Friday, January 16, 2009

பதற்றம்

பொதுவாக, நான் சமநிலையில் இருப்பவன். டென்ஷன் ஆவது குறைவே. மனம் சோர்ந்து இருப்பதும் வெகு குறைவே. ஆனால் சில நேரங்களில் விவரிக்கமுடியாத அளவு பதற்றத்துக்கு ஆளாவேன். பொதுவாக இது வேலை சார்ந்தே இருக்கும்.

பலருக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காரணத்தாலேயே இந்தப் பிரச்னைக்கு நான் ஆளாகிறேன். சில வேலைகளைச் செய்துதரக்கூடிய நிலையில் நானோ என் நிறுவனமோ இருக்காது. நேரப் பற்றாக்குறை. அந்த செயலைச் செய்துதருவதால் எந்தவித வணிக ஆதாயமும் எனக்கோ நிறுவனத்துக்கோ கிடையாது. ஆனாலும், எதிராளி கேட்டு, மாட்டேன் என்று சொல்ல என் மனம் இடம் கொடுக்காது. “அதனால் என்ன, செய்துவிடலாம்” என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி மாட்டிக்கொள்வேன். சில நாள்கள் கழித்துத்தான் உளைச்சல் ஆரம்பமாகும்.

செய்துமுடிக்கவே முடியாத அந்த விஷயம் முடிந்துவிடும் என்று அடுத்தவர் எதிர்பார்த்துக் காத்திருப்பார். “அதை எடுத்துக்கொண்டுவிட்டோமோ, ஐயோ, எப்படி முடிக்கப்போகிறோம்” என்ற பதற்றத்தில் நான் செய்யவேண்டிய பிற வேலைகளும் ஓடாமல் தங்கி நிற்கும். நான் ஒப்புக்கொண்ட ஒரு விஷயத்தைச் செய்யாமல் டபாய்க்கிறேன் என்று எதிராளி கடும் கோபம் அடைய ஆரம்பிப்பார். இவருக்கு உதவப்போய் இப்படி சிக்கித் தவிக்கிறேனே என்று என்னை நானே நொந்துகொள்வேன்.

இந்தப் பதற்றத்திலிருந்து வெளி வருவது கஷ்டமல்ல. அந்த வேலையை முடித்துத் தரவேண்டும். அதனால் பிற காரியங்கள் நடப்பது தாமதமாகும். அல்லது எதிராளியின் காலில் விழுந்து, அதை வேறு யாரிடமாவது செய்து வாங்கிக்கொள்ளச் சொல்லவேண்டும். அதனால் உறவு முறியும். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதையும்கூட ஓரிரு மாதங்களில் சரிபடுத்திக்கொள்ளலாம்.

ஆனால் அந்தப் பதற்றம் நிலவும்போது படும் பாடு இருக்கிறதே. தூக்கம் வராது. செய்யவேண்டிய வேலைகள் மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கும். நாளை அந்த மனிதர்முன் விழிக்கவேண்டும் என்றால் என்ன பதில் சொல்வது என்று பல பதில்கள் மண்டையில் ஓடும்.

இதில் மோசம், சில பொய்களை வேறு சொல்லியிருப்பேன். “வேலை ரெண்டு நாள்ள முடிஞ்சுடும் சார்!” ஆனால் வேலை ஆரம்பித்திருக்கவே செய்யாது. எப்படி ரெண்டு நாளில் முடிக்கமுடியும்? ஏன் ரெண்டு நாள் என்று போனில் பேசும்போது வாயில் வந்தது? நாக்கில் சனி. பதற்றம் மேலும் அதிகமாகும்.

இரண்டு நாள், நான்காகி, நான்கு எட்டாகி, போனில் மேலும் பொய் சொல்லி...

இனி இன்னொரு முறை இப்படிப்பட்ட ஃபேவர் யார் கேட்டாலும் செய்யக்கூடாது என்று மனத்துக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால் இன்றுவரை தட்ட முடிந்ததில்லை.

இந்த ஆண்டு உறுதிமொழி... நிர்தாட்சண்யமாக, முடியாத ஒரு காரியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது.

Say no, emphatically. It is simply not worth the effort.

15 comments:

 1. //ஆனால் அந்தப் பதற்றம் நிலவும்போது படும் பாடு இருக்கிறதே. தூக்கம் வராது. செய்யவேண்டிய வேலைகள் மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கும். நாளை அந்த மனிதர்முன் விழிக்கவேண்டும் என்றால் என்ன பதில் சொல்வது என்று பல பதில்கள் மண்டையில் ஓடும்.
  //

  உண்மைதான் எப்படி எஸ்கேப் ஆகறாதுன்னு யோசிச்சு யோசிச்சே இன்னொரு டென்ஷன் ஆகிடும்! பட் எஸ்கேப் ஆகறது சம்பந்தமா நிறைய ஆப்ஷன்கள் கிடைக்கும்! :))

  //நிர்தாட்சண்யமாக, முடியாத ஒரு காரியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது.///

  இதை ஏற்றுக்கொண்டாகிவிட்டதா இல்லையா? :)))

  ReplyDelete
 2. //Say no, emphatically. It is simply not worth the effort.//

  Say no, emphatically, *If* it is simply not worth the effort.

  என்று இருக்கவேண்டுமோ? :-)

  ReplyDelete
 3. ஆமாமாம். புரிஞ்சது இப்போ:-)

  ReplyDelete
 4. தாமதமாக வந்துள்ள ஞானம் என்றாலும், தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு / விரும்புபவர்களுக்கு இன்றியமையாத குணாம்சம் இது என்பதால் இந்த வாரப் பூச்செண்டு உங்களுக்கே!

  - ஸ்வாமி

  ReplyDelete
 5. நல்ல முடிவு தான்.
  பை தி வே, எனக்கு உங்களால் ஒரு சின்ன காரியம் ஆக வேண்டும். முடித்துக் கொடுக்க முடியுமா? ;)

  ReplyDelete
 6. Yes Badri, saying emphatically No when you feel it cannot be done is indeed worth cultivating, or as the popular motivation book puts it in its title "Don't Say Yes When You Want to Say No".

  ReplyDelete
 7. Badri...Better come up with a book titled "How to say NO"! :))

  Jokes apart, these things happens to most of us. Recently i requested some one to print my book. But they can't do it due to Chennai Book Fair work commitments. They were not able saying "no" to me too. But started giving some reasons. I understood thier problem. And told them , that they can do my book after Chennai Book Fair.

  May be they were thinking in the same line as you did. They were hesitant to hurt me by saying can't. But the funny thing is that one do feel more bad when getting funny reasons.

  Explaining the real situation helps. If we can't say it in face - say it through e-mail or sms.

  ReplyDelete
 8. யாழ் நகரில் எனக்கோர் ரெய்லர் சிநேகிதம் ... அவரும் வரும் ஓடர்களை மறுக்காது ஏற்றுக் கொள்வார் ... அந்தியானதும் தண்ணியடிப்பார் ...
  யாழ் நகரில் பொருட்கள் தட்டுப்பாடான சமயம் ...
  ஓர் கறுத்த டெனிம் தைக்க வந்தது ... கறுத்த நூல் நமது ரெய்லர் இடம் இல்லை ... வெள்ளை நூலை
  பழய என்ஜின் ஓயிலில் தோய்த்தெடுத்து வேலையை
  முடித்துக் கொடுத்தார் ... துவைக்கும் போது பான்ரில் தண்ணீர் பட்டதும் தைத்த நூல் வெள்ளையாக மாற ... ஓரே அசிங்கமையா உரியவன் கேட்ட கேள்வி

  ReplyDelete
 9. மிகுந்த நன்றி...ஒரு நோய் போல என்னைத் தொற்றிக்கொண்ட குணம் என நான் வருந்திக் கொண்டிருக்கும் பழக்கம், மற்றவர்களுக்கும் உண்டு என்று அறியத் தெரிவதால்...

  இரு வருடங்களூக்கு முன்னர் என் நண்பன் கூறிய ஆலோசனை 'You should say NO when you have to say no' அதன் பின்னர் கொஞ்சம் பரவாயில்லை...

  நீங்கள் சட்டக் கல்வி பற்றி எழுதக் கூறிய பொழுது கூட நான் ஒதுங்கிக் கொண்ட பொழுது கொஞ்சம் மனவருத்தம் இருந்த பொழுது கூட, சரியான செய்லை நான் செய்ததாகவே கருதினேன்...

  ReplyDelete
 10. தங்களது பதற்றமும், அதன் காரணியான 'Difficult to Say No' Syndrome-ம் புரிந்து கொள்ள முடிகிறது! கடன் அன்பை முறிக்கும் என்பது போல் 'நிறைவேற்ற முடியாத வாக்குறுதி நட்பை நிலைகுலைய செய்யும்' என்று ஒரு தகவல் பலகையை அலுவலகத்தில் மாட்டுங்கள்! 'Ninety Nine ways to say NO' என்று புத்தகம் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்!

  ReplyDelete
 11. இது நம்ம ஊர்காரங்களுக்கு இருக்கிற குணமோ?

  ReplyDelete
 12. Have you read the book 'Dont say YES when you want to say NO'?

  ReplyDelete
 13. //ரெய்லர் சிநேகிதம் ...//

  tailor என்பதை டெய்லர் என்று எழுதினால் சரி. இப்படி ரெய்லர் என்று எழுதினால் எப்படி சார் புரிந்து கொள்ள முடியும் (கருப்பு துணி, நூல் என்றதால் புரிந்தது)

  இலங்கை தமிழர்களில் சிலர்
  T-ற
  D-ட
  R-ர
  என்று பயன் படுத்துகிறார்கள் (இந்தியாவிலும் சில இடங்களில் இந்த பழக்கம் உள்ளது உதாரணம் TDTA - றி.டி.றி.ஏ)

  அதாவது ஆங்கிலத்தில் இரு D,T மற்றூuம் ஒரு R என்பதாலும் தமிழில் ஒரு ட மற்றும் இரு ர,ற என்பதாலும் என்று புரிந்து கொள்ள முடிகிறது

  நீங்கள் tக்கு ர பயன்படுத்துவது குழப்பமாக உள்ளதே
  அப்படியென்றா D - ட, R - ற வா

  ReplyDelete
 14. Bruno கேள்விக்கு நன்றி >>> T R சவுந்திரராஜன் > மகாலிங்கம் > ராஜகுமாரி இவர்களது initials சிலர் ' ரி ' என்றும் பலர் ' டி ' எனவும் எழுதுகின்றனர் >>>

  இவற்றில் எது பொருத்தமாக உங்களுக்கு தோற்றுகின்றது ?

  மிகுதியை தெளிவாக தொடருவோம் >>> நன்றி

  ReplyDelete
 15. In my opinion one should not hesitate to say 'No' if that's honest.
  One need not be rude or crude or blunt about it, but politely explain the circumstances.
  If one is not a good explainer but stammers and conveys the wrong impression of guilt, always the sound advice of muna varatharajan is at hand: Convey your decision and not the reason.
  In Administration there is an escape vent that avoids the embarrassment of explaining the reasons for the negative decision.
  You would allow, I suppose, that it is the negative decisions are the troublesome ones.

  ReplyDelete