22 ஜூன் 2004, செவ்வாய்க்கிழமை அன்று, சென்னை தாஜ் கன்னிமராவில் மெட்ராஸ் புக் கிளப்பின் ஆதரவில் நடந்த கூட்டத்தில் ராமச்சந்திர குஹா 'History and Biography' என்ற தலைப்பில் பேசினார்.
மடைதிறந்த வெள்ளம் போல சரளமாகவும், நகைச்சுவையாகவும், எடுத்துக்கொண்ட தலைப்பை விட்டு மீறாமல், அதே சமயத்தில் எங்கெல்லாம் சுவாதீனமாக வெளிச்செல்ல முடியுமோ, அங்கெல்லாம் வெளியேறி, சில துணுக்குகளை அள்ளிவிட்டு, மீண்டும் விட்ட இடத்தைப் பிடித்துத் தொடருவதில் மன்னர். கிட்டத்தட்ட 65-70 நிமிடங்கள் பேசினார். முதலில் மெட்ராஸ் மியூசிங்க்ஸ் எஸ்.முத்தையா குஹாவை அறிமுகம் செய்து வைத்தார்.
குஹாவின் பேச்சின் சுருக்கம்:
Biography is a privileged vantage point in history. தெற்காசியர்கள் நல்ல வாழ்க்கை வரலாறுகளை எழுதியதே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று இந்து மதம். இந்து மதத்தில் மறுபிறப்பு அழுத்தமாக சுட்டப்படுவதால் ஒருவர் இறந்தபின்னர் அவர் வேறு பிறவியாகி விடுவதால் இறந்தவரைப் பற்றி அதிகம் எழுத யாரும் முற்படுவதில்லை. மற்றொன்று மார்க்ஸிசம். மார்க்ஸிஸ்டுகள் தனி மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லாம் வர்க்கப் போராட்டங்களைப் பற்றித்தான்.
நான் நான்கு பேருடைய வாழ்க்கை வரலாறுகளை முன்வைத்து இங்கு பேசப்போகின்றேன். அதில் முதலிரண்டு எழுதப்பட்டது. அடுத்த இரண்டு எழுதப்பட வேண்டியது.
முதலாவதாக ரெய்னால்ட் நீபர் (Reinhold Niebuhr). செரினிடி பிரேயர் (Serenity Prayer) என்ற புகழ்பெற்ற வேண்டுதலை உருவாக்கியவர். பல வருடங்களாக இந்த வேண்டுதல் தியோடார் வில்ஹெல்ம் என்னும் ஜெர்மானியரின் உருவாக்கம் என்ற ஒரு செய்தி பரவியிருந்தது. அதைக் கேட்ட நீபரின் மகள் எலிஸபெத் சிஃப்டன் (Elisabeth Sifton), தனது தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். அந்த வாழ்க்கை வரலாறுதான் The Serenity Prayer: Faith and Politics in Times of Peace and War. [அமேசான், இந்தியாவில் ஃபேப்மால்]
ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறிய பாதிரியார் ஒருவருக்கு 1892இல் மகனாகப் பிறந்த நீபரும், கிறித்துவ மார்க்க குருமாராக இருந்தவர். எபிஸ்கோப்பல் (என்றால் கிரேக்க மொழியில் மேய்ப்பன் என்ற பொருள்) கிறித்துவ வழியைச் சேர்ந்தவர். ஆனால் பிற கிறித்துவ வழியைச் சேர்ந்தவர்களுடனும் (ரோமன் கத்தோலிக்கர்கள்), யூதர்களுடனும் இடைவிடாது தொடர்பு வைத்திருந்தார். அவர்களுடன் மார்க்கம் சார்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். 20ஆம் நூற்றாண்டு அமெரிக்க வாழ்வில் தொழில்மயத்தால் உண்டான கடுமையான ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு வருந்தினார். மதகுருவாக இருக்கும்போதே இடதுசாரிக் கொள்கைகளுடன் இருந்தவர். (அவ்வாறு இருக்கும் யாரையும் காண்பது அரிது.)
ஹிட்லரின் ஜெர்மனி உலகிற்கே கெடுதல் என்று கடுமையாக எதிர்த்தவர். ஜெர்மனியைச் சேர்ந்த டியட்ரிச் பானோஃபர் (Dietrich Bonhoeffer) என்பவர் அந்த சமயத்தில் நீபருடனும், மஹாத்மா காந்தியுடனும் ஒரே நேரத்தில் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். பானோஃபர் கிட்டத்தட்ட இந்தியா வருவதாக இருந்தது. காந்தியுடன் வந்து பேசி, அவரிடம் சத்தியாக்கிரகம் பற்றி அறிந்து கொண்டு அந்த முறையில் பானோஃபர் ஜெர்மனியில் ஹிட்லரை எதிர்த்திருந்திருக்கலாம். ஆனால் என்ன நடந்ததோ, பானோஃபர் இந்தியாவுக்குப் பதில் அமெரிக்கா சென்று நீபரைச் சந்தித்து அவருடன் நிறையப் பழகினார். பின்னர் ஜெர்மனி வந்து ஹிட்லருக்கு எதிரான ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டு, முயற்சி பலிக்காமல் மாட்டிக்கொண்டு உயிரை விட்டார். [நீபர்தான் பானோஃபரை ஹிட்லரைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட வைத்தார் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் - பத்ரி]
(தொடரும்.)
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
10 hours ago
No comments:
Post a Comment