Sunday, June 06, 2004

கட்டாயத் தமிழ்மொழிக் கல்வி

இந்த மாத அமுதசுரபி கல்விச் சிறப்பிதழாக வந்துள்ளது. அதில் அன்பாதவன் எழுதியுள்ள தாய்த் தமிழ்ப் பள்ளி என்னும் கட்டுரையிலிருந்து மேற்கோள்
தாய்மொழிக் கல்விக்கான போராட்டத்தின் ஓர் அம்சமாக தமிழ்ச் சான்றோர் பேரவை தமிழண்ணல் தலைமையில் 102 தமிழறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது முதல்வராயிருந்த மு.கருணாநிதி, நீதிபதி மோகன் குழுவின் பரிந்துரைப்படி தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவராய் ஓர் அரசாணை பிறப்பித்தார். அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்துப் பாடங்களும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும்.

தமிழக எல்லைப் பகுதிகளில் இருக்கும் 108 பள்ளிகள் மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு அவரவர் தாய்மொழியில் பாடங்கள் சொல்லித்தரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மெட்ரிக் பள்ளிகளின் சங்கச் செயலாளர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தீர்ப்பு தாய்மொழிக் கல்விக்கும் அரசாணைக்கும் எதிராக அமைந்தது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்து, இதுநாள் வரை கிடப்பில் கிடக்கிறது.
மேலும் இந்தக் கட்டுரையில் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக தாய்த் தமிழ்ப் பள்ளி என்ற பெயரில் தமிழகம் முழுதும் 50 பள்ளிகள் நடத்தப்படுகின்றன என்ற தகவலும் தெரிய வருகிறது. தமிழக அரசின் ஆணையைப் பற்றி சிறிது பார்ப்போம். முதல் ஐந்தாண்டுகளில் தாய்மொழியில் கற்றல் செறிவான கருத்தாகவே தோன்றுகிறது. ஆனால் தற்காலச் சூழ்நிலையில் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்திருக்கும். அதற்குப்பதில் அரசு கீழ்க்கண்டவாறு படிப்படியாகச் செய்யலாம்:
 1. முதலில் மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் வரும் எல்லாப் பள்ளிகளிலும் தமிழை ஒரு மொழியாகவாவது கட்டாயமாக போதிக்க வைக்க வேண்டும். இதற்கு இப்பொழுது உச்சநீதிமன்ற அதிகாரம் கிடைத்துள்ளது.
 2. அரசுப் பள்ளிகளில் ஐந்தாவது வரை கட்டாயமாக தமிழில்தான் கல்வி, ஐந்தாவது தாண்டியபின்னர் ஆங்கிலத்திலும் கல்வி கொடுக்கப்படும், ஆனால் அதற்கான கட்டணம் அதிகம்.
 3. அரசு ஆதரவில் இயங்கும் தனியார்ப் பள்ளிகளில் மேற்கண்ட முறையில் உள்ள வகுப்புகளில் பாடமெடுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே அரசு மாதச்சம்பளத்தை வழங்கும். ஆங்கிலக்கல்வி வகுப்புகளில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் கொடுக்கும் கட்டணம் மூலமாகவோ மற்ற வகையிலோதான் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
 4. தமிழில் தரமான கல்வியை வழங்கும் தனியார்ப் பள்ளிகளுக்கு மான்யம் வழங்குதல்.
 5. தமிழ்க்கல்வி மூலம் கற்று வரும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புக்கு நிதியுதவி.

12 comments:

 1. நான் சொன்னதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை போலும். என்னவோ ஏழைகள் எல்லாம் இன்று வேலையில்லாமல் இருப்பதற்குக் காரணம் ஆங்கிலத்தில் படிக்காததால் என்று நீங்கள் பேசுகிறீர்கள். மேலும் வேலை கிடைப்பதெல்லாம் வெளி மாநிலத்தில்தான் என்பது போலவும் பேசுகிறீர்கள். இதெல்லாம் ஒருவித மிடில் கிளாஸ் மித்.

  ஆங்கிலம் ஒரு பாடமாக எப்பொழுதும் இருக்க வேண்டும். அதை ஒழுங்காகக் கற்றால் அழகாக ஆங்கிலத்தில் பேசலாம், எழுதலாம், பொழியலாம். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இதில் இல்லை.

  ஆங்கிலம் வழியாக கணக்கு, அறிவியல், மற்ற பாடங்கள் ஆகியவற்றைக் கற்பதில்தான் பெரும் பிரச்சினை இருக்கிறது.

  தமிழ்நாட்டை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். 2002-03 வருடத்தைய புள்ளி விவரப்படி 6-11 வயதுக்குட்பட்டவர்கள் (அதாவது தொடக்கப்பள்ளி நிலையிலுள்ளவர்கள்) மொத்தம் 63.6 லட்சம் பேர். அதில் பள்ளிக்குச் செல்பவர்கள் 62.92 லட்சம். அதாவது 98.93% பேர் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆனால் இதுவே 14-16 வயதாகும்போது - பத்தாவது படிக்கும்போது - 69.95% ஆகக் குறைகிறது. 11-12ஆம் வகுப்பு போவது வெறும் 39.19% மட்டும்தான். அங்கிருந்து கல்லூரிக்குப் படிக்கப்போவது இன்னமும் குறைந்து 20-25%தான் இருக்கும். இதில் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குப் போகப்போவது என்ன, மிஞ்சி மிஞ்சி 4-5%? இந்த 4-5% பேரைச் சுற்றித்தான் அத்தனை சட்டங்களும் இயற்றப்பட வேண்டும் என்பதைப்போலப் பேசும் ஒருசில மத்தியதர, வெளிநாட்டில் வாழும் மக்களை நினைத்து என்னவென்று சொல்வது?

  ஏன் இத்தனை பேர் படிப்பைப் பாதியில் விடுகின்றனர்? ஏழைமை ஒரு காரணம் - வேலைக்குப் போய் பணம் சம்பாதித்தால்தான் வீட்டில் அடுப்பெரியும். பெண்ணாய்ப் பிறப்பது ஒரு காரணம். படிப்பு ஏறாமல் இருப்பது இன்னொரு காரணம். மற்ற பல காரணங்கள் இருக்கலாம்.

  இத்தனை பேர் சரியான (உயர்) கல்வியறிவு இல்லாமல் இருப்பதால் நாட்டிற்கு எத்தனை இழப்பு? கல்வி என்பது என்னவோ ஆங்கில மீடியத்தில் உருப்போட்டு ஒரு பரிட்சை எழுதி தேர்வடைவது இல்லை. பிற்கால வாழ்க்கைக்கு ஒரு சரியான அடித்தளம்.

  தமிழகத்தில் 12ஆவது வகுப்புத் தேர்வெழுதுவது கிட்டத்தட்ட வருடத்திற்கு 4-5 லட்சம் பேர்கள். மொத்தம் தமிழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி இடங்கள் சுமார் 75,000. மருத்துவக் கல்லூரி, மற்ற மருத்துவம் சார்ந்த இடங்கள் கிட்டத்தட்ட 7,500 இடங்கள். சரி, மற்றபடி ஆடிட்டிங், MBA, பல்வேறு விதமான உயர் கல்வி எல்லாவற்றையும் சேர்த்து படிக்க வருடத்திற்கு 2 லட்சம் பேருக்கு ஆங்கிலத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். ஆக ஒன்றாம் வகுப்பில் உள்ளே வருபவர்களில் வெறும் 15%க்கும் குறைவானவர்களுக்கே ஆங்கிலத்தில் அதிகத் திறமை தேவைப்படுகிறது.

  கடந்த நாலைந்து வருடங்களாக பலரை வேலைக்கு எடுக்கும் நிலையில் இருக்கிறேன் நான். சென்னையில் இருப்பதால் தமிழ்நாட்டுக் காரர்கள்தான் பொதுவாக வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள். இவர்களுக்கு தமிழிலும் பேசத் தெரிவதில்லை, ஆங்கிலத்திலும் பேசத் தெரிவதில்லை. இரண்டு மொழியிலும் சரியாக எழுதத் தெரிவதில்லை. எல்லாம் அரைகுறை. இதில் பலர் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துவிட்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்து விட்டு வந்தவர்கள். இவர்களையெல்லாம் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

  இவர்களையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் உடனே வேலைக்கு எடுத்துக்கொண்டு அமெரிக்காவிற்கா கூட்டிக்கொண்டு போகப்போகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் குப்பை கொட்டப்போவது தமிழ்நாட்டில்தான்.

  ஒரு மொழியையாவது உருப்படியாக அறிந்துகொண்டால், அந்த மொழியில் சிந்தனை செய்யத் தெரிந்துகொண்டால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

  தமிழ் மீடியத்தில் படித்தால் ஆங்கில அறிவே அற்றுப்போய்விடும் என்று நினைப்பது மிகவும் தவறானது. நல்ல சூட்டிகையான முதல் 5% மாணவர்கள் எந்த மொழியிலும் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு விடுவார்கள். என் கவலையெல்லாம் மற்ற 95% பற்றியது.

  ReplyDelete
 2. உங்கள் கருத்துடன் நான் பெருமளவுக்கு உடன்படுகிறேன்.இருப்பினும் நம் அணுகுமுறைகள் வேறுபடும் என்றே தோன்றுகிறது. see my brief note
  at http://ravisrinivas.blogspot.com

  ReplyDelete
 3. பத்ரி
  உங்கள் கருத்துகள் முற்றிலும் சரி. நானும் கடந்த எட்டு வருடங்களாக இங்கே சென்னையில் பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆங்கிலம் வழி கற்றவர்தான் அதிகம் வேலைக்கு முயல்கிறார்கள். அவர்கள் எந்த மொழியில் பேசினாலும் பரவாயில்லை - technical ஆக போதுமாக இருந்தால் போதும் என்ற நிலைதான். தமிழோ/கன்னடமோ/மலையாளமோ/இந்தியோ/தெலுகோ எதுபேசினாலும் சரியே. கணக்குப் போடத்தெரியுமா? நிரல் எழுதத் தெரியுமா? போதும். ஏதாவது ஒரு மொழியை ஒழுங்காக பேசினால் சரி.
  இந்தி படித்தால் 'அகில' இந்தியாவிலும் வேலை செய்யலாம் என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக கேட்டு சலித்தாயிற்று. வட இந்தியாவிலிருந்து தெற்கு நோக்கித்தான் இப்போதெல்லாம் வேலைக்கு வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தால் சரி. தற்போதைய நிலைமை வேறு.

  ReplyDelete
 4. இலங்கையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தாய்மொழி மூலமான கல்விமுறை நடைமுறையில் இருந்துவருகிறது. பள்ளிக் கல்வி முற்றுமுழுக்கத் தாய்மொழி மூலம் தான். பல்கலைக்கழக மட்டத்தில் வசதியின்மை காரணமாக சில துறைகளில் (பொறியியல், மருத்துவம்) ஆங்கிலமொழிமூலக் கல்வி.
  பத்ரி சொன்னது போல தமிழ்மொழி மூலம் கற்றது மேற்படிப்புக்கோ, வேலைத் திறமைக்கோ தடையாக இருக்கவில்லை. மாணவர்களிடையே தமிழ்க் கலைச்சொற்களின் (technical terms) பாவனை இயற்கையாகவும் தரப்படுத்தப்பட்டும் இருக்கிறது.
  இலங்கையின் தாய்மொழிக் கல்வி அனுபவத்தை வைத்துக் கொண்டு சொல்லப் போனால், அதன் ஒரேயொரு தீய விளைவு நாட்டு மக்களிடையே தொடர்புமொழி வாய்ப்புகள் குறைந்து போனதுதான். தேசியப் பிரச்சனை பூதாகாரமாக இதுவும் ஒரு காரணமாக இருந்தது -- சாதாரண சிங்கள தமிழ் இளைஞர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ள முடியவில்லை.
  தாய்மொழிக்கல்வியை அமுல் படுத்தும் அதே வேளையில் நாட்டு மக்களிடையே தொடர்புகள் தொடரவும் வழி செய்ய வேண்டும்.

  - அசோகன்.

  ReplyDelete
 5. ---------
  >>Unity in diversity என்பது இந்தியாவின் பெருமை இல்லை, சாபம் என்றே இந்தக் கணம் தோன்றுகிறது.
  --------------
  அப்படியெல்லாம் சொல்லிவிடாதீர்கள். வெறும் கோஷங்களினால் நாட்டைக் கட்டமுடியாது. என் பையன் இங்கே சென்னையில் ஆங்கிலமும், ஹிந்தியும் தான் படிக்கிறான். காரணம் தெரியுமா? என் மனைவிக்கு ஹிந்தியும் கன்னடமும் தான் தெரியும். எனக்கு தமிழ் சொல்லித்தர நேரமில்லை (வேலைப்பளு என்று ஒரு நம்பிக்கை). என் போன்றோர் சுயநலத்துக்காக தமிழ் மாநிலம் முழுவதும், மக்கள் தம் வரிப்பணத்தில் தம் மொழியைவிடுத்து பிற மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது என்ன நியாயம். நாட்டிற்காக ஆட்சித்திட்டங்கள் தீட்டுவது வேறு. சுயநலத்துக்கு அரசாங்கத்தை பயன்படுத்துவது வேறு.
  -அருள்

  ReplyDelete
 6. பத்ரி உங்களது இப்பதிவு மிக அருமை. 12வதுக்கு பிறகு மேற்க்கல்வி பயில்பவர்கள் சுமார் 12-15% மட்டுமே. அதிலும் இளங்கலையில் ஆங்கிலம் தேறமுடியாமல் படிப்பை விடுபவர்கள் அனேகம். தேசியக் கலிவியென்பதில் பயிற்று மொழி என்பதாக தமிழ் இருக்கவேண்டும். மற்றும் அக்கல்வியே தமிழ் நாட்டிற்கு உகந்ததாக இருந்தால் இந்த வேலையில்லாத்திண்டாட்டம் இருக்காது. இப்போதைய கல்வி வெறும் அமெரிக்க நகல். இப்பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 7. பத்ரி தாய்மொழிக்கல்வி பற்றிய தங்களது தொடர்பதிவுகள் நன்றாக இருக்கிறது. பயனுள்ள தகவல்கள். நன்றி.

  ReplyDelete
 8. மகாபலிபுரத்திலோ, அஜந்தாவிலோ, எல்லோராவிலோ, ""தொடாதே, புகைப்படம் எடுக்காதே, மீறினால் அபராதம் " என்பது நம் ஆர்வத்தைக் குறைக்கவோ அன்றி நம் உரிமையில் குறுக்கிடுவதோ கிடையாது. அந்த இடங்களின் , சிற்பங்களின், ஓவியங்களின் மாட்சிமை அழிந்துவிடக்கூடாது என்பதினால்தான். வெளிநாட்டு, வெளி மாநிலத்து வசதிகள் வேண்டும் வாய்ப்புகள் வேண்டும் ஆனால் அவர்களின் கொள்கைகள் மட்டும் கூடாது. இது எந்த நியாயமோ தெரியவில்லை.
  நம் மாநிலத்தை விட்டு வெளியே செல்வது என்பது நம் சுய தேவைகளுக்காகத்தானேயன்றி பொதுச் சேவைக்காக அல்ல. பொதுச் சேவை செய்பவர்களுக்கு இத்தேவைகளும் கிடையாது.
  என் வீட்டுக்கு வருபவர்கள் செருப்பை வெளியில் விட்டுவிட்டுத்தான் வரவேண்டும், நான் தரும் உபசரிப்பைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். செருப்புடனே நுழைவேன் என்பது அபத்தம்.

  நிர்வாண உலகில் கோமணம் கட்டியவன் நிச்சயம் பைத்தியம்தான்

  ReplyDelete
 9. உங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி பத்ரி. எந்த மொழியிலும் உருப்படியாகப் பேசத் தெரியாமல் கலந்து குழப்பும் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம். நானும் தமிழ் வழியில் படித்தவன்தான். தமிழ்வழிப் பள்ளிகளில் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. இதன் தரம் சரியில்லை. இதனால்தான் மேற்படிப்புகளில் சென்று நிறைய சிரமங்களை எதிர் கொள்ள நேருகிறது. ஆங்கிலம் சரியாகக் கற்பிக்கப்பட்டால் போதும், ஆங்கில வழி தேவையில்லை. JSRI - சவ்வூடு பரவல் படிக்கும்போதே osmasis என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் படித்து விட்டுத்தான் மேற்படிப்புக்கு வந்தோம் நாங்கள். எனவே ஆங்கில மொழிப்பாடத்தின் தரம் உயர்த்தப்பட்டால் பிரச்சினைகள் பாதி தீர்ந்து விடும். ஆங்கில வழி படித்து விட்டு டீக்கடையில் வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள், தமிழ் வழி படித்துவிட்டு அமெரிக்காவில் Doctorate முடித்தவர்களும் இருக்கிறார்கள். அனைத்துப் பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும், ஆங்கிலம் ஒரு மொழியாகத் தொடர்ந்து இணையாகக் கற்பிக்கப் படவேண்டும் என்பது சரியான அணுகுமுறையாக இருக்கும்

  ReplyDelete
 10. கட்டாயத் தமிழில் கல்வி என்பது இலங்கையில் எளிதாக சாத்தியம், அதாவது தாய் மொழியில் கல்வி. இங்கு மக்கள் தொகை அதிகம் பல மாநிலத்து மக்களும் கல்ந்துள்ளனர் கட்டாயத் தமிழ் என்பதை நீதிமன்றம் சென்று விலக்கு பெறுகின்றனர். தமிழ் மொழியில் அனைத்து நூல்களும் மொழிபெயர்க்கபட்டால் இது சாத்தியம். எந்த ஒரு அரிய நூலும் தமிழில் மொழிப்பெயர்க்கப்படவேண்டும். மேலும் ஆங்கிலம் தொடர்பு மொழி அதை ஒழுங்காக, முறையாக பாகுபாடின்றி அனைத்து கல்வி நிலையங்களிலும் கற்று கொடுக்கப்பட்டால் அனைவரும் கற்கலாம். கற்று கொடுப்பவரிடம்தான் அனைத்துமே இருக்கின்றது. தமிழ் எப்படி கற்று கொண்டோம் நம் தாய் கற்று கொடுத்ததால் அது போல் ஆங்கிலமும் கற்று கொடுக்கப்படவேண்டும் தாய் போல் ஆசிரியர் கற்று கொடுக்கவேண்டும். என்னதான் ஆங்கிலம் கற்று கொண்டாலும் ஆங்கிலம் என்பது அறிவாகாது. அது பிற மொழிப் புலமை என்று வேண்டுமானாலும் எடுத்துகொள்ளலாம். அது ஒருவருக்கொருவர் வேறுபடும் நிலப்பரப்பிற்கு ஏற்றவாறு வேறுபடும். இந்தியாவில் ஆங்கிலப் புலமை என்பது 28% என்று ஒரு ஆங்கில நாளிதழ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சதவீதத்திற்குள்ளேயே அனைவரும் அடக்கம். மொத்தத்தில் தாய் மொழியில் கல்வி கற்பதே சிறந்தது இதற்கு வல்லரசுகள் எனக் கூறப்படும் நாடுகளே உதாரணம் சீனா, ரஷ்யா, ஜப்பான், கொரியா இன்னும் பல எல்லாம் தாய்மொழிலேயே கல்வி கற்கின்றன. நம் மாநிலத்திற்கும் வழி பிறக்கும் என நம்புகின்றேன். கட்டாயத் தமிழுக்கு என் ஆதரவு உண்டு.

  ReplyDelete
 11. ஆங்கிலம் அல்லது பிற மொழி கற்பதற்கும் தாய்மொழிதான் அவசியம் கணிப்பொறி போல கணிப்பொறிக்கு எப்படி நாம் இடும் கட்டளைகள் அதன் எந்திர மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு புரிகின்றதோ அதே போல்தான் நமக்கும். இவ்விடத்தில் எந்திர மொழி (Interpreter)தொடர்பானாக செயல்படுகின்றது. நம்மை சிறுவயதில் பள்ளிக்கு சேர்த்தவுடன் அது ஆங்கிலம் கறிபிக்கின்ற பள்ளியாகவோ அல்லது ஒரு பாடம் மட்டும் ஆங்கிலம் கற்பிக்கின்ற பள்ளியோ எதுவாக இருந்தாலும் நமக்கு தொடர்பானாக இருப்பது நம்தாய்மொழியே அதுவே அதன் பொருளை நம் மூளைக்கு உணர்த்துகின்றது நாளடைவில் அந்த தொடர்பானை பயன்படுத்துகின்ற வேகம் கூடுகின்றது (வளர வளர) அதீத அக்கறை காட்டுபவர்கள் என இது பலருக்கு இது மாறுபடுகின்றது இது தான் பின்னாளில் புலமையாகின்றது. புலமையின் அளவீடுகேற்ப அவரவர் அவசரத்தில் அரைகுரையாக புரிந்து கொள்கின்றனர். தாய் மொழியில் இந்த சிக்கல் இல்லை தொடர்பான் என்பது தேவையில்லை. அனைத்தும் மேரிடையாக புரிந்து கொள்ளப்படுகின்றது உடனே தெளிவடைந்து விடுகின்றோம். ஆகையால் தாய்மொழி மூலம் அதாவது தமிழ் மூலம் கல்வி கற்பதே சிறந்தது. அதற்கு தமிழ் கட்டாய கல்வி ஆகவேண்டும் அதற்கு அனைவரும் ஆதரவு தருவோம் நாம் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை எனபதை நிருபிக்க இதை விட வேறுவழியில்லை.

  ReplyDelete