Sunday, June 27, 2004

இலங்கையில் சில நாள்கள்

போனவாரம் இலங்கை சென்றிருந்தேன். கொழும்பில் இரண்டு நாள்களும், கலுத்தரவில் இரண்டு நாள்களும் இருந்தேன்.

கொழும்பு பிரதான கடற்சாலையின் மேலிருந்து எடுத்த புகைப்படம் இதோ.

கொழும்பு/Colombo


சு.வில்வரத்தினம்
சு.வில்வரத்தினம்
போயிருந்தது அலுவல் தொடர்பான வேலைகளுக்காக. ஒரு நாள் நேரம் எடுத்துக்கொண்டு சில இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை சந்திக்க முடிந்தது. லண்டன் பத்மநாப ஐயர் இதற்கு பெருமுதவி புரிந்தார். திருகோணமலையிலிருந்து சு.வில்வரத்தினம் வெகுதூரம் கடந்து வந்திருந்தார்! அவருடன் கொழும்பில் இருக்கும் இளம் எழுத்தாளரான ரமனேஷன் வந்திருந்தார்.
ரமனேஷன்
ரமனேஷன்
இவர் அசுவகோஷ் என்ற புனைபெயரிலும் மற்ற சில புனைபெயர்களிலும் எழுதுகிறார். இருவருடனும் பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை, தமிழகத்தில் வெளியாகும் புத்தகங்கள் இலங்கையில் கிடைக்க படும் கஷ்டங்கள், அதன் அதீத விலை (இலங்கை ரூபாய் மதிப்பு சரசரவென இறங்கிக் கொண்டே வருகிறது), இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் இந்தியாவில் அறியப்படாமை போன்ற பல விஷயங்கள் பற்றிப் பேசினோம்.

மு.பொன்னம்பலம்
மு.பொன்னம்பலம்
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் மு.பொன்னம்பலம், தெளிவத்தை ஜோசப் போன்றோரும் என்னைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

மீண்டும் அடுத்த மாதம் (ஜூலை) இலங்கை செல்வேன். அப்பொழுது இன்னமும் சிலரைச் சந்திக்கவும், சில தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளேன்.

தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப்
தமிழ்நாட்டின் வாசகர்களுக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய பிரஞ்ஞையே இல்லாதிருப்பது வருந்தத் தக்கது. தமிழ்நாட்டில் வெளியாகும் வெகுஜன இதழ்களிலும் சரி, சிற்றிதழ்களிலும் சரி, இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது.

அதைப் போலவே தமிழ்நாட்டிலிருந்து தமிழில் வெளியாகும் புத்தகங்கள் இலங்கை வாசகர்களை முழுமையாக அடையாமல் இருப்பதும் வருந்தத் தக்கதே. இலங்கை அரசின் நூலகத் துறை எப்படி இயங்குகிறது என்று எனக்குத் தெரியாது. அரசுகளின் வழியே செல்லாமல் தமிழக்த்தில் உள்ள ஒவ்வொரு பதிப்பாளரும் தங்கள் பதிப்பு ஒவ்வொன்றிலுமிருந்து பத்து பிரதிகளாவது இலவசமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம் என்று தோன்றுகிறது. என் பதிப்பகம் (கிழக்கு பதிப்பகம்) வழியாக நாங்கள் அச்சிடும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் இருபது பிரதிகள் இலவசமாக அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.

11 comments:

 1. அன்பின் பத்ரி,
  உங்கள் செயல் சிறப்பானது. மேலும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களை சந்தித்து, ஒவ்வொருவர் பற்றியும், அவர்களது படைப்புகள் பற்றியும் ஒரு தொடர் எழுத இயலுமா?. என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
  உங்கள் பதிவிற்கு நன்றிகள்.
  அன்புடன்
  பாலாஜி-பாரி

  ReplyDelete
 2. thanks for this blog.
  very nice recent phot
  -/ramani.

  ReplyDelete
 3. ஈழ இலக்கியத்தை, தமிழகத்தில் பரிச்சயப்படுத்துவதற்காக, இங்கே உள்ள பலருக்கு, புத்தகங்களை, ஐயரவர்கள் அனுப்புகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல, நம்மவர்களும், அவர்களுக்கு புத்தகங்களை அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். கிழக்குப் பதிப்பகம், புத்தகங்களை அனுப்புவதாக முடிவெடுத்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. இதை பலரும் பின்பற்றினால், ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு, இந்தியத் தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். வாழ்த்துக்கள் ( புகைப்படத்தைப் பார்த்தால் நம்ம பீச் ரோட் போலவே இருக்கிறது. இன்னும் புகைப்படம் இருந்தால் போடுங்கள் )

  ReplyDelete
 4. கிழக்கு பதிப்பகம் மற்ற பதிப்பகங்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிழக்கினைத் தொடர்ந்து மற்றவர்களும் இப்படி செய்தால் நல்லது.

  பத்ரி, சீக்கிரம் அடுத்த விசிட் அடிங்க, இன்னும் பல அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்க.

  ReplyDelete
 5. you can try to import books from srilanka and distribute here.good that ur sending books there.

  ReplyDelete
 6. இலங்கையிலிருந்து இந்தியப் புத்தகங்களை இறக்குமதி செய்து விற்க ஒரு கடையிருக்கிறது. கொழும்பில் உள்ள பூபாலசிங்கம் புத்தகக் கடை. மற்ற கடைகள் முயற்சி செய்து காணாமல் போய்விட்டனவாம். ஆனால் இந்தியாவில் INR 100 விற்கும் ஒரு புத்தகம், கொழும்பில் கிட்டத்தட்ட SLR 400 ஆகிறதாம். இது கொழும்பில் உள்ள தமிழ் வாசகர்களுக்குக் கட்டுப்படியாவதில்லை. (இப்பொழுதைக்கு 1 INR = 2.2 SLR)

  யாழ்ப்பாணத்தில் வன்னி பகுதியில் புலிகள் நல்லதொரு நூலகத்தை வைத்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

  மற்ற தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் புத்தகங்கள் கிடைப்பதில்லை. சந்தை சிறிதாகவும், புத்தக விலை வாங்கும் சக்திக்கு அப்பாலும் இருப்பதால் அதிகமாக யாரும் இறக்குமதி செய்து புத்தகங்களை விற்க முயற்சி செய்வதில்லையாதலால் பிரச்சினை.

  ReplyDelete
 7. பத்ரி,
  நானும் வாசனைப் போல் 50$ (அமெரிக்க) அனுப்புவேன், குழந்தைகள் நலப்பணிக்காக.
  கவுண்ட் மீ இன்.

  ReplyDelete
 8. வாசன், கார்திக்: நன்றி. இதை சரியாகச் செய்ய வேண்டும். அதற்கு ஒரு அமைப்பும், அங்கீகாரமும் தேவை. அதனால் எப்படிச் செய்யலாம் என்று யோசித்தபின்னர் பணத்தை பெற்றுக்கொள்வது உத்தமம். நாளை யாரும் தவறாகச் சொல்லிவிடக் கூடாது பாருங்கள். ஒரு நிலையான கருத்து தோன்றியவுடன் எழுதுகிறேன். உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

  ReplyDelete
 9. உங்கள் மறுமொழிக்கு நன்றி பத்மநாப ஐயர். தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழத்தமிழ் இலக்கியத்தை எப்படி அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்? இது மூன்று வகைப்பட்டது என்று நினைக்கிறேன். ஒன்று வெகுஜன இதழ்கள் சார்ந்தது. வெகுஜன இதழ்களை வாசிக்கும் மக்கள் தொகைதான் அதிகமானது. சிற்றிதழ்காரர்கள் என்னதான் கேலி பேசினாலும் இந்த வெகுஜன இதழ் வாசகிதான் பின்னாளில் சிற்றிதழையோ, நல்ல இலக்க்கியத்தையோ படிக்கப்போகிறாள். இப்பொழுதைக்கு இந்தியாவில் இல்லாத தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகள் தமிழ் வெகுஜன இதழ்களில் காண்பது அரிதாகவே உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கைத் தமிழர்களும் புலம்பெயர்ந்து அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் சென்றுள்ள தமிழர்களும் தமிழக வெகுஜன இதழ்களில் காணக்கிடைப்பதில்லை.

  இரண்டாவது சிற்றிதழ்களில் காணப்படுவது. கடந்த பத்து வருடங்களில் முந்தி இருந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் சுத்தமாக இப்பொழுது காணாமல் போய்விட்டனர். முத்துலிங்கம், எஸ்.பொ, சேரன் பெயர்களைத் தவிர மற்றது அவ்வளவாகக் கண்ணில் படுவதில்லை. சரிதானே?

  மூன்றாவது: அச்சிட்ட புத்தகங்கள் வழியாக தமிழக மக்களை அடைவது. இங்கும் பெருஞ்சந்தையென்பது தமிழகத்தில் இருப்பதுதான். விடுதலை, அடையாளம் இரண்டும் அதிகமாக இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகின்றன. காலச்சுவடு சிலவற்றைக் கொண்டுவந்துள்ளது. எஸ்.பொவின் 'மித்ர' பல புத்தகங்களைக் கொண்டுவந்தனர். இதில் உங்கள் முயற்சிதான் மிகப் பாராட்டப் பட வேண்டியது

  இதுபற்றிய உங்கள் கருத்துகளை எங்களுக்கு விளக்கினால் நிறையத் தெரிந்து கொள்வோம். ஒருவேளை அதனால் பல நன்மைகளும் விளையலாம்.

  ReplyDelete
 10. It gives me great pleasure to read your efforts in sending free books across to Ilangai from your publication. Wishing you the very best.

  ReplyDelete