ஜூன் 2005 அமுதசுரபி இதழ் உயர்கல்விச் சிறப்பிதழாக வந்துள்ளது. இணையத்தில் ஏற்ற நாளாகலாம். அதனால் முடிந்தவர்கள் கடையில் காசு கொடுத்து வாங்கிப்படிக்கவும்!
இந்த இதழில் இரண்டு நேர்காணல்கள்: முன்னாள் அண்ணா பல்கலை துணைவேந்தரும், தற்போது சென்னை வளர்ச்சிக் கல்வி ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணனுடன் 'தீம்தரிகிட' ஞானி உரையாடுகிறார். உயர்கல்வியின் தரம், தேர்வுமுறை, கல்விச்சூழல் போன்ற பல விஷயங்களைப் பற்றி விவாதம் உள்ளது. தில்லி, புதுவை, வார்சா பல்கலைகளில் பணி செய்த முனைவர் இந்திரா பார்த்தசாரதியுடன் விரிவுரையாளர் ஆரூர் புதியவன் உரையாடுகிறார். இதுவும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட உரையாடல்தான்.
'உயர்கல்வியில் மொழிச்சிக்கல்' என்ற தலைப்பில் மணவை முஸ்தபா உயர் கல்வியில் தமிழ் வழியாகக் கல்வி கற்பிக்க வேண்டிய அவசியத்தினைப் பற்றிப் பேசுகிறார். 'இந்தியாவில் ஆராய்ச்சிக் கல்வி' என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் ஆராய்ச்சிக் கல்வி என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் தரமற்ற கூத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். இந்தியக் கல்வி முறையை அமெரிக்க வழிக்கு மாற்றி நான்கு வருட இளநிலைப் படிப்பைக் கொண்டுவரவேண்டும், முதுநிலைப் படிப்பு சில விதிவிலக்குகளுடன், முழுக்க முழுக்க ஆராய்ச்சி சார்ந்ததாக இருக்க வேண்டும் (MBA, M.Eng போன்ற சிலவற்றைத் தவிர்த்து), பிஎச்.டி தரத்தை உயர்த்தவேண்டிய அவசியம், எம்.பில் படிப்பை அறவே ஒழிக்க வேண்டும், அஞ்சல் வழியாக நடக்கும் ஆராய்ச்சிப் படிப்பை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், பிஎச்.டி படிப்பவர்களுக்கு அதிக அளவில் உதவித்தொகை - எல்லாப் படிப்புகளுக்கும், எல்லாப் பல்கலையிலும் சமமாக - வழங்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய சிலவற்றை எழுதியுள்ளேன்.
'தனியார் பல்கலைக் கழகங்கள்' பற்றி என் நண்பர் சத்யநாராயண் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சத்தீஸ்கார் தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2002 பற்றியும், அதைத் தொடர்ந்து பேரா.யஷ்பால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பற்றியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும், எந்தவகையில் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டலாம் என்றும் எழுதியுள்ளார். 'பண்டித' படைப்பாளிகள் பற்றிய திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரை, சமீபத்தில் காலமான ராமகிருஷ்ண மடத்தின் தலைமைக் குரு ரங்கநாதானந்தா எழுதிய நான்கு புத்தகங்களைப் பற்றி வெங்கட் சாமிநாதன் கட்டுரை ஆகியவையும் இந்த இதழில்.
கவளம்
8 hours ago
//சத்தீஸ்கார் தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2002 பற்றியும், அதைத் தொடர்ந்து பேரா.யஷ்பால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பற்றியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும், எந்தவகையில் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டலாம் என்றும் எழுதியுள்ளார்.//
ReplyDeleteகடந்த பிப்ரவரி மாதம், உச்சநீதிமன்றம் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள 112 பல்கலைக்கழகங்களை மூட உத்தரவிட்டது. அந்த மாநில அரசு, தனியார் பல்கலைக்கழகங்களைத் துவக்குவதற்கான வரைமுறைகளைத் தளர்த்தி, ஒரு சட்டம் இயற்றியது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, ஆளாளுக்கு டுடோரியல் காலேஜ் போல, ஒரு பல்கலைக்கழக்த்தை ஆரம்பித்துவிட்டனர். இதிலே சில பல்கலைக்கழகங்களின் பெயர்களைக் கேட்டாலே, டுபோகூர் என்று தோன்றும். dolphin univeristy, lovely univeristy, Apple International University. Aptech University, Global University, Supreme University. இதை விட வேடிக்கை என்ன என்றால்., மூட உத்தரவிடப்பட்ட பல பல்கலைக்கழங்கள், குறிப்பாக ராய் பல்கலைக்கழகம், அடிக்கடி டைம்ஸ் ஆ·ப் இந்தியா உள்ளிட்ட தேசிய நாளிதழ்களில் முழுப்பக்க, வண்ண விளம்பரம் கொடுத்து வந்ததுதான். எத்தனை லாபத்தை எடுக்க நினைத்து இவ்வளவு செலவு செய்திருப்பார்கள்? அதுக்குப் பிறகு கல்வித்தரமாவது ஒன்றாவது? இதே போல உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன.