Sunday, June 13, 2004

தினமலரின் ஒழுக்கக்கேடு

மே-ஜூன் 2004 கவிதாசரண் இதழில் தினமலர் ஆசிரியர் கடிதம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அசிங்கத்தைப் பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

இந்த விஷயத்தை அம்பலப்படுத்தியது Forum for Media Ethics and Accountability என்னும் அமைப்பு. 'வன்முறையை உருவாக்குவதில் பத்திரிகைகளின் பங்கு' என்னும் தலைப்பில் தினமலர் மற்றும் அதே நிறுவனம் நடத்தும் பத்திரிகையான காலைக்கதிர் ஆகியவற்றில் வெளியான சில ஆசிரியர் கடிதங்களின் நகல்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

தினமலரில் 23-1-2004 அன்று வி.பி.கே.சரவணன், சின்னமனூரிலிருந்து எழுதுவதாக வெளியான ஒரு கடிதம் (ரசிகர்களே ஒன்று திரளுங்கள்!), அப்படியே அச்சாக காலைக்கதிர் 28-1-2004இல் என்.வடிவேலு, பெங்களூரிலிருந்து எழுதுவதாக (ரசிகர்களே பாடம் புகட்ட தயாரா?) வெளியாகியுள்ளது. கடிதத்தின் சாரம் - ரஜினி ரசிகர்கள் பாமகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும், கமலின் ரசிகர்கள் கிருஷ்ணசாமியை எதிர்க்க வேண்டும் என்பதுமே. ஆனால் முடிக்கும்போது "இவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட விரைவில் பார்லிமென்ட் தேர்தல் வருகிறது. ராமதாசையும், கிருஷ்ணசாமியையும், கருணாநிதியையும் தண்டிக்க தக்க தருணம் இதுவே." என்கிறார் கடிதத்தை "எழுதியவர்".

இதைப்போலவே 30-1-2004 இல் தினமலரில் எம்.சுரேஷ், கடலூரிலிருந்து எழுதுவதாக வெளியான கடிதம் (ரஜினி ரசிகர்களே... உஷார்!) அப்படியே அச்சாக காலைக்கதிரில் 3-2-2004 அன்று ம.முத்துக்குமார், ஈரோட்டிலிருந்து எழுதுவதாக (ராமதாஸுக்கு பாடம் புகட்டுவோம்) வெளியாகியுள்ளது. கருத்து: "இவரது (ராமதாஸ்) கட்சிக்கும், இவர் சேர்ந்துள்ள அணிக்கும் பாடம் புகட்ட, இனி நம்மைப் பற்றி வாய் திறக்காமல் இருக்க வைக்க, நமக்கு சரியான சந்தர்ப்பம் ஒன்று தேர்தல் மூலம் வந்துவிட்டது; உஷாராக செயல்படுவோம்.".

தினமலர் 31-1-2004, ஆர்.ராஜவேல், விருதுநகரிலிருந்து எழுதுவதாக - பாடம் புகட்டுவோம் ராமதாசுக்கு!. காலைக்கதிர் 4-2-2004, மு.ரஜினிபித்தன், கரூரிலிருந்து எழுதுவதாக - பலத்தைக் காட்டுவோம். ஒரே அச்சு. "ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் நமது பலத்தைக் காட்ட வேண்டும்."

தினமலர் 6-2-2004இல் ராமதாஸ், பாமக சார்பிலிருந்து பதில் வருவதைப்போல ஒரு கடிதம் வருகிறது. எம்.கரிகாலன், சிதம்பரத்திலிருந்து எழுதுவதாக (ரசிகர்களால் தொல்லை தான்!). அதன் அச்சு காலைக்கதிர் 10-2-2004இல் ஆர்.ஜெயராமன், சங்ககிரியிலிருந்து எழுதுவதாக (வம்புக்கு இழுக்கும் ரஜினி ரசிகர்களுக்கு) என்று வெளியாகிறது. இரண்டும் சொல்வது: "ராமதாஸுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார் நிலையில் பா.ம.க.,வில் தொண்டர்கள் உள்ளனர். எங்களை சீண்டிப் பார்த்தால் சரியான பதிலடி கொடுப்போம்."

ஆக, தினமலர் நிர்வாகமும், ஆசிரியரும் சேர்ந்து வேண்டுமென்றே கடிதங்களைத் தயார் செய்து (அதிலும் இப்படியா மாட்டிக்கொள்வதைப் போலச் செய்ய வேண்டும்?) பாமக தொண்டர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையில் வன்முறை வெடிக்குமாறு செய்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட கடிதங்கள் போல இன்னமும் பல உள்ளனவாம். கவிதாசரண் தவிர பிற செய்திப் பத்திரிகைகளுக்கும் இந்த விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் பிறர் எல்லோரும் வாய்மூடி மவுனம் காத்தது ஏன்?

தினமலரின் இந்தச் செய்கை மிகவும் வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியது. இதழியல் தர்மத்திற்கு முற்றும் விரோதமானது.

தினமலர் மீது INS விசாரணை நடத்தி தண்டிக்குமா?

[பி.கு. வழக்கம் போல கவிதாசரண் கட்டுரை தினமலரின் மோசடிகளை நேரடியாகக் கண்டிப்பதை மட்டும் செய்யாமல் "பார்ப்பனர்கள் படு சமர்த்தர்கள்" என்று தொடங்குகிறது.]

8 comments:

 1. தினமலர்- அ.தி.மு.க ஆதரவு பத்திரிக்கை என்று முரசொலி போன்றவற்றில் படித்திருக்கிறேன். ஆனால் அப்போது நம்பவில்லை. இப்போது இந்த விவரங்களை படித்த பிறகு தான் அது என்னை போன்ற வாசகர்களை எந்தளவு நம்பிக்கை மோசடி செய்து வந்திருக்கிறது என்பது புரிகிறது. இத்தேர்தலில் பெரிய தோல்வி அ.தி.மு.க வுக்கு காத்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, தி.மு.க கூட்டணிக்கு எதிராக மக்களை திருப்ப பிரம்ம பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். ராமதாஸ் ஆதரவு கடிதம் ஒன்றும் அவர்கள் ஜோடித்திருப்பதை பார்க்கும் போது இது கலவரத்தை தூண்டும் இழி செயல் என்பது தெள்ள தெளிவு.பத்திரிக்கை தர்மத்தை குலைத்து சுயலாபம் தேட முயன்ற தினமலர் குழுமத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இந்த நிரூபணமுள்ள மோசடி செயலை மற்ற பத்திரிக்கைகள் கண்டும் காணாமல் விட்டு விட்டது ஏனோ?. தமிழ்நாட்டில் உள்ள தினசரிகளின் மேலுள்ள நம்பிக்கையே போய் விட்டது.

  இப்படி அப்படியே ஈயடிச்சான் காப்பியாகவா கடிதங்கள் வெளியிடுவார்கள்.. சின்ன பிள்ளைதனமாயில்ல இருக்கு. அப்படியே அவர்கள் மேல் ஏதாவது நடவடிக்கை வந்தாலும், எங்களுக்கு வந்த கடிதங்களை நாங்கள் பிரசுரித்தோம், அது யார் அனுப்பியது என்ன ஏது என்றெல்லம் எங்களுக்கு தெரியாது, அதேபோல எங்களுக்கு கடிதம் அனுப்பிய நபர், வேறு பெயரில் வேறு பத்திரிக்கைகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கலாம். அதுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் - என்று ஏதாவது சால்ஜாப்பு சொல்லி சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் இனி வாசகர்களின் நம்பிக்கையை அது பெற முடியாது. இதை விட தினமணியை தான் நான் முழுதும் நம்பி படித்து வருகிறேன். தினமலர், தினதந்தி, தினமணி போன்ற பாரம்பரிய பத்திரிக்கைகளுக்கென தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள். அதில் வருவதை அப்படியே நம்புகிறார்கள்.செய்திதாள்களின் மூலம் மட்டுமே நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டு அதன் மூலம் தங்கள் கருத்தை ஏற்ப்படுத்தி கொள்ளும் பொது ஜனங்களுக்கு தினமலர் செய்திருப்பது பச்சை துரோகம்.

  ReplyDelete
 2. தினமலரில் அன்புமணி காலைக்கதிரில் அந்துமணி தினமலரில் அன்புடன் அந்தரங்கம் காலைக்கதிரில் நட்புடன் அந்தரங்கம்..தினமலரில் லென்ஸ் மாமா காலைக்கதிரில் கேமரா மாமா
  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...இதுவும் ஒருவகைமோசடிதான்..

  அன்புடன்
  கி.அரவிந்தன்
  வெங்காலூர்

  ReplyDelete
 3. தினமலர் வாரமலரில் வாசகர் கடிதம் என்ற போர்வையில் கலப்பு மணம், தமிழ் வழிக் கல்வி, பெண்ணுரிமை போன்றவற்றிர்க்கு எதிரான கருத்துக்கள் பலதடவைகள் பிரசுரிக்கப்படும். இதல்லாமல் தினமும் குடமுழுக்கு, யாகம் போன்ற மிருதுவான பக்தி - வெள்ளி மலர் வாரமலர் போன்றவற்றில் மிருதுவான ஆபாசம் (soft porn) என்ற வியாபார பார்முலாவை திறம்பட பயன்படுத்தி மக்களிடம் சென்ற ஒரு நிழல் பத்திரிக்கையேயன்றி அது ஒரு நேர்மையான செய்திப் பத்திரிக்கையல்ல.

  ReplyDelete
 4. அங்கும் திருட்டு முகமூடி விளையாட்டா?!

  ReplyDelete
 5. Dear Badri,

  How do you expect honesty when one of the owners Mr.Gopalji is a state level leader in RSS.

  R.Balu

  ReplyDelete
 6. பத்ரி, நல்ல பதிவு. இது மிகவும் ஒழுக்கக் கேடான விஷயம் தான். அதிலும் தினமலர் போன்ற பெரும் பத்திரிக்கைகள் இப்படிச் செய்வது தவறான முன்னுதாரணம். இதற்கு அவர்களுக்குப் பெரும் கண்டனமும் தண்டனையும் கிடைக்க வேண்டும். அப்போது தான் பிறரும் இப்படிச் செய்ய நினைப்பதைத் தவிர்ப்பர். அதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா ?

  ReplyDelete
 7. தயவு செய்து கீழ்கண்ட முகவரிக்கு துபாயில் தினமலரை தடைசெய்ய உங்களின் கருத்தை பதிவு செய்யவும். http://www.etisalat.ae/proxy


  தமிழகத்தில் இப்பத்திரிக்கைக்கு கனிசமான ஏஜென்டுகள் இருக்கின்றனர். அவர்களை தனித்தனியாக அனுகி, இனி ஒருபோதும் இந்த மஞ்சள் பத்திரிக்கையை வினியோகிக்காது அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.

  ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இத்தினமலம் பத்திரிக்கை பெருமளவில் அனுப்பிவைக்கப்பட்டு கொள்ளை இலாபம் அடைகிறது. வியாபாரிகளை அனுகி தினமலரின் விஷமத்தனத்தை விளக்கி அவர்கள் இப்பத்திரிக்கையை விற்பனை செய்வதை நிறுத்திடக் கோரவேண்டும்.

  தினமலத்தின் இணையதளமான www.dinamalar.com இணையதளத்தை மேற்கண்ட நாடுகளில் பிளாக்செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்

  ReplyDelete