Wednesday, October 26, 2005

நாகபுரி ஆட்டம்

தினமணி நாக்பூரை விடாமல் நாகபுரி என்றுதான் குறிப்பிடும். இனி நானும் அப்படியே.

வெகு நாள்களுக்குப் பிறகு உருப்படியான கிரிக்கெட் இந்தியாவிடமிருந்து. கங்குலியை அணியை விட்டுத் தூக்கியதுமே அணிக்கு சந்தோஷம் வந்தது போல. டெண்டுல்கர் மீண்டும் முழுமையாகத் திரும்பி வந்திருக்கிறார் என்று தெரிந்ததனாலா? இல்லை, திராவிட்/சாப்பல் கூட்டணியில் அணிக்கு ஏறுமுகம்தான் என்று தோன்றிய காரணமா? தெரியவில்லை.

அத்துடன் ஆடுகளம் முதலில் பேட்டிங்குக்கு சாதகமாகவும், பின் சுழல்பந்துக்கு சாதகமாக இருந்ததும், திராவிட் டாஸில் ஜெயித்ததும் ஒரு காரணம்.

டெண்டுல்கரை சேவாகுடன் பேட்டிங்கைத் தொடங்க அனுப்பியது ஒரு காரணம் (கங்குலி இதைச் செய்திருக்க மாட்டார்?). இர்ஃபான் பதானை மூன்றாவதாக அனுப்பியது ஒரு காரணம் என்று பலரும் சொல்கிறார்கள். அது அவ்வளவு பெரிய விஷயமா என்று தெரியவில்லை. சேலஞ்சர் கோப்பையின்போது பதானை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பினார் சாப்பல் என்கிறார்கள். பிஞ்ச் ஹிட்டர் என்று யாராவது ஒருவரை அனுப்புவது வழமையான விஷயம்தான். ஆனால் இப்பொழுது பவர்பிளே 1, 2, 3 என்று இருக்கும்போது இரண்டு பிஞ்ச் ஹிட்டர்களைக் கூட அனுப்பலாம்.

இந்த ஆட்டத்தைப் பார்க்கவில்லை. கேட்டேன். ஆல் இந்தியா ரேடியோ கமெண்டரிதான் என்றாலும் அவ்வளவு மோசமில்லை. 'ये बी.एस.एन.एल चौका ... Connecting India!' என்று கத்திக் கத்தி கழுத்தறுத்தார்கள். "The ball is in the air and a fielder is running towards it...." என்று கத்தி, இதயத் துடிப்பை சற்றே நிறுத்தி, பின் "And that's a six" என்றார்கள். காலையில் நிறையவே சிக்சர்கள் இருந்தன. டெண்டுல்கர் தில்ஹாரா ஃபெர்னாண்டோ பந்துவீச்சில் அனாயாசமாக அடித்து ஆரம்பித்து வைக்க, அடுத்து பதான் நான்கு சிக்சர்கள் அடித்தார். பதான் அடித்த முதல் ரன்களே வாஸ் பந்தில் ஒரு சிக்சர். பின் தில்ஷன் போட்ட ஆஃப் ஸ்பின் பந்தில் ஒன்று, உபுல் சந்தனாவின் லெக் ஸ்பின்னில் இரண்டு. டெண்டுல்கரும் சந்தனா பந்தில் இன்னுமொரு சிக்ஸ் அடித்தார். மஹேந்திர சிங் தோனி இரண்டு சிக்சர்கள். எப்பொழுதும் சாதுவாக விளையாடும் திராவிட் கூட வாஸ் பந்துவீச்சில் ஓர் இன்ஸைட் அவுட் ஷாட் சிக்சர் அடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆக ஒன்பது முறை ஆல் இந்தியா ரேடியோ பயமுறுத்தியது.

டெண்டுல்கரும் பதானும் மிகச் சுலபமாகவே ரன்கள் சேர்த்தனர். முதலில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் வந்தாலும் ரன் ரேட் ஆறுக்குக் கீழே போகத்தொடங்கியது. ஆனால் ஸ்பின்னர்கள் வந்ததும் ரன் ரேட் எகிறி - பதான் முழுப்பொறுப்பு - 6.5 என்ற அளவிலேயே இருந்தது. முரளிதரன் லேசுப்பட்ட ஆசாமி அல்ல என்றாலும் நேற்றைய ஆட்டத்தில் டெண்டுல்கர் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டார். 'பேடில் ஸ்வீப்' வசமாகக் கிடைத்தது. பதான் தில்ஷன், சந்தனா போன்றவர்களை அடித்து நிமிர்த்தி விட்டார். சந்தனாவின் முதலிரண்டு பந்துகள் 4, 6. இதுநாள் வரையில் முரளியும் கூட்டாளி ஸ்பின்னர்களும் எதிராளிகளை ரன்கள் எடுக்கவிடாமல் நெருக்குவதில் சமர்த்தர்களாக இருந்தார்கள். நேற்று கூட்டாளிகள் தடுமாறியதால் முரளியால் நெருக்க முடியவில்லை. ஜயசூரியா பந்து வீசவில்லை. அவர் பேட்டிங் பிடிப்பதே சந்தேகமாக இருந்து இந்த ஆட்டத்தை ஆட வந்திருந்தார்.

ஆனாலும் பதான்-டெண்டுல்கர் ஜோடி அவசரகதியில் ஆளுக்கொரு சதம் அடிக்க வாய்ப்பிருந்தும் விட்டுவிட்டனர். இரண்டுமே எளிதான, தேவையற்ற இழப்புகள். டெண்டுல்கரின் ஆட்டத்தில் பழைய துள்ளல், ஸ்டைல் எல்லாமே வந்துவிட்டதாக வர்ணனையாளர்கள் நினைத்தனர். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கவர் திசையிலும் மிட்விக்கெட் திசையிலும் பந்துகள் பறக்கின்றன என்றால், உண்மையாகத்தான் இருக்கவேண்டும்.

யுவராஜ் சிங் ரன்கள் எடுக்கத் தடுமாறினார். ஆனால் திராவிட் வந்தது முதலே ரன்களை எளிதாகச் சேர்த்தார். மஹேந்திர சிங் தோனியின் காட்டடி, திராவிடின் நுட்பமான விளையாட்டு இரண்டும் சேர்ந்து 350 என்ற இலட்சியத்தை அடைய வைத்தது.

351ஐப் பெறுவது எளிதான விஷயமல்ல. அத்துடன் ஆடுகளம் கொஞ்சம் ஸ்லோவாக விளையாடத் தொடங்கியது. பின் ஸ்பின்னும் சேர்ந்தது. இலங்கை அணித்தலைவர் அட்டபட்டு சீக்கிரமாகவே பதானிடம் அவுட்டானார். ஆனால் சங்கக்கார, ஜயசூரியாவுடன் சேர்ந்து விளாசத் தொடங்கினார். கேரளாவின் புதுப்பையன் ஸ்ரீசந்த் தன் முதல் ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாற ரன்கள் இங்கும் அங்கும் பறந்தன. ஆனால் ஜெயசூரியா அளவுக்கு அதிகமாகவே ரிஸ்க் எடுத்து விளையாடினார். இரண்டு பந்துகள் ஃபீல்டர்களுக்கு வெகு அருகில் கேட்சாகப் பறந்தன. ஸ்ரீசந்த்துக்கு பதில் வந்த அகர்கரும் ரன்களை எளிதாகக் கொடுத்தார். பத்து ஓவர்கள் முடிந்தபோது இலங்கையின் எண்ணிக்கை 74/1 !

இந்த நிலையில் திராவிட் அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது. ஆட்ட விதிமுறைகளில் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் என்னைக் கவரவில்லை. ஆனால் அந்த மாற்றங்கள்தாம் திராவிடுக்கு உதவின என்று சொல்லவேண்டும். முந்தைய விதிமுறைகள்படி முதல் பதினைந்து ஓவர்கள் தடுப்பு வியூகம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். ஆனால் இப்பொழுது 10, 5, 5 என்று மூன்று கட்டங்களாகப் பிரித்து பந்துவீசும் அணியின் தலைவர் எப்பொழுது கட்டுப்பாடுகள் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கலாம். திராவிட் உடனடியாக பவர்பிளேயை - தடுப்பு வியூகக் கட்டுப்பாடுகளை - விலக்கிக்கொண்டு ஹர்பஜன் சிங்கைக் கொண்டுவந்தார். 11வது ஓவரில் முன்னெல்லாம் இப்படிச் செய்திருக்க முடியாது. ஹர்பஜன் வந்த கணத்திலேயே பந்தின் வேகத்தைச் சரியாகக் கணிக்காமல் ஜயசூரியா ஷார்ட் கவரில் நின்ற திராவிடுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அட்டப்பட்டுவும் சந்தனாவை பிஞ்ச் ஹிட்டராக அனுப்பினார். ஆனால் அவருமே ரன்கள் ஏதும் எடுக்காமல் ஹர்பஜன் பந்தில் அவுட்டாயிருக்க வேண்டியது - ஸ்டம்பிங்காக. மூன்றாவது நடுவருக்குப் போய், சந்தேகத்தின் காரணமாக, அவுட் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டார். திராவிட் உடனடியாக பவர்பிளே-2ஐ எடுக்கவில்லை. அடுத்த ஓவர் சேவாகுக்குக் கொடுத்தார். சங்கக்கார தூக்கி வீசப்பட்ட பந்தை பந்து வீச்சாளருக்கே கேட்சாகக் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே ஓவர்களில் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் விழுந்த உடனேயே திராவிட் இரண்டு விஷயங்களை வேகமாகச் செய்தார். பவர்பிளே-2ஐக் கொண்டுவந்தார். இரண்டு புது மட்டையாளர்கள் தடுமாறுவார்கள், இந்நேரத்தில் ஓவர்களை வேகமாக வீசி மிச்சமுள்ள பவர்பிளே ஓவர்களை ஒழித்துவிடலாம்.

அத்துடன் சூப்பர் சப் முரளி கார்த்திக்கை உள்ளே கொண்டுவந்தார். சேவாக் பந்துக்கே விக்கெட் விழுகிறது, கார்த்திக் இன்னமும் நன்றாக வீசுவார் அல்லவா? ஒருமுனையில் ஹர்பஜன் அற்புதமாக வீசினார். மறுமுனையில் சேவாகுக்கு பதில் - விக்கெட் எடுத்த ஓவராக இருந்தாலும் சரி - கார்த்திக். ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் சந்தனா ரன்கள் அதிகம் எடுக்காமல் ஸ்டம்பிங் ஆக, உள்ளே வந்த ரஸ்ஸல் ஆர்னால்ட் மூன்றே பந்துகளில் பூஜ்யத்தில் அவுட்டாக, இந்திய அணியின் வெற்றி அப்பொழுதே நிச்சயமானது.

முதலில் கார்த்திக் நிறைய ரன்கள் கொடுத்தாலும் பின்னர் மிக அருமையாக வீசினார். அப்பொழுது ஆடுகளம் உடைய ஆரம்பித்திருந்தது. கார்த்திக் அடுத்தடுத்து ஜயவர்தனே, தில்ஷன், மஹரூஃப் ஆகியோரை அவுட்டாக்க, ஒன்பதாவது விக்கெட்டுக்காக சமிந்தா வாஸ் - லோகுஹெட்டிகே தில்ஹாரா (சூப்பர் சப்) ஆகியோர் நிறைய ரன்கள் பெற்றனர். அவர்கள் எத்தனை ரன்கள் பெற்றாலும் ஜெயிப்பது கடினம்தான். அந்த நேரத்தில் தேவையான ரன்ரேட் பத்துக்கும் மேல். திராவிட் புதுப்பையன் ஸ்ரீசந்தைக் கொண்டுவர அவரும் கடைசி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ஆட்ட நாயகனாக பதான், டெண்டுல்கர், திராவிட், ஹர்பஜன் ஆகியோரில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்திருக்கலாம். திராவிட்... அவரது அணித்தலைமைக்காகவுமாகச் சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றே நினைக்கிறேன்.

இந்தியா டாஸில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் ஒரு குழுவாக விளையாடுவதே பெரிய விஷயம். மொஹம்மத் காயிஃப் மூன்றாவது ஆட்டத்துக்கு அணிக்குள் வர வாய்ப்பு உள்ளது. கங்குலி நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பாமல் இருக்கவேண்டும். கங்குலி, காயிஃப் இருவருக்கும் இடையில் - கங்குலி கேப்டன் இல்லை எனும்போது - யாரை உள்ளே எடுக்கவேண்டும் என்பதில் சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறேன். இரண்டாவது மேட்ச் சுவாரசியமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

ஸ்கோர்கார்ட்

5 comments:

 1. //டெண்டுல்கர் மீண்டும் முழுமையாகத் திரும்பி வந்திருக்கிறார

  Yes Badri.

  defintely its a good news for an ardant fan of sachin like me that he is back to the game with his classic cover drives , straight drives ...

  //மொஹம்மத் காயிஃப் மூன்றாவது ஆட்டத்துக்கு அணிக்குள் வர வாய்ப்பு உள்ளது. கங்குலி நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பாமல் இருக்கவேண்டும். கங்குலி, காயிஃப் இருவருக்கும் இடையில் - கங்குலி கேப்டன் இல்லை எனும்போது - யாரை உள்ளே எடுக்கவேண்டும் என்பதில் சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறேன்

  But Tho' i'm not favor with Bengal dada, i still believe he is one among the greatest batsmen of the world cricket and he deserves his place in the squad.

  ReplyDelete
 2. Badri,

  Did Tendulkar use lighter bat this time? I could not judge from TV pictures.

  Some more doubts regarding the new rule. If a palayer while fielding needs some rest, can he be replaced by a fielder other than super substitute?(Only for fielding)

  Anbudan

  Rajkumar

  ReplyDelete
 3. //பழைய துள்ளல், ஸ்டைல் எல்லாமே வந்துவிட்டதாக வர்ணனையாளர்கள் நினைத்தனர். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கவர் திசையிலும் மிட்விக்கெட் திசையிலும் பந்துகள் பறக்கின்றன என்றால், உண்மையாகத்தான் இருக்கவேண்டும்.//

  துள்ளலும் ஸ்டைலும் டெண்டுல்கர் ஆட்டத்தில் மட்டும் இல்லை, உங்கள் வர்ணனையிலும் தான் :-)

  Welcome back, and gracias!

  ReplyDelete
 4. your flow is really nice...i felt the entire match in ur writings..keep it up...

  ReplyDelete
 5. ராஜ்குமார்: யாரை வேண்டுமானாலும் சப்ஸ்டிட்யூட்டாகக் கொண்டுவரலாம். சூப்பர் சப் மட்டும்தான் பந்துவீச்சு/பேட்டிங்குக்கு உள்ளே வரலாம். அப்புறம் ஒருவரை வெளியே எடுத்து, அவருக்கு பதில் சூப்பர் சப் உள்ளே வந்தாலும், வெளியேறியவர் வெறும் சப் ஆக வரலாம்.

  ReplyDelete