Monday, October 31, 2005

ஈராக் உணவுக்காக எண்ணெய் ஊழல்

குவைத் மீதான ஆக்ரமிப்புக்குப் பிறகு, அமெரிக்கா, நேச நாடுகள் ஈராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனைத் தோற்கடித்தன. அதையடுத்து ஐ.நா சபையால் ஈராக் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஈராக் வெளி நாடுகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது. பின்னர் ஈராக்கில் உள்ள மக்கள் கஷ்டப்படுவதனால், பெட்ரோலை விற்று, அந்தப் பணத்தை ஓர் எஸ்க்ரோ* கணக்கில் வைத்து அந்தப் பணத்தைக் கொண்டு அத்தியாவசியப் பொருள்களான உணவு, மருந்துகள் ஆகியவற்றை வாங்க ஐ.நா அனுமதி கொடுத்தது. இந்தத் திட்டத்துக்கு oil-for-food திட்டம் என்று பெயர்.

(* எஸ்க்ரோ வங்கிக் கணக்கு என்றால் இடைத்தரகராக ஒரு வங்கி இடம் பெற்றிருக்கும். பெட்ரோல் விற்பனை செய்த பணம் நேராக ஈராக் கைக்குப் போகாது. இந்த எஸ்க்ரோ வங்கிக் கணக்குக்குப் போகும். அதே போல அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கான பணம் இந்த எஸ்க்ரோ கணக்கிலிருந்து நேரடியாகக் கொடுக்கப்படும். அதாவது பணம் சதாம் ஹுசேன் கைக்குப் போனால் அவர் அதை வேறு எதற்காவது - ஆயுதங்கள் வாங்க - செலவு செய்துவிடுவார் என்ற பயம்.)

முதலில் யாருக்கு எண்ணெயை விற்பது, யாரிடமிருந்து உணவு, மருந்து, பிற அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது என்பதில் ஈராக்கின் ஒப்புதலும் தேவை என்று இருந்தது. இதை வைத்துக்கொண்டு தனக்கு வேண்டிய, பிடித்த நாடுகளின் நிறுவனங்களை எண்ணெய் விற்பதற்கும், பொருள்கள் வாங்குவதற்கும் ஈராக் தேர்ந்தெடுத்தது. அதில் தவறொன்றும் இல்லை.

ஆனால் இதிலும் ஊழல் செய்ய ஒரு வழியைக் கண்டுபிடித்தார் சதாம் ஹுசேன். எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தம் வழங்க வேண்டுமானால் அதற்கு சதாம் ஹுசேனுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்... பொருள்கள் வழங்குவதில் அதிகப் பணம் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு சதவிகிதம் மீண்டும் லஞ்சமாக சதாம் ஹுசேனுக்கு வந்து சேரும். இந்த ஊழல்களில் உலகம் முழுவதிலும் உள்ள கிட்டத்தட்ட 2,200 நிறுவனங்கள் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் சதாம் ஹுசேனுக்கு 1.8 பில்லியன் டாலர்கள் வரை லஞ்சமாகக் கொடுத்ததாகவும் ஐ.நா சபையின் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.

இந்த ஊழலில் ஐ.நா செக்ரடரி ஜெனரல் கோஃபி அன்னானின் மகன் கோஜோ அன்னான் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தன. அதன் முடிவு இன்னமும் முழுதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது இந்தியாவைப் பொருத்தவரை பிரச்னை என்னவென்றால் எண்ணெய் எடுக்க இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர்களுக்கு சில பாரல்கள் ஒதுக்கப்பட்டிருந்ததுதான். இந்த நான்கு பேர்கள் யார்? ரிலையன்ஸ் பெட்ரோலியம், விட்டுவிடுவோம். மற்ற மூன்று பேர்? இந்தியாவின் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி, பீம் சிங் என்பவர் (இவர் காஷ்மீரின் நேஷனல் பாந்தர்ஸ் கட்சியின் தலைவராக இருக்கலாம், ஐ.நா அறிக்கை இவரது பின்னணியை விவரமாகத் தெரிவிக்கவில்லை.)

நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இரண்டுக்கும் ஏன் எண்ணெய் பாரல்கள் ஒதுக்கப்பட்டன? ஐ.நா விசாரணைக் குழுத் தலைவர் அமெரிக்காவின் வோல்க்கர் என்பவர் வேண்டுமென்றே இவர்களது பெயர்களைச் சேர்த்தாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. வோல்க்கர் அறிக்கை, நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இருவருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த எண்ணெயை ஸ்விட்சர்லாந்தின் மேஸ்ஃபீல்ட் AG என்னும் நிறுவனம் எடுத்ததாகக் குறிப்பிடுகிறது. நட்வர் சிங்குக்கு 4 மில்லியன் பாரல்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 1.936 மில்லியன் பாரல்களை மேஸ்ஃபீல்ட் எடுத்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 4 மில்லியன் பாரல்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 1.001 மில்லியன் பாரல்களை மேஸ்ஃபீல்ட் எடுத்ததாகவும் இந்த அறிக்கையின் "Table 3: Oil Beneficiary Table" குறிப்பிடுகிறது.

பீம் சிங்குக்கு ஒதுக்கப்பட்ட எண்ணெயை யாருமே எடுக்கவில்லை என்றும் இந்தப் பட்டியலில் தகவல் உள்ளது.

நட்வர் சிங், காங்கிரஸ் இருவருமே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

எதிர்பார்த்தது போலவே பாஜக, நட்வர் சிங் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஆனால் இதுவரை வந்த அறிக்கையின் மூலம் நட்வர் சிங்கின் குற்றம் ருசுவாகவில்லை. அதனால் மேற்கொண்டு தகவல்கள் வரும் வரையில் நட்வர் சிங் பதவியைத் தொடரவேண்டும். மேஸ்ஃபீல்ட் AG உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். இந்திய நாடாளுமன்றம் மேஸ்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைவரை சத்தியப் பிரமாணம் எடுக்கவைத்து விசாரிக்க வேண்டும். அதன்படிதான் நட்வர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் (தேவையென்றால்). அதே போல காங்கிரஸ் கட்சி... இது அபத்தமாகத் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு என்று எண்ணெயை ஒதுக்கவேண்டியதன் காரணம் என்ன?

உடனடியாக, இது அமெரிக்க சி.ஐ.ஏ சதி என்றெல்லாம் பேச்சுகள் வரத் தொடங்கியுள்ளன. இது தொடக்கம்தான், நிறைய தகவல்கள் மேற்கொண்டு வெளிவர வேண்டும்.

வோல்க்கர் அறிக்கையின் முழு நகல் இந்தத் தளத்தில் கிடைக்கிறது, நிறைய பி.டி.எஃப் கோப்புகளாக... டேபிள் 3-இல்தான் (Table III - Summary of Oil Sales by Non-Contractual Beneficiary) நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி, பீம் சிங் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தி ஹிந்துவின் முதல் செய்தியறிக்கை
நட்வர் சிங் பதவி விலக வேண்டும் என்கிறது பாஜக, ஐக்கிய ஜனதா தளம்
நட்வர் சிங் மறுப்பு - ஃப்ராங்ஃபர்ட்டிலிருந்து
காங்கிரஸ் மறுப்பு
பீம் சிங்கின் மறுப்பு
தி ஹிந்துவில் நட்வர் சிங்கின் மறுப்பு, என்.ராமுடன் தொலைபேசி வழியாக

1 comment:

  1. பத்திரி,இங்கும் இந்தப் பிரச்சனை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.சீமன்ஸ் மற்றும் டாய்மிலர் பென்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் ஜேர்மனியில் தம் கைகளைக் கறைபடுத்தியுள்ளன.பலநூறு கோடிகள் இங்கே கைமாறப்பட்டுள்ளன.இதற்குள் பல அரசியல்வாதிகள்,அமைச்சர்களும் பின்னாலிருந்து செயற்பட்டுள்ளனர்.

    ReplyDelete