Wednesday, October 12, 2005

மிட்ரோகின் ஆவணங்கள் II

தமிழ் வலைப்பதிவுகளில் விவாதிக்கப்படவில்லை. வாசிலி மிட்ரோகின் என்பவர் ரஷ்ய கேஜிபி புலனாய்வு நிறுவனத்தின் ஆவணக்காப்பாளராக வேலை செய்தவர். (ரஷ்யாவின் வரலாறை இராமநாதன் தன் வலைப்பதிவில் தொடராக எழுதுகிறார்.) 1992ல் மிட்ரோகின் ஒரு கத்தை பேப்பர்களை எடுத்துக்கொண்டு பிரிட்டன் தூதரகம் வழியாக லண்டன் வந்து சேர்கிறார். அவர் உயிருடன் இருந்தபோது அந்தத் தாள்களில் இருந்த சுவையான விஷயங்களை வைத்து The Sword and the Shield என்று ஒரு புத்தகம் வெளியானது. இப்பொழுது மிட்ரோகின் இறந்து விட்டார். ஆனால் அவரது கத்தைக் காகிதங்களை வைத்துக்கொண்டு The Mitrokhin Archive II: The KGB and the World என்ற இரண்டாவது புத்தகம், கிறிஸ்டோபர் ஆண்ட்ரூ தொகுக்க, வெளியாகி உள்ளது.

இதில் கேஜிபி எவ்வாறு இந்திய அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நிதி கொடுத்து அவர்களை தங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ள வைத்தனர் என்று சில பக்கங்களில் வருகிறதாம். நானும் இரண்டு புத்தகங்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். எப்பொழுது வந்துசேரும் என்று தெரியவில்லை. இப்படி பணம் வாங்கியவர்கள் இந்திரா காந்தி முதற்கொண்டு பல காங்கிரஸ் பெருந்தலைகள், டாங்கே போன்ற கம்யூனிஸ்ட் பெருந்தலைகள் என்பதாகத் தகவல்.

குல்தீப் நய்யார் டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் இன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பல நாடுகள் இந்திய அரசியல் தலைவர்களுக்குப் பணம் கொடுத்துள்ளன என்றும் ரஷ்யாவும் அமெரிக்காவும்தான் தொடர்ச்சியாக, பல வருடங்களாக இந்த வேலையைச் செய்து வந்தன என்றும் எழுதுகிறார். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிக்க அமெரிக்கா இந்திரா காந்திக்குப் பணம் கொடுத்ததாக இந்தியாவின் முன்னாள் அமெரிக்க தூதர் பேட்ரிக் மொய்னிஹான் தன் புத்தகத்தில் எழுதியிருப்பதாக குல்தீப் நய்யார் மேற்கோள் காட்டுகிறார். மிட்ரோகின் புத்தகம் வெளியானதுமே பாஜக, இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று குரல் கொடுத்தது. கம்யூனிஸ்ட் CPI இந்தப் புத்தகத்தைத் தடை செய்யவேண்டும் என்று கேட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்கிறார்கள்.

ஆனால் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மட்டுமல்ல, பாஜகவின் முந்தைய அவதாரம் ஜன சங்கத்தின் தலைவர்களும் இது போலப் பணம் வாங்கியுள்ளதாக சில வதந்திகள் உண்டு. ஜன சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பால்ராஜ் மாதோக், அமெரிக்க CIA பணத்தை வாங்கியவர்களில் வாஜ்பாயும் உண்டு என்கிறார். ஆனால் பாஜக அதைக் கடுமையாக மறுக்கிறது.

காங்கிரஸ் தரப்பில் அவர்கள் மிட்ரோகின் செய்தியை நேரடியாக மறுக்கவில்லை. "கண்ட கண்ட நாய்களுக்கும் பதில் தர முடியாது" என்ற ரீதியில்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேசுகிறார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஒரு CIA உளவாளி என்று அமெரிக்காவின் சீமூர் ஹெர்ஷ் என்ற பத்திரிகையாளர் குற்றச்சாட்டை வைத்தார். மொரார்ஜி தேசாய் 1989ல் சிகாகோவில் ஒரு நீதிமன்றத்தில் ஹெர்ஷுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தார். ஆனால் தேசாய் அந்த வழக்க்கில் தோற்றார். அதனால் மொரார்ஜி தேசாய் CIA உளவாளி என்பது நிரூபணமாகிவிடவில்லை! சுப்ரமணிய சுவாமி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கண்டவர்களையும் CIA உளவாளி என்று சொல்வார். ஒரு நேரத்தில் இந்திய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும்போது CIA உளவாளி, KGB உளவாளி என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தனர்.

பின்னாள்களில் இதெல்லாம் மரத்துப்போனது. யாரும் இதைப்பற்றிப் பேசுவதில்லை - சுப்ரமணியம் சுவாமியைத் தவிர!

குல்தீப் நய்யார் கட்டுரையில் பாஜக மீது மற்றுமொரு குற்றச்சாட்டு வருகிறது. பங்களாதேஷ் தேர்தலின்போது வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு பேகம் காலீதா ஜியாவின் பி.என்.பி கட்சிக்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளனர் என்று பங்களாதேஷில் அவாமி லீக் கட்சியினர் பேசிக்கொள்கிறார்களாம்.

மிட்ரோகின் புத்தகம் கைக்கு வந்ததும் படித்து முடித்துவிட்டு அதில் என்ன எழுதியிருக்கிறது என்று சொல்கிறேன். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி காலம் என்றால் இந்நேரத்தில் அந்தப் புத்தகத்தைத் தடை செய்திருப்பார்கள்! நல்ல வேளை, நாடு இப்பொழுது அவ்வளவு மோசமில்லை. தடைசெய்யப்போவதில்லை என்று சொல்கிறார்கள்.

4 comments:

  1. Hi Badri, It looks like the title in USA is "The World Was Going Our Way: The KGB and the Battle for the Third World". I haven't read this, but the amazon link indicates this book is talking about India as one among the countries which had KGB influence.

    http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0465003117/qid=1129125518/sr=1-1/ref=sr_1_1/103-5996173-4354237?v=glance&s=books

    ReplyDelete
  2. //சுப்ரமணிய சுவாமி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கண்டவர்களையும் CIA உளவாளி என்று சொல்வார். ஒரு நேரத்தில் இந்திய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும்போது CIA உளவாளி, KGB உளவாளி என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தனர்.//

    :-)))))))

    இந்த வார தெஹல்காவில் மிட்ரோகினின் புத்தகம் பற்றிய விமர்சனம் வெளியாயிருக்கிறது. நீங்கள் சொல்லும் புத்தகம் அதுவா என்று தெரியவில்லை.

    கொசுறு: அவுட்லுக் 10 என்று பத்தாண்டு கால அவுட்லுக்கின் இதழ் வந்திருக்கிறது. குஷ்பு எல்லாம் ஜுஜூபி. கொஞ்சம் புள்ளிவிவரங்களை படித்துப் பாருங்கள் ;-))))

    ReplyDelete
  3. ராஜ்: ஆமாம். அமெரிக்காவில் புத்தகத்தின் தலைப்பை வேறுதான். அதே புத்தகம்தான்.

    -*-

    நாராயண்: அதே புத்தகம்தான்.

    அவுட்லுக் - இன்னமும் படிக்கவில்லை.

    ReplyDelete
  4. india enna anniya nattu ulavu amaippukali vilayattu thidala? CIA,kgb< mozat, isi , extra!

    ReplyDelete