Thursday, June 10, 2004

தமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றி

தி ஹிந்து, தினமலர் செய்திகள்

தனியார் பொறியியல் கல்லூரிகள் வருடத்திற்கு ரூ. 32,500 தான் கட்டணமாக வசூலிக்க முடியும் என்று தமிழக அரசு நியமித்த குழு பரிந்துரை அளித்துள்ளது. ஆனால் ஏதேனும் கல்லூரி தேசிய தர அங்கீகாரக் குழு (National Board of Accreditation) மூலம் அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ. 40,000 வசூலிக்கலாம்.

போன ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு கோட்டா வழியாக வந்தவர்கள் ஆண்டுக்கு ரூ. 25,000 உம், நிர்வாக கோட்டாவில் படித்தவர்கள் ஆண்டுக்கு ரூ. 30,000 உம் கட்டிப் படித்தனர். இப்பொழுது இருவருக்கும் ஒரே கட்டணம். இந்தப் புதிய கட்டணம் (ரூ. 32,500 (அ) ரூ. 40,000) படிப்புக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், கணினி, நூலகம், ஆய்வகம், பராமரிப்புக் கட்டணங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. அதாவது தனியார் கல்லூரிகள் இதையெல்லாம் காரணம் காட்டி அதிகமாக வசூலிக்க முடியாது. அதிக பட்சமாக சேர்க்கும்போது முன்கட்டணமாக ரூ. 5,000 வசூலிக்கலாம். ஆனால் இதுவும் மாணவர்கள் வெளியே போகும்போது திருப்பித் தரப்பட வேண்டும். புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள கட்டணம் 2006-07 வரை அமலில் இருக்கும்.

===

எந்தக் கல்லூரியாவது இந்தக் கட்டணத்திற்கு மேல் வசூலித்தால், யாராவது அவ்வாறு புகார் கொடுத்தால், அந்தக் கல்லூரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு நியமித்த குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி A.ராமன் கூறுகிறார்.

ஆனால் உண்மை நிலை என்ன? கடந்த சில தினங்களாக பனிரெண்டாவது படித்த மாணவர்களிடம் தகவல்கள் சேகரித்து வருகிறேன். சென்னையைச் சேர்ந்த சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் இப்பொழுது படித்து முடித்திருக்கும் சில மாணவர்களையும் சந்தித்துப் பேசினேன்.

தனியார் பொறியியல் கல்லூரிகள் ரசீது ஏதும் கொடுக்காமல் நிர்வாக கோட்டாவில் வரும் மாணவர்களிடம் எக்கச்சக்கமாக பணம் வசூலிக்கின்றனர். இது லட்சக்கணக்கில் போகிறது. கணினித்துறை, தகவல்தொடர்புத்துறை என்றால் நான்கு லட்சமாம். "கீழ்த்தரமான" மெக்கானிகல், சிவில் என்றால் ரூ. 60,000 வரை வருமாம்.

"தரமான" கல்லூரிகள் என்றால், ஏழு லட்சம், எட்டு லட்சம் வரை ஆகுமாம்.

தனியார் மருத்துவக் கல்லூரி என்று ஒன்றுதான் உள்ளது. அங்கு இப்பொழுது போகும் விலை 35 லட்சமாம்! இதெல்லாம் கேட்கும்போது திகைப்பாக இருக்கிறது. மருத்துவம் பற்றிய செய்தி நேரடியாக வரவில்லை. அதனால் உண்மை நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால் பொறியியல் பைசா விஷயம் நேரடியாக, தான் இவ்வளவு கொடுத்துதான் படித்தேன் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள்.

பெற்றோர்கள் அனைவரும் கேட்ட (கறுப்புப்) பணத்தை எப்படியோ தயார் செய்து கொடுத்து விட்டு ரசீது எதுவும் வாங்காமல் இந்தக் கொடுமைக்கு உடன்பட்டிருக்கிறார்கள். இவர்கள் யாராவது புகார் செய்வார்களா? அதனால் தன் மகன்/மகள் கல்வி பாதிக்கப்படுமே என்ற பயம்தான் இருந்துகொண்டிருக்கும்.

இதற்குக் காரணம் demand/supply சமன்பாடு சரியாக இல்லாதிருப்பதனால்தான். இதனால்தான் தனியார் கல்லூரிகளும் சட்டத்துக்குப் புறம்பாக எக்கச்சக்கமாக பணம் கேட்கிறார்கள். பொதுமக்களும் பணம் கொடுக்கிறார்கள். மேலும் கல்வி நிலையங்களை லாபநோக்குள்ள நிறுவனங்கள் நடத்தக்கூடாது என்னும் சற்றே பைத்தியக்கராத்தனமான கண்ணோட்டம் இருப்பதால் திருட்டுத்தனம் அதிகமாகியுள்ளது. அறக்கட்டளை என்ற பெயரில் மோசடிகள்தான் நடக்கின்றன. கெட்டவர்கள், சட்டத்துக்குப் புறம்பாக பணம் சேர்க்க ஆசையுள்ளவர்கள் (அதில் ஈடுபட்டுள்ள அனைவரும் ரவுடிகளும், அரசியல்வாதிகளும்தான்) மட்டும்தான் இன்று "லாபநோக்கில்லாத" அறக்கட்டளை ஒன்றை செட்டப் செய்து அதன் மூலம் பெற்றோர்களை ஏமாற்றி capitation fee என்ற பெயரில் ரசீது கொடுக்காது கறுப்புப் பணத்தை வாங்கிக் குவிக்கிறார்கள்.

இதற்குபதில் தமிழக அரசு "யார் வேண்டுமானாலும் கல்வி நிலையங்களைக் நடத்தலாம்; அதில் லாபமும் சம்பாதிக்கலாம்; ஆனால் அரசின் கண்காணிப்பு இருக்கும்; அரசு ஒரு ரெகுலேட்டர் மூலமாக அதிகபட்சக் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பதை கறாராகத் தீர்மானிக்கும்; அதிலிருந்து எந்த வேறுபாடுகள் இருந்தாலும் அதற்கான தண்டனை மிக அதிகம் (ஜெயில் தண்டனையும் சேர்த்து)" என்று சொன்னால், பல நிறுவனங்கள் தரமான கல்வியை வேண்டிய அளவிற்கு வழங்க முடியும்.

கல்வித்துறையில் அத்தனை பணம் உள்ளது. ஆனால் அத்தனையும் இன்று ரவுடிகள் கைக்கு - அதுவும் வரி ஏதும் கொடுக்காத கறுப்புப் பணமாகப் போய்ச்சேருகிறது!

6 comments:

 1. எப்படி இருந்த பொறியியலின் (குறிப்பாக சிவில், மெக்கானிகல்) தரம் இப்படி ஆயிட்டுதே.

  ReplyDelete
 2. There is a long history behind this.The committee was formed on the basis of a judgement by SC which overruled the judgement given in Unnikrishnan case.I understand that there is a law in TN banning capitation fees but is not implemented as no rules have been formed for that.Making higher education fully commercial is not a good solution.I have been thinking of writing on these issues but i lack access to information and relevant judgements and policies.I
  wonder whether any study has been done on the cost of providing technical education and returns on the investments made by private colleges.

  ReplyDelete
 3. Ravi Srinivas: I can look for some of these judgements, as a friend of mine is collecting details on this anyway.

  On this concept of completely privatising education - allowing for-profit organizations to get into providing education, as it is, it is possible. Through Private Universities Bill of Chattisgarh and a few other states, it is quite possible I think to run a for-profit educational entity, perhaps indirectly. Or am I wrong?

  Please read http://prayatna.typepad.com/education/2003/11/private_univers.html

  I still think privatising and better regulating educational institutions can help us more than the current model of fewer seats and too much of demand resulting unscrupulous elements making a killing in the bargain.

  ReplyDelete
 4. பொறியியல் கல்லூரிகள் பெரும்பாலும், கல்வியுடன் நேரடியாக தொடர்பில்லாதவர்களால் தான் ( மந்திரிகள், அரசியல்வாதிகள்) துவக்கப் படுகிறது. அதனால் தான், டிமாண்ட் இருக்கிறது என்ற காரணத்தினால் இது போன்ற அநியாயங்கள் நடக்கிறது. கல்வி, கார்ப்பரேட்டுகள் கையிலே வந்தால், ஓரளவுக்காவது நம்பலாம். தற்போது ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் திரு ஷிவ் நாடார் அவர்கள் சென்னை புறநகர் பகுதியில் ஒரு பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் யாரிடமாவது விசாரித்தால், அந்தக் கல்லூரி எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். மேலாண்மை கல்வி நிறுவனங்களை, ரிலையன்ஸ், ஜெய்ப்ரகாஷ் குழுமம், நிர்மா போன்ற நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அதே போல, பொறியியல் கல்லூரிகளை துவங்கி நடத்துவதற்கும், (ஓரளவுக்கு) கார்ப்பரேட்டுகளை அனுமதிப்பதைப் பற்றிய விவாதத்தை துவங்க வேண்டும். ஏஐசிடிஈ மனிதவளத்துறை அமைச்சகத்தின் கீழேதானே வருகிறது? யார் அமைச்சர்?

  ReplyDelete
 5. பிரகாஷ்: நேற்று பேசிக்கொண்டிருந்த ஒரு மாணவன் SSN பொறியியல் கல்லூரியைப் பற்றி சற்று உயர்வாகத்தாண் பேசினான். அந்தக் கல்லூரியில் நிச்சயமாக கணினித்துறையில் நன்கு சொல்லிக்கொடுப்பார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்களாம். ஆனால் காசு விவகாரம் பற்றிப் பேசவில்லை. மேற்கொண்டு பேசி விவரம் அறிய முற்படுகிறேன்.

  வெறுமனே கார்பொரேட் செக்டாரை உள்ளே விடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. ரிலையன்ஸ் போன்றோர் ஒரு பொதுத்தொண்டாக, அல்லது தங்கள் நிறுவனத்துக்கு நல்லபெயர் சம்பாதிப்பதற்காக இம்மாதிரி ஒருசில கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர். அதனால் நேரடியாக பொருள் லாபம் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

  இப்பொழுதைக்கு ஒரு அறக்கட்டளைதான் கல்லூரிகளை நடத்தமுடியும் என்பது மாறினால் - இப்பொழுதிருக்கும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளே திருடிப் பணம் சேர்க்காமல் நியாயமான வழியில் - அதிகக் கட்டணம் வசூலிப்பதன் வழியே - பணம் சேர்க்க முற்படுவர். இல்லாவிட்டால் திருட்டும் சூதும்தான்.

  நேற்றைய விசாரிப்பின்படி வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரியில் தற்போதைய ரேட் நிலவரம்:

  IT, marine engineering: Rs. 2,00,000
  ECE, Computer science: Rs. 5,00,000
  மற்ற துறைகள்: Rs. 3,00,000

  அதுவும், தெலுகு பேசும் சிறுபான்மையினருக்குத்தான் இடம் கிடைக்குமாம். (இது மேனேஜ்மெண்ட் கோட்டாவில்). மற்றவர்களுக்கு 'மேனேஜ்மெண்டில்' ஆள் இருக்க வேண்டுமாம். இந்த விவரத்தை கல்லூரி அலுவலர்களே, விண்ணப்பப் படிவத்தை வாங்கும்போதே சொல்லிவிடுகிறார்களாம்! அதன்பிறகு விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அவர்களிடம் கொடுக்கும்போதும் மீண்டுமொருமுறை விளக்கி விடுகிறார்களாம்.

  ReplyDelete
 6. Oh My God!!!
  Thalaiya sudduthu.
  My son studying in 10th std now.By the time when he looks for college what would be the price is making a fear/fire in my heart.
  venkat

  ReplyDelete