Sunday, May 29, 2005

When I ask for a barber, I expect him to bring his tools

இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு ஒரு மாதம் முன் வங்காளம் கடுமையான மதப் பூசல்களில் மாட்டிக்கொண்டிருந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது வங்காளத்தின் பிரதமர் சுஹ்ராவார்தி. காந்தி கொல்கொத்தா சென்று முகாமிட்டார். முஸ்லிம் பெண்மணி ஒருவரது வீட்டில் போய்த் தங்கினார். சுஹ்ராவார்தியையும் தன்னுடனேயே தங்குமாறு வற்புறுத்தியிருந்தார்.

காந்தியின் அப்பொழுதைய காரியதரிசி வி.கல்யாணம். இளம் வயதினர். அனுபவம் குறைந்தவர். அவருக்கு எப்பொழுதுமே வேலை செய்துகொண்டே இருப்பதுதான் பிடிக்குமாம். ஆனால் கொல்கொத்தா வந்த தினத்திலிருந்து ஒரு வேலையும் இல்லை. காந்தி எழுதச் சொல்லும் கடிதங்களை எழுதுவது கல்யாணத்தின் ஒரு வேலை. ஆனால் தினமுமோ இந்துக்களும் முஸ்லிம்களும் மாறி மாறி காந்தியைச் சந்தித்து புகார் செய்து கொண்டிருந்தனர். சில நாள்கள் பொறுத்துப் பார்த்த கல்யாணம் காந்தியைச் சந்தித்து தனக்கு செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை, அதனால் மீண்டும் ஆஸ்ரமத்துக்கே சென்றுவிட அனுமதி தரவேண்டும் என்று கேட்க நினைத்தார். ஆனால் காந்தியைச் சந்திக்கக்கூட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

கடைசியாக காந்தி மலம் கழிக்கப் போகும் நேரத்தைத் தேர்ந்தெடுத்தார். சரி, மலம் கழித்து முடித்து வரும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தார். காந்தி வேலையை முடித்துத் திரும்பி வரும்போது அவரிடம் சென்று தனக்கு எந்த வேலையும் இல்லை என்று சொன்னார்.

"வேலைதானே வேண்டும்? இப்பொழுதுதான் மலம் கழித்து விட்டு வந்திருக்கிறேன். போய் அதைச் சுத்தம் செய்."

சரி... என்று சொல்லிவிட்டு உடனடியாக அந்த வேலையை செய்திருக்கிறார் கல்யாணம்.

-*-

எண்பத்து நான்கு வயதான கல்யாணம் இப்பொழுது சென்னையில் வசிக்கிறார். நன்றாக நடக்கிறார், பேசுகிறார், எழுதுகிறார். மெல்லிய தேகம். கூர்மையான கண்கள். பிரகாசமான முகம். காந்தியிடம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் காரியதரிசியாக இருந்திருக்கிறார். காந்தி கோட்சேயால் சுடப்பட்டபோது காந்தியின் அருகில் நின்று கொண்டிருந்தார் கல்யாணம். அதற்கு மூன்று நாள்கள் முன்னதாகத்தான் காந்தி அவருக்கு ரூ. 35க்கு ஒரு காசோலை கொடுத்திருக்கிறார். அதனை முதல் நாள்தான் வங்கியில் கொடுத்துள்ளார் கல்யாணம். காந்தி கொலை செய்யப்பட்ட மறுநாளே உடனடியாக வங்கிக்கு ஓடிச்சென்று அந்தக் காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வந்துவிட்டாராம். ரூ. 35 பெரிதா, காந்தி கடைசியாகக் கையெழுத்திட்டுத் தந்த காசோலை பெரிதா என்ற கேள்விக்கு விடைகாண அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

இன்றும் சென்னையில் தான் வசிக்கும் தெருவினைச் சுத்தமாகக் கூட்டிப் பெருக்குகிறார் கல்யாணம். ஒரு நாள் விடாமல்.

கல்யாணம் காந்தியிடம் காரியதரிசியாக விரும்பிப்போய்ச் சேரவில்லை. அவருக்கு அப்பொழுது வீட்டுவேலைகள் செய்வது, சமையல் செய்வது, கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்வது போன்றவற்றில்தான் விருப்பம். ஆனால் காந்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது சிறைப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது காரியதரிசியாக இருந்த மஹாதேவ் தேசாய் இறந்துவிட்டார். எனவே சிறையிலிருந்து வெளியே வந்ததும் ஒரு காரியதரிசியைத் தேடிக்கொண்டிருந்த காந்தி, அப்பொழுது வார்தா ஆஸ்ரமத்தில் இருந்த கல்யாணத்தையே அந்த வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

காந்தியின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது?

காலையில் 3.30க்கு எழுந்திருப்பார். உடனே (குளிக்காமல்) வழிபாடு (Prayer).

பின் ஒரு பளிங்கு டம்ளரில் கொதிக்கக் கொதிக்க வென்னீர், அதில் ஒரு எலுமிச்சை பிழிந்து, இரண்டு ஸ்பூன் தேன் விட்டுக் கலந்த பானத்தைக் குடிப்பாராம்.

பின் காலை நடை. கிட்டத்தட்ட 4.30 மணிக்கு நடக்க ஆரம்பித்தால் 8.00 மணி வரை நடந்துவிட்டு ஆஸ்ரமம் வந்து சேர்வாராம். அந்த நேரத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைச் சந்திப்பார். அதாவது நடந்துகொண்டே செல்லும்போது யார் அவருடன் பேச விரும்புகிறார்களோ அவர்கள் முன்னதாகவே சொல்லி வைத்துக்கொண்டு பேச வருவார்கள்.

ஆஸ்ரமம் திரும்பியதும் கடுகு எண்ணெயில் எலுமிச்சை பிழிந்து, அதை உடலில் தேய்த்துக்கொண்டு குளியல். சோப் கிடையாது. எப்பொழுதும், கடுமையான கோடை காலத்திலும், வென்னீரில்தான் குளிப்பாராம். குளிக்கும் நேரத்திலும் சந்திப்புகள் தொடரும்.

சாப்பாடு: நெருப்பில் வாட்டிய கோதுமை ரொட்டி. அத்துடன் தொட்டுக்கொள்ள பரங்கிக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்வடியும் காய்கறிகளால் ஆன கூட்டு. கிழங்குகள் கிடையாது. இதுதான் ஆஸ்ரமத்தில் உள்ள அனைவருக்குமான உணவு. ஆனால் காந்தி மட்டும் இதில் உப்பே சேர்த்துக்கொள்ளாமல் சாப்பிடுவாராம். தண்டி யாத்திரைக்குப் பின்னர் தான் உணவில் உப்பே சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்திருந்தாராம். அரிசிச்சோறு சாப்பிடுவதில்லை (ஏனெனில் தூக்கம் வரும் என்று நினைத்தார்.) ஆனால் கல்யாணத்தில் தூண்டுதலில்பேரில் அவ்வப்போது (உப்பு சேர்க்காத) இட்லி சாப்பிடுவார். அதுவும் திங்கள் அன்று. அதைத்தவிர ஆட்டுப்பால், வேர்க்கடலை.

ஒவ்வொரு திங்களும் மவுன விரதம்.

மதியம் முதல் இரவு வரை படிப்பது, எழுதுவது, மக்களைப் பார்ப்பது, பேசுவது.

கல்யாணத்தின் வேலை என்ன?

தொடக்கத்தில், கல்யாணம் தன்னை காந்தியின் காரியதரிசியாகவே கருதவில்லை என்று பார்த்தோமல்லவா? அப்பொழுது காந்தியுடன் கல்யாணமும் ரயில் வண்டியில் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர். காந்தி கல்யாணத்தை ஒரு கடிதம் தட்டச்சு செய்து எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். கல்யாணம் தன்னிடம் தட்டச்சு இயந்திரம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதற்கு காந்தி, "When I ask for a barber, I expect him to bring his tools" என்று சற்று கடினமாகவே பேசியிருக்கிறார். இதனால் கல்யாணம் கோபம் கொண்டு ஆஸ்ரமத்தில் இருக்கும் தன் நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பின் தொடர்ந்து காந்தியின் காரியதரிசி பொறுப்பை ஏற்று வந்துள்ளார்.

காந்திக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படிப்பது. அதில் அவசியமான கடிதங்களை மட்டும் காந்தியிடம் காண்பிப்பது. அதற்கு காந்தி பதில் சொன்னால் அதனை எழுதிக்கொள்வது. காந்தி குஜராத்தி, ஹிந்தியில் தானெ எழுதிக்கொள்வாராம். ஆங்கிலத்தில் எழுதுவதற்கு பதில் அவர் பேச, கல்யாணம் அதனை எழுதிக்கொள்வார்.

காந்தியின் ஆட்டோகிராஃப் கேட்டுவரும் கடிதங்களை கல்யாணம் தானே கவனித்துக்கொள்வார். ஒரு கையெழுத்துக்கு ரூ. 5 என்று கணக்கு வைத்து அதிலிருந்து வரும் பணத்தை ஹரிஜன் நல நிதியில் சேர்த்து விடுவார்கள். காந்தி சற்று ஓய்வாக இருக்கும் நேரம் பார்த்து அவரிடமிருந்து துண்டுத் தாள்களில் நிறையக் கையெழுத்துகளை வாங்கி வைத்துக்கொண்டு, ரூ. 5 கொடுப்பவர்களுக்கு அந்தக் கையெழுத்திட்ட தாள்களை கல்யாணம் கடிதமாக அனுப்பி வைப்பார்.

ஹரிஜன் பத்திரிகை அஹமதாபாத் நவஜீவன் கார்யலாயாவிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தது. காந்தி எங்கிருந்தாலும் அதற்குக் கட்டுரைகள் எழுதி அனுப்புவார். இந்தப் பத்திரிகை ஆங்கிலம், குஜராத்தி, தமிழ் (?) ஆகிய மொழிகளில் வந்தது. ஆங்கில எடிஷனில் வரவேண்டிய கட்டுரைகளை காந்தி சொல்லச்சொல்ல, கல்யாணம் எழுதிக்கொண்டு, பின்னர் அதைத் தட்டச்சு செய்துவைத்துக்கொள்வார். ஒவ்வொரு வாரமும் மொத்தமாக அனைத்தையும் அஹமதாபாத் அனுப்ப வேண்டும்.

-*-

இப்படியாக காந்தி இறக்கும் நாள் வரையில் கல்யாணம் அவர் அருகிலேயே இருந்தார். காந்தியின் இறப்புக்குப் பின் கல்யாணம் நேருவிடம் உதவியாளராகச் சேர்ந்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகே அவரிடமிருந்து கிளம்பி வந்துவிட்டார். அப்பொழுது நேரு பிரதம மந்திரி. அவரிடம் M.O.மதாய் என்பவர் பிரதம உதவியாளராக இருந்தார். மதாய்க்கு குடி, குட்டி போன்ற பல கெட்ட பழக்கங்கள் இருந்தன என்றும் நேரு இல்லாதபோது நேருவின் வீட்டிலேயே மதாய் கூத்தடித்ததாகவும் அதனைத் தான் நேருவின் பார்வைக்குக் கொண்டுவந்தபோது நேரு கண்டுகொள்ளாததால் தான் நேருவிடமிருந்து விலகி வந்துவிட்டதாகவும் சொல்கிறார் கல்யாணம்.

சில நாள்கள் ராஜாஜியின் உதவியாளராகவும் இருந்திருக்கிறார் கல்யாணம்.

-*-

கல்யாணத்தின் அரசியல் பற்றிய கருத்துகள் முதிர்ச்சியடையாத நிலையிலேயே உள்ளது. காந்தியுடன் நெருங்கிப் பழகியிருந்தாலும் ஏன் காந்தி சுதந்தரத்துக்காகப் பாடுபட்டார் என்பதை இன்றுவரையில் அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறார் கல்யாணம். மீண்டும் மீண்டும் - தன் பேச்சின்போது - வெள்ளைக்காரன் இருந்தால் நாடு இன்னமும் சுபிட்சமாக இருக்கும் என்பதனையே சொல்லிக்கொண்டிருந்தார். இந்த விஷயம் மிகவும் உறுத்தியது.

இன்று நாட்டில் ஊழல் பல இடங்களிலும் தலைவிரித்தாடினாலும் 1947டன் ஒப்பிட்டால் நாம் மிகவும் வளர்ச்சியடைந்திருக்கிறோம். காலனியாதிக்கத்தின் நோக்கங்கள் என்ன, அதனால் எத்தனை பேருக்கு நன்மை இருந்தது, எத்தனை பேர் திண்டாடினார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் கல்யாணம் இதுவரையில் அறிந்துகொண்டாரில்லை.

-*-

வெள்ளி, 27 மே 2005 மாலை சுமார் 4.30 மணி அளவில் பாரத் சேவக் சமாஜ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்தான் கல்யாணம் இதையெல்லாம் பேசினார். நேருவைப் பற்றிப் பேசுவதாக இருந்தது, ஆனால் நேருவுடன் அதிக நாள்கள் இல்லாததால் பேச்சு காந்தியிடமே போய் முடிந்தது.

நேருவுக்கும், காந்திக்கும் கோபம் வருமா என்று கேள்வி கேட்டார் ஒருவர்.

ஒருமுறை நேருவிடம் ஒருவர் வந்து புகார் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாராம். அதனால் மிகவும் கோபமடைந்த நேரு "யே அதாலத் நஹி ஹை, ஜூட் மத் போல்னா!" (இது நீதிமன்றம் இல்லை, பொய் பேசாதே!) என்றாராம்.

முதலில் பேச்சு எங்கெங்கேயோ போய் உருப்படியில்லாமல் முடிய இருந்ததை தெய்வாதீனமாகக் காப்பாற்றியவர் ராணிமைந்தன். இவர் ஒரு நல்ல பத்திரிகையாளர். அதனால் இடையில் குறுக்கிட்டு சில கேள்விகளைக் கேட்க, அதற்கு பதிலளிக்கும் விதமாக கல்யாணம் பல சுவாரசியமாக விஷயங்களைச் சொன்னார்.

இந்தப் பேச்சைத் தொகுத்து ஒலிவடிவில் கொடுத்திருக்கிறேன், விண்டோஸ் மீடியா பிளேயர் கோப்பாக. (6.37 MB, 53.04 நிமிடங்கள்.)

12 comments:

  1. ஹரி: கல்யாணத்தின் படத்தை எடுத்தேன். ஆனால் என் கேமரா இப்பொழுது என்மீது கோபத்தில் இருப்பதால் பல படங்களைக் கடித்துத் துப்பிவிடுகிறது. கேமராவை மாற்றவேண்டும்.

    -*-

    பிரசன்னா: கல்யாணத்தின் முகவரியை வாங்கி உங்களுக்குத் தருகிறேன்.

    ReplyDelete
  2. இது ஏற்கனவே THE HINDU-வில் ரெண்டு வருஷங்கள் முன்பு SUNDAY SUPPLEMENT-இல் வாசித்த செய்தி தான் என்றாலும் தற்போது இங்கு படித்தது சிலிர்ப்பாக இருந்தது. திரு. கல்யாணம் அவர்களின் குரல் கேட்டதும் ப்ரமிப்பாக இருந்தது. அவர் உயிரோடு இருப்பதையும் அவர் பற்றின தகவல்களை தொகுத்து வழங்கியதற்கும் நன்றி பத்ரி.

    ReplyDelete
  3. நிராத் செளத்ரி சொன்ன நிறைய விஷயத்தினை மெய்ப்பிக்கிறது கல்யாணத்தின் உரைகள். நான் காந்தி எதிர்ப்பாளன் அல்ல. அதே சமயத்தில் காந்தி பக்தனும் அல்ல.

    ஆனால், இன்னும் வெள்ளைக்காரன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர் காந்திக்கு வெகு அருகிலிருந்தார் என்று யோசிக்கும் போது வியப்பாகவும், அதனை அவர் சொல்லதூண்டியது எது என்பதும் [58 வருடங்களில் நம்மால் காந்தியோடு நெருங்கி பழகிய ஒருவரின் மனத்தினை சுதந்திரத்தால் மாற்ற முடியவில்லை என்றால் தவறிருக்கிறது என்றுதானே பொருள்]சிந்தனையை தூண்டுகிறது.

    நல்ல பதிவு!.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. //கல்யாணத்தின் அரசியல் பற்றிய கருத்துகள் முதிர்ச்சியடையாத நிலையிலேயே உள்ளது. காந்தியுடன் நெருங்கிப் பழகியிருந்தாலும் ஏன் காந்தி சுதந்தரத்துக்காகப் பாடுபட்டார் என்பதை இன்றுவரையில் அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறார் கல்யாணம்.//

    ஒரு பக்கம் இது ஆச்சர்யமாக இருந்தாலும், காந்தியின் ஒரு அலுவலர் அவரது அரசியல் கருத்துக்களை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு வகையில் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

    அதே சமயம் அரசியல் ரீதீயான உரையாடலை காந்தியைச் சுற்றியிருந்த எவரோடுமோ அல்லது அவரை விமர்சிப்பவர்களோடோ அவர் நிகழ்த்தியிருக்கிறாரா என்று யோசித்தாலும் கல்யாணத்தின் அரசியல் அறிவைப் பற்றி ஆச்சர்யமேற்படவில்லை. காந்தியை வழிபடுபவர்கள் எதிர்ப்பவர்கள் என்ற நிலைபாடுகள் தான் அவரது தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது.


    //ஒரு கையெழுத்துக்கு ரூ. 5 என்று கணக்கு வைத்து அதிலிருந்து வரும் பணத்தை ஹரிஜன் நல நிதியில் சேர்த்து விடுவார்கள். //

    காந்தியும் கையெழுத்துக்கு காசு வாங்குவார் என்பது எனக்கு புதிய தகவல். பெரியார் தான் கையெழுத்து, மாலை அணிவித்தல், விருந்துண்ண வருதல் போன்றவைகளுக்கு பணம் வாங்குவார் என்று நினைத்திருந்தேன்.

    பதிவுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  6. பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  7. நல்ல பதிவு பத்ரி, நன்றி.

    ReplyDelete
  8. நல்ல பதிவு பத்ரி. உங்கள் அறிவிப்பிற்கு பின்னால் இந்த நிகழ்ச்சிக்கு வர முயற்சி செய்தேன். முடியவில்லை. :(

    'இந்தியாவிற்கு காந்திதான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்' என்று பாடப்புத்தகங்களில் படித்த போது நம்பினாலும், பின்பு நூலங்கங்களில் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது அது அவ்வாறு இல்லை என்று அறியும் போது ஆச்சரியமாக இருந்தது. என்றாலும், நடைமுறையிலிருந்து முரணான, அகிம்சை என்கிற ஒரு எளிய ஆயுதத்தை மட்டும் தாங்கிச் சென்ற அந்த எளிய மனிதரின் பின்னால் கோடிக் கணக்கானவர்கள் நம்பிக்கையுடன் சென்றபோது, எது அவ்வாறு அவர்களை செய்யத் தூண்டியிருக்கும் என்று ஆராய ஆசையாயிருக்கிறது.

    இந்தியா இப்போது பல துறைகளில் வளர்ச்சியடைந்திருந்தாலும், சுதந்திரத்திற்கு முன்பிருந்தவர்கள், இப்போதிருக்கிற சூழ்நிலையை வெள்ளைக்காரன் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அந்த மனநிலையை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  9. /வெள்ளைக்காரன் இருந்தால் நாடு இன்னமும் சுபிட்சமாக இருக்கும் என்பதனையே சொல்லிக்கொண்டிருந்தார். இந்த விஷயம் மிகவும் உறுத்தியது./
    இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சுதந்திரம் வேண்டும்தான். ஆனால்
    1850 லிருந்து இன்றைய 2005 வரை ப்ரிட்டனும் =
    1850 லிருந்து இன்றைய 2005 வரை இந்தியாவும் என்று பார்க்கபோனால் எனக்கும் இதில் ஆட்சேபனை உள்ளது.

    At home, public opinion against the practice grew as returning missionaries sought opposition against suttee, By 1829 Lord Bentinck, Governor General of India, had wholly banned suttee, although it continued throughout the century in spite of the ban.

    ReplyDelete
  10. மாறாக, காந்தியின் உளநிலை எந்த அளவுக்கு இருந்தது என்பது?
    //"வேலைதானே வேண்டும்? இப்பொழுதுதான் மலம் கழித்து விட்டு வந்திருக்கிறேன். போய் அதைச் சுத்தம் செய்."//
    அதற்காக அவருடைய ஹரிஜன் சேவையை குறைத்து மதிப்பிடவில்லை.

    ReplyDelete
  11. Can I please have the address of Mr.Kalyanam. I'm impressed by him & respect him a lot. If you can give me the address I can write to him.
    Many thanks.

    ReplyDelete