Wednesday, June 02, 2004

தினம் ஒரு அறிவிப்பு

ஜெயலலிதா தினம் ஒரு அறிவிப்பு என்ற வகையில் 'அன்பளிப்புகளை' வாரி வழங்க ஆரம்பித்துள்ளார். இதில் சில நல்லவையும் உள்ளன. ஆனால் இது போன்ற அறிவிப்புகளின் பின்னணி என்ன, இதனால் ஏற்படும் 'வருவாய் குறைவு' மற்றும் 'செலவு அதிகரிப்பு' ஆகியவற்றை எப்படி சரிக்கட்டுவார் என்று புரியவில்லை.

போன வாரம் ஜெயலலிதா பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். மாநில அதிகாரிகளை மாற்றினார்.

இரண்டு நாட்கள் முன்னர் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பு ரூ. 910 கோடிகள். நேற்று பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 1.00 அதிகப்படுத்தினார். ஆனால் ஆவின் விற்பனை விலை அதிகமாகாது என்றார். இதனால் எவ்வளவு ஆவினுக்கு நஷ்டம் ஆகும் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ஆவின் ஒன்றும் லாபத்தில் கொழிக்கும் நிறுவனமல்ல. 2000-01இல் ஆவின் நஷ்டம் ரூ. 25 கோடி. 2001-02இல் லாபம் ரூ. 15 லட்சம். 2002-03இல் லாபம் ரூ. 16.5 கோடிகளை எட்டியது.

சரி, நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு எப்படிப் போனது ஆவின்? Industrial Economy என்னும் இதழுக்கு அளித்த பேட்டியில், ஆவின் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இவ்வாறு சொல்கிறார்:
The loss was mainly due to a mismatch between the procurement price and selling price. In December 2001, the state government increased the procurement price for farmers from Rs.9 per litre to Rs. 9.50. We were selling at Rs. 10.50 per litre. With a lot of processes between procurement and selling, like pasteurisation, homogenisation, packing, transport... we could not cover these expenses with just a rupee. We had to increase the price of toned milk to Rs.12.50 to recover costs.
ஆக, கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்குமான வித்தியாசம் ரூ. 1.00 இருக்கும்போது நஷ்டம் வந்தது. அதனை ரூ. 3.00 ஆக்கியபின்னரே லாபம் வந்தது. இப்பொழுதைய நிலை என்ன? ஆவின் பால் மக்களுக்கு ரூ. 13.00 க்கு விற்கிறார்கள். நேற்று அறிவித்த கொள்முதல் விலை: பசும்பால் ரூ. 10.50, எருமைப்பால் ரூ. 12.50 ஆகும். விற்பனை விலையை அதிகரிக்காவிட்டால் நிச்சயம் நஷ்டம்தானே?

அடுத்து இன்றைய அறிவிப்பு: சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ போன்ற இரண்டு, மூன்று சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க இனி நிறுத்தல் கட்டணம் ஏதும் கிடையாது. நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படுகிறது. இப்பொழுது நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ரூ. 10 உம், இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த ரூ. 3 உம் வசூலிக்கப்படுகிறது. மேற்படி சட்டத்தினால் வருமானத்தை இழப்பது மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போன்றவைகளே என நினைக்கிறேன். மாநில அரசு எப்படி இந்த இழப்பை சரிக்கட்டப் போகிறது?

மற்றுமொரு அறிவிப்பு - கோயில்கள் வாசலில் செருப்பு வைப்பதற்கான கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்குள் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இதில் மருத்துவமனை நுழைவுக் கட்டணம் ரத்து செய்வதை வரவேற்கிறேன். ஆனால் கோயில் வாசலில் செருப்பு வைப்பதற்கான கட்டணத்தை ரத்து செய்தால் யார் இனி செருப்புகளை கவனித்துக் கொள்வார்கள்? இதுநாள்வரை குத்தகைக்காரர்கள் செருப்புகளைப் பார்த்துக்கொண்டனர். இனி வருமானம் ஏதும் வராத நிலையில் அவர்கள் நடையைக் கட்டிவிடுவர். அரசா இனி ஆட்களை நியமித்து இலவசமாக செருப்புகளைப் பார்த்துக் கொள்ளப்போகிறது? முகமது பின் துக்ளக்கையும் தோற்கடிக்கும் வகையில் ஜெயலலிதா ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.

நாளை ஜெயலலிதா என்ன ஆணைகளை பிறப்பிக்கப் போகிறார் என்று நினைத்தாலே பகீரென்கிறது.

5 comments:

  1. //முகமது பின் துக்ளக்கையும் தோற்கடிக்கும் வகையில் ஜெயலலிதா ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.//
    :D

    ReplyDelete
  2. Badri, I hardly know the TN Assembly Rules(local constitution?).
    How can a Chief Minister decide such important matters without presenting the issues to Assembly and have a decocratic debate? Is there any administrative body to adivice her? Why the hell we elect MLA's if one can make such arbitral moves without consulting them? I'm flabbergasted to read all this...

    ReplyDelete
  3. துக்ளக் அட்டைப்படத்திலே போன வாரம் இப்படித்தான் சில சட்டங்களைக் கற்பனை செய்து போட்டிருந்தார்கள். "இதென்ன சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு" என்று நினைத்தேன். ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் அவையும் கூட நிஜமாகிவிடும் போல இருக்கிறது.

    ReplyDelete
  4. ஒரு முதலமைச்சருக்கு இதுபோன்ற ஆணைகளை வழங்க அதிகாரம் உள்ளது. கேபினெட்டில் இதைப்பற்றி விவாதிப்பது நடைமுறை. ஆனால் ஜெயலலிதாவின் கேபினெட் பற்றிதான் நமக்குத் தெரியுமே? யாராவது எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் தூக்கியெறியப்படுவார்.

    ஆனால் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இதை பிரச்சினையாக எழுப்பலாம். ஆனால் எதிர்க்கட்சிகளைப் பார்க்கும்போது அவர்களும் மிகவும் சந்தோஷமாக இதையெல்லாம் வரவேற்கின்றனர். இதெல்லாம் மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்கின்றனர். இதெல்லாம் வாக்குகள் வாங்க செய்யும் உத்தி என்றுதான் சொல்கின்றனரே தவிர இதையெல்லாம் எப்படி சரிக்கட்டப் போகிறார் என்பதைப் பற்றிய கேள்விகளே இல்லை. அப்படி ஏதாவது கேட்கப்போய் எதிர்க்கட்சியினர் கெட்டவர்கள் என்ற அவப்பெயர் வந்துவிடுமோ என்ற பயம்.

    ஊரான் வீட்டுப் பணம்தானே? இன்று என்ன வாரி வழங்கப்போகிறார் என்று பார்ப்போம்.

    ReplyDelete