சில நாட்கள் முன்னர் ஜெயலலிதாவின் பால் கொள்முதல் விலையை அதிகரித்து, ஆனால் விற்பனை விலையை மாற்றாமல் இருக்கும் அதிரடித் திட்டத்தினால் ஆவின் நஷ்டத்தில் மூழ்கும் என்று எழுதியிருந்தேன். இன்றைய தினமலரில் இதுபற்றி விளக்கமாக ஒரு செய்தி வந்துள்ளது.
அரசின் இந்த முடிவால் எல்லோரும் பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பால் உற்பத்தி செய்வோருக்கு இதனால் கஷ்டம்தான் வரும். என்னடா புதுமை? கொள்முதல் விலையை அதிகரித்தால் பால் உற்பத்தி செய்வோருக்கு நல்லதல்லவா என்றால் அதுதான் இல்லை. ஆவின் நஷ்டத்தில் இயங்கினால் அதனால் அதிகமாக பாதிக்கப்படப்போவது பால் உற்பத்தியாளர்தான். கையில் காசில்லாத ஆவின் கொள்முதலுக்கான காசை உடனடியாக பால் உற்பத்தியாளருக்குக் கொடுக்க முடியாது. பாலை வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுக்க இரண்டு மாதங்களோ, அதற்கு மேலோ இழுத்தடிக்கும். ஆவின் நஷ்டத்தில் இருந்தபோதெல்லாம் இதுதான் நடந்துள்ளது.
எனவே ஒன்று - பால் விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆவின் நஷ்டமில்லாமல் இயங்கும், அதன் கையிலும் காசின் இருப்பு அதிகமாக இருக்கும். பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக காசு கொடுக்க முடியும். அல்லது - பழைய கொள்முதல் விலைக்கே மாற வேண்டும். இப்படி உற்பத்தியாளருக்கு சரியான நேரத்தில் காசு கிடைக்கவில்லையென்றால் அவர்கள் ஆவினுக்கு பதில் தனியாருக்கு தங்கள் உற்பத்தியை விற்றுவிடுவர். காசு அதிகமாகக் கிடைக்காவிட்டாலும் கைக்கு உடனடியாகவாவது பணம் கிடைக்கும் அல்லவா? தனியாரோ - ஆரோக்கியா, ஜீவன் என்று பல பிராண்டுகள் மூலமாக - அதிக விலைக்குத்தான் (ரூ. 13க்கும் மேலாக) பாலை சந்தையில் விற்பர். ஒரு சில பிராண்டுகளைத் தவிர்த்து மற்றதில் கலப்படம், தரக்குறைவு என்று தொல்லை வேறு. இதனால் விளையும் நஷ்டம் பால் உற்பத்தியாளர், பால் வாங்குபவர், ஆவின் என்னும் நிறுவனம் என்று அனைவருக்கும் தொல்லை. தமிழக அரசுக்கும் நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டி அதிக செலவு. அந்தப் பணத்தை மற்ற நலத்திட்டங்களுக்குச் செலவிடமுடியாது.
ஆனால் அரசியல் ரீதியாக ஜெயலலிதாவால் மேற்சொன்ன இரண்டு முடிவில் எதையும் எடுக்க முடியாது. பால் விற்பனை விலையை அதிகரித்தால் மக்கள் அதிருப்தி அடைவார்கள் என்று அவருக்கு பயம். 2006 தேர்தல் பயம். பால் கொள்முதல் விலையை மீண்டும் பழைய அளவிற்குக் கொண்டு போனால் அரசியல் ரீதியில் தோல்வி. இதற்கான விலையைக் கொடுக்கப்போவதென்னவோ மாநில மக்கள்.
ஆக ஆராய்ந்து சிந்திக்காமல் முடிவெடுப்பதால் எத்தனை தொல்லை விளையும் என்பதை ஜெயலலிதாவைப் பார்த்து அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
இதற்கு மற்றொரு மாற்றும் உள்ளது. ஆவின், அமுல் போன்று தனித்தியங்கக் கூடிய ஒரு கூட்டுறவுத் தொழில் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். குஜராத்தின் 22 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் சொத்தான அமுல் ஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்து, பாலாகவும், அதன் சார்பொருளாகவும் விற்று 2002-03இல் ரூ. 2745 கோடி வருமானமாகப் பெற்றுள்ளது. நிகர லாபம் எவ்வளவு என்று தெரியவில்லை. அமுல் லாபநோக்குள்ள ஒரு நிறுவனம் அல்ல. மாறுபட்டது. ஆனால் இன்று சந்தையில் அதனளவிற்கு பால் பொருட்களை விற்பனை செய்வதற்கு எந்தப் போட்டியும் இல்லை. இதனால் அதிகப் பயன் அடைந்துள்ளது குஜராத் பால் உற்பத்தியாளர்களே. தமிழக பால் உற்பத்தியாளர்களும் இந்நிலையை அடைய முடியும். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ஆவினை விட்டு விலக வேண்டுமே?
எதற்குரியது நம் வாழ்க்கை?
8 hours ago
No comments:
Post a Comment