Monday, January 19, 2009

செயற்கை உயிர்?

[நான் அம்ருதா மாத இதழில் அறிவியல் கட்டுரைகள் சிலவற்றை எழுதத் தொடங்கியுள்ளேன். முதலாவது டிசம்பர் 2008-ல் வெளியான கட்டுரை, சந்திரயான் பற்றியது. அதை இங்கே வெளியிடவில்லை. ஏற்கெனவே அதைப் பற்றி வலைப்பதிவில் நிறைய எழுதிவிட்டேன் என்பதால். அடுத்து ஜனவரி 2009-ல் வெளியானது இந்தக் கட்டுரையின் ஒரு வடிவம். அதை மெய்ப்பு பார்த்து, சில வரிகளை மாற்றி இங்கே தருகிறேன். எச்சரிக்கை: மிக நீண்ட கட்டுரை.]

********

மனித சமுதாயம் தோன்றி, சிந்தனை வளர்ந்த நிலையிலிருந்தே, ‘உயிர்’ என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உருவாகத் தொடங்கின. ஆரம்பகாலத்தில் இந்தச் சிந்தனைகள் யாவுமே, உயிர் என்பது கடவுளால் தோற்றுவிக்கப்பட்டது என்ற கருத்தோட்டம் கொண்டதாகவே இருந்தன.

வேறு எப்படி உயிர் என்பது தோன்றியிருக்கக் கூடும்? மனிதனால் உயிரைப் படைக்க முடியுமா? புதிய ஒரு மிருகத்தையோ பறவையையோ உருவாக்க முடியுமா? உயிரைப் போக்கக்கூடிய மனிதனால், இறந்த ஒரு சடலத்துக்குள் உயிரைப் புகுத்த முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கு பல நூற்றாண்டுகளாக யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பிறகு 19-ம் நூற்றாண்டு தொடங்கி துளித்துளியாக சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தன.

அவற்றுள் ஒன்று, மனிதர்களுக்குப் பெரும் அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. அதுதான் பரிணாம வளர்ச்சி எனப்படும் கொள்கை. சார்லஸ் டார்வின் (1809-1882) என்பவரும் ஆல்ஃபிரட் வாலேஸ் (1823-1913) என்பவரும் தனித்தனியாகக் கண்டுபிடித்த கொள்கை இது. இதன் அடிப்படையில் உருவானதே பரிணாம உயிரியல் (Evolutionary Biology) என்ற துறை.

பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்கு முந்தையதாக, மனிதனுக்கு உயிர்கள் பற்றி என்ன புரிதல் இருந்தது? உலகில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன. அவை நகராத தாவரங்களாக இருக்கலாம்; அல்லது நகரும் விலங்குகளாக (ஊர்வன, பறப்பன, ஓடுவன என்று எதுவாகவும்) இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் நம் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கும் சக்தி ஒன்று (கடவுள் என்று வைத்துக்கொள்வோம்), ஒவ்வொன்றும் இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, உருவாக்கியுள்ளது.

அதாவது காயிலே புளிப்பதும், கனியிலே இனிப்பதும் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டது. ஒட்டகச் சிவிங்கிக்குக் கழுத்து நீளமாக இருப்பதுவும் யானைக்குத் தும்பிக்கை இருப்பதுவும் முன்கூட்டியே பிரபஞ்ச சக்தியால் தீர்மானிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனின் கண்கள், காதுகள், ரத்த ஓட்டம், கைகள், கால்கள் என்று எதை எடுத்தாலும் குத்துமதிப்பாக இந்த நீளம், இந்த அகலம், இந்த வடிவம் என்று எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை.

சில மாறுபாடுகள் இருக்கலாம். ஒரு சிங்கத்தைப்போல இன்னொரு சிங்கம் இருப்பதில்லை. குரங்குகள் என்று இனத்துக்குள் பல கிளைகள் உள்ளன. ஒரு கிளைக்குள் இருக்கும் பல்வேறு தனிப்பட்ட குரங்குகளும் வித்தியாசமாகத் தோற்றம் அளிக்கின்றன. சில ஊனமாகப் பிறக்கின்றன. யாவுமே கடவுளின் லீலைகளே.

ஆனால், பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு இதை மறுத்தது. ஓர் உயிரினத்திலிலிருந்து நாளடைவில், மற்றொரு முற்றிலும் புதிய, வித்தியாசமான உயிரினம் உருவாகக்கூடும் என்றது இந்தக் கோட்பாடு. அதற்குத் துணையாக எண்ணற்ற உதாரணங்களைக் காட்டினார் டார்வின்.

கடவுள் அல்லது பிரபஞ்ச சக்தி என்ற ஒரு கோட்பாடு இல்லாமலேயே, புதிது புதிதாக உயிரினங்கள் உருவாக முடியும். இந்த உலகத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்த காலத்தில் மனிதன் என்ற உயிரினமே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது மனிதன் என்ற உயிரினம் உள்ளது. இன்று இல்லாத பல உயிரினங்கள் நாளை உருவாகலாம். இன்று இருக்கும் பல உயிரினங்கள் நாளை இல்லாமல் போகலாம்.

அப்படியென்றால் எந்த அடிப்படையில் இந்தப் புதிய உயிரினங்கள் உருவாகின்றன? எந்த அடிப்படையில் அவை அழிகின்றன?

இந்த இடத்தில்தான் டார்வின் தனது கோட்பாடான ‘இயற்கைத் தேர்வு’ என்பதை முன்வைத்தார். எந்த உயிரினம் பிழைக்கிறது அல்லது எந்தப் புதிய உயிரினம் ‘தோன்றுகிறது’ என்பதை இயற்கைதான் தீர்மானிக்கும். ஆனால், இந்த இடத்தில் ‘இயற்கை’ என்றால் அது யாரோ ஒருவர் உட்கார்ந்து திடீரென எடுக்கும் ஒரு முடிவல்ல இது. சுற்றுச் சூழலும் பிற உயிரினங்களும் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின், அந்த உயிரினத்தின் தனிப்பட்ட நபர்கள்மீது உருவாக்கும் விளைவு.

இதை முழுமையாகப் புரிந்துகொள்வதற்குமுன், நாம் தெரிந்துகொள்ளவேண்டிய வேறு ஒன்று உள்ளது. அதைப் பார்த்துவிட்டு இயற்கைத் தேர்வுக்கு வருவோம்.

*

ஓர் உயிரினத்துக்கும் அதில் உள்ள ஒரு தனிப்பட்ட உயிருக்கும் என்ன தொடர்பு? இரண்டு வெவ்வேறு உயிரினங்களில் உள்ள இரண்டு தனித்தனி உயிர்களுக்கு இடையே என்ன தொடர்பு? அதாவது ஒரு குறிப்பிட்ட யானைக்கும், ஒரு குறிப்பிட்ட குரங்குக்கும் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா?

வாழை மரங்களைப் பார்த்தால் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தெரிகின்றன. தாய் மரம், குலை தள்ளியபிறகு குட்டி மரம் பக்கத்தில் தோன்றுகிறது. ஒரு மரத்திலிருந்து விழும் கனியின் விதையைக் கொண்டு, மற்றொரு மரம், கிட்டத்தட்ட முந்தைய மரம் போன்றே உருவாகிறது.

விலங்குகளுக்கு பெரும்பாலும் தாய், தந்தை என்று இரண்டு பேர் தேவைப்படுகிறார்கள். இருவரும் சேர்ந்து உருவாக்கும் பிள்ளைகள், தாய், தந்தை ஆகிய இருவருடைய பண்புகளையும் குணநலன்களையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனிதர்களை எடுத்துக்கொண்டால், சில சமயம் குழந்தை பார்க்க ‘அப்பாவைப் போல’ உள்ளது, சில சமயம் ‘அம்மாவைப் போல’. சில சமயம் மூக்கு அப்பாவைப் போலவும், உயரம் அம்மாவைப் போலவும் உள்ளது.

ஆக, பெற்றோர்களிடமிருந்து ஏதோ வழியில் பண்புகள், குணங்கள் பிள்ளைகளுக்குப் போகின்றன என்பது கண்ணால் பார்க்கும்போதே விளங்குகிறது. கிரிகோர் யோஹான் மெண்டல் (1822-1884) என்பவர் பட்டாணிச் செடிகளைக் கொண்டு செய்த சில ஆராய்ச்சிகளில் மிக நுட்பமான சிலவற்றைப் புரிந்துகொண்டார். அவர் அந்த நேரத்தில் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், பின்னர் வந்த விஞ்ஞானிகள் தெளிவாகப் புரிந்துகொண்டது இதுதான். மரபணு (gene) என்ற ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலம்தான் பெற்றோர்களின் பண்புகள் பிள்ளைகளுக்குப் போகின்றன.

தென்னை மரமானாலும் சரி, குரங்கு ஆனாலும் சரி, எருமை மாடு ஆனாலும் சரி, மனிதர்கள் ஆனாலும் சரி, இந்த மரபணுக்கள் மூலம்தான் பண்புகள் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குப் போகின்றன.

பிறக்கப்போகும் குழந்தை எருமையின் கொம்புகள் எப்படி வளைந்திருக்கவேண்டும், அதன் தோலின் கருமை எப்படி இருக்கவேண்டும், அது ஆணா, பெண்ணா ஆகியவை அது பிறப்பதற்கு மிக முன்னதாகவே, அந்தக் குழந்தையின் பெற்றோர் எருமைகள் இரண்டும் உடலுறவு கொண்டு ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் இணைந்து சினைமுட்டை உருவாகும்போதே தீர்மானம் ஆகிவிடுகிறது.

பெரும்பாலும் விலங்குகளுக்கு மத்தியில் ஏற்படும் உடலுறவின்போது, தாய், தந்தை இருவரிடமிருந்தும் சம அளவில் மரபணுக்கள் வந்து சேருகின்றன. (தேனீ, எறும்பு போன்ற சில விலங்குகளில் தாயும் தந்தையும் சம அளவில் மரபணுக்களைத் தருவதில்லை. அவற்றைப் பற்றி விளக்கமாக நாம் பார்க்கவேண்டாம்.) இந்த மரபணுக்கள்தான் குழந்தையின் அனைத்துத் தன்மைகளையும் முடிவு செய்கின்றன.

இந்த மரபணுக்கள் ஒருவித புரத ரசாயனங்கள். இவை டி.என்.ஏ என்று சொல்லப்படும் டி-ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம் என்ற ரசாயன வடிவில் காணப்படுகின்றன.

நமது புராணங்களில் ராட்சதர்களின் உயிர் எங்கேயோ ஏழு கடலுக்கு அப்பால், ஒரு கிளியின் உடலில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் கதை வரும் அல்லவா. அப்படியல்ல இந்த டி.என்.ஏ என்பது. இது உயிரின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது.

ஒரு மரத்தை எடுத்துக்கொண்டால், அதன் பட்டையில், அதன் பூவில், அதன் காம்பில், அதன் கனியில், அதன் இலையில் என்று எங்கு பார்த்தாலும் உள்ளது. இரண்டு வெவ்வேறு வேப்ப மரங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஓர் இலையையும் ஒரு வேப்பங்கொட்டையையும் கொண்டுவந்து கொடுத்தால், அதில் எந்த இலையும் எந்தக் கொட்டையும் ஒரே மரத்திலிருந்து வந்தது என்பதை மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிடலாம்!

மனிதர்களிடமிருந்து ஆளுக்கு ஒரு சொட்டு ரத்தம், ஒரு முடி அல்லது துளி நகம் என்று கொண்டுவந்து கொடுத்தால், ரத்தமும் முடியும் நகமும் ஒருவருடையதா இல்லையா என்று கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த டி.என்.ஏ என்பது நமது கையெழுத்து மாதிரி, நம்முடைய கட்டைவிரல் ரேகை மாதிரி, இல்லையில்லை அவற்றைவிடவும் மேம்பட்டது. ஏமாற்றவே முடியாத தனி அடையாளம். நம் ஒவ்வொருவரின் டி.என்.ஏவும் அடுத்தவருடைய டி.என்.ஏவிலிருந்து மாறியுள்ளது. ஒரே பெற்றோருக்குப் பிறக்கும் வெவ்வேறு குழந்தைகளின் டி.என்.ஏவும் மாறி மாறித்தான் இருக்கும். (இங்கும் தேனீக்கள், எறும்புகள் வித்தியாசப்படும், அவற்றை விட்டுவிடுவோம்.)

மனிதர்களில், இரட்டைக் குழந்தைகள் பிறக்குமல்லவா? அதில் அச்சான இரட்டையர்கள் உண்டு. விந்தும் முட்டையும் இணைந்து உருவான ஒரு சினைமுட்டை, ஏதோ சில காரணங்களால் இரண்டாகப் பிரிந்து, இரண்டும் தனித்தனியாக இரு குழந்தைகளாக மாறும்போதுதான் இந்த ‘அச்சான இரட்டையர்கள்’ பிறக்கிறார்கள். இவர்கள் இருவரது டி.என்.ஏவும் ஒரே அச்சாக இருக்கும். ஆனால், இங்குகூட இவர்கள் இருவரும் ஒரே வயது வரை உயிர்வாழ்வார்கள் என்றோ, இருவரும் ஒரேமாதிரியான உடல நலத்தோடு இருப்பார்கள் என்றோ அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

இருவரும் வெளி உலகோடு உறவாடும்போது, தங்கள் வளர்ச்சியில் பெரும் மாற்றம் அடைவார்கள்.

இவர்களை விலக்கிவிட்டுப் பார்க்கும்போது, பொதுவாக ஒவ்வோர் உயிருக்கும் அதற்கே உரித்தான ஒரு டி.என்.ஏ உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

இப்போது நம்முடைய கேள்விக்கு வருவோம். இரண்டு எருமை மாடுகளை எடுத்துக்கொள்வோம். இவற்றின் டி.என்.ஏ-க்கள் எப்படி இருக்கும்.

கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். சில இடங்களில் மட்டும் மாற்றம் இருக்கும். அந்த மாற்றங்களின் காரணமாகத்தான் ஒன்றின் கொம்பு சற்றே நீண்டும், மற்றொன்றின் கொம்பு சற்றே சுருண்டும் இருக்கும்.

இரண்டு மனிதர்களை எடுத்துக்கொண்டால், அங்கும் அப்படியே. உயரம், அகலம், தோல் நிறம் என்று எதை எடுத்தாலும் அந்த மாற்றங்கள் டி.என்.ஏ மரபணு மாற்றங்களால் உருவானவையே.

பெற்றோர் டி.என்.ஏவுக்கும் பிள்ளைகள் டி.என்.ஏவுக்கு என்ன உறவு? தாயின் டி.என்.ஏவும் மகனின் டி.என்.ஏவும் பாதிக்குப் பாதி அச்சு அசலாக இருக்கும். மகனின் மீதிப் பாதி டி.என்.ஏ, தந்தையின் டி.என்.ஏவுடன் பாதி பொருந்திப் போகும்.

ஒரு குடும்பத்துக்குள்ளாக டி.என்.ஏ அதிகம் பொருத்தம் கொண்டதாக இருக்கும். குடும்பத்துக்கு வெளியே, பொதுவாக ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் டி.என்.ஏவில் அதிக ஒற்றுமை இருக்கும். தொடர்ந்து அவர்கள் தங்களுக்குள் மணம் முடித்து, பிள்ளைகளை உருவாக்கும் காரணத்தால் இப்படி இருக்கும். இந்தியர்களின் டி.என்.ஏ, பொதுவாக அதிக ஒற்றுமை கொண்டதாகவும், சீனர்களின் டி.என்.ஏவைவிட சற்றே வித்தியாசம் கொண்டதாகவும் இருக்கும்.

இன்னும் ஒருபடி மேலே போய், எருமை மாட்டின் டி.என்.ஏவையும் மனிதனின் டி.என்.ஏவையும் ஒப்பிட்டால், இங்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. என்ன? இரு மனிதர்களின் டி.என்.ஏ-க்களுக்கு இடையே இருக்கும் அளவுக்கான ஒற்றுமை இருக்காது.

மொத்தத்தில் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் டி.என்.ஏக்களும் ஒன்றோடு ஒன்று ஏதோ ஓரளவுக்காவது ஒற்றுமை கொண்டதாக இருக்கும். நெருங்கிய இரு உயிரினங்கள் - அதாவது குரங்கும் மனிதனும், எருமை மாடும் பசு மாடும், நாயும் ஓநாயும், புலியும் பூனையும் - என்று எடுத்துக்கொண்டால் ஒற்றுமை அதிகமாக இருக்கும். இல்லாவிட்டால் ஒற்றுமை குறைந்துகொண்டே போகும்.

*

இப்போது, இயற்கைத் தேர்வுக்கு வருவோம். இயற்கையில் ஒரு ரசாயனம், பல காரணங்களால் வேறொரு ரசாயனமாக மாறும். பாலைக் கொதிக்கவைக்கும்போது, அது காய்ந்த பாலாக மாறுகிறது. அப்போது ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. பிறகு அந்தக் காய்ந்த பாலில் உறை ஊற்றினால், அது தயிராக மாறுகிறது. மற்றொரு ரசாயன மாற்றம்.

புளிக்கரைசலையும் தக்காளிச் சாற்றையும் மிளகாய்ப் பொடியையும் ஒருசேர அடுப்பில் வைத்துக் கொதிக்கவைத்தால் சில ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து, நாம் உண்ணும் ரசமாக மாறுகிறது. சாதம் வேகும்போதும், சப்பாத்தி தீயில் வாட்டப்படும்போதும், அப்பளம் பொறிக்கப்படும்போதும் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

எவ்வளவோ இயற்கைக் காரணங்களால் இந்த ரசாயன மாற்றங்கள் நிகழலாம். மின்சாரம் பாயும்போது, சூடாக்கப்படும்போது, வேறு சில ரசாயனங்கள் மேலே படும்போது, கதிர்வீச்சு படும்போது என்று பல காரணங்கள்.

இப்படிப்பட்ட நிலையில், ஓர் உயிரினத்தின் உடலில் உள்ள சில செல்களில் உள்ள டி.என்.ஏக்கள் மாற்றம் பெறுகின்றன. இந்த மாற்றத்தை அந்த உயிரினம் பெரும்பாலும் சரி செய்துவிடும். அதாவது மாறிய டி.என்.ஏக்களைத் திரும்ப, பழையபடி, மாற்றிவிடும். ஆனால் எல்லா நேரங்களிலும் இது நிகழாது. இப்படி வெறும் ‘சான்ஸ்’ ஆக, ஏதோ ஒரு பிராணியில் ஏதோ சில டி.என்.ஏ மாற்றங்கள் நிகழ, அந்த மாற்றங்கள் அடுத்த வம்சத்துக்குச் செல்லத் தொடங்குகிறது. அதாவது இந்தப் பிராணியின் குட்டிகள் மட்டும் பிறவற்றிலிருந்து ஏதோ ஒரு டி.என்.ஏ மாறுபாட்டை அடைகின்றன.

உதாரணத்துக்கு, நம் வீட்டுச் சமையலறையில் உள்ள கரப்பான் பூச்சி வகைகளை எடுத்துக்கொள்வோம். இரண்டு கரப்புகள் எப்படியோ நம் வீட்டுக்குள் நுழைந்து குட்டிகளாகப் போட்டுத் தள்ளி, அவை சமையலறையில் எங்கு பார்த்தாலும் மேய்கின்றன. நமக்கோ கடும் கோபம். நாளை கடைக்குச் சென்று ஏதாவது கரப்பு மருந்து - ‘ஹிட்’ - வாங்கிவந்து அடித்து, இவற்றைக் கொன்றுவிடவேண்டும் என்று முடிவெடுக்கிறோம்.

இதற்குள் அந்த வம்சத்தில் இரண்டு கரப்புகள் நம் வீட்டு மைக்ரோவேவ் அவனுக்குள் நுழைந்துவிடுகின்றன. மைக்ரோவேவ் கதிர்கள் அவற்றின்மீது பட்டதும் அவற்றின் டி.என்.ஏவில் சிறிய மாற்றம். உடனே அவை தமது வடிவத்தை மாற்றி ஏதோ ஒருவித ராட்சத உருவமாக ஆகிவிடும் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். அது ஹாலிவுட் சினிமாவில்தான் நடக்கும். இங்கே கண்ணுக்கே தெரியாத சிறு மாற்றம் அதன் உடலுக்குள் உள்ள சில செல்களில் உள்ள டி.என்.ஏக்களில் நிகழ்ந்திருக்கும்.

இந்த இரண்டு மைக்ரோவேவ் சுட்ட கரப்புகளும் சாகவில்லை. அவை உடலுறவு கொண்டு, சில முட்டைகளைப் போடுகின்றன.

அடுத்த நாள், நீங்கள் ‘ஹிட்’ அடிக்கிறீர்கள். பெரும்பான்மை கரப்புகள் சாகின்றன. ஆனால் மைக்ரோவேவ் சுட்ட கரப்புகள் ஈன்ற குழந்தைகள் சில - ஏதோ காரணத்தால், அவற்றின் டி.என்.ஏ மாற்றத்தால் - பிழைத்துவிட்டன. இப்போது என்ன ஆகும்? இந்த ‘ஹிட்’டால் சாகாத கரப்புகள் பல்கிப் பெருகும். மற்றவை அதிகமாக, வேகமாகச் சாகும்.

இந்த டி.என்.ஏ மாற்றம் அந்தக் கரப்புகளைப் பொருத்தவரையில் நன்மைக்கானது. வெகு விரைவில் ‘ஹிட்’ அடித்தால் சாகவே சாகாத ஒரு கரப்புப் படை நமது சமையலறையை ஆக்ரமிக்கும். அப்போது வேறு ஏதேனும் புதிய பூச்சி மருந்தைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கவேண்டும்.

இப்படி தொடர்ச்சியான டி.என்.ஏ மாற்றங்களால், ஒரு கரப்பிலிருந்து சற்றே வித்தியாசமான கரப்பினம் உருவாவதுபோல, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அவை பறக்கும் கரப்புகளாக, மிகப்பெரிய கரப்புகளாக மாறி, அங்கிருந்து, கொம்புகள் முளைத்த வண்டுகளாக மாறி, அங்கிருந்து நான்கு கால் முயலாக மாறி... பின் குரங்காக மாறி, பின் மனிதனாக மாறியிருக்கலாம்.

இதைத்தான் இயற்கைத் தேர்வு என்ற கொள்கை முன்வைத்தது. எவ்வளவோ காரணங்களால் ஒரு குறிப்பிட்ட உயிரின் டி.என்.ஏ மாறுகிறது. அந்த மாற்றம் நன்மையைத் தரும் என்ற பட்சத்தில் அந்தப் பிராணியின் குடும்பம் பல்கிப் பெருகுகிறது. இப்படி பல்வேறு மாறுபாடுகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு மாறுபாடும் பெருமளவுக்கு முதலில் குறிப்பிட்ட உயிரினத்திலிருந்து விலகும்போது, புதிய உயிரினம் தோன்றுகிறது.

இந்தப் புதிய உயிரினங்களின் செயல்பாடுகள், உணவுப் பழக்கம் என அனைத்தும் மாறுதலாக உள்ளன.

இந்த உயிரினங்கள் அனைத்தும் குறைவாக இருக்கும் உணவுக்காக ஒரே பகுதியில் போட்டியிடும்போது, ‘வலியது வாழ்கிறது’, ‘வலிமையற்றது சாகிறது’. இது ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் பல்வேறு தனி நபர்களுக்கும் பொருந்தும். பல உயிரினங்களுக்கு இடையிலும் பொருந்தும்.

இப்படியாகத்தான் பல்வேறு புதிய புதிய உயிரினங்கள் தோன்றின. இன்றும் புதிய மாறுபாடுகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

அப்படியானால் ‘மனிதன் பாதி - மிருகம் பாதி, கலந்து செய்த கலவை’ ஒன்றைக் காண முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட ஒரு புதிய உருவம்? ம்ஹூம். சான்ஸே இல்லை.

இந்த மாறுபாடுகள் நடக்க பல ஆயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான வருடங்கள் ஆகும். இந்த மாற்றங்கள் படிப்படியாக நடப்பவை. நமது வாழ்நாளோ 100 வருடத்துக்கு உட்பட்டது. ஆனால், புதைபடிவங்களைத் தோண்டும்போது எக்கச்சக்கமான உதாரணங்கள் கிடைத்துள்ளன. நாம் சற்றும் எதிர்பார்க்காத இடைநிலை உயிர்கள் கிடைத்துள்ளன.

*

சரி, டி.என்.ஏ, மரபணு, எல்லாம் சொல்லிவிட்டோம். இதற்கும் உயிருக்கும் என்ன சம்பந்தம் என்று சற்றே அலசுவோம்.

உயிர் என்றால் என்ன?

எது ஒன்று, தானாகவே தனக்குத் தேவையான எரிபொருளை - உணவை - பெற்றுக்கொண்டு, தன்னைத் தானே பிரதி எடுத்துக்கொள்கிறதோ, அதுதான் உயிர். மனிதன் அதைத்தான் செய்கிறான். மாடும் அதைத்தான் செய்கிறது. பேக்டீரியமும் அதைத்தான் செய்கிறது. மாமரமும் அதைத்தான் செய்கிறது.

எல்லா உயிரின் அடிப்படை நோக்கமுமே தன்னை அப்படியே பிரதி எடுத்தல். அப்படியே என்றால், முழுவதுமாக. முடியாவிட்டால், குறைந்தது தன்னில் பாதியையாவது. இங்கே ‘தான்’ என்றால் என்ன? அதுதான் டி.என்.ஏ. எல்லா உயிரும் என்ன செய்ய முயற்சிக்கிறது? தன் டி.என்.ஏவை முழுமையாக, முடியாவிட்டால் தன் டி.என்.ஏவில் பாதியையாவது அல்லது ஒரு பகுதியையாவது பிரதி எடுத்து அடுத்த உயிருக்குள் அதை அனுப்பச் செய்கிறது.

பல உயிர்கள் இப்படி எக்கச்சக்கமான பிரதிகளை உருவாக்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்வரையில், மனிதர்கள் நான்கைந்து பிரதிகளை உருவாக்கினார்கள். இப்போதெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக, ஒன்றில் வந்து நிற்கிறது.

அறிவியல் மேம்பாடு அடைவதற்கு முன்னமேயே, செயற்கையான முறையில் புதிய உயிரினங்களை உருவாக்குவதில் மனிதன் நிறையவே முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளான். ஒட்டுவகைத் தாவரங்களை உருவாக்குவதன்மூலம், வீரிய விதைகளை உருவாக்குவதன்மூலம் அதிக விளைச்சல் தரும் நெல், பட்டாணி, பருத்தி வகைகளை மனிதன் உருவாக்கினான். அதேபோல, விலங்குகளைச் சரியான முறையில் உறவு கொள்ள வைத்து பல்வேறு வகையான நாய்கள், புறாக்கள், குதிரைகள் போன்ற தனக்கு உபயோகமான விலங்கு வகைகளை உருவாக்கினான்.

ஆனால் 1980-க்குப் பிறகான ஆராய்ச்சிகளில் குளோனிங் என்ற புதிய முறை சிந்தனைக்கு வரத்தொடங்கியது. குளோனிங் என்றால் நகலாக்கம் என்று சொல்லலாம். நகலாக்குவது என்றால் என்ன? ஏற்கெனவே இருக்கும் ஓர் உயிரை - அதாவது ஒரு பிராணியை - அப்படியே அச்சு அசலாக அதேமாதிரி ஆக்குவது.

மல்லிகா ஷெராவத் என்ற தசாவதாரம் திரைப்படத்தில் நடித்த நடிகை போல, அதேமாதிரி அச்சு அசலாக இன்னொரு மல்லிகாவை உருவாக்க முடியுமா? எடுத்த எடுப்பில் விஞ்ஞானிகள் அதை அடைய முயற்சி செய்யவில்லை. பாலிவுட் நடிகைக்கு பதிலாக, ஓர் ஆடு, ஓர் எலி, ஒரு தவளை, ஒரு மாடு என்று யோசித்தார்கள்.

இதை எப்படிச் சாத்தியமாக்குவது? ஒன்றைப் போல அச்சு அசலாக இன்னொன்று வேண்டுமானால் இரண்டுக்கும் ஒரே டி.என்.ஏ இருக்கவேண்டும். ஏற்கெனவே இருக்கும் ஒரு மாட்டின் டி.என்.ஏ போல புதிதாகக் கன்று ஈனும் ஒரு தாய்மாட்டின் வயிற்றுக்குள் எப்படிச் செய்வது?

இதற்கு சில வித்தைகளைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள். அதற்கு ஏற்ற கருவிகளும் உருவாக ஆரம்பித்திருந்த காலம் இது.

முதலில் கல்யாணி என்ற மாட்டை எடுத்துக்கொள்வோம். நல்ல பசுமாடு. அதற்கு அழகான சாந்தமான முகம். கிட்டே போனால் முட்டாது. வெள்ளை வெளேரென்ற நிறம். நெற்றியில் திலகம் இட்டதுபோல பிரவுன் வண்ணத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதியில் சில இடங்களில் கறும் திட்டுகள். இந்த மாட்டின் தோலை உராய்ந்து அல்லது ரத்தம் ஒரு சொட்டு எடுத்து, அதில் உள்ள ஒரு செல்லைப் பிரித்து எடுத்து, அதையும் பிளந்து அதன் நடுவில் உள்ள டி.என்.ஏவை நம் விஞ்ஞானிகள் எடுத்துவிடுகிறார்கள்.

மற்றொரு பக்கம் ஒரு ஆண் மாடு, ஒரு பெண் மாடு. ஆண் மாட்டின் விந்து, பெண் மாட்டின் முட்டை. இவை இரண்டையும் டெஸ்ட் டியூபில் சேர்த்து கருத்தரிக்க வைக்கிறார்கள். நான்கைந்து முட்டைகள் கருத்தரிக்கின்றன.

ஆனால், இவற்றை அப்படியே விடுவதில்லை. இந்த சினைமுட்டை ஒன்றை எடுத்து, கவனமாக ஓட்டைபோட்டு, அதில் உள்ள டி.என்.ஏவை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் கல்யாணியின் உடம்பிலிருந்து எடுத்த டி.என்.ஏவைப் புகுத்துகிறார்கள். பிறகு இந்த நான்கைந்து ‘கல்யாணி’ சினைமுட்டைகளையும் நான்கைந்து மாடுகளின் கருப்பைக்குள் கவனமாக விட்டுவிடுகிறார்கள்.

சில மாடுகளில் இந்த சினைமுட்டை முழுமையான குட்டியாகக் கருத்தரிக்காமல் வெளியே தள்ளப்படலாம். அதனால்தான் நான்கைந்து. ஏதோ ஒன்றிலாவது இந்த சினைமுட்டை வளர்ந்து கருத்தரித்து, குட்டியாகப் பிறக்குமே என்பதற்காக.

ஒன்று முழுமையாக கருவாகி, குட்டியையும் ஈனுகிறது. என்ன ஆச்சரியம்? அப்படியே கல்யாணி பிறந்தபோது எப்படி இருந்ததோ அதையே உரித்துவைத்தாற்போல உள்ளதே? நெற்றியில் சாந்துப் பொட்டு அப்படியே. தோலின் நிறம் அப்படியே. உடலில் கறும் திட்டுகள் அதே அதே இடங்களில், அதே வடிவத்தில், அதே அளவில்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த மாடு வளரும்போது அப்படியே கல்யாணி வளர்ந்தவிதமாகவே உள்ளது - நீங்கள் சரியான போஷாக்கை அப்படியே அளித்துவந்தால்.

இதுதான் நகலாக்கம். கல்யாணியை நகலெடுப்பதுபோல மல்லிகா ஷெராவத்தையும் நகலெடுக்கலாம்.

ஆனால் உலக நாடுகள் யாவுமே மனிதர்களை நகலெடுப்பது அறநெறி சார்ந்த பிரச்னை என்று இதற்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. உடல் பார்க்க ஒன்றாக இருந்தாலும், மூளை, அது செயல்படும் விதம் ஆகியவை அச்சாக ஒரேமாதிரி இருக்கும் என்று சொல்லமுடியாது. அது வெளிப்புறச் சூழல் எப்படி உள்ளதோ அதைப் பொருத்தே அமையும். குளோன் மல்லிகா ஷெராவத், சினிமாவில் டான்ஸ் ஆடாமல், டாக்டருக்குப் படித்து யாருக்காவது ஊசி போடலாம். அல்லது நாவல் எழுதி புக்கர் பரிசு வாங்கலாம்.

*

இதுவரை செய்ததுகூட இருக்கும் உயிரை நகலாக்கி, சிருஷ்டியை நம் கையில் எடுத்துக்கொண்டது. ஆனால் சில விஞ்ஞானிகள் இத்துடன் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. புதிய உயிரைச் சமைப்போம் என்றனர்.

ஏதோ இரண்டு உயிரினங்களின் டி.என்.ஏக்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றின் டி.என்.ஏக்களை கண்ட இடத்தில் வெட்டி, இரண்டையும் சேர்த்து ஒட்டுங்கள். சிவப்பு ரிப்பன் ஒன்று, கறுப்பு ரிப்பன் ஒன்று. இரண்டையும் ஏதோ ஓரிடத்தில் வெட்டி, சேர்த்துத் தைத்தால் கிடைக்கிறதல்லவா புதிய (திமுக) ரிப்பன். அதைப்போல.

இந்த டி.என்.ஏவை ஒரு சினைமுட்டைக்குள் செலுத்தி, அது குழந்தையாகப் பிறந்தால் எப்படி இருக்கும்?

அதற்கு எத்தனை கை, கால்கள் இருக்கும்? அதற்கு எத்தனை கண்கள், மூக்குகள், வாய்கள் இருக்கும்? அதன் உடல் எப்படி இருக்கும்? நினைக்கவே பயங்கரமாக உள்ளதல்லவா?

இப்படி வெட்டி ஒட்டி உருவாக்கப்படும் டி.என்.ஏவுக்கு, ரிகாம்பினண்ட் டி.என்.ஏ என்று பெயர். ஆனால் அறிவியல் உலகம் மிகவும் பயப்படுகிறது. இப்படி, நமக்கே தெரியாத ஏதோ ஒரு புதிய உயிரினத்தை நாம் உருவாக்க, அது பிறந்தவுடன், நம்மையை கடித்து விழுங்க ஆரம்பித்துவிட்டால்? அதை நம்மால் கொலை செய்யவே முடியவில்லை என்றால்?

என்ன ஆகும்? உலகமே அழிந்துவிடாதா? மனித இனமே நசித்துப் போய்விடாதா?

இந்த உயிரினம் நம்மை விழுங்கித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. இது ஒரு சிறு வைரஸ் அல்லது பேக்டீரியமாக இருக்கலாம். கண்ணுக்கே தெரியாமல் ஏதோ ஒரு சோதனைச் சாலையில் உருவாகி, வெளியே காற்றோடு பறந்துவந்து, மனிதர்களை ஏதோ ஒரு வியாதியாகப் பீடித்து, கொத்து கொத்தாகக் கொன்று மடியச் செய்யலாம்.

எவ்வளவு நாளைக்குத்தான் விஞ்ஞானிகள் பயந்தபடி இருப்பார்கள்? நாளையே சிலர், யாருக்கும் தெரியாமல் இதைச் செய்தால் என்ன ஆகும்? இந்த நிமிடத்திலேயே யாரோ இந்த உலகின் எங்கோ ஒரு கோடியில் இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் என்ன நடக்கும்?

இதில் உள்ள அறவியல் கேள்விகள் என்னென்ன? இருப்பியல் கேள்விகள் என்னென்ன? கடவுள் இருக்கிறாரா, இல்லையா? மனிதனே சிருஷ்டி செய்ய ஆரம்பித்தால், இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஆளாளுக்குப் புதிய உயிரினங்களை உருவாக்கி ஒருவர்மேல் ஒருவர் ஏவினால் என்ன ஆகும்?

கேள்விகள் பல. பதில்களே இல்லாமல்.

17 comments:

 1. Excellent article. I have never read something which explains the evolutionary theory and cloning in such a simple style without getting into the technicalities.

  Amazing! Though you warned it to be a long article, I never felt bored anywhere in between. Please continue to post your articles here in your blog.

  ReplyDelete
 2. பெரியதாய் இருந்தாலும் நல்ல பயனுள்ள பதிவு. தொடரவும்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. 100 அறிவியல் புனைக்கதைகளுக்கான கருவை ஒரே கட்டுரைல போட்டுத்தாக்கீட்டீங்களே

  ReplyDelete
 4. நீண்டடட கட்டுரை.அறிவியலை எளிமைப்படுத்துவாக நினைத்து
  அங்காங்கே தவறாக எழுதியுள்ளீர்கள்.

  ‘உ-ம் ஏதோ இரண்டு உயிரினங்களின் டி.என்.ஏக்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றின் டி.என்.ஏக்களை கண்ட இடத்தில் வெட்டி, இரண்டையும் சேர்த்து ஒட்டுங்கள். சிவப்பு ரிப்பன் ஒன்று, கறுப்பு ரிப்பன் ஒன்று. இரண்டையும் ஏதோ ஓரிடத்தில் வெட்டி, சேர்த்துத் தைத்தால் கிடைக்கிறதல்லவா புதிய (திமுக) ரிப்பன். அதைப்போல.

  இந்த டி.என்.ஏவை ஒரு சினைமுட்டைக்குள் செலுத்தி, அது குழந்தையாகப் பிறந்தால் எப்படி இருக்கும்?'
  முதலில் சினைமுட்டை அந்த டி.என்.ஏவை
  ஏற்று கரு உருவாகும் என்பதை யாரும்
  உறுதியாக சொல்ல முடியாது.அப்புறம்
  குழந்தை எப்படி பிறக்கும் என்பதை
  யோசிக்கலாம்.
  ‘உதாரணத்துக்கு, நம் வீட்டுச் சமையலறையில் உள்ள கரப்பான் பூச்சி வகைகளை எடுத்துக்கொள்வோம். இரண்டு கரப்புகள் எப்படியோ நம் வீட்டுக்குள் நுழைந்து குட்டிகளாகப் போட்டுத் தள்ளி, அவை சமையலறையில் எங்கு பார்த்தாலும் மேய்கின்றன. நமக்கோ கடும் கோபம். நாளை கடைக்குச் சென்று ஏதாவது கரப்பு மருந்து - ‘ஹிட்’ - வாங்கிவந்து அடித்து, இவற்றைக் கொன்றுவிடவேண்டும் என்று முடிவெடுக்கிறோம்.

  இதற்குள் அந்த வம்சத்தில் இரண்டு கரப்புகள் நம் வீட்டு மைக்ரோவேவ் அவனுக்குள் நுழைந்துவிடுகின்றன. மைக்ரோவேவ் கதிர்கள் அவற்றின்மீது பட்டதும் அவற்றின் டி.என்.ஏவில் சிறிய மாற்றம். உடனே அவை தமது வடிவத்தை மாற்றி ஏதோ ஒருவித ராட்சத உருவமாக ஆகிவிடும் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். அது ஹாலிவுட் சினிமாவில்தான் நடக்கும். இங்கே கண்ணுக்கே தெரியாத சிறு மாற்றம் அதன் உடலுக்குள் உள்ள சில செல்களில் உள்ள டி.என்.ஏக்களில் நிகழ்ந்திருக்கும்.

  இந்த இரண்டு மைக்ரோவேவ் சுட்ட கரப்புகளும் சாகவில்லை. அவை உடலுறவு கொண்டு, சில முட்டைகளைப் போடுகின்றன.

  அடுத்த நாள், நீங்கள் ‘ஹிட்’ அடிக்கிறீர்கள். பெரும்பான்மை கரப்புகள் சாகின்றன. ஆனால் மைக்ரோவேவ் சுட்ட கரப்புகள் ஈன்ற குழந்தைகள் சில - ஏதோ காரணத்தால், அவற்றின் டி.என்.ஏ மாற்றத்தால் - பிழைத்துவிட்டன. இப்போது என்ன ஆகும்? இந்த ‘ஹிட்’டால் சாகாத கரப்புகள் பல்கிப் பெருகும். மற்றவை அதிகமாக, வேகமாகச் சாகும்.'

  கதிரியக்கம் செல்களில் எப்போதும் இத்தகைய
  மாற்றத்தைத்தான் உருவாகும் என்று அறிவியல் கூறவில்லை.உங்கள் உதாரணம்
  சரியாகப் பொருந்தவில்லை.கதிரியக்கம்
  இன்றியும் ஹிட்டை எதிர்க்கும் திறனை
  கரப்புகள் பெறும்.அதெல்லாம் ஒரு தலைமுறையில் சட்டென்று நீங்கள் எழுதியது போல் நிகழும் மாற்றம் இல்லை.

  synthetic biology செயல்படும் முறை வேறு.அதை நீங்கள் விளக்கவேயில்லை.

  ReplyDelete
 5. பெயரில்லா: நீங்கள் என் கட்டுரையில் வைக்கும் குற்றச்சாட்டுகள் இந்த இரண்டு என்று சொல்லலாமா?

  1. வெட்டி ஒட்டப்பட்ட டி.என்.ஏ சினை முட்டைக்குள் செலுத்தப்பட்டால் (தவளை அல்லது எலி முட்டைக்குள் என்று வைத்துக்கொள்வோமே...) அது ஒரு புது உயிரியாக வரும் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. தாய் (தவளை அல்லது எலி அல்லது ஏதோ ஒன்று) உயிரின் கருப்பை அந்த வெட்டி ஒட்டப்பட்ட டி.என்.ஏ உள்ள சினைமுட்டையை கருத்தரிக்காமல் வெளியேற்றிவிடலாமே என்கிறீர்கள்.

  என் பதில்: உண்மைதான். வெளியேற்றலாம். மாறாக, உயிராக எதையாவது பெற்றுப் போடவும் செய்யலாம். ஏதாவது விகாரமான அல்லது மனிதர்களை அழிக்கக்கூடிய உயிரி உருவாவதற்கு அத்தனை சாத்தியங்களும் உள்ளன என்று கிரெய்க் வெண்ட்டரும் பிற அறிவியலாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்தானே?

  2. கரப்பு உதாரணம். கதிரியக்கம் இந்த ஒரு மாற்றத்தைத்தான் உருவாக்கும் என்று நான் சொல்லவில்லை. இதைப்போன்ற ஒரு மாற்றத்தை உருவாக்கலாம் என்பதுதான் என் கருத்து. மேலும் அந்த இடத்தில் கதிரியக்கத்தால் மாறும் டி.என்.ஏவைப் பற்றி நான் பேச வரவில்லை. எனது உதாரணம், எப்படி மாறும் டி.என்.ஏ (மியூட்டேஷன்) அந்தக் குறிப்பிட்ட டி.என்.ஏ ஸ்டிரெய்ன் கொண்ட கரப்புகளின் வாழ்நாளை நீட்டிக்கும் என்று எடுத்துக் காட்டவே.

  மாறாக, டிரெடிஷனல் உதாரணங்கள் (பாலைவனங்கள், வெள்ளை மணல், கறுப்பு மணல், வெள்ளை எலி, கறுப்பு எலி) கொண்டும் இதனை நான் விளக்கியிருக்கலாம்.

  ===

  Synthetic biology என்றால் என்ன என்று நான் எழுதவில்லைதான். இங்கே நான் அடிப்படையில் குறிப்பிட வந்தது, ‘புது உயிர்களை’ உருவாக்க முடியும் என்ற கருத்தை மட்டுமே. அந்தத் துறையில் எப்படியெல்லாம் வேலை செய்கிறார்கள், எப்படி டி.என்.ஏ சீக்வென்ஸிங் நடைபெறுகிறது, எப்படி டி.என்.ஏக்களை அல்லது அவற்றின் சிறு துண்டுகளை ரசாயன முறைப்படி உருவாக்க முயல்கிறார்கள் ஆகியவற்றைப் பற்றி நான் எழுத முற்படவில்லை. செயற்கை உயிர் ஒன்று மட்டுமே என் நோக்கம். அதிலும் அறவியல் பிரச்னைகள் உள்ளன என்று சொல்லி, விட்டு விடுவதே. சரியா, தவறா என்ற கேள்விகளை எழுப்புவதோ, அவற்றுக்கு பதில் சொல்வதோ அல்ல.

  அடுத்து, கட்டுரையின் நீளம் பற்றி. அதைத்தான் நானே ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே?

  ReplyDelete
 6. It is interesting to read an scientific article being put in a simple language...but as with the anonymous comment i am also little bit concerned with the overall impression, which will be inaccurate when it comes to real facts, it will leave in a non-scientific reader. Also the ending of the article was like a 'Hollywood everything is going to end' because of 'mean mad dark scientists doing some fancy experiments'. Nature is much more strict and picky and keeps things under control...that's why it took a lot of struggle to get cloning going in the first place...And mutation is not the only way to regulate, bring physical changes, resistance etc.... But i am happy with the idea of popularising science among the masses.

  ReplyDelete
 7. இளா: நகலாக்கம் என்னதான் கஷ்டமாக இருந்தாலும், இன்று நடக்கிறதல்லவா? 1980-களுக்கு முன்னால் யாராவது நகலாக்கம் நடைபெறும் என்று சொன்னால் நாம் யாராவது ஏற்றுக்கொண்டிருப்போமா?

  மக்கள் பயப்பட வேண்டுமா, கூடாதா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும். இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் புழக்கத்தில் உள்ளன (பை தி வே, அதைப்பற்றியும் நான் இந்தக் கட்டுரையில் எழுதவில்லை). அவை எந்த விதத்தில் மக்களை, பிற உயிர்களை பாதிக்கும் என்று நாம் முழுமையாக அறிவதற்கு முன்னமேயே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இயற்கை மரபணு மாற்றப்பட்ட விதைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றில் ஏதோ மியூட்டேஷன் நடந்துகொண்டுதான் உள்ளது.

  ReplyDelete
 8. அருமையான கட்டுரை. இந்த மாதிரி விஷயங்களை, நூல் வடிவத்தைக் காட்டிலும் ( அது மினியோ மாக்ஸோ), இணைய வடிவத்தில் படிக்க வசதியாக இருக்கிறது. உங்கள் மினிமாக்ஸ் நூல்களை டிஜிடல் வடிவத்தில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

  பெயரில்லாவின் மறுமொழி குறித்து :

  நம்ம ஊர்ல இருக்கிற பெரிய சிக்கலே இதுதான்... தானாவும் செய்ய மாட்டாங்க, செய்யறவங்களையும் ஆயிரத்தெட்டு நொள்ளை நொட்டை விடுவாங்க. படிக்கிறவங்களுக்கு புரியறமாதிரி தெளிவா எழுதனதை, 'அறிவியலை எளிமைப்படுத்துவாக நினைத்து அங்காங்கே தவறாக எழுதியுள்ளீர்கள்' என்று ஒரே வார்த்தையிலே ஒதுக்கிற 'பெயரில்லா' போன்ற விஷயதாரிகள் , தங்கள் படிக்கிற விஷயத்தை, படித்துப் பெற்ற அறிவை மத்தவங்க கிட்ட பகிர்ந்துகிடணும்னு எப்பவாச்சும் நெனச்சுருக்காங்களான்னு கொஞ்சம் யோசிச்சுப் பாக்கோணும்.

  ReplyDelete
 9. excellant article. Reminds one of Bill Bryson's book 'A Short History of Nearly Everything'.

  The simplified ideas in your blog give rise to questions and interest to find answers.

  ReplyDelete
 10. Hi Badri,
  A very useful and interesting post. Thank you. Why should evolution stop with man? Why hasn't it progressed after man? Do you think it will take many more years for a new species to evolve?

  ReplyDelete
 11. எதற்கு தான் பதில் இருக்கு.பதில் என்று நினைத்திருந்தால் அதிலிருந்து ஒரு துணை கேள்வி எழுகிறது.
  எளிமையான வார்த்தைகள் புரிதலை இன்னும் கூட்டுகிறது.
  எழுத எழுத மெருகு ஊடும் என்பது இப்போதைக்கு தெரிகிற விடையாக இருக்கு.

  ReplyDelete
 12. "மக்கள் பயப்பட வேண்டுமா, கூடாதா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்"

  I completely agree with u on this....it is the people who has to decide but before that they have to be informed about that properly..that was my point...
  "இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் புழக்கத்தில் உள்ளன"
  it's true that commercialization of science happens too fast as they are fuelled by sources interested in their own financial gains...but in the so-called developed countries it does not happen so fast since people want to be informed and want to play a role in deciding whether they want it or not which is not the case in so-called developing countries. So people like you who can reach masses so easily and can put things in an understandable manner are very important...and that was why i was little bit sad about the dramatization of these lines!
  "இதுவரை செய்ததுகூட இருக்கும் உயிரை நகலாக்கி, சிருஷ்டியை நம் கையில் எடுத்துக்கொண்டது. ஆனால் சில விஞ்ஞானிகள் இத்துடன் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. புதிய உயிரைச் சமைப்போம் என்றனர்."
  "என்ன ஆகும்? உலகமே அழிந்துவிடாதா? மனித இனமே நசித்துப் போய்விடாதா?"
  "எவ்வளவு நாளைக்குத்தான் விஞ்ஞானிகள் பயந்தபடி இருப்பார்கள்? நாளையே சிலர், யாருக்கும் தெரியாமல் இதைச் செய்தால் என்ன ஆகும்? இந்த நிமிடத்திலேயே யாரோ இந்த உலகின் எங்கோ ஒரு கோடியில் இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் என்ன நடக்கும்?"

  These lines kind of bring across an image of scientists being irresponsible and bunch of sadists who do not have any rules....infact reproductive cloning is not so easy to deal with in the lab and there are more strict rules and regulations even for the more common Recombinant DNA cloning which is a more prevalant tool in labs...there have been few cases of irregularities brought into limelight but usually everything is well documented and it is not possible to have a secret lab and do secret science unless one has a huge fortune to be independent.

  I hope u will understand that i am trying to register and share my ideas to u rather than critizing u...it would be nice if we can bring across science and scientific ideas, and of course scientists also, in a positive way to the general public. Becoz already it is a pain to talk to people in the Europe, who think they are activists against scientists using animals, flies and anything that has to do with engineering DNA, and I can imagine how it would be to deal with people in India.

  ReplyDelete
 13. அன்புள்ள பத்ரி,
  உயிர் பற்றிய உங்கள் வரையறையில் எனக்கொரு சந்தேகம். தனக்கான உணவைப் பெற்றுக் கொண்டு தன்னைப்பிரதி எடுப்பதுதான் உயிர் என்று கூறியிருக்கிறீர்கள்.இந்த வரையறையின்படி ஓரினச் சேர்க்கையாளர்கள் உயிரில் வரமுடியாது. ஏனெனில் அவர்களால் பிரதிகளை உருவாக்க முடியாது. எனில், உயிருக்கான வரையறை வேறானதாக இருக்க வேண்டும்.

  எனினும் எளிமையான கட்டுரை. பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

  நாகூர் ரூமி

  ReplyDelete
 14. ரூமி: சில இனங்களில் சில தனிப்பிரதிகள் மலட்டுத்தன்மை கொண்டதாக இருக்கும். அதனாலேயே அவை உயிர்கள் இல்லை என்று ஆகிவிடாது. அதேபோல ஒரு பிரதிகள், சந்ததிகளை உருவாக்கும் தன்மை கொண்டிருந்தாலும் அந்தக் காரியத்தில் ஈடுபடாமல் போகலாம் (எ.கா: பிரம்மச்சாரிகள், ஓரு பால் சேர்க்கையாளர்கள்). இவர்கள் கூட தங்கள் விந்து/முட்டையை செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கலாம்.

  பல உயிரினங்களில் ஒரே ஒரு ஆண் மட்டும்தான் (உ.ம்: சிங்கம்) அனைத்துப் பெண்களுடனும் கூடி பிரதிகளை உருவாக்கும். பிற ஆண்களை அந்தப் பக்கமே வரவிடாமல் அடித்துக் கொன்றுவிடும். இதனால் பிரதிகளைத் தோற்றுவிக்க முடியாதவற்றை உயிர்கள் அல்ல என்று நாம் சொல்லமுடியாது.

  எது ஒன்றினால் பிரதிகளைத் தோற்றுவிக்க முடியுமோ (ஆனால் செய்யாமலும் இருக்கலாம்) அது உயிர்தான்.

  ReplyDelete
 15. muttri-lum elimaiyana matturm arumaiyana oru aruviyal thagaval! Kandippaga therinthukolla vendi thagaval ithu!! nandri

  ReplyDelete
 16. ”மைக்ரோவேவ் சுட்ட கரப்புக்கள்” என்பதே அருமையான உதாரணமாக எனக்குப் படுகிறது! Easy-to-relate (& very close to our daily lives) உதாரணங்களால் தான், தொய்வு அடையாமலும், போரடிக்காமலும் கட்டுரையை கொண்டு செல்ல முடியும். கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்!

  ஒரு சின்ன observation. ”கோட்பாடு” என்ற பொருத்தமான சொல்லுடன் சேர்த்து, ”கொள்கை” என்ற வார்த்தையையும் நிகராக பிரயோகம் செய்வது சரி தானா? ”கொள்கை” என்பது (குறிப்பாக நம்மூரில்) ideology, principle போன்ற அர்த்தம் உடையவை தானே?
  அறிவியல்-தமிழில் ”theory”-க்கு கொள்கை என்ற சொல் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரயோகம் என்றால்.... அதுவும் வருத்தமே. :-)

  நல்ல கட்டுரை.
  -விகடகவி

  ReplyDelete