Friday, October 21, 2005

நாராயண மூர்த்தி Vs தேவே கவுடா

நான்கு நாள்கள் முன்னர் இதுபற்றி எனது ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன். இன்றைய தலைப்புச் செய்தி இதுதான்.

இன்ஃபோசிஸ் சேர்மன் நாராயண மூர்த்தியும் ஜனாக்ரஹா என்னும் அமைப்பின் ரமேஷ் ராமநாதனும், போன சனிக்கிழமை கர்நாடகா முதல்வர் தரம் சிங், முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஆகியோரைச் சந்தித்து பெங்களூர் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்று விளக்கியுள்ளனர். இந்தியாவின் எல்லா மாநிலத் தலைநகரங்களுமே நெருக்கடியில்தான் உள்ளன. தமிழகத்தில் மொத்த ஜனத்தொகை 6 கோடி. அதில் 1 கோடி சென்னையிலும் அடுத்துள்ள இடங்களிலும் மட்டும். இத்தனை பேருக்கும் குடிதண்ணீர் கொடுக்கவேண்டும். இத்தனை பேரும் தெருவில் போகவர வசதிகள் வேண்டும். பேருந்து, துரித ரயில் போக்குவரத்து வசதிகள் வேண்டும். சாலைகள் சரியாக இருக்கவேண்டும். போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படவேண்டும். குப்பைகள், கழிவுகள் அகற்றப்படவேண்டும். கொலை, கொள்ளை, பிற வன்முறைகளைத் தடுக்க வேண்டும். மனமகிழ் வசதிகள் வேண்டும். படிப்புக்கு கல்விநிலையங்கள் தேவை. இப்படி எத்தனையோ எத்தனையோ. இதைத்தான் Urban Infrastructure என்று சொல்வது.

இதில் பல தனியார்களால் கொடுக்கப்படுவது. ஆனால் பலவற்றை அரசுதான் கொடுத்தாக வேண்டும். மெத்தனமாக இருந்தால் படுநாசம். போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகள், குடியிருப்பு வசதிகளுக்கான நிலங்கள், குடிதண்ணீர், குப்பை/கழிவுகள் அகற்றப்படுதல், mass transit ஆகிய ஐந்தும் மிக மிக அவசியம். உருப்படியான விமான நிலையம் அடுத்த கட்டத்தில் வரும். பெங்களூரிலும் சென்னையிலும் தில்லியிலும் மும்பையிலும் அடிப்படை வசதிகள் குறைவுதான். பெங்களூரில் அதிக மோசம். அந்தந்த ஊரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சரியான வசதியின்மையால் பாதிக்கப்படுகின்றன. பலரும் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் புகார் செய்கிறார்கள். நாராயண மூர்த்தி மட்டும்தான் தீர்வு என்று ஒன்றை முன்வைத்துள்ளார். அதையும் எடுத்துக்கொண்டு சென்று முதல்வரிடமும் அவரது தோழமைக் கட்சியின் தலைவரிடமும் சென்று பேசியுள்ளார்.

சரி, அடுத்து என்ன செய்யலாம் என்பதை விட்டுவிட்டு மறுநாள் முதல் தேவே கவுடா நாராயண மூர்த்தியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். அரசியல்வாதிகளுக்குள்ளாக என்றால், இது அவ்வளவு கடுமையானது என்று சொல்லமுடியாது. ஆனால் அரசியல் சாக்கடைகளுக்கு அப்பால் இருக்கும்பட்சத்தில் இந்தச் சொற்களால் நாராயண மூர்த்திக்குக் கடும் வருத்தம் உண்டாவது இயற்கையே. கவுடா போகிற போக்கில் 'மூர்த்தி பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் தலைவராக இருந்து என்ன கிழித்தார்' என்று ஒரு சைட் குத்து விட்டுச் சென்றார். அதனால் நேற்று மூர்த்தி அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் தலைவராக இருப்பது என்பது இன்ஃபோசிஸ் தலைவராக இருப்பது போலல்ல. மாநில அரசு, மைய அரசு என்று இரண்டையும் தாஜா செய்யவேண்டும். மாநில அரசு மாறினால் முட்டாள் அரசியல்வாதிகள் மீண்டும் குழப்படி செய்வார்கள். அப்படித்தான் இங்கும் நடந்தது. இத்தனைக்கும் புதிதாக வந்ததும் காங்கிரஸ் (ஐ) அரசுதான் (ஜனதா தளம் (எஸ்) ஆதரவுடன்). பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் முழு வரலாறும் அதன் இலக்குகளும் அது எந்த அளவுக்கு இலக்கை நோக்கிச் சென்றுள்ளது என்பதும் எனக்கு இப்பொழுதைக்குத் தெரியாது. அதனால் அதைப்பற்றி நான் எதையும் சொல்லப்போவதில்லை.

ஆனால் கவுடா மூர்த்தியைத் தேவையின்றித் தாக்கியதன் மூலம் தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

4 comments:

  1. Check out the second page for detailed reports
    http://epaperdaily.timesofindia.com/Daily/skins/TOI/navigator.asp?Daily=TOIBG

    Yes. It is a setback to already strained infrastructure related activities. Hope Madam S takes some action on Dharam.

    ReplyDelete
  2. பிரச்சனை அத்தோடு முடியாது. இன்றைக்கு ET-ல் கரண் மஜும்தார் சொன்னதுப் போல, இது ஒரு எதிர்மறையான செய்திகளை பரப்பும். அரசும், தனியாரும் ஒன்றிணைந்து வேலை செய்யமுடியாது என்கிற நிலைமை இன்னமும் ஒரு முறை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

    ஆனாலும், இந்தியாவின் ஒரு முன்னாள் பிரதமர் இந்தளவிற்கு ஒரு தரக்குறைவாக பேசியிருக்கக்கூடாது. மூர்த்தி சொன்னதுப் போல ஊடகங்களுக்குப் போவதற்கு முன்பாவது சில விதயங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டிருக்கலாம்.

    ReplyDelete
  3. //... அரசியல்வாதிகளுக்குள்ளாக என்றால், இது அவ்வளவு கடுமையானது என்று சொல்லமுடியாது. ஆனால் அரசியல் சாக்கடைகளுக்கு அப்பால் இருக்கும்பட்சத்தில் இந்தச் சொற்களால் நாராயண மூர்த்திக்குக் கடும் வருத்தம் உண்டாவது இயற்கையே.//

    }:-)

    அந்த ஆளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

    ReplyDelete
  4. எவன்டாவன்..காசி?..மூர்த்தி மாதிரி எவண்டா சேவை செய்ய முன்வருவான்? எல்லாப் பயலும் காசு சம்பாதிக்கிறதுலயும், அது நொட்ட இது நொள்ளனு ஏசி ரூம்-ல உக்காந்து காலாட்டிக்கிட்டே கொறதான் சொல்லுவானுங்க..சுத்தப் புண்ணாக்குப் பய மாதிரி பேசுற??

    ReplyDelete