இன்று மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா. மயிலை கபாலீசுவரர் கோயிலைச் சுற்றி கூட்டம் தாங்கமுடியாது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் இன்று ஊர்வலமாக அழைத்து வரப்படுவர்.
ஆங்காங்கு பல இடங்களில் பொதுமக்கள் தண்ணீர்ப் பந்தல்களை நிறுவியுள்ளனர்.
இந்த விழா ஏன், கபாலி கோயில் பக்கம் என்ன நடக்கும் என்று மயிலாப்பூரின் எல்லையில், கோபாலபுரத்தில் அமர்ந்திருக்கும் எனக்குத் தெரியவில்லையே என்று அருமை கூகிளில் தேடினேன். அங்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனடியாக ஹரி கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு 'இதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்' என்று கேட்டதற்கு 'முன் சென்னை ஆன்லைனில் எழுதிய கட்டுரை ஒன்று உள்ளது. மாலையில் தருகிறேன்' என்று சொன்னார். எனவே மாலை காத்திருங்கள். எனக்குக் கிடைப்பதை உங்களுக்குத் தருகிறேன்.
விழா என்னவாக இருந்தாலும் இன்று மயிலாப்பூரை ஒரு சுற்று சுற்றினால் ஜம்மென்று நீர்மோர் கிடைக்கும்.
நீர்மோர் என்றவுடன் எனக்கு நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் திருவிழாவும் அதையொட்டி நாகை வீதிகளில் முக்குக்கு முக்கு இருக்கும் தண்ணீர்ப் பந்தல்களும்தான் ஞாபகம் வந்தன. மாரியம்மன் தேர் பெருமாள் தேரைவிடப் பெரிசு. இழுப்பதும் கஷ்டம். ஒரு முழு நாள் தேவைப்படும். பெருமாள் தேர் அரை நாளில் கிளம்பிய இடத்துக்கு வந்துவிடும். நீலாயதாட்சியம்மன் கோயில் தேர் மாரியம்மன் தேரை விடப் பெரிசு. வந்து சேர சில சமயங்கள் மூன்று-நான்கு நாள் ஆகிவிடும். எங்காவது அச்சாணி முறிந்து நிற்கும்.
மாரியம்மன் தேருக்கு வருவோம். ஞாயிற்றுக் கிழமைதான் தேர். அன்று காலை முதலே காவடிகள் - பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி - என்று ஆரம்பித்து விடும். காலை தொடங்கி தேர், பெருமாள் கிழக்கு வீதியிலிருந்து தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வந்து மீண்டும் கிழக்கு வீதியில் நின்றாக வேண்டும். அதன்பின் செடில் ஆரம்பிக்கும்.
சிறுவர்களாகிய எங்களுக்கு தேரை இழுப்பது என்னவோ எங்களின் பிரயாசையால்தான் என்று தோன்றும். அவ்வப்போது முட்டுக்கட்டை போடும் இடம் வரை சென்று பார்ப்போம். சக்கரத்தின் பிரம்ம்மாண்டம் பிரமிக்க வைக்கும். நசுங்கித் தூக்கிப்போடும் முட்டுக்கட்டைகளைப் போல நாமும் முறிந்துவிடுவோமோ என்று தோன்றும். நமக்குச் சரியான இடம் தேர்வடத்தின் கடைசியில். தேரை, குறுகிய வீதிகளின் முனைகளில் திருப்புவது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். ஆங்காங்கு தேர் நின்று பக்தர்களின் அர்ச்சனைகளை ஏற்றுக்கொண்டு பயணத்தைத் தொடரும்.
மாவிளக்கு மாவு, சத்து மாவு, வேண்டிய அளவு நீர்மோர். பானகம் எங்கேயாவது கொஞ்சம் மட்டும்தான் கிடைக்கும். திடீரென்று ஓரிடத்தில் 108 தேங்காய்களை உடைப்பார்கள்.
எங்கும் வேப்பிலைக் கொத்துகள் காணக்கிடைக்கும்.
தெற்கு வீதியில் வரும்போது வெய்யில் ஏறத்தொடங்கியிருக்கும். மேற்கில் தடம்பதிக்கும்போது கால்களைத் தரையில் வைக்க முடியாது. ஒவ்வொருவரும் தத்தம் வீட்டு வாயிலில் தண்ணீரைக் கொட்டிவைத்திருப்பர். ஆனால் நிமிடத்தில் தண்ணீர் காய்ந்துவிடும். காலையிலிருந்து விரதமிருக்கும் காவடி சுமக்கும் பெண்கள் சிலருக்கு சாமி ஆவேசம் வரும். சாமிக் காவடிகளை நிலைநிறுத்தி, அங்கிருந்து அகற்றி முன்னே கொண்டுசெல்வார்கள்.
சாதாரணக் காவடிகளை விட அலகு குத்திக்கொண்டு வருபவர்கள் எனக்கு எப்பொழுதுமே திகிலை வரவழைப்பவர்கள். இது பிச்சையெடுப்பதற்காக செட்-அப் செய்துகொண்டு வரும் அலகு அல்ல. நிஜமாகவே நாக்கைத் துளைத்திருப்பார்கள். கன்னம் வழியாகக் குத்தியிருப்பார்கள். முகத்தைத் திருப்பிக் கொள்வேன். முதுகிலும் உடலிலும் கொக்கி போட்டு அதன்மூலம் காவடி இழுப்பவர்கள் சிலர். அதுவும் பயமுறுத்த வைக்கும் விஷயம்.
ஒருவழியாக, எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தேர் நிலைக்கு வந்து சேரும். எனக்குத் தெரிந்து மாரியம்மன் தேரோ, பெருமாள் தேரோ எந்தப் பிரச்னையும் இல்லாமலேதான் வந்து சேர்ந்துள்ளது.
மாரியம்மனிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு ஒருவர் செடில் மரம் ஏறுவார். ஒரு காலத்தில் ஆளுக்கு மூன்று சுற்று என்று வைத்திருந்தார்கள். பின் அதை ஒரு சுற்றாகக் குறைத்து விட்டார்கள். அப்படியுமே இப்பொழுதெல்லாம் முழுவதுமாகச் சுற்றி முடிக்க இரண்டு நாள்கள் ஆகின்றன என்று கேள்விப்படுகிறேன்.
செடில் தமிழகத்தில் எத்தனையிடங்களில் இன்னமும் பழக்கத்தில் உள்ளது என்று தெரியவில்லை. நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செடில் மிகவுமே பிரசித்தம். கார்த்தவீர்யார்ஜுனனைக் கழுவில் ஏற்றுவதற்கும், செடில் மரம் சுற்றுவதற்கும் ஏதோ தொடர்பு என்பது மட்டும் தெரியும். செடில் என்பது தரையில் குழு தோண்டி அதில் ஒரு மர உருளையைப் புதைத்திருப்பார்கள். அந்தை உருளையில் குறுக்காக ஒரு மரத்துண்டு செல்லும். இந்த மரத்துண்டை புதைத்துள்ள உருளையை மையமாக வைத்து சுற்றி வரலாம். குறுக்கு மரத்தின் ஒரு பக்கம் நீட்டமாக நான்கைந்து பேர் தள்ளிக்கொண்டு ஒரு வட்டச் சுற்றாகச் செல்லுமாறு இருக்கும். மறு முனையில் மரச்சட்டகம் ஒன்றில் மனிதர்கள் ஏறி நிற்குமளவுக்கு இடம் இருக்கும். குறுக்கு மரம் மேலும் கீழுமாகவும் செல்லுமாறு இருக்கும்.
முதலில் மரச்சட்டகம் கீழே வருமாறு குறுக்கு மரத்தின் நீண்ட பகுதியை மேலே உயர்த்துவார்கள். செடில் சுற்ற வேண்டிக்கொண்டவரை ஏற்றிக்கொண்டதும் நீண்ட பகுதியைக் கீழே இறக்குவர். சட்டகம் மனிதர்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும். இப்பொழுது குறுக்கு மரத்தை ஒரு சுற்று சுற்றிக் கொண்டுவந்து நிறுத்தி, சட்டகத்தைக் கீழே இறக்கி, அடுத்த ஆளை ஏற்றிக்கொள்வார்கள்.
[அடுத்த முறை இந்த விழா நடக்கும்போது சில படங்களைப் பிடித்துக் கொண்டுவந்து காட்டுகிறேன். அப்பொழுது நன்றாகப் புரியலாம்.]
இரவு ஆனதும், ஒரு பக்கம் செடில் நடக்க, மறுபக்கம் எலெக்டிரிக் காவடிகள் என்று சொல்லப்படும் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட ஜில் ஜில் காவடிகள் வரும். பின்னால் டீசல் ஜெனரேட்டர் ஒரு மாட்டு வண்டியில் பெருத்த இரைச்சலுடன் வரும். நான்கு வீதிகளிலும் ஆங்காங்கே நிறுத்தி குறவன் குறத்தி ஆட்டம், கரகாட்டம் நடைபெறும். சாமி, பக்தி எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு குறையாடைகளுடன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்கள் ஆடுவதைப் போன்று குறத்தி வேடம் அணிந்த பெண்கள் ஆடுவார்கள். [அதெல்லாம் பிறகு ஒரு பதிவுக்காக வைத்துக் கொள்வோம்.] தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத அந்தக் காலத்தில் மிட்நைட் மசாலா என்றால் இதுதான் எங்களுக்கு!
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன். இன்று மயிலாப்பூர் தண்ணீர்ப் பந்தல் ஒன்றில் புகுந்து நீர்மோர் வாங்கி குடிக்க வேண்டும். நாகப்பட்டினம் குவாலிடியில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
வாசகனாதல்
11 hours ago
Dear Badri,
ReplyDeleteNagapattinam description,brought freshener to my nostalgic memories..Do write the great days during Mariamman Koil thiruvilzha & Permal Koil & Krishnan Koil customs during Margali & Puratasi...
-- sriram
அட நான் மட்டுந்தான் இங்க ஹார்ட்கோர் சென்னை வாசியா. இது தெரியாம போச்சேய்யா இவ்வளவுநாளா ? ஆனாலும், நன்றாக விவரித்து இருக்கிறீர்கள். இன்னைக்கு மயிலாப்பூர் பக்கமிருக்கும் வேலைக்கு தடா ;-)
ReplyDeleteபத்ரி, உங்களது இந்தப் பதிவு எனக்கு கொள்ளிடம் புத்தடி மாரியம்மன் கோவிலில் நடக்கும் தேர், காவடித் திருவிழாவை நினைவுக்குக் கொண்டுவந்தது.
ReplyDeleteசெடில் கொஞ்சம் புரியவில்லை. புகைப்படம் பார்த்தால் புரியுமென்று நினைக்கிறேன்.
"செடில்?" அழிந்து வரும் கிராமிய கலைகள் ரகத்தைச் சேர்ந்ததோ? ரொம்ப informative பதிவு. படங்கள் போடுங்கள் புரிகிறதா என்று பார்க்கிறேன்.
ReplyDeleteஅருணா.
எப்போதாவது நாகை பக்கம் வந்து, தண்ணீர் தாகமெடுத்து அந்த சால்ட் தண்ணீரை குடித்தால் ஜென்மத்துக்கும் திரும்ப குடிக்க தோன்றாது. விக்கல் எடுத்தாலும் திருவாரூரோ அல்லது காரைக்காலோ போய் சேரும்வரை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டுதான் உட்கார நினைப்பேன். இதெல்லாம் சுனாமிக்கு முன்னாடி. இன்றைய நிலையில் பேட்டையில் கிடைக்கும் வாட்டரே பெட்டர்னு நினைக்கிற அளவுக்கு நாகை தண்ணீர் இருக்கும்னு நம்புறேன்!
ReplyDeleteÀòâ º¡÷, ¿£í¸û ¦º¡ýÉ×¼ý Äïî ÓÊòÐÅ¢ðÎ §Á¡÷ º¡ôÀ¢¼ §À¡§Éý. «Á¢÷¾¡ïºý ¸õ¦ÀÉ¢ ÅÇ¡¸ò¾¢ø §Á¡÷ ¦¸¡ÎòÐì ¦¸¡ñÊÕó¾¡÷¸û. ¾ñ½£ÕìÌû ¦¸¡ïºõ (¾Â¢÷ «øÄ) §Á¡¨Ãì ¸ÄóÐ ¦¸¡Îò¾¡÷¸û. ºÃ¢ ¸Ä¢¸¡Äò¾¢ø þ¾¡ÅÐ ¦¸¡Îò¾¡÷¸§Ç!
ReplyDeleteஅந்த நாள்... ஞாபகம்
ReplyDeleteநெஞ்சிலே.... வந்ததே...
- முன்னாள் மயிலாப்பூர் வாசி
Arubathi moovar anniku schoola extravaa oru naal leave kudupaanga. 'Sedil' puriyalai, padam paarthal puriyumo ennavo.
ReplyDeleteபத்ரி சொல்லும் செடிலை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒரு பெரிய ஆங்கில T யை நினைவில் கொள்ளுங்கள். செங்குத்தான பாகம் தரையில் ஊன்றப்பட்டிருக்கும். மேலே உள்ள தட்டையான பாகம் ஒரு ஆரம் போல சுற்றிவரும் முறையிலும் அதன் இருமுனைகளும் மேலும் கீழும் சென்றுவரும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். அதன் ஒருமுனையில் ஆட்கள் ஏறி இருப்பார்கள். இன்னொரு முனையில் கட்டி இருக்கும் கயிற்றை பிடித்திழுத்து வேறு சிலர் அதை ஒரு சுற்று சுற்றிவிடுவார்கள். மேலே உள்ள தட்டையான பகுதி, அதிலிருக்கும் 'பயணி'களுடன் 'ஜம்'மென்று ஒரு ரவுண்டு வந்து நிற்கும்.
ReplyDeleteசரியா பத்ரி?
- சலாஹுத்தீன்
சின்னப்பையனாக உடுமலைப்பேட்டையில் இருந்தபோது நீங்க சொல்லியிருக்கிற அதே கோலாகலங்களுடன் ஒன்பது வரு்ஷம் தேர்த்திருவிழா பார்த்தேன். ஒவ்வொன்றாக மனதில் நிழலாடுகிறது. நேற்று மயிலாப்பூரில் தேர் முடிந்து கூட்டம் கொஞ்சம் அடங்கினபின் ஒரு ரவுண்டு வந்தேன். அப்போதும் ஜகஜகவென்றுதான் இருந்தது.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete