காந்தி ஜெயந்தி அன்று, கீழ்க்கட்டளை ஹோலி ஃபேமிலி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒரு விழாவில் கலந்துகொண்டேன்.
கிண்டி வரை சென்னை நகராட்சியின் கையில் உள்ளது என்று தெரிகிறது. அதற்கு அப்பால் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை எல்லாம் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த ஏதோ ஓர் அமைப்பால் பராமரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அந்த கிரகத்தின் லேண்ட்ஸ்கேப் போலவே சாலைகளை அமைத்துள்ளனர்.
நான் ஸ்கூட்டரில்தான் சென்றேன். மடிப்பாக்கம் சாலையில் ஆதம்பாக்கம் முதல் கீழ்க்கட்டளை வரை நான்கைந்து முறை சென்று வருதல் முதுகெலும்பு உள்ள மிருகங்கள் (நம்மையும் சேர்த்து) அனைத்துக்கும் மிகுந்த ஆபத்து என்று புரிந்துகொண்டேன். அந்தச் சாலையில் செல்ல ஏற்ற ஒரே வாகனம், அப்துல் கலாம் வடிவமைத்ததாகச் சொல்லப்படும் ஹோவர்கிராஃப்ட் மட்டுமே.
திடீரென்று வழியில் ஓரிடத்தில் புழுதிவாக்கம் என்று பெயர் போட்டிருந்தனர். அதற்கு முந்தைய பகுதியும் புழுதி வழிந்தபடியேதான் இருந்தது. இந்த இடத்துக்கு மட்டும் ஏன் இந்தச் சிறப்புப் பெயர்? அடுத்து மேடவாக்கம். மேடும்(பள்ளமும்)வாக்கம் என்ற பெயர் அப்படித் திரிந்துபோனதா தெரியவில்லை. தமிழறிஞர்கள்தான் சொல்லவேண்டும்.
ஒருவழியாக அந்தப் பள்ளியைக் கண்டுபிடித்து (மெயின் ரோடில்தான் உள்ளது. ஆனால் மெயினில் ரோடுதான் இல்லை) உள்ளே நுழைந்தேன். நிறைய என்.எஸ்.எஸ் மாணவர்கள் பசியோடு இருந்தனர். ஒரு பெரிய அலுமினியப் பாத்திரத்தில் இருந்து தட்டுகளில் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. பிரிஞ்சி?
தூரத்தில் ஒரு மேடையில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அரிமா சங்கத்தினர். அவர்களுக்கே உரித்தான ஒரு கண்டாமணி மேஜையில் இருந்தது. நான் உள்ளே நுழையவும் நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. பிரசன்னா கையில் கேமராவுடன் இருந்தார். பாதி நிகழ்ச்சி ஆரம்பித்ததும் திடீரென நான் வந்துவிட்டேனா என்பதை உறுதிசெய்துகொண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் என்னையும் மேடைக்கு அழைத்தார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 70 பள்ளிக்கூடங்களின் மானவர்களுக்கு கட்டுரைப் போட்டி நிகழ்த்தியிருந்தனர் அந்த அரிமா சங்கத்தினர். அதற்கான பரிசுகளை (புத்தகங்கள்) அளிக்க நாங்கள் ஒப்புக்கொண்டிருந்தோம். அரிமா சங்கத்தினர் பலரும் பேசினர். நானும் காந்தியைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினேன். முக்கியமாக காந்தி எழுதிய ‘தென் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ நூலை அனைவரையும் படிக்கச் சொன்னேன். (இந்த நூல் விரைவில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக, நல்ல, எளிமையான தமிழாக்கமாக வர உள்ளது. சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக இப்போதே கிடைக்கிறது. ஆனால் தமிழ் கொஞ்சம் கஷ்டம்தான்! இணையத்தில் ஆங்கில வடிவம் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளமுடியும்.)
அந்தப் பள்ளியில் ஒரு புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளோம். இன்றுவரையில் நடைபெறும்.
===
பேராசிரியர் சுவாமிநாதனை காந்தி ஜெயந்தி அன்று ஒரு பள்ளிக்கூடத்தினர் பேசுவதற்காக அழைத்திருந்தனராம். அந்தப் பள்ளி சென்னையில் உள்ள ஒரு ‘சர்வதேச’ பள்ளி. அவர்கள் தெளிவாகவே சொல்லிவிட்டனராம். ‘எங்கள் மாணவர்களுக்கு காந்தியைப் பற்றி அக்கறை இல்லை. தேவையும் இல்லை. அதனால் நீங்கள் காந்தியைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை. வேறு என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.’
இதுபோன்ற தெளிவுதான் நமக்கு மிகவும் அவசியம்!
===
காந்தி ஜெயந்தி அன்று பேராசிரியர் சுவாமிநாதன் மாமல்லபுரச் சிற்பங்கள் பற்றி நீண்ட பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன் உரை நிகழ்த்தினார். அந்த வீடியோவை வலையில் ஏற்றிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இதைப் படிக்கும்போது veoh.com வழியாக அந்த உரை உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
12 hours ago
ஆக.. எங்க ஏரியாவுக்கு வந்துட்டு போய் இருக்கீங்க.. ஒரு முறை வந்ததற்கே.. இப்படி சொன்னா எப்படி.. நாங்க எல்லாம் தினமும் போய்ட்டு வரலை..!
ReplyDelete:))
வாழும் சொர்க்கமான எங்கள் மடிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புழுதிவாக்கம், உள்ளகரம், வானுவம்பேட்டை, மூவரசம்பேட்டை, கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளை சிறுமைப்படுத்தி எழுதியமைக்கு கடுமையான கண்டனங்கள் :-)
ReplyDeleteஸீ... ஒய் யு பீப்புள் ஆர் கோயிங் டு டர்ட்டி ப்ளேசஸ் லைக் மடிப்பாக், புழுதிவாக் எகஸட்ரா? யு ஷுட் விசிட் போரூர் சிட்டி ஒன்ஸ்! போரூர் இஸ் அ பார்ட் ஆஃப் சிங்கார சென்னை..யு நோ?
ReplyDeleteயுவகிருஷ்ணா: அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களாகிய நீங்கள் எப்படிப் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் கேள்வியே. சென்னையின் பிற பகுதிகளில் இந்த அளவுக்கு மோசமான சாலைகளை நான் கண்டதே இல்லை. அங்கெல்லாம் உள்ளாட்சி நிர்வாகம் நடக்கிறதா, இல்லையா?
ReplyDeleteநாகராஜன்: அதேதான். போரூரில் சாலைகள் பிரச்னை என்றால் உள்ளாட்சியின் காலரைப் பிடித்து கழுத்தை நசுக்கவேண்டும் அல்லவா?
அரிமா சங்கங்கள், ரோடரி சங்கங்கள் முதற்கொண்டு பலவும் என்னதான் செய்கின்றன? போராட்டம் என்றால் சாலையிலிருந்துதானே தொடங்கவேண்டும்? பிறகு குடிநீர். பிறகு கழிவு நீர் பராமரிப்பு...
>>>பேராசிரியர் சுவாமிநாதனை காந்தி ஜெயந்தி அன்று ஒரு பள்ளிக்கூடத்தினர் பேசுவதற்காக அழைத்திருந்தனராம். அந்தப் பள்ளி சென்னையில் உள்ள ஒரு ‘சர்வதேச’ பள்ளி. அவர்கள் தெளிவாகவே சொல்லிவிட்டனராம். ‘எங்கள் மாணவர்களுக்கு காந்தியைப் பற்றி அக்கறை இல்லை. தேவையும் இல்லை. அதனால் நீங்கள் காந்தியைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை. வேறு என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.’
ReplyDeleteஇதுபோன்ற தெளிவுதான் நமக்கு மிகவும் அவசியம்<<<
ஒரு பள்ளிக்கூடத்தின் மாணவர் சேர்க்கை நேர்முக தேர்வு. குழந்தையை கூட்டி வந்த பெரியவர் இவனுக்கு கிட்டதட்ட முப்பது நாற்பது குறளை ஒப்பிக்க தெரியும் என சொல்லி இருக்கிறார். அதற்கு அந்த பள்ளி முதல்வர், "ஏன் குழந்தைக்கு அதெல்லாம் சொல்லி தர்றீங்க? வேஸ்ட் ஆப் டைம்!" என்று சொல்லி இருக்கிறார். இப்போது உயர்தட்டு பள்ளிக்கூடங்கள் ஆங்கில மோகத்தை மட்டுமல்லாமல் கூடவே தமிழ் வெறுப்பையும் உள்ளூர் கலாச்சார identity-களை தாழ்வாக நினைப்பதையும் தங்களது பிராண்ட் அடையாளமாக வைத்திருக்கிறார்கள். இவர்களால் உருவாக்கபடும் அந்த மாணவர் சமூகம் எதிர்காலத்தில் என்னென்ன புரட்சிகள் செய்யுமோ தெரியவில்லை :(
>>>பேராசிரியர் சுவாமிநாதனை காந்தி ஜெயந்தி அன்று ஒரு பள்ளிக்கூடத்தினர் பேசுவதற்காக அழைத்திருந்தனராம். அந்தப் பள்ளி சென்னையில் உள்ள ஒரு ‘சர்வதேச’ பள்ளி. அவர்கள் தெளிவாகவே சொல்லிவிட்டனராம். ‘எங்கள் மாணவர்களுக்கு காந்தியைப் பற்றி அக்கறை இல்லை. தேவையும் இல்லை. அதனால் நீங்கள் காந்தியைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை. வேறு என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.’
ReplyDeleteஇதுபோன்ற தெளிவுதான் நமக்கு மிகவும் அவசியம்<<<
எந்தப் பள்ளி என்று கூறினீர்களானால் நம் குழந்தைகளை அந்தப்பக்கம் அனுப்பாமல் இருக்க உபயோகமாக இருக்கும்.
நன்றி.
-SK