நேற்று அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து கிடையாது என்று சொல்லியிருக்கிறது. இதுபற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நியூஸ் இங்கே.
அலிகார் பல்கலைக்கழகம் மைய அரசினால் சட்டமியற்றிக் கொண்டுவரப்பட்டதாலும், சிறுபான்மை முஸ்லிம்களால் உருவாக்கப்படாததாலும் அதற்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கக் கூடாது என்று 1968-ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்திருந்ததாம். ஆனால் 1981-ல் இந்திரா காந்தி காலத்தில் மைய அரசு ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் அந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் சிறுபான்மை அந்தஸ்து உடையது என்று மாற்றியுள்ளது. அதை இப்பொழுது அலஹாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். ஆனால் கடந்த சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பார்க்கும்போது நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
இங்கு மிகவும் அடிப்படையான ஒரு கேள்வி எழுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிகிள் 30(1)-ன் கீழ் சிறுபான்மையினர் எவரும் தமக்கென கல்வி நிறுவனங்களைக் கட்டலாம். ஆனால் ஓர் அரசு இயந்திரம் பொதுப்பணத்தை வைத்துக்கொண்டு கட்டும் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தைத் தரமுடியுமா? அதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?
முடியாது என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார் அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி.
ஆனால் என் கணிப்பில் மைய அரசுக்கோ, மாநில அரசுகளுக்கோ இம்மாதிரி செய்வதற்கு அதிகாரம் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். சிறுபான்மையினர் வளர்ச்சிக்கென நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைப்போலவே சிறுபான்மையினர் நலனுக்கென சிறுபான்மையினர் இட ஒதுக்கீடுடன் சேர்த்து கல்வி நிறுவனங்களை அமைக்க அரசுகளுக்கு முழு உரிமை இருக்க வேண்டும்.
பிஹார் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி தனது தேர்தல் அறிக்கையில் அலிகார் முஸ்லிம் பல்கலை போலவே பிஹாரிலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அங்கு முஸ்லிம்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் அலஹாபாத் தீர்ப்பு மேற்படி வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டைகளைப் போடும்.
எதிர்பார்த்தது போலவே பாஜகவின் முஸ்லிம் முகமூடி நக்வி இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் சிரிப்பை வரவழைக்கிறது. அதாவது இட ஒதுக்கீடு வழியாக ஒரு முஸ்லிம் கல்வி பெற்று வந்தார் என்றால் அவருக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டார்களாம். அதனால் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு எதிரானது என்கிறார். யாருடைய கல்விச் சான்றிதழிலும் "இவர் இட ஒதுக்கீட்டில் உள்ளே நுழைந்தவர்" என்று முத்திரை குத்தித் தருவதில்லை. மேலும், இட ஒதுக்கீட்டில் கல்வி நிலையங்களுக்கு உள்ளே வரும் மாணவர்கள் குறைந்த தகுதியுடன்தான் தேர்ச்சி பெறுகிறார்கள் என்ற கூற்று சரியானது என்று யாரும் நிரூபித்ததில்லை.
கல்வியைப் பொறுத்தமட்டில் கடந்த சில வருடங்களாகவே எதற்கெடுத்தாலும் வழக்குகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வது என்பது வாடிக்கையாகியுள்ளது. இது நல்லதல்ல.
இட ஒதுக்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பான என் பதிவுகள்: ஒன்று | இரண்டு
பயணம் என்பது அறிதலே
1 hour ago
//சிறுபான்மையினர் வளர்ச்சிக்கென நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைப்போலவே சிறுபான்மையினர் நலனுக்கென சிறுபான்மையினர் இட ஒதுக்கீடுடன் சேர்த்து கல்வி நிறுவனங்களை அமைக்க அரசுகளுக்கு முழு உரிமை இருக்க வேண்டும்.//
ReplyDeleteஉரிமை இருப்பதைக் கடந்து இம்மாதிரியான நிறுவனங்களை அமைப்பது நல்லதா, இல்லையா என்பதை யோசித்தால், நல்லதில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. கல்வி போன்ற விஷயங்களில், ஒரு அரசாங்கத்தின் பணி சமுதாயத்தை ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும். இது போன்ற அமைப்புகள் சமூகத்தைப் பிரிக்கவும், குழு அடையாளங்களுக்குள் வாழ்வதை ஊக்குவிக்கவுமே செய்யும். பொதுவான கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்பது செய்து வரும் சிறப்பான ஒருங்கிணைக்கும் செயலுக்குக் குந்தகமாகவே இருக்கும்.
சிறுபான்மையினரின் கலை, இலக்கியங்கள் தம்மளவில் வளம் குன்றாமல் இருப்பதற்கும், ஒரு கூட்டுப் பண்பாட்டிற்கு அவை செய்யும் பங்களிப்பு குறையாமல் இருப்பதற்கும், மானியங்கள் மூலம் அவற்றை ஊக்குவிப்பது என்பது வேறு; அவர்களுக்காக தனி, சிறப்பு அமைப்புகளை நிறுவி, அவர்கள் பிரிந்திருக்க வழி வகுப்பது என்பது வேறு.
சிறுபான்மையினர் யார் என்பதற்கான விளக்கத்தை முதலில் உச்ச நீதி மன்றம் தெளிவு படுத்த வேண்டும்.
ReplyDeleteகிட்டத்தட்ட 103 கோடி மக்கள் வாழும் நம் பாரத நாட்டில் 12.12 சதவீதம் மக்கள் அதாவது 12 கோடிக்கு மேல் இசுலாமிய சமயத்தை சேர்ந்தவர்கள். இது பல இசுலாமிய நாடுகளில் வாழும் மக்களைக் காட்டிலும் மிக அதிகம்.
ஆனால் சிறுபான்மையினர் என்றால் அது இசுலாமியர்களை மட்டும் முன்னிறுத்தப்பட்டு விவாதம் நடத்தப் படுவது ஏன் எனத் தெரியவில்லை. இந்தியாவில் இந்து, முஸ்லிம் தவிர எத்தனை எத்தனையோ சிறுபான்மையினர் உள்ளனர்.
கிறிஸ்துவர்கள் 2.3 சதவீதமும். சீக்கியர்கள் 1.9 சதவீதமும் புத்த, ஜைன மற்றும் பிற மதத்தவர்கள் 1.6 சதவீதமும் வாழ்கின்றனர்.
சிறுபான்மை என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் அளவிடப்படுமானால் மேற்சொன்ன சதவிகிதங்களின்படி யார் சிறுபான்மையினர் என்பது தெளிவாகப் புரியும்.
இந்த மற்ற சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்க அவர்களிடம் பெரும்பான்மை இல்லை.
பெரும்பான்மை (ஓட்டு) இல்லாததால் அரசியல் தலைகளுக்கு பெரும்பான்மையாக இருக்கும் இரண்டாவது இனத்தவர் சிறுபான்மையினராகத் தெரிகின்றனர். பாஸ்வான் போன்ற கொம்பு சீவும் அரசியல் தலைகள் இருக்கும் வரை இந்த விபரீதம் தொடரும்.
S Venkat
ஸ்ரீகாந்த்: அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதன் தேவையை நன்றாகவே உணர்ந்திருந்தார்கள். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களால் சமுதாய்த்தில் பிளவு ஏற்படும் என்று அவர்கள் நினைக்கவில்லை.
ReplyDeleteஇப்பொழுதைய கேள்வி - சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் தேவையா இல்லையா என்பதல்ல. தனியாரால் சிறுபான்மைக் கல்வி நிலையங்களைத் தாராளமாக உருவாக்க முடியும் (ஆர்ட்டிகிள் 31). ஆனால் அரசு அப்படிச் செய்யலாமா, கூடாதா என்பதுதான் கேள்வி.
தனியாரால் ஏற்படுத்தப்பட்ட சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் இந்தியாவுக்கென எவ்வளவோ செய்துள்ளன. கிறித்துவக் கல்வி நிலையங்கள் இல்லாவிட்டால் நம்மில் பலரால் படித்திருக்கவே முடியாது. (நான் 1-5 படித்தது நாகையில் ஒரு கிறித்துவப் பள்ளிக்கூடத்தில். அங்கு ஒவ்வோர் ஆண்டும் பைபிள் ஒரு பாடம்.)
சிறுபான்மையினருக்கான கல்வி நிலையம் என்றால் அங்கு பிறருக்கு இடம் கிடையாது என்பதல்ல பொருள். அந்தக் கல்வி நிலையத்தில் பெரும்பான்மையானோர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். மற்ற இனத்தவர்கள் சிறுபான்மை எண்ணிக்கையில் இருப்பர்.
ஆக எல்லாக் கல்வி நிலையங்களிலும் 100க்கு 80 ஹிந்துக்கள், 12 முஸ்லிம்கள், 8 இதர மதத்தவர் என்பது போக, ஒரு கல்வி நிலையத்தில் 50 முஸ்லிம்கள், 35 ஹிந்துக்கள், 15 இதரப் பிரிவினர் என்று இருப்பதில் என்ன தவறு?
நாடு பெரும்பான்மையாக ஹிந்து நாடாக உள்ளது என்பதற்காக எங்குச் சென்றாலும் அதே விகிதாசாரம் காப்பாற்றப்பட வேண்டுமா என்பதுதான் கேள்வி.
சமுதாயம் இதனால் எங்குமே பிளவுபடப் போவதில்லை.
ஒரு செகுலர் பள்ளி/கல்லூரி என்றாலும் கூட நவராத்திரி நேரத்தில் விடுமுறை விடப்படுகிறது. ரமலான் மாதத்தில் விடுமுறை கிடையாது. ஆனால் ஒரு முஸ்லிம் கல்லூரியில் ரமலான் மாதம் முழுவதும் நோன்புக்காக என்று விடுமுறை விடப்படுகிறது. அந்தக் காரணங்களுக்காகவே பல முஸ்லிம்கள் அதுபோன்ற கல்வி நிலையங்களைத் தேடிப்போக நேரிடலாம்.
பல "செகுலர்" கல்வி நிலையங்களில் உள்ளேயே ஹிந்துக் கோவில்கள் உண்டு. உதாரணத்துக்கு நான் படித்த நாகை தேசிய மேல் நிலைப்பள்ளி உள்ளே ஒரு பிள்ளையார் கோயில் உண்டு. இப்பொழுது என் பெண் படிக்கும் பி.எஸ்.சீனியர் ஹையர் செகண்டரி பள்ளியில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இதில் முந்தையது அரசு மான்யத்தில் நடைபெறும் பள்ளி. பிந்தையது முழுக்க முழுக்க தனியார் காசில் நடைபெறுவது.
மைனாரிட்டி மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் அடையாளங்களைப் பாதுகாக்கவும், தங்கள் வாழ்க்கை முறையை ஒட்டிக் கல்வி பயிலவும் தங்களுக்கென, தாம் பெரும்பான்மையாக இருக்கும் வகையில் கல்வி நிலையங்களை வேண்டுவது தவறாகாது.
தனியாக அவர்களால் அவ்வாறு கட்டிக்கொள்ளவும் முடியும். இப்பொழுதைய கேள்வியே அரசு முழுக்க முழுக்க உதவி செய்து அதுபோன்ற ஒரு கல்வி நிலையத்தைக் கட்டிக்கொடுத்து, அதை ஆண்டாண்டுக்கும் பராமரிக்க வேண்டுமா என்பதுதான்.
இதில் என் கருத்து - மைய அரசோ, மாநில அரசுகளோ இவ்வாறு செய்யலாம் என்பதே.
ஸ்ரீனிவாஸ் வெங்கட்: கிறித்துவர்கள் இந்தியா முழுவதும் பல சிறுபான்மைக் கல்விக்கூடங்களை நிறுவியுள்ளனர். கத்தோலிக்கர்கள், புராடெஸ்டெண்டுகள் என்று பலரும். தமிழகத்தில் தென்னிந்தியத் திருச்சபை (CSI) பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்துகிறது.
ReplyDeleteஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பல கல்வி நிலையங்களை உருவாக்கியுள்ளனர். (சென்னையிலே கூட)
அந்த அளவுக்கு முஸ்லிம்கள் தங்களுக்கென கல்வி நிலையங்களை உருவாக்கவில்லை. (புத்த மதத்தினரும் அப்படியே)
பஞ்சாபில் சீக்கியர்கள் பெரும்பான்மையினர். பல கல்வி நிலையங்கள் அரசாலும் தனியாராலும் கட்டப்பட்டுள்ளன.
எனவே முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அரசு கல்வி நிலையங்கள் கட்டித்தருவதில் தவறில்லை. ஆனால் மஹாராஷ்டிரா தவிர்த்து புத்த மதத்தினர் (அவர்களும் neo-buddhists) வேறெங்கும் எண்ணிக்கையில் வலுவாக இல்லை. அதனால் அவர்களுக்கென கட்டும் நிலையங்களில் அவர்கள் எந்த அளவுக்கு சேருவார்கள் என்று தெரியாது. எனவே எஞ்சி இருப்பது முஸ்லிம்கள் மட்டும்தான்.
அதனால் முஸ்லிம்களுக்கு என்று அரசு சிறுபான்மை அந்தஸ்துடன் கூடிய கல்வி நிலையத்தைக் கட்டித் தருவதில் தவறில்லை என்று தோன்றுகிறது.
இப்பதிவும் தொடர்ந்த தங்களின் பின்னூட்டமும் பல தகவல்களை அளித்தன.
ReplyDeleteநேர்மையான உங்கள் எழுத்துக்கு நன்றி!
பத்ரி, நல்ல பதில், நன்றி.
ReplyDeleteநானும் கத்தோலிக்கப் பள்ளியில் படித்தவன் தான். இருப்பினும், அங்கும் ஹிந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருந்தனர். எல்லோரும் மாதா கோவிலில் மண்டியிட்டுப்பின் தான் பரிட்சை எழுதப் போவோம்.
அரசாங்கப்பள்ளிகளுள் மதச்சின்னங்கள் இருக்கலாமா கூடாதா என்பது தனி வாதம் - கூடாது என்று தான் நான் சொல்வேன். பெரும்பான்மையினரின் மதச் சின்னங்களைத் தாங்கிய பள்ளிகள் இருப்பதால், அரசே சிறுபான்மையினரின் மதச்சின்னங்களைத் தாங்கியும் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வகையில் செய்தால், ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்த முனைவதாக இருக்கும்.
சிறுபான்மை தனியார் கல்வி நிறுவனங்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தவில்லை என்ற உங்கள் கூற்றை ஏற்கிறேன்.
நன்றி பத்ரி,
ReplyDeleteசிறுபான்மை தனியார் கல்வி நிறுவனங்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தவில்லை, உண்மைதான். ஆனால் அதையே அரசு பெரும்பான்மையினரின் வரிப் பணத்தின் மூலம் சிறுபான்மையினரில் ஒரு பிரிவினருக்கு மட்டும் செய்வது சற்றே உள்நோக்கம் கொண்டதாகத் தெரியவில்லையா? அப்படியானால் அரசு ஏன் மற்ற இனத்தவர்களுக்கு தன் செலவில் கல்விக்கூடங்கள் அமைக்கவில்லை.
முஸ்லிம்கள் தனியார் கல்விக்கூடங்களை நிருவவில்லை என்ற கூற்று ஏற்கத்தக்கது அல்ல. முஸ்லிம்கள் தங்கள் எண்ணிக்கையின் தேவைப்பட்ட அளவிற்கு கல்விக்கூடங்களை அமைக்கவில்லை என்பதே உண்மை. அது அரசின் குற்றமல்ல.
அதே சமயம் மற்ற சிறுபான்மையினரின் தனியார் கல்விக்கூடங்களுக்கு என்று அரசு எதுவும் விசேஷ சலுகைகளைத் தந்ததால் அவர்கள் அந்த கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவில்லை.
தங்களின் தேவைகளை உணர்ந்து அந்த அந்த இனத்தவரால் ஆரம்பிக்கப்படும் கல்வி நிலயங்களுக்கு அரசு உதவிகள் தருமேயானால் அது பாராட்டத்தக்கது. அதை விடுத்து ஒரு பிரிவினருக்கு மட்டும் ( அவர்கள் எண்ணிக்கையில் ஓரளவுக்கு அதிகமாக இருந்தாலும்) தானே முழுச் செலவும் செய்வதாக அரசு செயல் படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
அப்படிப் பார்த்தால் இந்துக்களிலும் சிறுபான்மையினராக இருக்கும் உட்பிரிவினருக்கும் அரசு அதே நோக்கத்தோடு செயல்படுகிறதா என்றால் என்னைப் பொருத்தவரையில் நிச்சயமாக இல்லை