Thursday, May 12, 2005

தகவல் அறியும் உரிமை மசோதா

பாராளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவை தாண்டி, பின் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்றதும், நீங்களும் நானும் நம் அரசிடமிருந்து பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.

[தகவல் அறியும் உரிமை மசோதா, 2004 pdf கோப்பாக. இந்த மசோதாவில் கிட்டத்தட்ட 150 மாற்றங்கள் செய்யப்பட்டுதான் நிறைவேற்றியுள்ளனர். இந்த மாற்றங்கள் என்ன என்பது இனிதான் தெரியவரும்! மேலதிகத் தகவல்களுக்கு Centre for Civil Society இணையத்தளம்.]

உதாரணத்துக்கு, C-DAC கொடுக்கும் குறுந்தட்டில் உள்ள மென்பொருள்களை வழங்கியுள்ளது யார், அவர்கள் எத்தனை பணம் வாங்கிக்கொண்டு இந்த மென்பொருள்களைக் கொடுத்துள்ளனர் என்ற தகவலை நம்மால் பெறமுடியும். 'தி ஹிந்து' செய்தியின்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் தகவல்களைப் பெற எந்தக் கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை. எனவே பிறர் ஏதோ கட்டணம் செலுத்தவேண்டும் என்று தெரிகிறது. என்.ஆர்.ஐ களுக்குத் தகவல்களைப் பெறும் உரிமை உண்டா எனத் தெரியவில்லை. மேல் விவரங்கள் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இந்தத் தகவல் அறியும் உரிமை சட்டமாக முதலில் இயற்றப்பட்டது தமிழகத்தில்தானாம். ஏப்ரல் 1996-ல், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இது நடந்துள்ளது. ஆனால் இந்தச் சட்டம் முழுமையாக மக்களுக்குப் பயன்படவில்லை என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இந்தச் சட்டத்தில் பல முக்கியமான தகவல்கள் விலக்கப்பட்ட பட்டியலில் உள்ளனவாம். தொடர்ந்து கோவா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும் அவ்வளவு சிறந்ததாக இல்லை என்று கேள்வி.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தில்லி, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களும் இதைப்போன்ற சட்டங்களை இயற்ற விரும்பி, அந்த முயற்சி பல்வேறு நிலைகளில் உள்ளன.

இப்பொழுது மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிற மாநில அரசுகளையும் இதைப்போன்ற சட்டங்களை இயற்றத் தூண்டலாம்.

அதன்பிறகு நாம் கையைப் பிசைந்துகொண்டு சும்மா இருக்கவேண்டியதில்லை. ஏதாவது சந்தேகம் என்றால் உடனடியாக அரசுக்கு ஒரு மனு கொடுக்க வேண்டியதுதான். கட்டவேண்டிய பணத்தைக் கட்டினால் தகவல் நமக்கு வந்துசேரவேண்டும்! ஏன் குறிப்பிட்ட ஒருவருக்கு ஒரு காண்டிராக்ட் சென்றுள்ளது, ஒரு குறிப்பிட்ட அமைச்சரகம் குறிப்பிட்ட ஊரில் குறிப்பிட்ட வேலையைச் செய்ய இதுவரை எவ்வளவு செலவழித்துள்ளது, டெண்டரில் யார் வென்றார்கள், என்ன செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்கள் என்று சகல விஷயங்களும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இன்னமும் மூன்று மாதங்கள் கழித்துப் பார்ப்போம், இந்தச் சட்டம் எப்படி வேலை செய்கிறது என்பதை!

5 comments:

  1. இது போன்ற ஒரு சட்டம் மும்பை மாநகராட்சியிலும் அமலில் உள்ளது. சென்ற வருடம் அங்கு சென்றிருந்த போது 'மிட்-டே' ஏட்டில் இந்த சட்டத்தின் மூலம் தகவலைப் பெற எவ்வளவு அலைச்சலும் பணமும் செலவாகிறது என்று தகவல் பெற முயன்ற சிலரைப் பேட்டி கண்டு போட்டிருந்தார்கள். சட்டமெல்லாம் சிறப்பாகத்தானிருக்கும், நடைமுறைதான் சிக்கலே.

    ReplyDelete
  2. காட்சி: இன்றிலிருந்து 90 நாள் கழித்து, அரசு அலுவலகம், மணி காலை பதினொன்று. வேலை நாள்

    Mr பொதுஜனம் நுழைகிறார்.

    வாயில் சேவகன் (அதிகாரமாக): யாரைப் பார்க்கணும்?

    Mr பொதுஜனம்: எனக்கு ஒரு தகவல் வேணும்பா!

    வாயில் சேவகன்: அதுக்கென்னங்க! குடுத்துடலாமே. ஹி..ஹி!! கவனிக்கிறது...

    Mr பொதுஜனம் (புரிந்து கொண்டு): இல்ல.. ஏதோ தகவல் பெறும் உரிமைச் சட்டமாமேப்பா!

    வாயில் சேவகன் (சற்று கடுப்பாக): சரி சரி. போய் நாலாம் நம்பர் டேபிள் முனுசாமியைப் பார்

    Mr பொதுஜனம் நாலாம் நம்பர் டேபிளை நோக்கிப் போகிறார். அங்கே ஒரு குடை இருக்கிறது. ஆள் இல்லை. Mr பொதுஜனம் பக்கத்து டேபிளில் விசாரிக்கிறார்.

    பக்கத்து டேபிள்: முனுசாமிதானே. வந்துட்டார். இதோ குடையிருக்குல்ல! இங்கதான் போயிருக்கார். வந்துருவார். ஒரு பத்து நிமிஷம. கழித்து வாங்க!

    ஒவ்வொரு 10 நிமிடமாக 10 தடவை Mr பொதுஜனம் வந்து பார்த்த பின் முனுசாமி சொந்த வேலை பார்த்து விட்டு உள்ளே செல்கிறார். Mr பொதுஜனம் அவரிடம் போய் ஆவலாக நிற்கிறார்.

    முனுசாமி பக்கத்து டேபிளுடன் அரட்டையடிக்க ஆரம்பிக்கிறார்.

    Mr பொதுஜனம் (பவ்யமாக): சார்! ...... சார்!!

    முனுசாமி (சிடுசிடுப்புடன்): என்ன சார் வேணும்? இப்பதானே வந்தேன். நீங்களே பாத்தீங்கள்ள. எனக்கு தலைக்கு மேல வேல கிடக்கு. யார் உங்கள இங்க அனுப்புனது?

    Mr பொதுஜனம் (பவ்யமாக) தனது தேவையைச் சொல்கிறார்.

    முனுசாமி: அட அதுவா சார்.. அதுக்கு நீங்க ராமசாமியையில்ல பாக்கணும். தேவையில்லாம காத்துக் கிடந்துட்டீங்களே. அடுத்த செக்ஷனில் ராமசாமியைப் பாருங்க...

    Mr பொதுஜனம் தளர்ந்த நடையுடன் ராமசாமியின் டேபிளைத் தேடிக் கண்டு பிடித்துச் செல்கிறார். மேஜை மேல் ராமசாமியின் கைப்பை இருக்கிறது. ராமசாமி இல்லை..

    வாயில் சேவகன் அலட்சியமாக Mr பொதுஜனத்தைப் பார்த்துக் கொண்டே பக்கத்து மேஜையைப் பார்த்து நமட்டுச் சிரிப்புடன் கடந்து போகிறான்..

    இதைத் தவிர வேறு எதையாவது எதிர் பார்க்கிறோமா என்ன?

    ReplyDelete
  3. Hi,

    Do you publish an RSS feed? I want to subscribe to your blog thru Bloglines. Thanx

    ReplyDelete
  4. "விடைத்தாள்கள் தகிடுதத்தம்" குறித்த மறுமொழிகள் பக்கத்தினை திறக்க முடியவில்லையே! நீக்கி விட்டீர்களா?

    ReplyDelete
  5. அண்ணே மிகவும் நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள். நன்றி பத்ரி.

    இது நான் ப்ளாக் ஆரம்பித்த நட்களில் குறித்தது:

    //அரசின் நோக்கு, சிந்தனாவதிகளினாலும் மக்களாலும் குறைந்த பட்சம் ஒரு சுற்றாவது கேள்விகேட்கபட வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டும்...

    இதை கொண்டுவர அரசின் மாதாந்திர , வருடாந்திர வரவு செலவுகளை ,அனைவரும் பார்க்கும் படியான ஒரு திட்டம் இருத்தல் அவசியம்...
    இதற்கு இணையம் ஒரு சரியான உத்தியாக இருக்கும்...

    இதனைக்கொண்டு , இனிவரும் மாதங்களில் அரசின் செலவு குறித்த மக்களின் திருப்தியையும், அதிருப்தியையும் தெரிவிக்கப்படவேண்டும்..
    அத்ருப்தியை உடைய செலவுகள் ஆரயப்பட வேண்டும், அவசியப்பட்டால் நிருத்த பட வேண்டும்,

    வீட்டு வரவு செலவு கணக்கு போல மக்களின் முன் அரசின் வரவு செலவு கணக்கு வைக்கப்படவேண்டும்..

    அரசின் வாணிப, வரவு செலவு கணக்கு, ஒரு சாதாரண குடியானவனுக்கும், எளிதில் புரியும் வகையிலும், அவ்ற்றின் ஏற்ற இறக்க காரணங்கள் அவனுக்கு ஒரு விளங்கும் வகையில் இருத்தல் அவசியம்... (இதற்கு உதாரண தர முயல்வேன் விரைவில்..)//



    இணையத்தில் மெதுவாக இம்மாதிரியான தகவல் பரிமாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம்.
    பே-பால்(paypal) போன்று காசு கட்டி தகவலைப் பார்க்கும் வசிதி ஒரு நல்ல ப்ராஜக்டாக அமையும் அரசுக்கு.

    ReplyDelete