Saturday, January 03, 2009

மார்கழி சாத்துமுறை

சிறு வயதில், மார்கழி மாதம், ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் விடாமல், காலையில் கோயிலுக்குப் போயிருக்கிறேன்.

தெருவைச் சுற்றி வந்து பஜனை செய்வோம். அந்தக் குளிரில் வக்கீல் சந்தானத்தின் மனைவி, எங்களைப் போன்ற சிறுவர்களை நான்கு மாட வளாகங்களையும் சுற்றி அழைத்து வருவார். நாங்கள் எல்லோரும் ‘குள்ளக் குளிரக் குடைந்து’ நீராடியிருப்போம் என்று சொல்வதற்கில்லை. ஸ்வெட்டர், மஃப்ளர் ஆகியவற்றுடன்தான் சுற்றல். பஜனை முடிவது சௌந்தர்யராஜப் பெருமாள் கோவிலில். அடுத்து பொங்கல். கொஞ்ச நேரம் வெட்டி அரட்டை முடித்து, வீட்டுக்கு வந்து குளித்து, சாப்பிட்டு, பள்ளிக்கூடம் போக அவ்வளவு நேரம் கையில் இருக்கும்.

இதே மாமியின் வழிகாட்டுதலில், வைகுண்ட ஏகாதசி அன்று இரவு, பெருமாள் கோவிலில் நாடகம் போடுவோம். நாகை பொது நூலகத்தில் எடுத்துவந்த அபத்தமான சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் - இப்படி எது கிடைத்தாலும். மாமியே நாடகங்களை எழுதியதும் உண்டு. நாடகம்தான் ஹை பாயிண்ட். அதற்குமுன், சிறு குழந்தைகள் சினிமாப் பாட்டு நடனம் என்று இல்லாமல் ஏதோ ஆடுவார்கள்; சிலர் பாடுவார்கள். பல வருடங்களுக்குப் பின், அறுசுவை பாபு, தானே எழுதி, சிறுவர்களை வைத்து நாடகம் போட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இப்படி தெரு பஜனை செய்வதற்கு நான் போவது நின்றுபோனது. ஏன் என்று காரணம் தெரியவில்லை. வயதும், தெருப்பெண்கள் பார்ப்பார்களே என்ற வெட்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் தொடர்ச்சியாக தேசிகர் கோவிலுக்குச் செல்லத் தொடங்கினேன்.

வடகலை, தென்கலை சம்பிரதாயத்தினருக்கு இடையே அழுத்தமாகவும், ஆழமாகவும் பதிந்துகிடந்திருந்த பிரிவு இது. சௌந்தர்யராஜன் தென்கலை கட்டுப்பாட்டில் இருந்த கோவில். மாட வளாகச் சுற்றில் இருந்த சற்றே சிறிய கிருஷ்ணன் கோவிலும் தென்கலை. இவற்றுக்குப் போட்டியாக, தென்மேற்கு மாட வளாக மூலையில் உதித்ததே தேசிகர் கோவில். பெயர் தேசிகர் கோவில் என்றாலும், லக்ஷ்மி நரசிம்மன்தான் முதன்மைத் தெய்வம். காலையில் இங்குதான் வடகலையினர் ஆஜராவார்கள்.

பஞ்சகச்சம் கட்டி, பனிரெண்டு திருமண் சார்த்தி, மேலுடம்பில் வஸ்திரம் அணியாமல், டாக்டர் விஜயராகவன் வந்து நிற்பார். அவர் இருந்தால்தான் சாத்துமுறையே ஆரம்பிக்கும். ஆடிட்டர் வரதராஜன் மற்றும் வரதாச்சாரி. ஊர்ப் பெரிய மனிதர்கள் இவர்கள்தான். (அதாவது ஊர்ப் பெரிய வடகலையினர். ஊர்ப்பெரிய தென்கலையினர் சௌந்தர்யராஜன் கோவிலிலும், ஊர்ப்பெரிய ஐயர்கள் அவரவர்க்குரிய கோவிலிலும் நிற்பார்கள். ஊர்ப்பெரிய அ-பிராமணர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாது.) வேறு சில வடகலையினரும் ஊர்ப்பெரிய மனிதர்கள்தாம். ஆனால் அவர்கள் இரவு மூக்கு முட்டக் குடித்த காரணத்தால், காலையில் மார்கழி சாத்துமுறைக்கு வரமாட்டார்கள். வந்தாலும் வாயைத் திறந்து எதையும் சொல்லத் தெரியாது.

பொதுத்தனியனில் ஆரம்பிக்கும். பிறகு தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி. பிறகு ஆண்டாள் தனியன்களும் திருப்பாவையும். ஆண்கள் இரண்டு பக்கமாகப் பிரிந்து நிற்பார்கள். ஆசாரமானவர்கள் கோஷ்டியின் தலையில் - அதாவது பஞ்சகச்சம், 12 திருமண். அடுத்து பஞ்சகச்சம் அல்லாத வெறும் கச்ச வேஷ்டியினர். அடுத்து மேலே சட்டை போட்டவர்கள். அடுத்து என்னைமாதிரி அரை டிராயர் சிறுவர்கள். பெண்கள் எல்லாம் தாங்களாகவே விலகி, தள்ளி உட்கார்ந்துகொள்வார்கள். அதில் ஆசார எட்டு கெஜ மடிசார் மாமியும் உண்டு, சாதா புடைவைக் கட்டும் உண்டு. அப்போதெல்லாம் சல்வார் கமீஸ் இருக்கவில்லை.

கோஷ்டியில் வலப்பக்கம் (அதாவது கர்ப்பகிருகத்தை நோக்கி நீங்கள் நிற்கும்போது உங்கள் வலது பக்கம் இருப்பவர்கள்) தொடங்குவார்கள். எட்டடிப் பாடலில் முதல் நான்கு அடி அவர்களது:

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்

“அறிவுராய்” என்று வல கோஷ்டி முடிக்கும் முன்னரே, இட கோஷ்டி ஆரம்பிக்கவேண்டும். அம்பரம் ஊடறுத்து...

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

“எம்பாவாய்” என்று இட கோஷ்டி முடிக்கும்போது, அடுத்த திருப்பாவைக்குத் தாவிச் செல்ல வல கோஷ்டி தயாராக இருக்கவேண்டும்.

சிலர், இரண்டு கோஷ்டியிலும் சேர்ந்து சேர்ந்து அனைத்து வரிகளையும் பாடுவார்கள். எந்த இடத்தில் நிறுத்துவது, எந்தப் பாடலை இரண்டுமுறை சேவிப்பது - இதெல்லாம் மிக முக்கியமான விஷயங்கள். மாற்றிப் பாடினால், மூத்தோர் முறைப்பர். எனவே சின்னதுகள், அடங்கி, குரலை உயர்த்தாமல் கூடப் பாடி, அப்படியே உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

திருப்பாவை முடியும். இல்லை, முடியாது. சிற்றஞ்ச்சிறுகாலே, வங்கக்கடல் இரண்டையும் பாடமாட்டார்கள். அது கடைசியாக.

நான் வியாழன் அன்று போயிருந்த ராயப்பேட்டை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வடகலை என்பது மனைவியோடு உள்ளே நுழைந்ததும்தான் தெரிந்தது. அதற்குமுன் அங்கே ஒரு முறை போயிருந்தாலும் மனத்தில் நிற்கவில்லை. காலை 5.30-க்கு சாத்துமுறை ஆரம்பிக்க, பல ஆண்டுகளாக தேசிகர் கோவில் சாத்துமுறையில் ஊறிய என்னால் உடனடியாக அவர்களுடன் சேரமுடிந்தது.

நான் பஞ்சகச்சம் கட்டியிருக்கவில்லை. 12 என்ன, ஒரு திருமண்கூட நெற்றியில் இல்லை. சிறிய சந்நதி. எனவே இரண்டாம் வரிசையில் உட்கார்ந்தேன். மனைவி defiant-ஆக, பெண்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குப் போய் உட்காராமல், என் அருகில் உட்கார்ந்துகொண்டார்.

திருப்பள்ளியெழுச்சி தாண்டி, திருப்பாவை முடிந்து, தேசிகரின் அடைக்கலப்பத்துக்குள் புகுந்தார்கள். அது நான் மனப்பாடம் செய்யாதது. அடுத்து வரிசையாக பாஞ்சராத்ர ஆகமப்படியான சில உபசாரங்களை சிலைகளுக்குச் செய்யவேண்டும். அந்தக் கட்டத்தில் கோஷ்டியினர், ஆங்காங்கே சிறு குழுக்களாகப் பிரிந்து, வம்பளக்கலாம். அன்று ஆங்கிலப் புதுவருடப் பிறப்பு என்பதால் பெண்கள் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக்கொண்டனர். நல்ல கூட்டம்.

அடுத்து சிற்றஞ்சிறுகாலே, வங்கக்கடல், அடுத்து அன்றைய நாள் பாட்டான அம்பரமே தண்ணீரே. அடுத்து தீபாராதனை. ஸ்ரீவைஷ்ணவக் கோவில்களில் தீபாராதனை என்பது பக்தர்கள் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்வதற்காக அல்ல. தீப ஒளியில் அர்ச்சாவதார ரூபத்தைப் பார்த்து தரிசிப்பதற்கு மட்டுமே. அடுத்து தீர்த்தம். திருத்துழாய். தலைக்குப் பாதுகை. அதற்கு ஏற்றார்போல கூட்டம் இரு சாரியாகப் பிரிந்து இருக்கும் இடத்தையெல்லாம் ஆக்ரமித்தது.

இது ஒவ்வொரு சந்நிதியிலும் - அலர்மேல் மங்கை, ஆண்டாள் - நடந்தது. ஒவ்வொரு சந்நிதியிலும் அம்பரமே தண்ணீரே சேவிக்கப்பட்டது.

அடுத்து பிரசாதம். எல்லோரும் வரிசையாக உட்கார்ந்துகொள்ள, பாக்குமட்டை தட்டுகள் விநியோகிக்கப்பட்டன. சுக்குவெல்லம், வெண்பொங்கல், புளி அவல். கூட ஆங்கிலப் புத்தாண்டுக்காக யாரோ செய்யச் சொல்லியிருந்த ஒரு ஸ்வீட் மைதாமாவு கேக்!

நாகை தேசிகர் கோவில்போலன்றி - அங்கே நாங்கள் சாப்பிடத் தொடங்கிவிடுவோம் - கோதாஸ்துதி சொல்ல ஆரம்பித்தார்கள். புதுமையாக இருந்தது. எனக்கு கோதாஸ்துதி தெரியாது. நான் சாப்பிட ஆரம்பித்தேன். நான் மட்டும்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

***

சென்னை என்பதால் நான் பார்த்த ஒரு பெரும் வித்தியாசம், கோஷ்டியில் சிவப்பழங்கள் இருவர், பஞ்சகச்சம், ஆனால் 12 திருமண் அல்ல, உடலெங்கும் திருநீறு, முதலில் நின்று திருப்பாவையை மட்டுமல்ல, தேசிகர் ஸ்தோத்திரங்களையும் சொன்னது.

9 comments:

 1. தேசிகர் கோவில் - இராஜு மாமா குரல்(வெண்கலக்குரல்) இன்னும் எனக்கு பளீர் என்று ஞாபகம் இருக்கிறது.மந்திரங்கள் ஸ்பஸ்டமாக வரும்.அவரின் குரல் அவர் மகன்களிடம் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்துகொண்டிருக்கிறது.அவர்களுடன் அவ்வப்போது மெயில் மூலம் தொடர்போடு இருக்கிறது.
  மும்பாயில் போன வருடம் காலமாகிவிட்டார்.அவர் நாகையில் இருந்து போனதுமே அந்த கோவில் களையிழந்தது போலாகிவிட்டது.
  திரு.சந்தானம் மனைவி போட்ட நாடகத்தில் நானும் நடித்திருக்கேன் - ராமர் வேஷத்தில்.இப்போது நினைத்தால் எனக்கே கொடுமையாக இருக்கு.அந்த போட்டோ இன்னும் ராமனிடம் (அவர் பையன்) இருப்பதாக கேள்வி.நாகை போனால் கேமிராவில் பிடித்துக்கொண்டு வரவேண்டும்.
  தாத்தாசாரியர் பற்றி ஒன்றும் கூறவில்லையே!!

  ReplyDelete
 2. இது போன்ற பதிவுகள் 'நிரந்தரமாக வெகு தூரம் விலகிவிட்ட' ஆனால் விலக்கிவிட முடியாத ஞாபகங்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் என் போன்ற பேர்வழிகளுக்கு
  இதமாய், ஒரு வகையான ஒத்தடமாய் அமைகிறது, நெஞ்சார்ந்த நன்றி.

  நான் பொடியனாய் இருந்த காலத்தில் கிராமத்தில் (திருமீயச்சூர்-பேரளம் வழி-நன்னிலம் வட்டம்) எங்கள் குடும்ப வழி கோவிலான வீற்றிருந்த பெருமாள் கோவிலில்
  மார்கழி மாத பஜனை என்பது பெயருக்கு இருந்தாலும் தனிப்பட்ட முறையில் மிகுந்த அச்சமூட்டுவதாக இருந்தது- நன்றி: கோயிலைச் சுற்றி வரும் போது அருகிலிருந்த இலுப்பை
  தோப்பிலிருந்து நரிகள் ஊளையிடும் சத்தம் [1968?-71 வரை] . ஆயினும் சமாஷணம் செய்து கொண்ட வீர வைஷ்ணவியான பெரிய பாட்டி மகிழ்ச்சியாக இருக்க
  பஜனையில் பங்கு பெறுவது போல நடிக்க வேண்டியிருந்தது.

  வாழ்ந்த நகரமான சீர்காழி-தென்பாதியில், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் ஆதரிக்கப்பட்ட மாணவர் இல்லத்திலிருந்து மாணவர்களும், இல்லத்தின் நடத்துனர் பயாச்சு
  ஐயர் கூடி நடத்தும் மார்கழி பஜனைகள் -3 குறிப்பிடப்பட்ட வீதிகளில் மட்டும் நடக்கும்- படா ஜோராய் இருக்கும். வருடா வருடம் அதே "ராதே!ராதே!
  ராஜகோபாலா-பிருந்தாவன ??" மற்றும் "பாஹிமா,பாஹிமா..?" போன்ற பாடல்கள், ஏனென்று தெரியாது விடிந்தும் விடியாத நேரத்தில் சிரிப்பை உண்டாக்கும்.
  விளக்கை பிடித்துக் கொண்டு, தூங்கி வழிந்து கொண்டு ஓராள். கஞ்சிரா அடித்துக் கொன்று மற்றொரு ஆள்! 4 அடி உயரமும் 3 அடி அகலமுமாய்
  இருந்த ராயர் மாமியொருவர் நடுத்தெருவில் பஜனைக்கு நெடுஞ்சாண்கிடையாக தண்டனிட போய் ஒரு சமயம் 911 ஐ கூப்பிட வேண்டியதாய் போயிற்று.

  நன்றிகள்.

  வாசன்

  ReplyDelete
 3. Quite interesting take. Why don't you enlighten us on the doctrinaire differences between Tenkalai and Vadakalai in your future posts ?

  ReplyDelete
 4. மிக அருமையான பகிர்வு. மிக்க நன்றி பத்ரி!

  ReplyDelete
 5. மிக இனிமையான நினைவு கூறல். நான் அ-பிராமணனாக இருந்தாலும் எங்கள் வீடு அக்ரஹாரத்தில் இருந்ததால் இதை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒற்றைத் தெரு, கோவில் தெரு, நடுத்தெரு என்று அங்கு உண்டு. மூன்று தெருக்களிலும் மார்கழி பஜனை சிறப்பாக நடைபெறும். ஆனால் அப்போது எனக்கு அய்யர், அய்யங்கார் என்று இரு பிரிவினர் இருப்பதே தெரியாது. எல்லோருமே மாமா,மாமிதான். சமீப காலத்தில்தான் அய்யங்காரில் பிரிவுகள் இருப்பது தெரியவந்தது. கிரிக்கெட் ஆடும்போது கலந்து போட்டு ஆடுவதுதான் வழக்கம். நடுத்தெருவுக்கும் கோவில் தெருவுக்கும் மேட்ச் வைக்கலாம் என்று நான் சொன்னபோது எல்லோரும் என்னை காய்ச்சினார்கள். அப்போதுதான் எனக்கு தெரியவந்தது, இரண்டும் வேறு வேறு என்று. என்னை பழைய நாட்களுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்

  ReplyDelete
 6. படிக்கும்போதே கணினித்திரை வட்டங்கள் இட்டுக் காட்டி, 25 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்று, காலம் காட்டும் மாயக்கண்ணாடியாய் மாறிவிட்டது. ஏகாதசிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ரிஹர்சல் என்று ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதி மற்றும் ஆண்டாள் சந்நிதியில் அமர்ந்துகொண்டு அடிக்கும் கொட்டங்கள், அரைமணிக்கொருமுறை கேச்சுவுக்கும் சுரேஷ்க்கும் இடையில் நடக்கும் சண்டைகள், நடிக்கவில்லையென்றாலும் நடிக்கவிடாமல் சேஷா செய்யும் சேஷ்டைகள், நாடத்திற்கு முதல்நாள் நடிக்க வரமாட்டேன் என்று கோபித்துக் கொண்டு செல்லும் வீறாப்பு சண்டியர்களை வேறு வழியின்றி அழைத்துவரச் செய்யும் சமாதானங்கள்.. எல்லாமே இனிமையானவை. 13 வயதில் நாம் பெருமாள் கோயிலில் அரங்கேற்றிய நாடகத்தை பார்த்துவிட்டு, பக்கத்து ஊரான நாகூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் அந்த நாடகத்தை நடத்தச் சொல்லி ஒரு அமைப்பு, நம்மை எல்லாம் கார் வைத்து அழைத்துச் சென்றது அப்போது கிடைத்த அகாதெமி விருது. வருடம் தவறாமல் வரும் மார்கழி மாத சந்தோசங்கள் தொலைந்ததின் காரணம் நாம் வளர்ந்ததோ?

  ReplyDelete
 7. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக மார்கழி மாத விடியற்காலைகளில், மாட வளாகங்களில், பஜனை பாட்டுச் சத்தத்தை கேட்க முடிகின்றது. இனிமையான குரலில் திருநாமங்களை பாடியபடி கொஞ்சம் வேகமாக நடந்து செல்லும் இவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள். கடந்த சுனாமியின் போது உறவுகள் அனைத்தையும் இழந்து, தற்போது சேவாபாரதி அமைப்பின் ஆதரவில் வளர்ந்து வருபவர்கள்.

  ReplyDelete
 8. என்னுடைய மணி மண்டபம் (வில்லிவாக்கம்) ஞாபகங்களை கிளறி விட்டிருந்தது உங்களின் கட்டுரை........என்ன ஒரு இனிமையான காலமது...........கிருஷ்ணன் கேட்டிருப்பது பெரிய விளக்கங்கள் அளிக்க வேண்டியிருக்கும் பத்ரியிடம் விரைவில் எதிர்பார்க்கிறோம்...............

  ReplyDelete
 9. மிக இனிமையான நினைவு கூறல். நான் அ-பிராமணனாக இருந்தாலும் என் சிறுவயதில் நாங்கள் சாகுபுரத்தில் இருந்த ஐந்து வருடங்க்ள் இதை பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete