Thursday, October 15, 2009

எம்.ஏ கலைஞர் தாட்ஸ்

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜி.திருவாசகம் முக்கியமான இரு கருத்துகளைக் கூறுவதை தொலைக்காட்சியில் பார்க்க/கேட்க நேரிட்டது.

1. இனி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மொழியாக தமிழ் இருக்குமாம். முதல் கட்டமாக அனைவரையும் தமிழில் கையெழுத்திடக் கேட்டுக்கொள்ளப்போவதாகத் துணைவேந்தர் கூறினார்.

2. அடுத்த வரியிலேயே, மூன்று புதிய முதுநிலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். எம்.ஏ இன் பெரியார் தாட்ஸ், எம்.ஏ இன் அண்ணா தாட்ஸ், எம்.ஏ இன் கலைஞர் தாட்ஸ். (ஆமாம். முற்றிலும் ஆங்கிலத்தில்தான் இந்தப் படிப்புகளின் பெயர்கள் சொல்லப்பட்டன.)

ஜோக்கர்கள்தான் நமக்குத் துணைவேந்தர்களாக வாய்க்கிறார்கள். இது இவரது கண்டுபிடிப்பா அல்லது இவருக்கு முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டு இவரால் நிகழ்த்தப்படுகிறதா என்று தெரியவில்லை.

தமிழில் கையெழுத்து போடுவதுதான் தலையாய விஷயம் என்று நினைக்கிறவர், “முதுகலைப் படிப்பு - கலைஞர் சிந்தனை” என்று சொல்லியிருக்கலாமே?

கையெழுத்து என்பது ஒரு கிறுக்கல். இன்று புதிதாகக் கையெழுத்து போடத் தொடங்குபவர்கள் தமிழிலா, ஆங்கிலத்திலா என்று முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் பல ஆண்டுகளாக ஏதோ ஒரு மொழியில் கையெழுத்திடுபவர்களை திடீரென தமிழில் கையெழுத்து போடு என்று சொல்வது என்ன அபத்தம்?

அது கிடக்கட்டும். இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் யார் பெயரை எதற்கு வைப்பது என்று அடித்துக்கொண்டார்கள். கருணாநிதியின் பெற்றோரின் பெயர்களை ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு வைப்பது பற்றி ஜெயலலிதா விடுத்த அறிக்கைதான் பிரச்னையின் ஆரம்பம். அதற்கு கருணாநிதி சரியாகவே பதில் அளித்திருந்தார். இந்த அம்மா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா என்றுகூடப் பெயர் வைக்கமாட்டார்கள். ‘புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களின் காலுக்கு செருப்பு கொடுக்கும் திட்டம்’ என்றுதான் பெயர் வைப்பார்கள். எப்போதும்போல கருணாநிதி தன் அறிக்கையின் கடைசியில் sexist remark ஒன்றை வீசிவிட்டுத்தான் போனார். மைசூர் மகாராஜா கொடுத்த ஒட்டியாணம் பற்றிய கமெண்ட் இங்கே தேவையில்லாதது.

அடுத்த நாளே ஒரு பல்கலைக்கழகம் ‘எம்.ஏ கலைஞர் தாட்ஸ்’ என்ற படிப்பைக் கொண்டுவருகிறது. மூன்று, நான்கு செமஸ்டர்கள் படிக்கவேண்டிய அளவுக்கு இந்த ‘தாட்ஸ்’-இல் என்ன இருக்கிறது? ஒரு புண்ணாக்கும் இல்லை. பெரியார் தாட்ஸ்? நிச்சயம் செய்யலாம். அதுகூட ஒரு முதுநிலைப் படிப்பு அளவுக்குத் தேவையா என்று தெரியவில்லை. அண்ணா தாட்ஸ் என்பதே verhy thin! நல்லவேளை... இத்துடன் கலைஞர் தாட்ஸ் என்பதுடன் நிறுத்திக்கொண்டார்கள். எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே!

12 comments:

  1. // எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே! //

    LLLLOOOOLzzzz.. hahahaha

    ReplyDelete
  2. //எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே!//

    அப்படியே பயிற்சி பட்டறையும் நடத்தலாம்!

    ReplyDelete
  3. ‘எம்.ஏ கலைஞர் தாட்ஸ்’ என்பதை விட கலைஞர் அரசியல் அனுகுமுரை, அல்லது கலைஞரின் காய்னகர்தல் என்று வைக்கலாம்

    ReplyDelete
  4. //
    எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ்
    //

    அது மதுரை கல்பலைப்பழகத்தில் சீக்கிரமே கொண்டுவந்துவிடுவார்கள். கவலை வேண்டாம்.

    அதுசரி, எம்.ஏ இன் பெரியார் தாட்ஸ், எம். ஏ இன் அண்ணா தாட்ஸ், எம். ஏ இன் கலைஞர் தாட்ஸ் எல்லாம் வாழ்க்கையை அற்பணித்துப் படிக்கும் மாணவர்களுக்கு என்ன வேலை கிடைக்குமாம் ?

    வீ.கீரமணிக்கும், அவனது மகன் மணிக்கும் ஜால்ரா தட்டும் வேலையா ?

    ReplyDelete
  5. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் விரும்பியோ,, விரும்பாமலோ ஆள்வோர்க்கு பாமாலைப் பாடி, பூமாலை சூடத்தான் வேண்டி இருக்கிறது. உங்கள் பதிவோடு வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். ஆனால், திருவாசகம் நிச்சயம் கோமாளி இல்லை. அவரது ஆட்சியின் கீழ் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்ட விதத்தை அனைத்து ஊடகங்களும் விதந்தோதுகின்றன. அவர் பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்தார் என்பது மறுக்க இயலாதது.

    இதெல்லாம் ஒரு நகாசு வேலை. நிச்சயம் உங்கள் அபிப்ராயம் மாறும்படியான மாறுதல்கள் வரும் என்பது என் அபிப்ராயம்.

    ReplyDelete
  6. //எம்.ஏ இன் அஞ்சாநெஞ்சன் தாட்ஸ் என்று எதையும் செய்யாமல் விட்டார்களே! //

    வாராதுன்னு நினைக்கிறிங்களா!?

    ReplyDelete
  7. சரியா சொன்னீங்க பத்ரி.ஏற்கனவே ஒரு துணைவெந்தர் ஊழல் குற்றசாட்டில் மாட்டினார்.இவர்களை போன்றவர்கள் துணைவேந்தர்களாக அமைவது துரதிஷ்டவசமானது.

    ReplyDelete
  8. செல்வேந்திரன்: ஆனந்தகிருஷ்ணன், குழந்தைசாமி காலத்துக்குப்பின், பெயர் சொல்லும்படியான ஒரு துணைவேந்தரையாவது சொல்லமுடியுமா? அடுத்த ஜெனரேஷனில் வசந்திதேவி ஞாபகத்துக்கு வருகிறார்.

    திருவாசகம் யார் என்று எனக்கு முன்பின் தெரியாது. அறிமுகமாகும்போதே... சிக்கலான அறிமுகத்தில் தொடங்குகிறார். அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் என்ன செய்தார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். முடிந்தால், நேரம் இருந்தால் உங்கள் பதிவில் எழுதுங்களேன்?

    துணைவேந்தர்கள் நினைத்தால் உயர் கல்வியை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். அதுவும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வீச்சு பிரம்மாண்டமானது. ஹ்ம்ம்ம்ம்...

    ReplyDelete
  9. அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஆளுனர் தான் வேந்தர். ஆளுனர்கள் மாநில முதல்வரின் ஜால்ராவாக இருப்பது அடிப்படை தகுதிகளில் ஒன்று. துணைவேந்தர்களை இவர்கள் தான் நியமனம் செய்கிறார்கள் எனும் போது, எம். ஏ. இன் புரட்சித் தலைவி ஜே.ஜெயலலிதா தாட்ஸ் வந்தால்கூட ஆச்சரியப்படக்கூடாது.

    ஜெயா ஆட்சியில் பாதிமா பீவி கவர்னராக இருக்கும் போது, மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ எகனாமிக்ஸை பார்டரில் பாஸ் செய்த திரு. சாலிஹு தான்...யார் இருந்தாலும், பதவி அவருக்கு வந்து சேரும். துணை வேந்தர் பதவி எவ்வளவு அரசியல் மிக்க பதவி என்பது அப்போது தான் தெரிந்தது.

    ReplyDelete
  10. Sabapathy Mohan was appointed as VC just after he quit MDMK and joined DMK.It is not unusual to find pictures of VCs visiting MK's house and garlanding him after they being appointed so. The VC of JNU or Delhi University will not visit the HRD minister or Chairperson of UGC and garland them after their appointment. Sycophancy has been taken to new levels by DMK and ADMK in Tamil Nadu and this virus has spread far and wide in public life in sectors where govt. decides the issues or where funds from govt. are crucial. VCs should strive for autonomy and asserting their role in university affairs besides developing universities. In TN the first and
    foremost task seems to be one of affirming their loyalty to the CM and his ministers.

    ReplyDelete
  11. While appointment of VCs to the public universities has reached a deplorable level, private universities don't do any better. Extremely poorly qualified founders and their family members with barely any experience in academics occupy the highest posts and eminent retired professors are willing to serve under them. Very sad indeed.

    The actual reason for this pathetic state of affair in TN is that the top politicians here don't consider themselves as just politicians, they think they are intellectuals.

    ReplyDelete
  12. பத்ரி, மிகுந்த தாமதமாகவே தங்களது பதிலூட்டம் கண்டேன். உடனே நினைவுக்கு வருகிற ஒன்றிரண்டை பின்னுட்டமாகச் சொல்கிறேன்.

    1) இந்தியாவின் மிக மோசமான அல்லது அறியப்படாத பல்கலைக்கழகமாக இருந்த பாரதியார் யூனிவர்சிட்டி இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக இடம்பிடிக்கச் செய்தார். அனேகமாக முதல் பத்து இடங்களுக்குள் என தினமணியில் படித்ததாக நினைவு.

    2) பல்வேறு புதிய பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்தார். ஊழல்களைக் குறைத்தார். துறைகள் தோறும் நிதி ஒதுக்கி, துறைத்தலைவர்களுக்கு புதிய சுவாசம் அளித்தார். வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழலைப் பெருமளவு குறைத்தார்.

    3) கடந்த சில ஆண்டுகளாக பாரதியார் பல்கலைக்கழகத்தின் காம்பஸ் பிளேஸ்மெண்ட் - கோவையின் தனியார் கல்லூரிகளுக்குச் சவால் விடுவதாக இருக்கிறது.

    4) பல லட்சம் பேர்களைக் கண்தானம் செய்ய பதிவு செய்ய வைத்தார்.

    5) மாணவர்களைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான புத்தகங்களைச் சேகரம் செய்து...கிராமங்கள் தோறும் உள்ள நூலகங்களுக்கு அளித்தார்.

    6) நெசவாளிகள் கஞ்சித் தொட்டி பஞ்சாயத்துக்களில் அவதிபட்டுக்கொண்டிருந்த காலத்தில் பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளின் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கைத்தறி ஆடைகள் வாங்க உத்தரவிட்டு, பல கோடி ரூபாய்களுக்கு கதராடை விற்றார்.

    பின்குறிப்பு:

    அனேகமாக சென்னைப் பல்கலைக்கு வந்த 'ஆஸ்திரேலியன் டெலிகேட்ஸ்' பற்றிய செய்தி தங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என்பதால் தனியாகக் குறிப்பிடவில்லை :)

    ReplyDelete