Thursday, October 15, 2009

அரிஸ்டாட்டிலின் ‘காரணங்கள்’

மானுடவியல் வகுப்பு (Itunes U: Terrence W. Deacon, UC Berkely, Anthropology 1, 001, Spring 2009) ஒன்றில் சேர்ந்து படித்து வருகிறேன். அதில் நடுவில் அரிஸ்டாட்டிலின் Causes என்பது பற்றி வந்தது. கிரேக்க தத்துவவியலாளர்கள் பற்றி நான் படித்ததில்லை. தேடிப் படிக்கவேண்டும். அதுவும் Itunes U-ல் இருக்கும்.

Causes என்பதை ‘காரணங்கள்’ என்று மொழிபெயர்க்கலாமா? அரிஸ்டாட்டில் எந்த ஒரு தயாரிப்புக்கும் நான்கு காரணங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

(1) Material Cause - பொருள் காரணம். ஒரு தயாரிப்பு எந்தப் பொருளால் உருவாக்கப்படுகிறது என்பது. மேஜை மரத்தால் உருவாக்கப்படுகிறது என்றால் மேஜையின் பொருள் காரணம் மரம். சட்டை பஞ்சுத் துணியால் உருவாக்கப்பட்டால், சட்டையின் பொருள் காரணம் பஞ்சுத் துணி.

(2) Formal Cause - உருவக் காரணம். ஒரு தயாரிப்பு இப்படித்தான் வடிவத்தில், அளவில் இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உருவக் காரணம். அதாவது அந்தத் தயாரிப்பின் வடிவமைப்பாளர் உருவாக்கியிருக்கும் டிசைன்தான் அந்தத் தயாரிப்பின் உருவக் காரணம். ஒரு மேஜை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு வடிவம் உள்ளதல்லவா? நான்கு கால்கள், ஒரு மேல் தட்டு, சில ஆணிகள் (மிக எளிமையான ஒரு மேஜை).

(3) Efficient Cause - உருவாக்கும் காரணம். வடிவம் தெரியும். பொருள் கையில் உள்ளது. யார் அந்தப் பொருளை உருவாக்கப் போகிறார்கள்? ஒரு மனிதன் அல்லது மனிதன்+இயந்திரம் சேர்ந்து அந்தத் தயாரிப்பை உருவாக்கும்போது அவர்கள் அந்தத் தயாரிப்பின் உருவாக்கும் காரணமாக இருக்கிறார்கள்.

(4) Final Cause - இறுதிக் காரணம். ஒரு தயாரிப்பு எதற்காக உருவாக்கப்படுகிறது? மேஜை என்றால் உட்கார்ந்து எழுத, கம்ப்யூட்டரை வைத்துக்கொள்ள அல்லது உட்கார்ந்து உணவு உண்ண. (என் அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், எல்லாப் புத்தகங்களையும் கொத்தாக அள்ளிக் குப்பையாகப் போட்டுக்கொள்ள!) காரணமில்லாமல் ஒரு தயாரிப்பு உருவாக்கப்படாது என்ற கொள்கை மூலம் வருவது இது.

சரி. இந்தப் பதிவின் இறுதிக் காரணம் என்ன என்று கேட்கிறீர்களா? ஒருவேளை இதைப் படிக்கும் யாராவது அரிஸ்டாட்டில் வேறு என்னதான் சொல்லியிருக்கிறார் என்று தேடி, அவரது புத்தகத்தை முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாமே என்பதுதான்.

தொடர்புள்ள சுட்டி: The Four Causes

3 comments:

  1. There is book "Aristotle The Nicomachean Ethics"(http://en.wikipedia.org/wiki/Nicomachean_Ethics).. I have the book..but its tough to read an unserstand...:)

    ReplyDelete
  2. அரிஸ்டாடில் கிட்டத்தட்ட 700 நூல்கள் எழுதியதாக ஒரு கணக்கு. இவற்றுள் சுமார் 200 தான் மிஞ்சியதாக ஒரு கணக்கு. சில கிரேக்க மொழியில், சில லத்தீனத்தில், சில அரபு, பாரசீக மொழிகளில்.

    ப்ளேடோவின் படைப்புகளை நேற்று லேண்ட்மார்க்கில் பார்த்தேன். சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டிள் காணவில்லை. சிசேரோ இருந்தார், அவரும் ஓடிப்போய் விட்டார்.

    சேட்டன் பகட்டும், ஓஷோவும், ஓபாமாவும், ஜஸ்வந்த் சிங்கும் கோலோச்சி, கொலு வீற்றிருக்கிறார்கள்.
    ற்

    ReplyDelete
  3. Cambridge has published a book that gives a readable introduction to Aristotle.There are many articles in the web, that will help the unintiated.

    ReplyDelete