Thursday, October 27, 2005

மழை, புயல் நிலவரம்

லாயிட்ஸ் ரோட் / அவ்வை சண்முகம் சாலை


நாளைக் காலை சென்னைக்கும் ஓங்கோலுக்கும் இடையே புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பு. சென்னையில் இன்று காலை மட்டும் 24 செ.மீ மழை பதிவானதாம்.

காலை காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் வரை சென்றதில் காருக்குள் தண்ணீர் புகுந்துகொண்டது. அந்த அளவுக்குத் தெருவில் தண்ணீர். எல்லா சுரங்கப் பாதைகளும் (sub-ways) தண்ணீரில் மூழ்கியுள்ளன. மதியம் தெருவில் தேங்கிய நீர் சற்றே வடிந்தது. ஆனால் இன்று பல இடங்களில் மின்சாரத்தை வெட்டியுள்ளனர். மின்கம்பிகள் தண்ணீரில் விழுந்ததால் மின்சாரம் தாக்கி சிலர் இறந்துபோனதாக SMS செய்திகள் வரத்தொடங்கின. கோபாலபுரத்தில் மதியம் 5 மணிநேரம் மின்சார வெட்டு. கடந்த சில மணிகளாக மின்சாரம் உண்டு. ஆனால் சென்னைப் புறநகர் பல இடங்களிலும் மின்சாரம் இல்லை என்று நண்பர்கள் சொன்னார்கள்.

சென்னை விமான நிலையம் இன்று வேலை செய்யவில்லை. சென்னை வரவேண்டிய சர்வதேச விமானங்கள் பெங்களூர் திருப்பிவிடப்பட்டன.

காலையின் சென்னை மாநகர கார்பொரேஷன் கமிஷனர் விஜயகுமார் ரேடியோவில் பேசும்போது உளறிக்கொட்டினார். எல்லா அரசு ஊழியர்களையும் பணிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு மூன்று மணிநேரத்தில் தண்ணீர் தேங்கலை சரிசெய்து விடுவோம் என்றார். அப்பொழுது மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது! (சென்னைக்கு மேயர் கிடையாது. துணை மேயர் ஆள் எங்கோ ஒளிந்துகொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் விண்ணப்பித்துள்ளார்! கார்பொரேஷன் ரிப்பன் கட்டடம் இருக்கும் இடத்தில் தண்ணீர்க்குளம்) எங்கும் ரயில், பஸ் ஓடவில்லை. சில பஸ்கள் மட்டும்தான் ஓடின. பல தெருக்களில் பெரும் மரங்கள் விழுந்து போக்குவரத்தைத் தடை செய்துள்ளன.

எங்கள் தெருவில் தண்ணீர் முழுவதுமாக வடிந்து இப்பொழுது மீண்டும் தேங்க ஆரம்பித்துள்ளது. காற்று அதிகமாக இல்லை, ஆனால் இரவு புயல் காற்று அடிக்கலாம்.

5 comments:

  1. பத்ரி, படத்தில் தண்ணி கம்மியா இருக்கே.

    ReplyDelete
  2. ஆமாம். தண்ணி முழுசாவே வத்திருச்சு இப்ப (எங்க தெருவுல). மழையும் நின்னுடுச்சு. பாக்கலாம், நாளைக் காலைல எப்படி இருக்குன்னு.

    ReplyDelete
  3. //மின்கம்பிகள் தண்ணீரில் விழுந்ததால் மின்சாரம் தாக்கி சிலர் இறந்துபோனதாக SMS செய்திகள் வரத்தொடங்கின. //

    அந்த வதந்தியை பரப்புபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்னு ஜெயா டிவியில் சொன்னாங்க, எதுக்கும் பார்த்து இருங்க பத்ரி. :-)

    ReplyDelete
  4. படங்களை தொகுத்துப் போட்டிருக்கிறேன் கார்த்திக் - http://urpudathathu.blogspot.com/2005/10/3.html

    ReplyDelete
  5. நன்றி நரைன், என்ன இது இவ்வளவு தண்ணி? அடப்பாவமே

    ReplyDelete