பாகிஸ்தான் 570 & 261/2 டிக்ளேர்ட். இந்தியா 449 & 214. பாகிஸ்தான் 168 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. மூன்று டெஸ்ட்கள் அடங்கிய போட்டித்தொடர் 1-1.
25/0 என்ற நிலையிலிருந்து ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க வேண்டுமென்றால் சேவாக் கடைசிவரை ஆடவேண்டியிருக்கும் என்று நான் நினைத்தது சரியாகவே இருந்தது.
காலையில் சேவாக், கம்பீர் இருவரும் களத்தில் இருக்கும்வரை இந்தியா ஜெயித்துவிடுமோ என்ற பயம் பாகிஸ்தானுக்கு இருந்தது. காலையில் முதல் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கடுத்த சில ஓவர்களில் சேவாக் சில பவுண்டரிகளை அடித்தார். கம்பீரும் சேர்ந்து கொண்டார். கம்பீருக்கு எதிராக அப்துல் ரஸாக் பந்தில் கேட்ச் ஒன்றுக்காக அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் டாஃபெல் அதனை நிராகரித்தார். (ரீப்ளேயில் அது அவுட் என்று தெரிய வந்தது.) அடுத்த ஓவரில், சாமி பந்தில் சேவாகுக்கு எதிராக மற்றுமொரு அப்பீல். (இம்முறை ரீப்ளேயில் இது அவுட் இல்லை என்று தெரிய வந்தது.) இந்த விண்ணப்பத்தை நடுவர் பவுடன் நிராகரிக்கவே இன்ஸமாம் பயங்கரக் கோபத்துடன் ஓடிவந்து அரங்கில் ஒரு டிராமாவையே நிகழ்த்திக் காட்டினார். (இதன் விளைவாக நேற்று, மேட்ச் ரெஃபரீ இன்ஸமாமின் செயலைக் கண்டித்து அடுத்த ஒரு டெஸ்ட் விளையாடுவதிலிருந்து இன்ஸமாமைத் தடை செய்துள்ளார்.)
இந்தத் தடங்கல்களுக்குப் பின்னர் கம்பீரும் சேவாகும் சிறிதும் கவலையின்றி ஓவருக்கு நான்கு ரன்கள் வீதம் பெற ஆரம்பித்தனர். இதனால் பாகிஸ்தான் பெரிதாகக் கலங்கிப் போயிருந்தது. ஆனால் கம்பீர் கனேரியாவின் பந்தை மிட்-ஆனுக்குத் தட்டிவிட்டு ஒரு ரன் பெற சேவாகை அழைத்தார். சேவாக் பத்தடி முன்னே வந்ததும், அப்துல் ரஸாக் பந்தை நோக்கி வேகமாக முன்னேறுவதைக் கண்ட கம்பீர், முன்வைத்த காலைப் பின்வாங்கினார். சேவாகால் திரும்ப முடியவில்லை. ரஸாக் பந்தைப் பிடித்து குறிவைத்து ஸ்டம்ப்களைத் தகர்த்து சேவாகை ரன் அவுட் செய்தார். அப்பொழுது பாகிஸ்தான் வீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! இதுதான் டெஸ்ட் போட்டிகளில் சேவாக் ரன் அவுட் ஆவது முதல் முறை. தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக ரன்கள் பெறுவதில்லை என்பதை மனதில் வைத்திருந்து கவனமாக சேவாக் அடிவந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. சேவாக் 38, இந்தியா 87/1.
அவ்வளவுதான். திடீரென ஆட்டம் மாறியது. உள்ளே வந்த திராவிட் நுழைந்தவுடனேயே தோல்வி மனப்பான்மையுடன் வந்தது போலக் காணப்பட்டார். ஒவ்வொரு பந்தையும் ஏதோ அணுகுண்டை அணுகுவது போல பயந்து பயந்து நெருங்கினார். சேவாகுடன் விளையாடும்போது கம்பீரமாக விளையாடிய கம்பீரும், இப்பொழுது தடவத் தொடங்கினார். விளைவு? அடுத்த பத்து ஓவர்களில் இந்தியா பத்து ரன்களைத்தான் பெற முடிந்தது. உணவு இடைவேளையின்போதே இனி இந்தியாவால் ஜெயிக்க முடியாது என்பது முடிவாகி விட்டது. ஆனால் தோல்வியையாவது தவிர்க்க முடிந்திருக்கும்.
ஆனால் இடைவேளைக்குப் பின், இந்தியா தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டது. ஒவ்வொரு பந்தையும் தடுத்தாடுவது என்று முடிவு செய்தவுடனே, பாகிஸ்தான் அணித்தலைவர் இன்ஸமாம் தோலைவில் நின்றுகொண்டிருந்த அனைத்துத் தடுப்பாளர்களையும் மட்டையைச் சுற்றிக் கொண்டுவந்தார். எப்பொழுதும் மட்டையைச் சுற்றி [விக்கெட் கீப்பரைத் தவிர்த்து] ஆறு பேர் நின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் விடாது மட்டையின் விளிம்பைத் தேடினர்.
முதலில் அவுட்டானது கம்பீர். மொஹம்மத் சாமியின் வேகப்பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். கம்பீர் 52, இந்தியா 108/2. டெண்டுல்கர் வந்து காவஸ்கரின் மொத்த ரன்களைத் தாண்டினார். மறுமுனையில் தடவித் தடவி ஆடிக்கொண்டிருந்த திராவிட் அர்ஷத் கானின் பந்தில் சில்லி பாயிண்டில் யூனுஸ் கானால் பிடிபட்டு ஆட்டமிழந்தார். திராவிட் 64 பந்துகளில் 16. இந்தியா 118/3. லக்ஷ்மண் வந்து அற்புதமான நான்கு ஒன்றை அடித்தார். பின் ஷாஹித் ஆஃப்ரீதியின் வேகமான பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். லக்ஷ்மண் 5, இந்தியா 127/4.
கங்குலி கடந்த சில டெஸ்ட்களாகவே மோசமாக விளையாடிக்கொண்டிருக்கிறார். சொல்லிக்கொள்ளும்படியாக அவரிடமிருந்து ஓர் இன்னிங்ஸும் இதுவரையில் இல்லை. கடைசியாக மெல்போர்னில் - 2003ல் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சதமடித்திருந்தார். இந்த டெஸ்ட் போட்டித்தொடரில் உருப்படியாக ஒன்றுமில்லை. முதல் இன்னிங்ஸில் ஒரு ரன். இரண்டாவது இன்னிங்ஸில் தட்டுத்தடுமாறி இரண்டு ரன்களைப் பெற்றார். பின் என்ன ஏது என்று புரியாமலேயே ஷாஹீத் ஆஃப்ரீதி பந்துவீச்சில் - பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து உள்நோக்கி ஸ்பின் ஆனது - பவுல்ட் ஆனார். கங்குலி 2, இந்தியா 135/5. தேநீர் இடைவேளைக்கு முன் வேறெந்த விக்கெட்டும் விழவில்லை.
இந்த நேரத்தில் நாலரை நாள்களுக்குப் பிறகு ஆடுகளமும் நொறுங்க ஆரம்பித்திருந்தது. பந்துகள் கன்னா பின்னாவென்று எகிறின. அதுவும் பந்துவீச்சாளர்களின் கால்தடங்களில் விழுந்த பந்துகள் எப்படி எழும்பும் என்று தெரியாதவண்ணம் இருந்தன. கார்த்திக் நன்றாகவே விளையாடினார். இரண்டு ஆக்ரோஷமான நான்குகளைப் பெற்றார். ஆனால் மொஹம்மத் சாமி வீசிய அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரில் பவுல்ட் ஆனார். இந்தப் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியேயிருந்து காற்றிலே வளைந்து உள்நோக்கி வந்து கார்த்திக்கை முற்றிலுமாக ஏமாற்றி ஆஃப் ஸ்டம்பைப் பறக்க வைத்தது. கார்த்திக் 9, இந்தியா 164/6. கார்த்திக் ஆட்டமிழந்ததுமே அடுத்த ஓவரிலேயே டெண்டுல்கர் ஆஃப்ரீதியின் பந்தில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் ஆசீம் கமால் கையில் பிடிபட்டு ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் 98 பந்துகளில் 16 ரன்கள் பெற்றிருந்தார். இந்தியா 164/7.
டெண்டுல்கர், திராவிட் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. கங்குலி, லக்ஷ்மண் அவுட்டானது பெருத்த கோபத்தை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடிய கும்ப்ளே கார்த்திக் அவுட்டானதும் வந்திருந்தார். அவர் பதானுடன் ஜோடி சேர்ந்து நன்றாக விளையாடினார். பதான் ரன்கள் எடுக்க முனையாமல் பந்துகளைத் தடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார். கும்ப்ளே, பயமேதுமின்றி, பந்துகளை அடித்து நொறுக்கினார். தடதடவென நான்கு பவுண்டரிகள் கிடைத்தன. பதானும் வெகு நேரம் கழித்து அர்ஷத் கான் பந்துவீச்சில் யூசுஃப் யோஹானாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் 29 பந்துகளில் 0. இந்தியா 189/8.
இனி இறுதிச்சடங்குகள் மட்டும்தான் பாக்கி. ஹர்பஜன் வந்து கும்ப்ளேவுக்கு கொஞ்ச நேரம் கம்பெனி கொடுத்தார். அவரும் தன்னைச் சுற்று இருக்கும் ஆறு பேரில் ஒருவருக்கு - யூனுஸ் கான் - கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 8, இந்தியா 210/9. பாலாஜி ஒவ்வொரு பந்தையும், அதன் மீது விழுந்து விழுந்து தடுத்தாடினார். ஆனால் கனேரியாவின் நேராகச் செல்லும் வேகப்பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆனார். பாலாஜி 16 பந்துகளில் 0. இந்தியா 214 ஆல் அவுட். கும்ப்ளே ஒருவர்தான் 52 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து - அதில் 7x4 - ஓரளவுக்கு நன்றாக விளையாடினார்.
இந்தியா தோற்றதன் முக்கியக் காரணம் - டிரா செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் ஆடியது. அதனால்தான் பாகிஸ்தான் பயமின்றி எல்லாத் தடுப்பாளர்களையும் மட்டையாளரின் பக்கத்தில் கொண்டுவந்து நிற்கவைக்க முடிந்தது. ஆறு/ஏழு பேர் பக்கத்தில் நின்றால் கடைசி நாள் ஆட்டத்தில் தோற்றுப் போவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆட்ட நாயகர் யூனுஸ் கான். இந்த டெஸ்டில் 351 ரன்கள் பெற்று ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்தார். தொடரின் நாயகன் சேவாக். இந்தத் தொடரில் மொத்தமாக 544 ரன்களைப் பெற்றார். (யூனுஸ் கான் 508). மூன்று டெஸ்ட்களிலும் ரன்கள் பெற்றார். (யூனுஸ் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து மொத்தமாக 10 ரன்கள்.)
இந்த டெஸ்ட் தொடரில் சேவாக் இந்தியாவின் தலைசிறந்த மட்டைவீரர் ஸ்தானத்துக்குச் சென்றுள்ளார். அவருக்கு அடுத்தபடி திராவிட். அடுத்து டெண்டுல்கர். அடுத்து லக்ஷ்மண். கங்குலி முன்னணி மட்டைவீரர் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டியுள்ளது. பந்துவீச்சில் பதான் பலத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளார். பாலாஜி தொடக்கத்திலிருந்து சிறிது சிறிதாகக் கீழே வந்து பதான் இடத்தைத் தொட்டுவிட்டார். இதுவும் ஏமாற்றமே. கும்ப்ளே கடைசி டெஸ்டில் மோசமாக வீசினார். ஹர்பஜன் ஐசிசி குற்றச்சாட்டிலிருந்து மீள வேண்டும். எனவே இந்திய அணியின் பந்துவீச்சு இப்பொழுதைக்கு பலவீனமாகவே உள்ளது. வரும் ஒருநாள் போட்டிகளில் இது இந்தியாவுக்குக் கவலையை அளிக்க வேண்டும்.
டெஸ்ட் போட்டிகளுக்கு எழுதுவது போல தினசரிப் பத்திகளை நான் அடுத்து ஒருநாள் போட்டிகளுக்கு எழுதப்போவதில்லை. ஏதாவது முக்கியமான விஷயமிருந்தால் மட்டும்தான் எழுதுவேன்.
Tuesday, March 29, 2005
Subscribe to:
Post Comments (Atom)
ஆட்டத்தைப் போலவே உங்களின் பதிவுகளும் சுவாரஸ்யமானவை . எனவே//டெஸ்ட் போட்டிகளுக்கு எழுதுவது போல தினசரிப் பத்திகளை நான் அடுத்து ஒருநாள் போட்டிகளுக்கு எழுதப்போவதில்லை. ஏதாவது முக்கியமான விஷயமிருந்தால் மட்டும்தான் எழுதுவேன்.'// என்பதை தயவு செய்து மறு பரிசீலனை செய்யுங்கள்.
ReplyDeleteDear Badri,
ReplyDeleteYou are doing a gr8 job. We usually read the descriptive analysis...even I want you to reconsider the decision of not writing for one days. Try to write the interesting points for each one days. Take care.
Regards,Arun Vaidyanathan
பத்ரி, உங்கள் பதிவுகள் போட்டிகளைப் போலவே மிகவும் சுவாரசியமாக இருந்தன. ஒரு நாள் போட்டிகளுக்கு நீங்கள் பத்தி எழுதப்போவதில்லை என்ற முடிவு சற்றே ஏமாற்றம் தருவதாக உள்ளது. பொதுவாக இந்திய ரசிகர்கள் வெற்றிகளின் போது கொண்டாடுவது போல தோல்விகளை ஏற்றுக்கொள்வதில்லை. இந்தியாவின் தோல்வி உங்களை துவள வைக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.
ReplyDeleteமுடிவை மறுபரிசீலனை செய்ய விண்ணப்பம் இது.
நான் இந்தியாவின் தோல்வியினால் துவண்டு எழுதப்போவதில்லை என்று முடிவெடுக்கவில்லை!
ReplyDeleteஒருநாள் போட்டிகள் பொதுவாகவே என் கவனத்தை அவ்வளவாகக் கவர்வதில்லை. டெஸ்ட் போட்டிகளில் இருக்கும் சுவாரசியம் ஒருநாள் போட்டிகளில் கிடையாது. அதனால்தான்.
அடுத்து இந்தியா விளையாடும் டெஸ்ட் போட்டிகளைப் பற்றி நிச்சயம் எழுதுவேன்.
ஆனால் அந்த அளவு பெரிதாக ஒருநாள் ஆட்டங்கள் பற்றி எழுதப்போவதில்லை. வேண்டுமானால் சிறு பத்தியாக - ஆட்டத்தின் முக்கிய அம்சம் பற்றி - எழுத முயற்சி செய்கிறேன்.