Tuesday, October 11, 2005

The Girl in the Cafe

(சினிமா விமரிசனம்!)

பிரிட்டன் நிதி அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் சர்வண்ட் லாரன்ஸ், வயதானவர், ஆங்கிலேயர். தனி ஆள். மணமாகாதவர், கூட வசிக்கும் இணை-உறவாளர் யாரும் கிடையாது. குழந்தைகள் யாரும் இல்லை. காதல் என்று ஒன்று வாழ்வில் இருந்ததில்லை. வேலை, வேலை, வேலை.

G8 எனப்படும் உலகின் மிக வளர்ந்த நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான், ரஷ்யா - இதில் ரஷ்யாவைச் சேர்க்கவேண்டுமா என்ற கேள்வி எழலாம், ஆனால் வரலாற்றுக் காரணங்களால் ரஷ்யா இதில் உள்ளது. G7 என்று ஒரு குழு உள்ளது. அதில் ரஷ்யா இல்லாத பிற 7 நாடுகளும் உண்டு.) ஒன்று சேர்ந்து ஒரு குழுவை நடத்துகின்றன. ஒவ்வோர் ஆண்டும் உலகப் பொருளாதாரம் தொடர்பாக ஒரு மாநாட்டையும், அரசியல் விஷயங்களுக்காக மற்றுமொரு மாநாட்டையும் நடத்துவார்கள்.

இந்த G8 பொருளாதார மாநாடு நடக்கும் இடங்களிலெல்லாம் சமீப காலங்களில் உலகமயமாக்கல்-எதிர்ப்புக் குழுக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி G8-க்கும், உலகமயமாதல், தாராளமயமாதல் போன்றவற்றுக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. G8 மாநாட்டின் ஒரு நோக்கம் - எவ்வாறு பணக்கார நாடுகள் (அதாவது G8 நாடுகள்) - உலகின் ஏழை நாடுகளில் உள்ள ஏழைமை, உணவுப்பஞ்சம், உயிர்ச்சாவு (எய்ட்ஸ், பட்டினிச் சாவுகள்) ஆகியவற்றைப் போக்க உதவி செய்யலாம் என்று கூடிப்பேசி ஏதாவது செய்ய முனைவது.

ஐ.நா சபை Millennium Development Goals - நடப்பு ஆயிரம் வருடங்களுக்கான கொள்கைகளாக சிலவற்றை முன்னுக்கு வைத்து, அதனை ஐ.நா சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. 2015ம் வருடத்துக்குள்ளாக பட்டினிச் சாவை இப்பொழுதுள்ள எண்ணிக்கையிலிருந்து பாதியாகக் குறைப்பது, பட்டினியாக இருப்போரின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பது, பிரசவச் சாவைப் பாதியாகக் குறைப்பது, எய்ட்ஸ் பாதிப்பைக் குறைப்பது போன்ர பல. இவை பற்றிய முழு விவரங்களை விகிபீடியாவில் பார்க்கவும்.

சரி, லாரன்ஸுக்கு வருவோம். லாரன்ஸ் பிரிடிஷ் நிதி அமைச்சகத்தில் மில்லேனியம் வளர்ச்சி இலக்கை நிர்வகிப்பவர். G8 நாடுகள் கூடிப் பேசும்போது மில்லேனியம் வளர்ச்சி இலக்குக்கு என தாம் அனைவரும் என்ன செய்யவேண்டும் என்பதையும் ஒருமனதாக முடிவெடுப்பார்கள். வரப்போகும் G8 உச்சி மாநாட்டில் அதுபற்றிய விவாதம் நடக்க உள்ளது, ஆனால் பிரிட்டன் நினைப்பதை (அதாவது தான் நினைப்பதை) எல்லாம் பிற நாடுகள் அங்கீகரிக்கப்போவதில்லை, உதவிகள் குறைவாகவே கிடைக்கப்போகின்றன என்று லாரன்ஸ் நினைக்கிறார்.

வேலைக்கு இடையே ஒரு மதியம் பக்கத்தில் உள்ள கஃபேயில் சர்க்கரை அதிகம் போட்ட தேநீரை அருந்தும்போது இடம் கிடைக்காமல், ஓர் இளம்பெண் அமர்ந்திருக்கும் மேசையில் தானும் அமர இடம் கேட்கிறார் லாரன்ஸ். அந்தப் பெண்ணின் பெயர் ஜினா. (அவர் பேச்சை வைத்து அவர் ஒரு ஸ்காட்டிஷ்காரர் என்று தெரிகிறது. முதலில் இத்தாலியனோ என்று நினைக்கத் தோன்றியது.) சில நிமிடங்கள் பேசியபிறகு வாசலுக்குச் செல்லும்போது லாரன்ஸ் ஏதோ உந்துதலில் அந்தப் பெண்ணை ஒருநாள் மதிய உணவுக்கு அழைக்கிறார். அவரது வாழ்வில் முதல்முறை ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜினாவுடன் மதிய உணவு. அப்பொழுது நிதி அமைச்சர் அந்த உணவகத்துக்கு வருகிறார். ஜினாவுக்கு அப்பொழுதுதான் லாரன்ஸ் நிதி அமைச்சகத்தில் வேலை பார்க்கும் ஒரு "பவர்புல்" மனிதர் என்று தெரிய வருகிறது. அதே நாளில் லாரன்ஸ் மீண்டும் ஜினாவை இரவு உணவுக்கு அழைக்கிறார். பின் தொடர்ந்து தொலைபேசியில் பேசத் தொடங்குகிறார்கள். நிறைய சந்திக்கிறார்கள்.

லாரன்ஸின் தனிமை ஏக்கத்துக்கு ஒரு நல்ல மாற்று. சமூக உறவுகள் பற்றி அதிகம் தெரியாத, பிறரைச் சந்திக்கும்போது தடுமாறும் ஒருவராக லாரன்ஸ் சித்திரிக்கப்படுகிறார். ஜினாவின் பின்னணி பற்றி அவர் தெரிந்துகொள்வதில்லை. ஜினாவிடம் அவர் கேள்விகள் எதுவும் கேட்பதில்லை. இருவருக்குமே இந்த உறவின் மீதான முழுமையான எண்ணங்கள் பிறப்பதில்லை.

தான் G8 கூட்டத்துக்காக ரெய்க்காவிக் (ஐஸ்லாந்து தலைநகரம்) செல்ல இருப்பதாகச் சொல்கிறார் லாரன்ஸ். G8 என்றால் என்ன, மில்லேனியம் வளர்ச்சி இலக்குகள் என்னென்ன ஆகியவை பற்றி ஜினாவுக்கு லாரன்ஸ் சொல்கிறார். ஆப்பிரிக்காவில் பட்டினிச் சாவுகள், கொடிய வறுமை ஆகியவை பற்றியெல்லாம் விளக்குகிறார். ஆனால் அதே சமயம் G8 நாடுகள் அதிகம் ஒன்றும் செய்யப்போவதாகத் தான் நினைக்கவில்லை என்றும் சொல்கிறார். தான் எதிர்பார்ப்பதில் பாதி கிடைத்தால் கூடத் தான் சந்தோஷம் அடையக்கூடும் என்றும் சொல்கிறார். பின், தொலைபேசியில், விருப்பம் இருந்தால் தன்னுடன் ஜினா ரெய்க்காவிக் வரலாம் என்றும் சொல்கிறார். சிறிது தயக்கத்துக்குப் பிறகு ஜினா லாரன்ஸுடன் வர ஒப்புக்கொள்கிறார்.

விமான நிலையத்தில் ஜினா வருவதற்குத் தாமதமாகும்போது, வராமல் போய்விடுவாரோ என்று லாரன்ஸ் தவிக்கிறார். பின்னர் லாரன்ஸும் ஜினாவும் கடைசியாக விமானம் ஏறுகின்றனர். லாரன்ஸின் சக-ஊழியர்கள் ஏற்கெனவே ஜினாவை உணவகத்தில் பார்த்திருக்கின்றனர், ஆனாலும் ஜினா கூட வருவது அவர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கிறது.

ரெய்க்காவிக் ஹோட்டலில் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் ஜினாவுக்குத் தனியறை கிடைக்குமா என்று கேட்டு வரவேற்புத் தொழிலாளரைத் தொந்தரவு செய்கிறார். கிடைக்காமல் போகவே ஜினாவிடம், தான் வேண்டுமென்றே செக்ஸுக்காக இப்படியெல்லாம் திட்டமிடவில்லை என்று மன்னிப்புக் கேட்கிறார்.

முதல் இரண்டு நாள்கள் நடக்கும் கூட்டங்களில் இருந்து சோர்வுடன் திரும்பி வருகிறார் லாரன்ஸ். பொருளாதார பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும் G8 நாடுகள் (முக்கியமாக அமெரிக்கா) ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பணம் கொடுக்க விரும்புவதில்லை. மான்யமா, கடனா, திறந்த வர்த்தகமா என்ற கேள்விகளைக் கேட்டு திறந்த வர்த்தகம் மூலம் ஏழை நாடுகள் அதிகப் பயன் அடைய முடியும், சீனாவைப் பாருங்கள் என்றெல்லாம் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பேசுவதாகக் காண்பிக்கப்படுகிறது.

அடுத்த நாள் ஜினா, லாரன்ஸ் இருவரும் காபி அருந்தும்போது அங்கு பிரிட்டன் நிதி அமைச்சர், கூட கெர்மன் சான்செலருடன் வருகிறார். பிரிட்டன் நிதி அமைச்சரை ஜினா யாரும் எதிர்பாராத வகையில் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுக்கிறார். பிரிட்டன், பிற G8 நாடுகள் நிஜமாகவே ஏழை நாடுகளுக்கு உதவ விரும்புகின்றனரா, அமைச்சர் பேசுவது வெட்டிப்பேச்சா அல்லது நிஜமாகவே சாவுகளைக் குறைக்க விரும்புகிறாரா என்று வரும் தீர்க்கமான, ஆனால் மேலோட்டமான கேள்விகள். அமைச்சர் சற்றே ஆடிப்போகிறார். பின் தனது வலது கையைக் கூப்பிட்டு அந்தப் பெண் யார், வெளியே கூடாரமிட்டு பிரச்னை செய்ய வந்திருக்கும் ஆசாமிகளின் உள்கையா என்று விசாரித்து அவளைத் துரத்திவிடுமாறு சொல்கிறார். அவரும் லாரன்ஸைக் கூப்பிட்டு வறுத்தெடுத்து, அந்தப் பெண் யார் என்று கேட்க, லாரன்ஸ் தனக்கு அவரது பின்னணி தெரியாது, தான் அவரைச் சந்தித்தது ஒரு கஃபேயில், அவ்வளவுதான் என்கிறார்.

ஆனால் ஜினாவை லண்டனுக்கு அனுப்புவதில்லை. (இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் ஜினா லாரன்ஸ் எதிர்பார்க்காமலேயே அவருடன் உடலுறவு கொள்கிறார்.) ஜினாவின் பின்னணி என்ன என்று லாரன்ஸ் கேள்வி கேட்கும்பொழுது ஜினா சர்வ சாதாரணமாக தான் லாரன்ஸைச் சந்திக்கும் முன்புதான் ஜெயிலிருந்து வெளியே வந்ததாகச் சொல்கிறார்.

அடுத்த நாள் பிரிட்டன் பிரதமர் கொடுக்கும் டின்னர். தான் "நல்லபடியாக" நடந்து கொள்வதாகச் சொன்னாலும், பிரதமர் கொடுத்த பேச்சை அடுத்து, அவரை இடைமறிக்கிறார் ஜினா. டின்னர் ஹாலில் நிசப்தம். தொடர்ந்து ஒரு பிரமாதமான அரசியல் பேச்சு. ("உங்களால் முடியும் எனும்போது இத்தனை அநியாயச் சாவுகளைத் தடுக்கப் பாருங்கள். பத்து வருடங்கள் கழித்து இன்னொரு தலைமுறை அரசியல்வாதிகள் இதைப்பற்றிப் பேசும்போது, பத்து வருடங்களுக்கு முன்னர் சாவுகளைத் தடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் தவறவிட்டவர்கள் என்று உங்களைச் சாடுவதற்கு விடாதீர்கள்.")

பேசி முடிந்ததும், ஜினா சத்தமின்றி வெளியேற்றப்பட்டு, விமானத்தில் ஏற்றப்பட்டு லண்டனுக்குக் கொண்டுசெல்லப்படுகிறார். நிதி அமைச்சர் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறார். லாரன்ஸ் தான் பதவி விலகத் தீர்மானித்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால் அன்று இரவு பிரிட்டன் நிதி அமைச்சர், பிரதமர் நிலைகளில் மாற்றம். பிற நாடுகள் முன்வைக்கும் சமரசத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக வாதாடி மில்லேனியம் இலக்குகளை நிறைவேற்ற G8 நாடுகளை சம்மதிக்க வைப்பதில் பெரும் முன்னேற்றம் அடைகிறார்கள்.

லாரன்ஸ் - ஜினா காதலுக்குக் கிடைத்த வெற்றி. படத்தின் tagline "Love can't change what's wrong in the world. But it's a start."

-*-

படத்தை நேர்த்தியாக எடுத்துள்ளனர். நடிப்பு நன்றாக உள்ளது. ஆனால் G8 பற்றியும் ஆப்பிரிக்க நாடுகளின் கஷ்டத்தைப் பற்றியும் விளக்கமாகத் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கலாம். சாதாரணப் பார்வையாளர்களால் G8 பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியுமா என்று தெரியவில்லை.

ஆனால் படத்தின் கதை மோசம். ஒரு சாதாரணப் பெண்ணின் பேச்சுகளால் பழுத்த அரசியல்வாதிகள் திடீரென்று மனம் மாறுவதாகவும், ஒரு நாடு பிற ஏழு நாடுகளை முற்றிலுமாக தன் வழிக்குக் கொண்டுவருவதாகவும் சொல்வது மோசமான ரொமாண்டிசிசம். G8 குழுவின் வரலாற்றைப் பார்த்தால் அதனால் ஏழை நாடுகளுக்கு என்றுமே நன்மை இருந்ததில்லை என்று புரிந்து கொள்ளலாம். கடைசியாக ஸ்காட்லாந்து க்ளெனிகில்ஸில் G8 உச்சி மாநாடு நடந்த நேரத்தில்தான் லண்டனில் குண்டுகள் வெடித்தன. இந்தப் படம் அதற்கு முன்னால் உருவானது. க்ளெனிகில்ஸ் மாநாட்டின் போது உலகின் ஏழைமையைக் குறைக்க இத்தனை பில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளோம், அத்தனை பில்லியன் டாலர்கள் கடன்களை ரத்து செய்கிறோம் என்றெல்லாம் பொய் சொல்லி, புரட்டுக் கணக்குகளைத்தான் சொல்கின்றனர் என்பதை ஜார்ஜ் மோன்பியாட் போன்றோரின் கட்டுரைகளின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

முக்கியமாக அமெரிக்கா தடையற்ற வர்த்தகம் என்ற நிலையில்தான் மான்யம்/கடன் வழங்குவோம் என்று சொல்லியே அமெரிக்க நிறுவனங்களின் நலனையே முன்வைக்கிறது. பல ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகத்துக்கான சந்தைகளாக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளுக்கு பதிலுக்கு அமெரிக்காவுக்குக் கொடுக்க ஒன்றும் இருப்பதில்லை. இருக்கும் சில கணிம வளங்களும் G8 நாடுகளில் உள்ள முதலாளிகளின் கைகளுக்குப் போய்விடுகிறது. அதனால் எந்த நன்மையும் ஆப்பிரிக்க ஏழைகளுக்கு, உணவால் வாடுபவர்களுக்குப் போவதில்லை.

G8 நாடுகளின் தலைமையில் இருப்பவர்களுக்கு தத்தம் நாடுகளின் பிரச்னைகள்தான் முக்கியமே தவிர ஆப்பிரிக்க ஏழைமை முக்கியமல்ல. மற்றபடி அவர்கள் பேசுவதெல்லாம் பசப்பு வார்த்தைகள்தான். ஏதாவது கடன் பற்றி பேச்சு வந்தால் உடனே அந்தந்த நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகள்தான் பிரச்னை, அங்கெல்லாம் குடியாட்சி வரவேண்டும் என்று ஒரு பேச்சு வரும். குடியாட்சி தேவைதான். ஆனால் இதே G8 நாடுகள்தான் தனக்கு வேண்டிய இடங்களில் எல்லாம் சர்வாதிகாரிகளை முன்னுக்குக் கொண்டுவந்தவர்கள். பாகிஸ்தானில் குடியாட்சியைப் பற்றியோ, சவுதி அரேபியாவில் குடியாட்சியைப் பற்றியோ பேச மாட்டார்கள்.

பட்டினியில் வாடுபவனுக்கு உடனடியாக உணவு கொடுப்பது மட்டுமல்ல, அவர்களை அவர்களது வழியில், பிரச்னையின்றி வாழ வைப்பதற்கு G8 நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் - சண்டைக்காகச் செலவிடுவதில் ஒரு பகுதியைக் கொடுத்தால் கூடப்போதும். அப்படிக் கொடுக்க விருப்பமில்லை என்றால் கூடப் பரவாயில்லை, தாங்கள் நிறையச் செய்ய ஆசைப்படுவதாகப் பொய் சொல்லவேண்டியதில்லை.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப செய்நேர்த்தியைத் தவிர பிற அனைத்தும் எனக்கு ஏமாற்றத்தையே தந்தன. ஆனாலும் பார்க்கவேண்டிய படம் என்று சிபாரிசு செய்கிறேன். லாரன்ஸாக நடித்த Bill Nighy நிறைவாகச் செய்துள்ளார். ஜினாவாக நடித்த Kelly Macdonald தேவலாம். லாரன்ஸ் பாத்திரப் படைப்பு நன்றாக வந்துள்ளது. லாரன்ஸின் தடுமாற்றங்கள், subdued பாத்திரம், தன் கருத்துகளை அழுத்தமாக முன்வைக்கத் தெரியாத வலுவற்ற தன்மை ஆகியவை மிக நன்றாக வந்துள்ளன. தயங்கித் தயங்கிப் பேசுதல், தனது செயல்களை பிறார் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற ஆதங்கம் ஆகியவை நடிப்பில் நன்றாக வெளிப்படுகிறது.

ஜினாவின் பாத்திரப் படைப்பு இன்னமும் ஆழமாக இருந்திருக்கலாம். ஜினாவின் பின்னணி வருவதில்லை. யாரையோ கொலை செய்தார் என்பதற்காக அவர் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். ஏன், எதற்கு என்ற லாரன்ஸின் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் ஜினா பதில் தருகிறார். அவ்வளவுதான். தைரியமாக பல தலைவர்கள் இருக்கும் அவையில் ஆணித்தரமாகப் பேச எப்படி எவருக்குக் கூடியது என்பது சரியாக வரவில்லை. அவருடைய படிப்பு, பொருளாதார அறிவு குறைவு, அரசியல் ஈடுபாடுகள் என்று எதுவும் இல்லை என்றாலும் ஹாலிவுட் பாணியில் கடைசிப்பேச்சு எங்கிருந்து அவ்வளவு சரளமாக வருகிறது என்பதை டைரக்டர் விளக்குவதில்லை. ஒருவேளை ஜெயிலில் கற்றுக்கொண்டாரோ என்னவோ!

லாரன்ஸ் - ஜினா ஈர்ப்பு ஓரளவுக்கு நன்றாகவே கையாளப்பட்டிருக்கிறது. ஜினா நிச்சயம் லாரன்ஸை விரும்புகிறார் என்று தெரியவருகிறது. ஆனால் ரெய்க்காவிக் ஹோட்டலில் லாரன்ஸ் தூக்கம் வராமல் திண்டாடிக்கொண்டிருக்கும்போது தன் ஆடைகளைக் களைந்து அவருக்கு சிறிது "கேளிக்கை" அளித்து, அவரது டென்ஷனைக் குறைப்பது போல வருவது படு அபத்தம். பெண்களின் தலையாயக் கடமை என்ன என்று ஹாலிவுட் கொடுத்திருக்கும் ஃபார்முலா இந்தப் படத்திலும் புகுந்திருக்க வேண்டியதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெரிய குறை - ஒரு சாதாரணப் பேச்சு, உலகின் பெருந்தலைவர்களை உசுப்பி விட்டு உலகின் மிகக் கடுமையான பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வை ஒரே நாளில் கண்டுபிடிக்க வைக்கிறது - எனப்படும் அபத்தமான கற்பனாவாதம்.

If only wishes were horses...

1. IMDB Database
2. HBO Site

5 comments:

  1. பத்ரி,

    திரைப்படம் குறித்த அறிமுகம், விமரிசனம் ஆகியவற்றிற்கு நன்றி.

    //ஏதாவது கடன் பற்றி பேச்சு வந்தால் உடனே அந்தந்த நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகள்தான் பிரச்னை, அங்கெல்லாம் குடியாட்சி வரவேண்டும் என்று ஒரு பேச்சு வரும். குடியாட்சி தேவைதான். ஆனால் இதே G8 நாடுகள்தான் தனக்கு வேண்டிய இடங்களில் எல்லாம் சர்வாதிகாரிகளை முன்னுக்குக் கொண்டுவந்தவர்கள். பாகிஸ்தானில் குடியாட்சியைப் பற்றியோ, சவுதி அரேபியாவில் குடியாட்சியைப் பற்றியோ பேச மாட்டார்கள்.//

    ஆப்பிரிக்க உதவி விஷயத்தில் வளர்ந்த நாடுகளின் போக்கு விமரிசனத்திற்குரியதுதான். இருப்பினும், கொடுக்கப்படும் மானியங்கள் மக்களுக்குப் போய்ச் சேர்ந்தனவா என்பதைப் பார்க்கும் போது இல்லை என்று தான் விடை வருகிறது. இதற்குக் காரணம், குறைந்தபட்ச அளவு checks and balances கூட இல்லாத சர்வாதிகார ஆட்சிகள் தாம். இந்த விஷயத்தில் குடியாட்சி என்பது ஒரு abstract ideal இல்லை.

    ReplyDelete
  2. ஆப்பிரிக்க சர்வாதிகார அரசுகளால் அந்தந்த நாடுகளின் மக்களுக்கு பெருத்த கஷ்ட நஷ்டம். இப்பொழுது உதாரணத்துக்கு ஜிம்பாப்வேயைப் பார்க்கலாம். ஆட்சிகளே நடைபெறாத, உள்நாட்டுப் போர்களில் மூழ்கியுள்ள நாடுகள் இன்னமும் மோசம்.

    குடியாட்சி உள்ள நாடுகளில் கூட உள்ளார்ந்த ஊழலினால் ஏற்படும் நஷ்டங்கள் அதிகம்.

    ஆக, ஒரு நாட்டு மக்களின் திண்டாட்டங்களுக்கு
    1. உள்நாட்டுப் போர்கள்
    2. கொடுங்கோல் சர்வாதிகாரர் ஒருவர் தன் மக்கள் கஷ்டப்படும்போது தான் மட்டும் அவர்களது உழைப்பைச் சுரண்டி, பணத்தை வெளிநாடுகளில் சேர்த்து வைப்பது
    3. குடியாட்சியில் பலர் சேர்ந்து ஊழல் மூலம் பொதுமக்களை வதைப்பது

    ஆகியவை காரணங்கள்.

    ஆனால் ஐ.நா சபை, NGO நிறுவனங்கள் ஆகிய பல இருக்கும்போது அவற்றை நம்பி அவற்றுக்குப் பணம் அளிப்பதன் மூலம் பணக்கார நாடுகள் ஏழைமையை - முக்கியமாக பட்டினியை - வெகுவாகக் குறைக்கமுடியும்.

    பல ஆப்பிரிக்க நாடுகள் வாங்கிய கடனுக்கு மேல் வட்டியாகவே செலுத்தியுள்ளன. கந்து வட்டி போல அல்ல இது. நாணய விகிதம் மாறுபடுவதால் (அதற்கும் ஓரளவுக்கு பணக்கார நாடுகளின் பேராசையும் ஏழை நாடுகளின் இயலாமையும் காரணம்) அமெரிக்க டாலரில் வாங்கிய கடனைக் கட்டி முடிக்க முடியாமல் திணறும் நாடுகள் பல உள்ளன.

    ஏழை நாடுகளின் மக்களுக்கு எந்தவித அரசுகள் அந்த நாடுகளை ஆண்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் உதவிகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்றே நினைக்கிறேன். ஆனால் நாளடைவில் குடியாட்சி முறை அதிகப் பலன் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆனால் குடியாட்சி என்பது மெதுவாகக் கொண்டுவரப்பட வேண்டியது. ஐரோப்பிய நாடுகளிலேயே குடியாட்சி என்பது வெறும் நூறு ஆண்டுக் கதைதான்! ஜெர்மனியில் குடியாட்சி முறையை ஹிட்லர் எந்த அளவுக்கு வெறும் 70 வருடங்களுக்கு முன் abuse செய்தார் என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அமெரிக்கா ஒன்றுதான் கிட்டத்தட்ட 200 வருடங்களாக குடியாட்சி முறையை வைத்துள்ளது. உள்கட்டமைப்புகள் வளர்ந்து குடியாட்சி முறை வலுப்பெற்றுள்ளது.

    ஈராக், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் குடியாட்சி முறையை மேலிருந்து செருக முயற்சி செய்யும் அமெரிக்கா படும் திண்டாட்டத்தை நாம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

    இந்தியாவில் குடியாட்சி இப்பொழுதுதான் ஓரளவுக்கு வலுப்பெற்று வருகிறது. இலங்கையில் குடியாட்சி முறை கூட இனக்கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

    குடியாட்சி முறை பல வருடங்கள் பிடிக்கும், எனவே குடியாட்சி வந்தால்தான் பட்டினிக்கு உதவி என்று சொல்வது மனிதாபிமானமற்றது.

    ReplyDelete
  3. //ஏழை நாடுகளின் மக்களுக்கு எந்தவித அரசுகள் அந்த நாடுகளை ஆண்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் உதவிகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்றே நினைக்கிறேன். //

    பத்ரி, இந்த நம்பிக்கையின் ஆதாரம் என்ன என்று புரியவில்லை. கொடுக்கும் ஒரு பணத்தில் காற்பணம்தான் மக்களுக்குப் போய்ச் சேரும்; ஆதலால் ஒரு பணம் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் நாளையிலிருந்து நாலு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

    //குடியாட்சி முறை பல வருடங்கள் பிடிக்கும், எனவே குடியாட்சி வந்தால்தான் பட்டினிக்கு உதவி என்று சொல்வது மனிதாபிமானமற்றது. //

    'குடியாட்சி' என்பதை விட்டு விடலாம், But we do need institutions, checks and balances, accountability, traceability. We don't need all these to assuage the donors, but to ensure that the benefits reach the suffering people.

    I hope I am not misunderstood as a lackey for the western govts. Far from it. My thought is that when it comes to providing both immediate and sustainable relief for the people, a larger share of responsibility lies within the scope of the respective national governments. As long as situations there are not remedied, any increase in aid will be akin to a band-aid on a haemorrhage.

    ReplyDelete
  4. Thanks for this post Badri.
    --இணை-உறவாளர் -- Great useage!
    -bala subra

    ReplyDelete
  5. ஸ்ரீகாந்த்: ஐ.நா சார்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே இருக்கின்றன. ஆப்பிரிக்காவில் பட்டினிச் சாவுகள் மிக அதிகம் இருக்கும் 25 நாடுகளிலும் ஐ.நாவின் FAO - UN Food and Agriculture Organization - இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கான பட்ஜெட்டை அதிகரிப்பதன் மூலம், இந்த நிறுவனத்துக்கு அதிகமான அளவில் பணத்தைக் கொடுப்பதன் மூலம் பட்டினியைக் வெகுவாகக் குறைக்கலாம்.

    ஆனால் அந்தந்த நாடுகளின் உள்கட்டமைப்பு நிச்சயமாக முன்னேற வேண்டும். அது எளிதான விஷயமல்ல என்பதையும் அறிவேன்.

    பட்டினியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அந்த நாட்டு மக்களுக்கு கல்வியைக் கொடுப்பதன் மூலமும் முன்னேற்றத்தைக் கொண்டுவரலாம். வளர்ந்த நாடுகளால் இரண்டையும் செய்யமுடியும். மனது வைத்தால் இன்னமும் அதிகமாகச் செய்யமுடியும்.

    ReplyDelete