடைக் காவடியும் எடுப்பர். இங்கு வயது வித்தியாசம் இல்லையென்றாலும் பொதுவாகவே சிறு குழந்தைகள் சார்ந்த வேண்டுதல்தான் இதுவும். பாடை என்பது (பார்ப்பனரல்லாதோர்) இறந்தோரை ஊர்வலம் எடுத்துச் செல்லும் வண்டி.

மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கும் சிறுவர்களின் பெற்றோர் பிள்ளை பிழைத்தெழுந்தால் பாடைக் காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வர். அதன்படி செடில்/தேர் தினத்தன்று பாடை போல வடிவமைக்கப்பட்ட ஒரு வண்டியில் மஞ்சள் துணி அணிந்தவாறு அந்தக் குழந்தை படுத்துக்கொள்ள, அந்தப் பாடைக் காவடியை நான்கு வீதிகளிலும் இழுத்து வருவர்.

-*-

தேர், காவடி பற்றிய புகைப்படங்களை பின்வரும் பதிவில் எழுதுகிறேன். செடிலை விடியோப் படமாகவும் எடுத்திருக்கிறேன். அதை சற்று தொகுத்து மேலேற்றியதும் இங்கு சுட்டியைக் கொடுக்கிறேன்.

செடில் பற்றிய முந்தைய பதிவு

16 comments:

  1. நல்ல பதிவு...

    //கார்த்தவீரியனை கழுமரத்தில் ஏற்றியது பற்றிய கதை ஒன்று உண்டு. //

    ஓஹோ... இவர்தான் சினிமாவில் காத்தவராயனாக வந்தவரோ?

    ReplyDelete
  2. நல்ல பதிவு. இப்போதுதான் இந்த செடில் பற்றி அறிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  3. செடிலைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி!

    இரண்டாம், நான்காம் படங்களிலிருக்கும் 'பம்பை'வாத்தியம் இன்னும் ஒருசில இடங்களிலேனும் பயன்பாட்டிலிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  4. காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஒரு கிராமிய பழக்கத்தை நிறைய சிரமம் எடுத்துக் கொண்டு ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. முதல் படத்தைப் பார்த்ததும் See-Saw ஞாபகம்தான் வந்தது.

    "........அவர்கள் ஒரு முழு சுற்று சுற்றி வரும்போது எதிர்த்திசையில் இன்னமும் சிலர் நின்று ஓடிவருபவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள்........."

    இதைப் படித்ததும் வேகமாக பூமியைத்தொடும் ராக்கெட்டின் வேகத்தைக் கட்டுபடுத்த ஒரு வகையில் வேகத்தடை உபயோகிப்பார்களாமே, அது நினைவு வந்தது. இன்று கொஞ்சம் நிறையவே ஸ்ரீஹரிக்கோட்டா, PSLV - C 6 செய்திகளைப் பார்த்ததன் விளைவோ என்னவோ :-)

    ReplyDelete
  5. பத்ரி - பார்ப்பன புராணங்களில் இல்லாமலிருக்கலாம், ஆனால் இது போன்ற கதையாடல்கள் தொடர்பான நம்பிக்கைகள் தமிழகத்துப் பார்ப்பனர்களுக்கு நிறையவே உண்டு.

    தமிழகத்துச் சமூகவியல் அறிஞர்கள்கூட இத்தகைய கதையாடல்களுக்கும், விளிம்புநிலை மாந்தரிடம் செல்வாக்கு பெற்று விளங்கும் கடவுளரிடத்தும் பார்ப்பனர்களுக்குச் சம்பந்தமில்லை என்று சொல்வார்கள். என்னுடைய தனிப்பட அனுபவத்தில் எல்லா கடவுள்களும், நம்பிக்கைகளும் எல்லா சாதிகளுக்கும் பொதுவாக இருப்பதையே கண்டிருக்கிறேன்.

    மிகச் சிறிய உதாரணமாக, பிராமணர் இல்லங்களில்கூட 'அம்மை' போட்டால் அவர்கள் வழக்கமாகத் தொழும் தெய்வங்களைத் தொழாமல் மாரியாத்தாளைத்தான் நாடுவார்கள். இதைப் பற்றி விரிவாக இன்னொருமுறை எழுதுகிறேன்.

    ReplyDelete
  6. பத்ரி - எழுதவிட்டுப்போன முக்கியமான முதல்வரி - நல்ல பதிவு. தகவல்கள் புதியவை. நன்றி

    ReplyDelete
  7. பத்ரி, அந்தக் கோயிலின் படத்தையும் இடுவீர்களா? பழமையான கோயில் இன்று எப்படியிருக்கிறதென்று காணும் ஆவல்.
    கார்த்தவீரியனின் பெயர் வேறு எப்படியாகவாவது இருந்திருக்கலாமோ, உம். காத்தவீரியன், காத்தவீரன், கருத்தவீரியன், அல்லது பிரகாஷ் சொன்னதுமாதிரி காத்தவராயன்.
    மேலே மூர்த்தி சொன்ன செடில் (இப்போது செடல்) காவடி புதுக்கோட்டை மாவட்டத்தில் உண்டு. வட்டமான காவடி. காவடிக்காரர் வட்டத்துக்கு நடுவிலிருந்தபடி காவடியைத் தூக்கிக்கொண்டு சுற்றிச் சுழன்று ஆடுவார்.
    பார்ப்பன புராணங்களின் புனைசுருட்டுப் பொய்க்கதைகள் இப்படிப்பட்ட அடித்தட்டு மக்கள் நாயகர்களின் கதைகளைத் திட்டமிட்டு அழித்தொழித்ததை வெங்கட் மறுக்க மாட்டார் என நம்புகிறேன்.

    ReplyDelete
  8. சுந்தரவடிவேல் - மறுக்கமாட்டேன், கட்டாயமாக.

    * * *

    என்னுடைய சென்ற பதிவில் இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னர் எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

    சுருக்கமாக, ஆயர் குலத் தலைவனான கண்ணனும், குரவர் குலத் தலைவனான கந்தனும் எப்படி பார்ப்பனர் தெய்வங்களாக மாறினர் என்பதைப் பற்றி. கொற்றவை எப்படி துர்க்கா தேவியாக சிவாலயங்களில் தெற்கே கோவில் கொண்டாள் என்பதைப் பற்றிய்ம் எழுதலாமென்றிருந்தேன். இன்றைக்கும் பல பார்ப்பனர்களுக்கு சடவுடையார்கோயில் அய்யனாரும் , சிறுவாச்சூர் காளியும், அம்பகரத்தூரில் எருமை பலிவாங்கும் காளியும் குலதெய்வங்கள் (எல்லா கடவுளுக்கும் மேலாக முதல் மரியாதை பெறும்) என்றால் பலருக்கும் நம்பமுடியாது. எல்லைத் தெய்வங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தொடர்பில்லை என்பது இன்றைக்கு அறைந்து சொல்லப்படும் பெரும்பான்மை 'உண்மை'. :(

    இதைப் பற்றி நான் தற்சமயம் விரிவாக எழுதுவதாக இல்லை. இது கட்டாயம் நான் விரும்பாத வகையில் விவாதங்களுக்கு இட்டுச் செல்லும் என்று தெரியும். பலருக்கும் சமூக வரலாறை ஆராய்வதைவிட ஒற்றைப்படையாகத் தங்கள் கருத்தாக்கங்களை ஓங்கி அறைவதிலேதான் ஆர்வம் இருக்கிறது. எனவே இப்பொழுது இல்லை.

    ReplyDelete
  9. நல்ல பதிவு வித்தியாசமான அனுபவம். இந்த செடில் எனும் வார்த்தை ஈழத்தமிழர்களிடையே வித்தியாசமான ஒரு கருத்தைக் கொண்டுள்ளது என்று நம்புகின்றேன். எம்மவர்கள் என்ன செடில் விடுகிறாய் காட்டுகிறாய் என்று கேட்பார்கள். அதாவது பவர் காட்டுதல் என்று இந்தியர்கள் கூறுவது போல்த்தான் செடில் எனும் வார்த்தை ஈழத்தவர்கள் பாவிக்கின்றார்கள்.

    ReplyDelete
  10. Ean Sundaravadivel, pappaan mel eppodhum kuLavi maathiri kotti kondey irukkiraar. Undiyal kulukkuvathu ponra uyarvaana vishayangalai seythavar, intha maathiri thalaiyil thatti kondey iruppathaal, aruvaruppum, vetrumaiyumthaan jaasthiyaagum.

    Jaatheeyam ozhiya vendum enru ennubavargal seiginra kaariyam ithuvalla. Munbu paraiyan, pallan enru thittiyathu pol, paarppan enru thittuvathai thavirakka muyarchikka vendum.

    Dondu maathiri makkalai periya aalakki vittu vida pogiraargal.

    ReplyDelete
  11. எனக்கு முற்றிலும் ஈர்ப்புகளில்லாத மத/கடவுளர்கள் சம்பந்தப்பட்ட விடயமென்றாலும்,30 வருடங்களாக நான் போகக் கிடைக்காத ஆனால் மனதில் தங்கி போன ஊர்(கள்) பக்க நிகழ்வுகளை பற்றி எழுதியமைக்கு ரொம்ப நன்றி.

    பிறிதொரு சமயம், திருவாரூர் கமலாலய தெப்பம்-இன்னும் நடந்து கொண்டிருந்தால் அதுபற்றியும் போய் வந்து எழுதிவிடுங்கள்.

    ஒரு தகவலுக்கு

    ஆனதாண்டவபுரம் கிராமதேவதைகள் கோவிலொன்று-அதிலுறையும் அம்மன்
    எமது தந்தை வழி குடும்பத்தினருக்கு குலதெய்வம்.இதே அம்மன் என்னுடைய பள்ளி கால தோழன் செம்பதனிருப்பு சிவராமய்யர் முரளியின் குடும்பத்தினர் மற்றும் எங்கள் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த குப்பம்மாள்/மணி ஆசாரி குடும்பத்தினர் ஆகியோரின் குலதெய்வமும் ஆகும்.

    நடுநிலையுடன் ஆராய்ந்து பார்க்ககூடியவர்கள் யாராவது இருந்தால் இதனை ஆராய்ந்து பார்க்கலாம்,"வேறு பிரதேசங்களிலிருந்து வந்தவர்களாக சொல்லப்படுபவர்களுக்கும்,மண்ணின் மைந்தர்களுக்கும்! எப்படி குலக்கடவுள் ஒன்றாக இருக்கிறது என்பதை"

    ReplyDelete
  12. வெங்கட்: தமிழகத்துப் பார்ப்பனரிடையே நிச்சயமாக இந்த நம்பிக்கைகள் உண்டு. எனக்கு 2 வயதாகும்போது உடல் நலமின்றிக் கிடக்க, மருத்துவர் ஊசி போட்டபின் உடல் விறைத்துப் போயிற்றாம். தொடர்ந்து செடில் வேண்டுதலுக்குப் பின் நான் செடில் ஏறியிருக்கிறேன்.

    நாகைப் பகுதியில் பார்ப்பனர், அல்லாதார் என்ற வேறுபாடின்றி நெல்லுக்கடை மாரியம்மன் செடில் ஏறுதல் உண்டு.

    இன்று நெல்லுக்கடை மாரியம்மன் தல வரலாறு புத்தகம் கிடைக்கப்பெற்றேன். ஆனால் இதில் விரிவாக செடில் பற்றி ஒன்றும் இல்லை. கார்த்தவீரியன் - காத்தவராயன் கழுமரத்தில் ஏற்றப்பட்டது தொடர்பாக என்றுமட்டும்தான் உள்ளது. இதுபற்றிய மேல் விவரம் அறிந்தவர்கள் கொடுக்கலாமே?

    இந்த ஸ்தலம் 400 வருடங்களாக இருப்பதாகவும், இப்பொழுதுள்ள கோயிலும், தேரும் சுமார் 150 வருடப் பழமை வாய்ந்தது என்றும் தலபுராணம் சொல்கிறது.

    கோயிலின் முழுப் படத்தை இந்தமுறை சென்றபோது எடுக்கவில்லை. செடிலுக்காக மேலே கூரை வேயப்பட்டிருந்ததால் கோயில் முன்பக்கமாகக் கோபுரம் தெரியவில்லை. பின் ஒரு சமயம் எடுத்துப் போடுகிறேன், இல்லாவிட்டால் நம் நண்பர் அறுசுவை பாபு விழா முடிந்ததும் ஒரு படத்தை எடுத்துப் போடுமாறு கேட்டுக்கொள்வோம்!

    ReplyDelete
  13. பம்பை, உடுக்கை ஆகியவை தமிழ்ப் பழங்குடித் தெய்வ வழிபாட்டில் முக்கிய இடம் வகிப்பவை. அதோடு கூடிய ஒரு தாள லயம் - அந்த ஒலித்துண்டை இன்று மாலை அல்லது நாளைக்குள் இடுகிறேன்.

    காவடி எடுத்துச் செல்பவர், வெறும் வயிற்றில், தண்ணீரில் நனைந்த மஞ்சள் ஆடையுடன் கொதிக்கும் வெய்யிலில் செல்லும்போது இந்தத் தாளகதியில் தானாகவே சாமியாடத் தொடங்குவார்.

    ஆப்பிரிக்கத் தாளகதிக்கு இணையான பழங்குடித் தாளம் இது.

    அதையும் கூட "கும்பிடப் போன தெய்வம்" போன்ற கூத்தாடிப் பாடல்களில் கொண்டுவந்து கன்னாபின்னாவென்று உளறிக்கொண்டு சினிமாவில் ஆடவைத்து விடுகிறார்கள்.

    ReplyDelete
  14. பத்ரி
    நல்ல செய்திகளோடு எழுதியிருக்கிறீர்கள். இதை விட்டுவிடாமல் தொடர்ந்து இன்னும் எழுதுங்கள்.
    வெங்கட், என்ன இது , சும்மா நீங்கள் பாட்டுக்கு எழுதுங்கள். எல்லாப் பார்வைகளும் கண்டிப்பாக பதிக்கப் படவேண்டும்.
    அருள்

    ReplyDelete
  15. நன்றி பத்ரி. இக்கோவில் பற்றி தேடிக்கொண்டிருந்தபோது பதிவைப்பார்த்தேன். செடில் வலங்கைமான் (மாயவரம்) மாரியம்மன் கோவிலிலும் உண்டு. அங்கே ஒரு ஆடு, அப்புறம் ஒரு மனித உருவம் ஆகியவற்றைச் செடிலில் சுற்றுகிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம்.....செடிலில் சட்டகம் என்பது பெட்டி இல்லை தானே? ஒரு மானுடவியல் ஆய்வாளர் அதைப் பெட்டி என்று குறிப்பிடுகிறார். ?
    செடில், காத்தவராயன் சம்பந்தம் போலவே....அம்மைக்கும் செடிலுக்கும் நெருங்கிய தொடர்பு நம் வாய்மொழி இலக்கியத்தில் உண்டு.

    ReplyDelete
  16. நான் கொடுத்துள்ள படத்தில் இருப்பது போல, இது ஒரு frame தான் - சட்டகம்தான். பெட்டி அல்ல. நான்கு பக்கமும் மரத் துண்டுகள். நடுவில் ஒன்று. அதன் இரு பக்கங்களிலும் இரு கால்களையும் போட்டுக்கொண்டு ஒருவர் நிற்கலாம். சிறு குழந்தைகளை அதன்மீது உட்காரவும் வைக்கலாம்.

    ReplyDelete