Thursday, January 08, 2009

வி.ஐ.பி-க்கள் வாழ்க!

இன்று பல பெரிய மனிதர்கள் சென்னையில் புடைசூழ்ந்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரதீபா பாடில். பிரதமர் மன்மோகன் சிங். இருவரும் பிரவாசி பாரதீய தினத்தைக் கொண்டாட, இந்திய வம்சாவளியினர், அந்நிய நாடுகளின் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோருடன் உரையாட சென்னை வந்துள்ளனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னை புத்தகக் கண்காட்சி - 32 வருடங்களாக தொடர்ந்து நடந்துவருகிறது. இன்று இதன் ஆரம்ப விழா. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருவதாக உள்ளது. வருகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

இன்று காலை சென்னை ஐ.ஐ.டியில் நான் கலந்துகொள்ளவேண்டிய ஒரு கூட்டத்துக்கு 30 நிமிட நேரம் தாமதமாகச் செல்லவேண்டியதாயிற்று. அடையாறு சர்தார் வல்லபபாய் படேல் சாலை அவ்வளவு நெரிசல். கேட்டால், வி.ஐ.பிக்களைக் கை காட்டுகிறார்கள். நல்லவேளையாக, நான் பார்க்கவேண்டியவர்களும் தாமதமாகவே வந்தனர்.

காலையில் என் பெண்ணை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, அலுவலகம் வரும் வழியில் ஒரு ஐந்து நிமிடமோ அதற்கு மேலோ, சி.பி.ராமசாமி சாலையைக் கடக்கும் இடத்தில் நிறுத்திவைத்தனர். முதல்வர் கருணாநிதி, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு விரைகிறாராம். அவரது பாதுகாப்பை விரிவாக்கியிருக்கிறார்கள். நான் தினமும் அவரது பாதுகாப்பு வளையங்களைத் தாண்டித்தான் வீட்டுக்குப் போகவேண்டும். இப்போது மேலும் ஏழெட்டு காவல் வண்டிகள் சேர்ந்துள்ளன.

ஜெயலலிதா ஆட்சியைவிட, கருணாநிதியின் ஆட்சியில், அவரது வாகனங்கள் செல்லும்போது, கெடுபிடிகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இன்று கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது.

முதல்வர் வாகனங்கள் சி.பி.ராமசாமி சாலையை வெட்டி, டி.டி.கே சாலைக்குள் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, எங்களுக்கு முன்னேறிச் செல்ல அனுமதி கிடைத்தது.

பக்கத்தில் இருந்த ஆட்டோ டிரைவர், வண்டியைக் கிளப்பிக்கொண்டே சொன்னார்: ‘இவ்வளவு பாதுகாப்புக்கு நடுவுல இருக்கானுவ. குண்டுவீச்சுக்கு நடுவுல இருக்கற இலங்கைத் தமிழர்கள மட்டும் காப்பாத்த மாட்டானுவ.’

1 comment:

  1. ...‘இவ்வளவு பாதுகாப்புக்கு நடுவுல இருக்கானுவ. குண்டுவீச்சுக்கு நடுவுல இருக்கற இலங்கைத் தமிழர்கள மட்டும் காப்பாத்த மாட்டானுவ.’ ....

    தமிழ்நாடு ஆட்டோ டிரைவர்கள் பற்றி எனக்கிருந்த மோசமான கருத்துகள் எல்லாம் பனியாய் உருகிவிட்டது!

    ReplyDelete