Friday, January 20, 2012

ஐஐடி விந்து

சில தினங்களுக்குமுன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வரி விளம்பரம் ஒன்று வந்திருந்தது. ‘ஆரோக்கியமான, கெட்ட பழக்கம் ஏதும் இல்லாத, உயரமான, சிவப்பு நிறமான ஓர் ஐஐடி மாணவருடைய விந்து தேவை. ரூ. 20,000 தருகிறோம். சரியான நபராக இருந்தால், உயரம், நிறத்தில் சமரசம் செய்துகொள்ளலாம்.’

இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள் என்ற அதிர்ச்சி பலருக்கு. இயற்கையா வளர்ப்பா, எது ஒரு குழந்தைக்கு அறிவைத் தருகிறது என்ற கேள்வியில் பலர் இறங்கினார்கள். பெயர் பெற்ற விஞ்ஞானிகளின், கணித மேதைகளின் சந்ததிகள் எல்லாம் என்ன பெரிதாக சாதித்துள்ளார்கள் என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள்.

மேற்படி தம்பதிகள் இப்படி விளம்பரம் எடுத்திருப்பது சமூகரீதியில் மோசமானதா, இல்லையா என்ற ஆராய்ச்சிக்குள் நான் இறங்கப்போவதில்லை. ஆனால் உயிரியல்ரீதியில், மரபணுவியல்ரீதியில் இதனைப் பார்ப்பது நலம் என்று நினைக்கிறேன்.

முதலில் இயற்கையா, வளர்ப்பா (nature or nurture?) என்ற கேள்விக்கு வருவோம். இயற்கை இல்லை, வளர்ப்புதான் அனைத்தையும் செய்கிறது என்பது தவறான வாதம். ஆனால், இயற்கை மட்டுமே, வளர்ப்பால் எதையும் பிரமாதமாகச் சாதிக்க முடியாது என்பதும் தவறான வாதம்.

ஒரு குழந்தையின் மரபணுவில் அதன் உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்குமான பாதைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன. இயல்பிலேயே நுண்ணிய முளைத் திறன் அற்ற குழந்தைகளை எப்படியும் ஐன்ஸ்டைனாக மாற்றிவிட முடியாது. ஆனால் அந்தக் குழந்தைகளின் உச்சபட்சத் திறனை வெளிப்படுத்த என்ன செய்ய முடியுமோ அவற்றை சரியான வளர்ப்பால் செய்யமுடியும்.

அதேபோல, ஒரு குழந்தையின் வளர்ச்சிக் காலத்தில் அதற்குத் தேவையான போஷாக்கும், சரியான வழிகாட்டுதலும், சரியான சூழலும் இல்லாவிட்டால் என்னதான் மிகச் சிறந்த மரபணுக் கலவை இருந்தாலும் விளைவு விரும்பத்தக்கதாக இருக்காது.

பாலூட்டிகளிலும் பறவைகளிலும் பெண்கள்தான் குழந்தைப் பிறப்பையும் வளர்ப்பையும் உறுதி செய்பவர்கள். அவர்கள்தான் எந்த ஆணின் விந்தைக் கொண்டு தம் குழந்தையை உருவாக்கிக்கொள்வது என்பதை முடிவு செய்பவர்கள். இவ்வகை உயிரினங்கள் பலவற்றில் பெரும்பாலான ஆண்கள் தம் மரபணுவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமலேயே உயிர் துறக்க நேரிடுகிறது. சில உயிரினங்களில் தலைமை ஆண், பிற ஆண்களை ஒழித்துக் கட்டுவதில் அல்லது துரத்துவதில் குறியாக உள்ளது. தன் கூட்டத்தில் உள்ள பெண்களுக்கு தன் விந்தைத் தவிர வேறு எந்த ஆணின் விந்தும் கிடைத்துவிடக்கூடாது என்பதே அதன் குறிக்கோள் (உதாரணம்: சிங்கம்).

மனித இனத்தில் இந்த அளவுக்கு மோசம் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி போன்ற சமூகக் கட்டுப்பாடு மூலம் அனைத்து ஆண்களுக்கும் தத்தம் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு பெண் உடன்பட்டால்தான் இதனைச் செயல்படுத்த முடியும். (என் கணிப்பில், ஒருவனுக்கு ஒருத்தி என்பது பெண்களின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்டதல்ல; பலவீனமான ஆண்களின் பாதுகாப்புக்காக!)

இங்கே ஃபீனோடைப், ஜீனோடைப், அல்லீல் என்ற ஆங்கில வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறேன்.

ஒரு பட்டாணிச் செடியில் உள்ள ஒரு காயை உடைத்துப் பார்த்தால், குண்டு குண்டாக, மொழுக் மொழுக் என்று, சுருக்கமே இல்லாமல் இருக்கும் பட்டாணிகள் கிடைக்கின்றன. இப்போது கொழுக் மொழுக் என்று கண் பார்வைக்குத் தெரியும் இந்தக் குணாதிசயம்தான் ஃபீனோடைப். இந்தக் குணத்தை அந்தப் பட்டாணி விதைகளுக்குக் கொடுத்த அடிப்படை மரபணுக் கொத்துதான் ஜீனோடைப். ஒரு குறிப்பிட்ட பண்பைக் கட்டுப்படுத்தக்கூடிய மரபணுக் கொத்துகள் பல இருக்கும். அவை அனைத்தும் அல்லீல்(கள்) எனப்படும்.

பாலினப் பெருக்கம் செய்யும் அனைத்து உயிரினங்களுடைய டி.என்.ஏவிலும் ஒரு குணாதிசயத்துக்கு ஒரு ஜோடி அல்லீல்கள் இருக்கும். ஒன்று தாயிடமிருந்தும் மற்றொன்று தந்தையிடமிருந்தும் வந்திருக்கும்.

சுருங்கிய பட்டாணியை உருவாக்கும் மரபணுக் கொத்து ஒன்று. மொழுக் மொழுக் பட்டாணியை உருவாக்கும் மரபணுக் கொத்து ஒன்று. ஒரு பட்டாணிச் செடியில் இந்த இரண்டு அல்லீல்களும் சேர்ந்தே இருக்கலாம். அப்படி இருந்தும், விளைவு அனைத்துமே மொழுக் மொழுக் பட்டாணியாக இருக்கும். இதற்குக் காரணம் அந்தக் குறிப்பிட்ட மரபணுவின் ‘ஓங்கு’ தன்மை (dominant). மற்றைய அல்லீல் ஒடுங்கு தன்மை (recessive) கொண்டதாக இருக்கிறது என்று பொருள்.

சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு?

புத்திசாலிக் குழந்தை வேண்டும் என்று ஐஐடி விந்தை வாங்க முற்படும் எதிர்காலத் தாயின் மரபணு ‘மந்தமான’ குழந்தையை உருவாக்கக்கூடியதாக இருந்து, அந்த அல்லீல் ஓங்கு தன்மை கொண்டதாக இருந்தால், 20,000 ரூபாய் வீணாகப் போய்விடும்.

மற்றொரு பிரச்னை, வெவ்வேறு மரபணுக்கள் ஒன்றுசேரும்போது, விளைவுகள் ஒட்டுமொத்தமாக மாறிப்போகலாம். சம்பந்தப்பட்ட ஐஐடி மாணவர் மரபணுவில் எல்லாம் சரியாக இருப்பதாக வைத்துக்கொண்டாலும், சரிசமமாக ஆண், பெண் மரபணுக்கள் கலக்கும்போது ஒன்று மற்றொன்றை வேறு பாதையில் பயணிக்க வைக்கலாம். உதாரணத்துக்கு அந்தக் குழந்தைக்கு ‘பிடிவாத’ குணமும் வந்து, அதற்கு மிகச் சிறந்த திறமைகள் இருந்தாலும் அதனைச் செயல்படுத்த மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து, அது நாசமாகப் போகலாம்.

ஒரு காலத்தில் யூஜெனிக்ஸ் என்று ஒரு போலித் துறையை வளர்க்கச் சில விஞ்ஞானிகளும் அறிவுஜீவிகளும் முற்பட்டார்கள். தம் சமூகத்தில் உள்ள மக்கள் சிலரை அவர்கள் கீழானவர்களாகக் கருதினார்கள். அவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை இருக்கக்கூடாது; அவர்களுடைய மரபணுக்கள் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும் என்றெல்லாம் இந்த அறிவாளிகள் கருதினார்கள். நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை. யூதர்களைப் பொருத்தமட்டில், ஹிட்லர்கூட இதுபோன்ற கருத்துகளைத்தான் கொண்டிருந்தார்.

ஆனால் உண்மையில் உலகில் உள்ள நான்கு பெரும் மனித இனங்களான காகேசியன், நீக்ராய்ட், ஆஸ்ட்ரலாய்ட், மங்கோலாய்ட் என அனைத்திலுமே (யூதர்கள், ஜெர்மானியர்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள் என அனைவரையும் சேர்த்து) கிட்டத்தட்ட ஒரே மரபணுக்கள்தான் திரும்பத் திரும்ப வருகின்றன. வெகுசில மாறுபாடுகள்தான் காணப்படுகின்றன. அந்த மாறுபாடுகள்தான் தோலின் நிறமாக, முடியின் சுருளாக, முகத்தின் அகலமாக, உடலின் உயரமாகவெல்லாம் தோற்றம் கொள்கின்றன. ஆனால் மூளைத் திறனை (மொழித் திறன், கணிதத் திறன், பொறியியல் திறன்)  பொருத்தமட்டில் பெரும் மாற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் உலகின் பல நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் கொண்டு வெள்ளையினம் என்றால் அப்படி, கருப்பினம் என்றால் இப்படி, இந்தியன் என்றால் வேறு மாதிரி, அதிலும் இந்தச் சாதியினர் என்றால் இன்னொரு மாதிரி என்று கருதுவது மதியீனம். இங்குதான் இயற்கையைவிட வளர்ப்பு ஏற்றம் பெறுகிறது.

குறிப்பிட்ட சமூகப் பின்னணி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை ஒரு குறிப்பிட்ட பாதையில் வேகமாகச் செல்லவைக்கிறது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் மரபணுக்களின் எந்தக் குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படுவதில்லை.

சொல்லப்போனால், உலகமயமாதல் காரணமாக, முன்னைவிட அதிகமாக இப்போது இனங்களுக்கு இடையேயான மரபணுக் கலப்பு அதிகம் நிகழ்கிறது.

மரபணுக் கலப்பு - shuffling - என்பது நீண்டகால நோக்கில், மரபணுத் தூய்மையைவிட அதிகம் பயனுடையது. சில காலம் மட்டுமே ஓடி, காலுடைந்தால் துப்பாக்கிக் குண்டுமூலம் சொர்க்கம் பிராப்திக்கும் ரேஸ் குதிரைகளுக்குத்தான் மரபணுத் தூய்மை அவசியம். மரபணுக்கள் கலக்கக் கலக்கத்தான் மனித சமுதாயத்தை அழிக்க முயற்சி செய்யும் நுண்ணுயிரிகளை டபாய்க்கும் திறனை மனிதர்கள் தொடர்ந்து பெறுவார்கள்.

ஆகவே இஷ்டத்துக்கு மாற்றி மாற்றித் திருமணம் செய்துகொள்ளுங்கள். பிற சாதியினரை மட்டுமல்ல, பிற மாநிலத்தவரை, பிற நாட்டவரை!  கலப்புக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!

*

இது இப்படி இருக்க, குறிப்பிட்ட அந்த தம்பதியினருக்கு தமக்கு விருப்பமான விந்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உள்ளதா, என்றால் நிச்சயம் உண்டு. ஆனால் அதனால் அவர்கள் விரும்பும் விளைவுகள் ஏற்படுமா என்றால் அழுத்தம்திருத்தமாகப் பதில் சொல்வது கடினம்.

நடக்கும் அல்லது நடக்காது!

23 comments:

  1. சிந்தனையைத் தூண்டும் நல்ல கட்டுரை. வார்ப்பா (இயற்கையா), வளர்ப்பா (சூழலா) என்றால் நான் வளர்ப்பிற்குத்தான் முதலிடம் கொடுப்பேன். வார்ப்பை (Genetic structure) எளிதில் இனம் கண்டுகொள்ளலாம். ஆனால் வளர்ப்பு நம் கண்ணுகுத்தெரியாத பல்லாயிரம் கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைய புள்ளியியல் கொண்டு நாம் சொல்லும் போஷக்கு, கல்வி, சூழல் போன்றவை வளர்ப்பின் ஒரு சிறு பகுதியை மட்டுமே விளக்குகின்றன. உண்மையில் வளர்ப்பின் காரணிகள் நாம் அறிந்துகொள்ளவே முடியாத வலைப்பின்னல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே என் எண்ணம். இது அறிவியலின் எல்லை.

    ReplyDelete
  2. hello badri sir,

    I have a question.
    How to identify child's interest or In which age, a child can identify its own desire?

    How to make them to identify?

    Bcoz i realized me and my dream in my 29th age.
    but now i am married/loan/kid.
    I couldnt go back and live for my desire.

    ## I realized myself bcoz of kizhakku books. No matter who is telling any negative.
    Your books are doing real magic for initial book readers like me.

    Thanks Badri.

    - Giri

    ReplyDelete
  3. Liking for higher breed is there in everyone. The nidhis opting to marry Brahmin girls is also part of it.

    ReplyDelete
  4. செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற விரும்பும் பெற்றோருக்கு எந்த விந்தணு வேண்டும் என்று முடிவு செய்ய உரிமை உண்டு என்று எழுதி மருத்துவர்களை மாமா ஆக்கி விட்டீர்களே
    அந்த உரிமை அவர்களுக்கு கிடையாது.உயரம்,நிறம் பெற்றோருக்கு ஒத்ததாக உள்ள விந்தணுக்களை மருத்துவர் தான் முடிவு செய்வார்.சச்சின் விந்தனுவோ ,இல்லை பக்கத்து வீட்டுக்காரன் விந்தனுவோ இல்லை ஐ ஐ டி முதலிடம் பெற்றவர் விந்தணுவே வேண்டும் என்ற பெட்ரோமாக்ஸ் வேண்டும் கதை இங்கு செல்லாது.

    http://icmr.nic.in/art/art_clinics.htm

    Use of sperm donated by a relative or a known friend of either the wife
    or the husband shall not be permitted. It will be the responsibility of the
    ART clinic to obtain sperm from appropriate banks; neither the clinic
    nor the couple shall have the right to know the donor identity and address,
    but both the clinic and the couple, however, shall have the right to have
    the fullest possible information from the semen bank on the donor such
    as height, weight, skin colour, educational qualification, profession, family
    background, freedom from any known diseases or carrier status (such
    as hepatitis B or AIDS), ethnic origin, and the DNA fingerprint (if
    possible), before accepting the donor semen. It will be the responsibility
    of the semen bank and the clinic to ensure that the couple does not
    come to know the identity of the donor.

    ReplyDelete
  5. Badri, Y dont they look into Extra terrestial intelligence (ET) Specimenns.. so that they can gain more out of thier Progeny

    ReplyDelete
  6. நல்ல பதிவு. உங்கள் அவதானிப்பும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே இருக்கிறது.

    (எனக்கு வேண்டப்பட்ட ஒரு கான்பூர் ஐ.ஐ.டி. மாணவன், ஓவியப் போட்டி ஒன்றில் வென்ற தகவல் மடல் ஒன்று இப்போதுதான் வந்தது)

    ஆனால் அரசியல் ஆட்டங்களில் புகுந்து விளையாடி ஐ.ஐ.டி. எஞ்ஜினியர்கள் யாரும் தலைதப்புவதாகத் தெரியவில்லை. நான்கு சுவர்களுக்குள் ஆன அலுவல்களில் (design, planning, R&D) அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்; களப் பணிகளில் (production, maintenance) முண்டி முன்னேறுவதில் அல்லற்பட்டு அவர்கள் துறை தாவுகிறார்கள் அல்லது பின்தங்கிப் போகிறார்கள்.

    இப்படிப் பொதுமைப் படுத்தக் கூடாதுதான். நான் பணிபுரிந்த நிறுவனங்களின் வழி என் கருத்துக்குப் பட்டதைச் சொல்லுகிறேன். (ஐ.ஐ.டி. புறக்கொடையான நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களுக்கு இந்தக் கோணக் கண்ணோட்டம் சாத்யப்பட்டிருக்குமா தெரியவில்லை).

    பிறகும் இதுபோன்ற விளம்பரங்களும் ஒரு வணிக உத்தி அரசியல் போன்றே தெரிகிறது. ஐ.ஐ.டி. இஞ்ஜினியர்களைத் தேடி யாரும் பெண் கொடுப்பதில்லை. இதைப் படிக்க நேர்ந்தால் அந்தக் கோமாளிகள் 'மணமகன் தேவை' விளம்பரங்களில் இனி அப்படிக் கொடுப்பார்கள். நம் நாட்டிலேயே ஓரொரு மாகாணத்திலும் வெவ்வேறு நாட்களில் புத்தாண்டுப் பிறப்பு உண்டு என்பதைக் கணக்கில் கொள்ளாமல் நீங்கள், அறிவியல் எல்லாம் பேசி, திருவள்ளுவரை வம்புக்கு இழுக்கவில்லையா? எல்லாம் ஓர் அரசியல்தான். (நானும் என் 'நாடோடித் தடம்' புத்தகத்தில், தை முதல் தேதிக்கு ஆண்டுப் பிறப்பை மாற்ற வேண்டிய தேவை என்ன என்று வினவியிருக்கிறேன்.)

    //ஆகவே இஷ்டத்துக்கு மாற்றி மாற்றித் திருமணம் செய்துகொள்ளுங்கள். பிற சாதியினரை மட்டுமல்ல, பிற மாநிலத்தவரை, பிற நாட்டவரை! கலப்புக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!//

    இக் கருத்துக்காக உங்களுக்கு ஒரு முத்தம். 'பிற மதத்தவரை' என்பதும் இதில் அடக்கம்தானே? அரவிந்தர் ஆவி கொதிக்கப் போகிறார்.

    ReplyDelete
  7. On 'Nature' and 'Nurture': In my opinion, the physical appearance like skin, color of the hair and also being prone to some disease or the other are only decided by 'Nature'. "Nurture" meaning environment, education, association etc. determine one's conduct and character.

    ReplyDelete
  8. மூளைக்குள் மடிப்புகள் பல உண்டு.இது எந்த அளவுக்கு நிறைய இருக்கிறதோ அந்த அளவுக்கு சிந்தனை ஆற்றல், பகுத்தறியும் திறன்,ச்ட்டெனப் புரிந்து கொள்ளும் திறன் போன்ற திற்னகள் தீர்மானிக்கப்படுவதாக நான் எங்கோ படித்த ஞாபகம். மூன்று அல்லது நான்கு வயது வரை நல்ல புரதம் அடங்கிய உணவு ஒரு குழந்தைக்கு அளிக்கப்படுமானால் அதன் மூளை மடிப்புகள் அதாவது மூளைத் திறன் நல்ல விதமாக இருக்குமாம். அந்த வயதுக்குப் பிறகு எவ்வளவு புர்தம் சாப்பிட்டாலும் அது மூளையின் மடிப்புக்ளை அதிகரிக்காதாம்.
    இப்படி நிறைய மூளை மடிப்பு கொண்ட குழந்தை பின்னர் ந்ல்ல மூளைத் திறன் கொண்டதாக இருக்கும், கடினமான கணித சமன்பாடுகளையும் எளிதில் புரிந்து கொள்ளுமாம்.அதாவது குழந்தைப் பருவத்தில் நல்ல ஊட்டம் தேவை எனலாம்.மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளால் நல்ல ஊட்ட்ச சத்து பெற்ற குழந்தைகளுடன் போட்டி போட முடியாமல் போவதற்கு ஊட்ட்சசத்து குறைபாடு காரணம்.
    ஆனால் வளர்ப்பு மற்றும் சூழ் நிலை சரியாக இல்லை என்றால் இளம் வயதில் நல்ல ஊட்ட்சசத்து பெற்ற அதே குழந்தை சிறந்த கிரிமினலாகக் கூட உருவாகலாம்.அந்த வகையில் நோக்கும் போது மதிய உணவுத் திட்டம் நல்ல மூளைத் திறன் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்கு உதவலாம்.ஆகவே ஜாதிக் காளையின் உய்ரிய விந்து மட்டும் போதாது. இது பற்றித் தங்கள் கருத்தென்ன?

    ReplyDelete
  9. IIT OK
    Good Habits OK
    Complexion Not OK
    Infosys Founder Rejected

    IIT OK
    Complexion OK
    Height Not OK
    Kizhakku Founder Rejected

    How sad!!!

    ReplyDelete
  10. //ஆகவே இஷ்டத்துக்கு மாற்றி மாற்றித் திருமணம் செய்துகொள்ளுங்கள். பிற சாதியினரை மட்டுமல்ல, பிற மாநிலத்தவரை, பிற நாட்டவரை! கலப்புக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!//

    இக் கருத்துக்காக உங்களுக்கு ஒரு முத்தம். 'பிற மதத்தவரை' என்பதும் இதில் அடக்கம்தானே? அரவிந்தர் ஆவி கொதிக்கப் போகிறார்.
    வழி மொழிகிறேன்

    ReplyDelete
  11. "ஆகவே இஷ்டத்துக்கு மாற்றி மாற்றித் திருமணம் செய்துகொள்ளுங்கள்"

    Good idea . Serial marriages with women of different race /caste/nationality !!! I suppose the same thing is applied - and allowed for women also !!!!!


    Vijayaraghavan

    ReplyDelete
  12. பத்ரி, இரண்டு கோல்டு மெடல் வாங்கியவர்களுக்கு இரண்டு மடங்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது!

    ReplyDelete
  13. // IIT OK
    Complexion OK
    Height Not OK
    Kizhakku Founder Rejected
    //

    hello sir, I remember, Badri is above average in height. 5.10 ?

    ReplyDelete
    Replies
    1. அப்படிண​ பத்ரிக்கு 20000 ருவா உண்டு

      Delete
  14. ஒரு பிரபல கதைதான் ஞாபகம் வருகிறது. சர்ச்சிலிடம் ஒரு அழகான பெண் சென்று ”நாம் இருவரும் இணைந்து குழந்தை பெற்றுக் கொண்டால் அது உங்கள் அறிவையும் என் அழகையும் பெற்றதாக இருக்கும். செய்யலாமா” என்றாளாம். அதற்கு சர்ச்சில், ”வேண்டாம் தாயே. ஒரு வேளை அது உன் அறிவையும் என் அழகையும் கொண்டு வந்துவிட்டால் நாடு தாங்குமா?” எனக் கேட்டாராம்.

    உங்கள் விளக்கம் இதைத்தான் ஞாபகப்படுத்தியது!

    ReplyDelete
  15. Freemason, that was Bernard Shaw

    ReplyDelete
  16. Actually this experiment is nothing new. The experiment and the resulting study is documented int eh book" genius factory".

    ReplyDelete
  17. ராஜசுந்தரராஜன்: திருவள்ளுவரை நான் வம்புக்கு இழுக்கவில்லை. திருவள்ளுவருக்குப் பிறந்தநாள் கற்பிப்போரைத்தான்! அவர் பாவம்.

    ஐஐடிக்குப் படிக்க வரும் பல பிள்ளைகள் பாவம். அவர்களை விட்டால் வேறு பல துறைகளில் மிக நன்றாகச் சாதிப்பார்கள். ஆனால் பெற்றோருக்காக ஐஐடி படிப்பைச் செய்யவேண்டியிருக்கிறது. அதேபோலத்தான் வெளியில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணாக்கர்களும். அடுத்த தலைமுறையிலாவது பிடித்ததைச் செய்யும் பாக்கியம் நம் பிள்ளைகளுக்கு வாய்க்கவேண்டும்!

    ReplyDelete
  18. பத்ரி,

    கமெண்ட் பகுதியின் line-spacing மோசமாக இருக்கிறது. குறிப்பாக, தமிழ் கமெண்ட்ஸ் படிக்க வெகு கடினமாக இருக்கிறது. பதிவின் line-spacing போலவே கமெண்டுக்கும் அமைத்துவிடலாமே?

    ReplyDelete
  19. ஆகவே இஷ்டத்துக்கு மாற்றி மாற்றித் திருமணம் செய்துகொள்ளுங்கள். பிற சாதியினரை மட்டுமல்ல, பிற மாநிலத்தவரை, பிற நாட்டவரை! கலப்புக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!

    அறிவியல்ரீதியாக இதற்கு ஆதரவாக சான்றுகளை தர முடியுமா.genetic diversity among previous generations per se may not confer any advantage to an individual.

    ReplyDelete
  20. Hi Badri,
    Your conclusion is wrong. You have come to your conclusion from what material you could get. Now I would recommend that you read the research papers published by Richard Boyd of University of California. He is an anthropologist and he is doing research in the area of cultural anthropology. There are other researchers in Korea too who are working on this area. After reading it if you can give your views here it would be nice. Thank you

    ReplyDelete
    Replies
    1. I am sorry. It is Robert Boyd and not Richard Boyd.

      Delete
  21. நீங்கள் சொல்லும் சாத்தியக் கூறுகள், (இந்திய சமூகக் கட்டமைப்பின்) காதல்/அமைக்கப்பட்ட திருமணங்களில் நிகழக்கூடும்.
    1. வளர்ப்பு சரியாகவே நிகழலாம்.
    2. எதிர்காலத் தாயின் மரபணு ‘அறிவுள்ள’ குழந்தையை உருவாக்கக்கூடியதாக இருக்கலாம்.
    3. ‘பிடிவாதம்’ ஐஐடி தந்தைக்கு மட்டும் தான் அல்ல, எந்த தாய்/தந்தைக்கும் இருக்கலாம்.
    4. பிற சாதியினர்/நாட்டினர் மூலம் பெறும் குழந்தைகளுக்கும் வாய்ப்பு/வளர்ப்பு தவறிப் போகும் சாத்தியம் இருக்கிறது.

    ஜாதி பார்த்து, "உனக்கு என்ன மாதிரி பெண்/பிள்ளை வேண்டும்" பார்த்து செய்யும் திருமணங்கள் இதிலிருந்து எப்படி வித்தியாசம்?

    இதுவும் கடந்து போகும்.

    கெக்கேபிக்குணி
    http://kekkepikkuni.blogsot.com

    ReplyDelete