Tuesday, January 06, 2009

நான் எடிட் செய்த புத்தகம் - 2: ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரின் பணி அனுபவம்

நேரு முதல் நேற்று வரை

B.S.ராகவன் (ப.ஸ்ரீ.ராகவன் என்றே தமிழில் எழுதுகிறார்), ஏற்கெனவே கலைஞன் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டிருந்த நூல்தான் இது. மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகம் வாயிலாக வருகிறது. ஆனால் முழுமையான மாற்றம் கண்டுள்ள நூல். கொஞ்சம் புது விஷயங்கள், நிறைய மாற்றி எழுதப்பட்ட நூல். படிக்க எளிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த ராகவன், தனது பயிற்சிக்காலத்தை விவரித்தபின், மேற்கு வங்கத்தில் சப்-கலெக்டராகத் தான் சேர்ந்ததுமுதல் பல்வேறு பணிகளை மேற்கொண்டதை அழகாக விளக்குகிறார். மேற்கு வங்கத்தில் ‘பவர் கமிஷனராக’ பணியாற்றும்போது அங்கு நிலவிய மின் பற்றாக்குறையை எப்படிச் சமாளித்தார் என்பது இந்தக் கட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சர் முதல் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. இதைப்பற்றி முன்னர் குறிப்பிட்டு நான் எழுதியிருந்த பதிவு இதோ. அவரது புத்தகத்திலிருந்து ஒரு சிறு துண்டு இங்கே:
நான் [மேற்கு வங்க மின்சார] வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, மின் உற்பத்தித் திறன் சீரழிந்த நிலையில் இருந்தது. சில மின் நிலையங்கள் மூடிக்கிடந்தன. சிலவற்றின் உற்பத்தி 30, 40 சதவிகிதத்துக்கு மேல் எழவில்லை. ஆனால், பொக்காரோவிலிருந்து தினமும் வந்த அறிக்கையில், அங்கிருந்த மூன்று மின் நிலையங்களும் 95 சதவிகிதம் உற்பத்தி செய்துகொண்டிருந்தன என்று தெரிந்தது. அங்கு மட்டும் இந்த ஆச்சரியம் நிகழ்வதற்குக் காரணம் என்ன?

இந்த ரகசியத்தை நேரில் போய்த் தெரிந்துகொள்ளத் தீர்மானித்தேன். நான் வரப்போகும் நாளைக் குறித்து அங்கு பொறுப்பிலிருந்த பொது மேலாளருக்கு எழுதினேன். பொக்காரோ ரயில் நிலையத்தில் இறங்கிச் சுற்றும் முற்றும் பார்க்கிறேன். வரவேற்க ஒரு ஈ, காக்காய்கூட இல்லை. வாரியத்தின் தலைமையில் இருப்பவருக்கு அவர் முதன்முதலாக வருகை தரும் இடத்தில் இப்படி ஓர் அவமதிப்பா என்று குமுறினேன்.

திடீரென ஒர் ஆள் என்னை நோக்கி வந்து, ‘ராகவன் ஐயாவா?’ என்றார். முழங்கால் வரை நிஜார். சாக்கு போன்ற துணியினால் ஆன அரைக்கை சட்டை. இரண்டுமே கிழிசல். கறுப்பு எண்ணெய்க் கறை. காதறுந்த செருப்பு. பரட்டைத் தலை. சவரம் செய்யாத முகம். ‘நான்தான் சஹாய், பொது மேலாளர். பொறியாளர்கள் முக்கியமான பணிகளில் இருப்பதால், உங்களை வரவேற்க அழைத்துவரவில்லை. வாருங்கள் போகலாம்!’ என்றார். சாதாரணமாக ஒரு மூத்த அதிகாரி வருகை தந்தால், விருந்தினர் விடுதிக்கு முதலில் அழைத்துப் போய் உபசாரம் செய்வது வழக்கம். சஹாய் என்னை நேராக மின் நிலைய வளாகத்துக்கு இழுத்துக்கொண்டுபோய் மூன்று மணி நேரம் ஒவ்வொரு இடமாகக் காட்டினார். மலை போல் சேமித்து வைத்திருந்த நிலக்கரிக் குவியலின் மேலும் ஏறச் செய்தார்.

பொக்காரோவில் நான் தங்கியிருந்த இரண்டு நாள்களிலும் எனக்கு கிருஷ்ண குமார் சஹாயின் மேலாண்மை முறைகளில் நல்ல பாடம் கிடைத்தது. காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே கிளம்புவார். வாசலில் இருக்கும் ஒரு மரத்தின் கிளையை உடைத்துக் கையில் எடுத்துக்கொள்வார். அடுத்த 3, 4 மணி நேரத்துக்கு மின் நிலையத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்வார். எண்ணெயோ, தண்ணீரோ ஒழுகிக் கொண்டிருந்தால் அதைச் சரிசெய்வார். தூசியைத் துடைப்பார். மேலாளர் செய்வதைப் பார்த்து வெட்கமடைந்து பணியாளர்கள் ஓடிவருவார்கள். ஏதாவது ஒரு பொறி இயங்கவில்லை என்றாலோ அல்லது தூசி படிந்திருந்தாலோ அதன்மீது பலமாக மரத்தின் கிளையால் அடித்துப் பணியாளர்களைக் கவனிக்கச் சொல்லுவார். மதியம் 12 மணிக்குத் திரும்பி வந்து, புத்தகங்கள் படிப்பார். சங்கீதம் கேட்பார். இல்லையென்றால் பீர் குடித்து நேரத்தைப் போக்கிக்கொண்டிருப்பார்.

அதுதான் பொக்காரோ மின்நிலையத்தின் உற்பத்தியின் ரகசியம்.
ராகவன், மாநிலத்திலிருந்து மத்திய உள்துறை செயலகத்துக்கு வேலை செய்ய வந்தார். பல காலம் உள்துறை செயலகத்தில் பணிபுரிந்தார். நேரு, சாஸ்திரி ஆகியோர் காலத்தில் உள்துறைச் செயலகத்தில் வேலை செய்த அனுபவங்களை நினைவுகூர்கிறார். பின்னர் மீண்டும் மேற்கு வங்கம். இந்திரா காந்தி காலத்தில் திரிபுராவில் தலைமைச் செயலர். பின்னர் மத்திய உணவு அமைச்சகத்தில் வேலை. சி.சுப்ரமணியன் வேளாண் மந்திரியாக இருந்தபோது நடந்த பசுமைப் புரட்சி பற்றி, இத்தாலியில் இருக்கும் ‘உலக உணவு பாதுகாப்புக் குழுவில்’ வேலை செய்தது பற்றி, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஃபெல்லோவாகச் சென்றது பற்றி, என்று தனது பணி அனுபவங்களை விரிவாகவே, அதே சமயம் எளிமையாகப் படித்துப் புரிந்துகொள்ளுமாறு எழுதுகிறார்.

புத்தகத்தின் கடைசிப் பகுதியில் தான் அரசுப் பணியில் இருந்தபோது கற்ற மேலாண்மை அனுபவங்கள், நெகோஷியேஷன் செய்வது எப்படி என்பது பற்றிய பாடங்கள் ஆகியவை, புத்தகத்துக்கு ஒரு மேலாண்மைப் பாடநூலின் தகுதியைக் கொண்டுவருகின்றன.

ராகவன் ஒரு ஆப்டிமிஸ்ட். “எங்க காலத்துல எல்லாம்...” என்று போரடிப்பதில்லை. “இப்ப நாடே கெட்டுப்போச்சு...” என்று புலம்புவதில்லை. (அரசியல்வாதிகளைப் பற்றி கொஞ்சமாகக் குறைசொல்லும்போது மட்டும், இந்தப் புலம்பல் எட்டிப்பார்க்கிறது.)

இன்றும், 80 வயதுக்கு மேலானபோதும், படு சுறுசுறுப்பாக தமிழகத்தின் சில குடிமைச் செயல்பாடுகளுல் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும், ஆட்சிப் பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் புத்தகத்தை பரிந்துரைப்பேன். இந்திய நிர்வாகம் எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள விழைபவர்களுக்கும் இதைப் பரிந்துரை செய்வேன்.

ராகவனைப் போன்றே தமிழகத்தைச் சேர்ந்த பிற ஐ.ஏ.எஸ் அலுவலர்களும் ஓய்வுபெற்றபின் தங்களது பணி அனுபவங்களைச் சுவைபட எழுதினார்கள் என்றால் நன்றாக இருக்கும்.

6 comments:

  1. Eagerly looking forward to visiting and buying books from your stalls. Wishing you many many success.

    ReplyDelete
  2. Any launch offers for these books?

    ReplyDelete
  3. பத்ரி! சுவாரசியமாய் இருக்கிறது. இதுவும் மொழிப்பெயர்ப்பா? ஆம் என்றால் ஆங்கிலத்தில் என்ன பெயர்?

    ReplyDelete
  4. உஷா: இது தமிழிலேயே எழுதப்பட்ட புத்தகம். மொழிபெயர்ப்பல்ல. ஆங்கிலத்தில் அவரே எழுதிக்கொண்டிருக்கிறார். வெளியாகும் நேரத்தில் சொல்கிறேன்.

    ReplyDelete
  5. பத்ரி அய்யா வணக்கம். நல்ல செய்தி, நன்றி. இவரின் பிறப்பு, படிப்பு, பணி குறித்த தகவல்கள் தமிழில் இருந்தால் இவரைப்பற்றி தேடும் தமிழ் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும், வாய்ப்பிருந்தால் தரவு ஏற்றம் செய்க அய்யா..... நன்றி பொன்.இராமகிருஷ்ணன் srv - சமயபுரம்.

    ReplyDelete
  6. பத்ரி அய்யா வணக்கம். நல்ல தகவல்கள் நன்றி. ப.ஸ்ரீ.ராகவன் அய்யாவின் பிறப்பு, படிப்பு, பணி குறித்த தகவல்கள் தமிழில் இருந்தால், தமிழ்வழி மாணவர்களுக்கும் மிக எளிமையாக இருக்கும். வாய்ப்பிருந்தால் தரவு ஏற்றம் செய்து தாருங்கள் நன்றி அய்யா.

    ReplyDelete