Tuesday, January 13, 2009

முஸ்தஃபா தாஹிர் லகடாவாலா

இன்று நாகராஜனுடன் கீழ்ப்பாக்கம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது கே.ஜே.ஹாஸ்பிடல் கண்ணில் பட்டது.

இருபது வருடங்களுக்கு முன் ஒரு நாள் நானும் மூன்று நண்பர்களும் அங்கு வந்திருந்தோம். எங்களோடு படித்துவந்த மாணவன் ஒருவனை அங்குதான் அட்மிட் செய்திருந்தார்கள்.

அவனும் மற்றொரு மாணவனும் இரவு சினிமா பார்க்க (ஈகா தியேட்டராக இருக்கும் என்று நினைக்கிறேன்) வந்திருக்கிறார்கள். முஸ்தஃபாவிடம் மோட்டார் பைக் இருந்தது. அப்போதெல்லாம் ஹாஸ்டலில் படிக்கும் பையன்களிடம் வெறும் சைக்கிள்தான் உண்டு. (என்னிடம் அரதப் பழசான ஒரு டப்பா சைக்கிள் இருந்தது.) ஆனால் முஸ்தஃபா பணக்காரன். அவனது தந்தை பம்பாயில் பிசினஸ் நடத்திவந்தார். பைக் வாங்கிக் கொடுத்திருந்தார்.

அன்று முஸ்தஃபா ஹெல்மெட் அணிந்துதான் சென்றிருந்தான். நடு இரவில் குடித்துவிட்ட வந்த ஒருவன் தனது காரால் முஸ்தஃபாவின் பைக்கில் மோதிவிட்டான். பின்னால் அமர்ந்துவந்த மாணவன் தூக்கி எறியப்பட, முஸ்தஃபா கீழே விழ, வேறு ஒரு வண்டி, முஸ்தஃபாவின் தலைமீது ஏறிச் சென்றது. ஹெல்மெட் உடைந்துபோனது. தலை தப்பியது.

தலை தப்பியது என்றாலும் மூளை கலங்கிவிட்டது. ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். கே.ஜே.ஹாஸ்பிடலில்தான் அட்மிட் செய்திருந்தார்கள். முஸ்தஃபாவுக்கு பல மொழிகள் தெரியும். ஆங்கிலம். மராட்டி. ஹிந்தி. உர்தூ. தமிழில் கெட்ட வார்த்தைகள் மட்டும்தான் தெரியும்.

பத்து, பதினைந்து நாள்கள் கோமாவில் இருந்த முஸ்தஃபா, பிழைத்துவிட்டான். கொஞ்சம் கொஞ்சமாக, பல்வேறு மொழிகளும் அவன் கற்றிருந்த வார்த்தைகளும் நினைவுக்கு வர ஆரம்பித்தது. நாங்கள் போயிருந்த அன்று, அவனுக்கு நினைவுக்கு வந்த வார்த்தை ‘fuck’. அதையே விடாமல் மந்திர உச்சாடனம் செய்தான். கண்கள் திறக்கவில்லை. அருகில் அமர்ந்திருந்த அவனது தாய், அவனை வாய்மூடச் செய்த எந்தப் பிரயத்தனமும் பலனளிக்கவில்லை.

“இப்படித்தாம்பா, வாய்க்கு வந்த வார்த்தையை சொல்லிகிட்டே இருப்பான்” என்றார் கண்கள் பனிக்க. எங்கள் யாருக்குமே பேச்சு வரவில்லை. வாய்மூடி மௌனமாக உட்கார்ந்திருந்தோம். அடுத்து புதிய ஒரு வார்த்தை மூளைக்குள் பிரண்டு, அவன் வாயிலிருந்து ஒலிக்க ஆரம்பித்தது. ‘yellow’ அல்லது ‘tree’ - ஏதோ ஒன்று, இன்று எனக்கு ஞாபகம் வரவில்லை. அதையே உச்சரித்துக்கொண்டிருந்தான்.

கனத்த இதயத்துடன் திரும்பிவந்தோம். இவன் திரும்பி வகுப்புக்கு வரப்போவதில்லை என்றே தோன்றியது. மூன்றாம் செமஸ்டர் முடிந்து, நான்காம் செமஸ்டர் ஆரம்பித்த சில நாள்கள் கழித்து முஸ்தஃபா மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்தான். பைக் கூடாது என்று சொல்லிவிட்டாராம் டாக்டர். சைக்கிள்தான். கண்ணாடி அணிந்திருந்தான். அவனது ரெடினாவில் விழும் பிம்பத்தை மூளை புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. கண்ணில் படும் பிம்பம் தெளிவாக அவனுக்குத் தெரிவதில்லை என்பதால் அவனது கண்கள் கூர்ந்து நோக்க முயற்சி செய்யும். அதனால் தலை சீக்கிரமே வலிக்க ஆரம்பிக்கும்.

சைக்கிள் ஓட்டும்போதுகூட அவன் தடுமாறினான். இரண்டு முறை கீழே விழுந்துவிட்டான். அதனால் சைக்கிளும் ஓட்டக்கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். மற்றொரு மாணவன் ஓட்ட, இவன் பின்னால் உட்கார்ந்து வருவான்.

ஒரு செமஸ்டர் பாடம் போனதால், அடுத்த வருட மாணவர்களுடன் சேர்ந்து படிக்கத் தொடங்கினான் முஸ்தஃபா. ஆனால், அவனிடம் பரிவு காட்ட யாரும் இல்லை. தனித்து இவன் மட்டும் வேறு ஹாஸ்டலில். இவனது வகுப்பு மாணவர்கள் வேறு ஹாஸ்டலில்.

நடுவில் ஒரு நாள், அவனை கோதாவரி ஹாஸ்டல் வாசலில் சந்தித்தேன். ஐஐடியை விட்டு விலகப்போவதாகச் சொன்னான். மஹாராஷ்டிராவிலேயே வேறு ஒரு பொறியியல் கல்லூரியாகப் பார்த்து சேரலாம் என்று யோசித்திருப்பதாகச் சொன்னான். அவனது தந்தையோ படிக்கவேண்டாம், குடும்பத் தொழிலுக்கு வந்துவிடு என்கிறாராம். ஆனால் இவனுக்கோ படிக்க விருப்பம்.

மிகவும் வருத்தமாக இருந்தது. ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்திருப்பான். யாரோ ஒரு மூடன் குடித்துவிட்டு தெருவில் கார் ஓட்டி இவனது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டானே.

அதற்குப்பின் அவனைக் காணமுடியவில்லை. இன்று எங்கே இருக்கிறான் என்று தெரியாது. பொறியியல் படித்து முடித்தானா அல்லது குடும்பத் தொழிலில் இருக்கிறானா என்றும் தெரியாது.

3 comments:

  1. சோகமான நினைவுதான், ஐஐடி யில் இருந்து ஓரு நல்ல மாணவன் இப்படி ஆகிவிட்டது மிகவும் வேதனையான விஷயம்.

    அதை நினைவு கூர்ந்து எழுதியுள்ளது நெகிழவைக்கிறது.

    ReplyDelete
  2. டில்லியில் இந்த மாதிரி சம்பவங்கள் இன்னும் அதிகம். 90களில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டாவது இந்தியன் எக்ஸ்பிரசில் இடம்பெறும்.

    அமெரிக்காவில் இந்த மாதிரி விபத்துகளைத் தவிர்க்க, ஸ்டியரிங் வீலைத் தொடுவதற்கு முன் வாயை ஊதி ஆல்கஹால் இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்கு சட்டம் இயற்ற முயல்கிறார்கள்.

    அந்த மாதிரி சாதனம் வைப்பதை ப்ரைவசி குறுக்கீடு என்று ஒரு சாரார் விரும்பவில்லை (மதுபான/சாராயக்க்கடை லாபியிஸ்ட்)

    அப்படி சாதனம் இருந்தாலும் 21+க்குத்தான் மது என்பதையே ஒழுங்காக நடைமுறை செய்யாத சமூகத்தில் இதற்கும் மாற்றுவழி வந்துவிடும் என்று இன்னொரு சாரார் கிடுக்கிப்பிடி சட்டத்தைக் கோருகிறன்றனர்.

    குடித்துவிட்டு வண்டியோட்டினால், முதல் முறை செய்த தவற்றுக்கு உரிமம் ரத்து. இரண்டாம் முறை கடுங்காவல் சிறை என்று வைக்கலாம்.

    ReplyDelete
  3. //குடித்துவிட்டு வண்டியோட்டினால், முதல் முறை செய்த தவற்றுக்கு உரிமம் ரத்து. இரண்டாம் முறை கடுங்காவல் சிறை என்று வைக்கலாம்.//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete